Oct 28, 2009

ஆண்களைப் பற்றின ரகசியம்.?..


ஒரு பெண், மின்னல் என்று வைத்துக்கொள்வோமே. மின்னல் சின்ன வயதிலிருந்து இருபாலினருக்கான பள்ளியில் படித்து வந்ததால் ஆண்களிடம் சகஜமாக பேசும் சுபாவம் உடையவள். அவள் வேலையிலும் தினசரி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று பல பேரை சந்தித்து சமாளிக்க வேண்டி இருந்ததால், மிகமிக கேஷுவலாக எல்லோரிடமும் பேசும் பழக்கம் அவளுக்கு ஏற்பட்டிருந்தது. இவள் இப்படி இருக்க, வேலை நிமித்தமாய் இவளை ஒரு ஆசாமி பார்க்க வந்தான். மின்னலும் வழக்கம் போல, அவனைப் பார்த்து, பேசி, தன் பணிகளை மேற்கொள்ள, தொழில்ரீதியாக இருவருக்கும், பேச்சு வார்த்தை ஏற்பட்டிருந்தது. திடீரென்று ஒரு நாள், ``நாம் ரெண்டு பேரும் தனியா எங்கயாவது போய், ஜாலியா இருக்கலாமா?'' என்ற ரீதியில் ஏதோ கேட்க, மின்னலுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி. அடப்பாவி, இவன் இப்படி நினைக்கும் அளவிற்கு நான் அவனிடம் எதுவுமே பேசவில்லையே. ரொம்ப ரொம்ப புரஃபெஷனலாக மட்டும் தானே இருந்தேன். அப்புறம் எப்படி, இவனுக்கு இப்படி ஒரு நினைப்பு வந்தது? என்ன திமிர்! என்ன வக்கிரபுத்தி!'' என்ற மின்னல், ஒட்டு மொத்தமாய் ஆண் வர்க்கத்தையே சந்தேகப்பட ஆரம்பித்தாள்.

இன்னொரு பெண், இவள் பெயரை கொடி என்று வைத்துக்கொள்வோமே. இவள் ஹாஸ்டல் விடுமுறைக்காக சொந்த ஊர் போகும் போது, ரயிலில் உடன் வந்த ஒரு ஆசாமி தனக்கு பெட்டி எல்லாம் தூக்கி வைத்து உதவி செய்தானே என்று, அவனிடம் நட்பாக பேசிக்கொண்டிருந்தாள். அப்போது அந்த ஆள் தனக்கு திருமணமாகி இருப்பதையும், வயதிற்கு வந்த இரண்டு மகள்கள் இருப்பதையும் சொல்ல, அட, நம்ம அப்பா மாதிரி என்று கொடியும், ``சேலம் வந்தா எங்க வீட்டுக்கு வாங்க அங்கிள்'' என்று தன் வீட்டு தொலைபேசி எண்ணைத் தர, அடுத்த நாளே, அங்கிள் ஃபோன் செய்தார், ``அடுத்த வாரம் சேலம் வர்றதா இருக்கேன். நாம் ரெண்டு பேரும் எங்கயாவது டின்னருக்கு போகலாமா?''

கொடிக்கு ரொம்பவே வியப்பாக இருந்தது... சும்மா இரண்டு வார்த்தை முகம் கொடுத்து, நன்றாக பேசி விட்டதாலேயே, டின்னருக்கு போகலாமா என்றால் என்ன அர்த்தம்? சீ சீ, இந்த ஆண்களே சரியான சபல கேசுகள், அவன் பொண்ணு கிட்ட எவனாவது இப்படி கேட்டா அப்பத் தெரியும்! என்று கொடி குமைய ஆரம்பித்தாள்.

மின்னல் ஆகட்டும் கொடியாகட்டும், நீங்கள் ஆகட்டும் நான் ஆகட்டும் எல்லா பெண்களுக்குமே இப்படி பல அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். பெண் என்ற ஒரே காரணத்திற்காக ஆண்கள் சலுகை எடுத்துக்கொண்டு அவர்களிடம் பேச முயல்கிறார்கள். தப்பித்தவறி அந்தப் பெண் சகஜமாக பேசிவிட்டால், அதுவும் சிரித்துப் பேசிவிட்டாள் என்றால் உடனே, ஓஹோ, பார்ட்டி சிக்னல் கொடுத்துடுச்சு போல என்று உடனே அப்ளிகேஷன் போட ஆயத்தமாகிறார்கள்.

என்னதான் `சீ, தூ' என்றெல்லாம் பெண்கள் ஆண்களின் இந்த குணத்தை ஆட்சேபித்தாலும், உண்மை என்ன தெரியுமா? உலக ஜீவராசிகள் அனைத்திலும் ஆண் இனம் இப்படிதான் இயங்குகிறது. பெண்பால் என்ற ஒன்று எதிரில் இருந்தாலே போதும், ஆண் அலர்ட் ஆகி, தன்னை பெரியவனாய் காட்டிக்கொள்ளும்.

பெண் இதை எல்லாம் கவனித்துக்கொண்டு, விலகாமல், சும்மா அப்படியே நின்றாலும்கூட அதையே தன்னை ஊக்கப்படுத்துவதாய் நினைத்துக்கொண்டு, நெருங்கி வரும். அப்போதும் அந்த பெண் விலகாமல் ஆதரவு சமிக்ஞைகளை வெளிப்படுத்தினால், உடனே ஒரு ஆணாய் தன் கடமையை ஆற்ற ஆயத்தமாகி விடும்.உலக ஜீவராசிகளின் நியதியே இதுதான்.

பெண் எப்போதும், அசையாமல் ஆணை ஆழம் பார்த்துக்கொண்டே இருக்கும், ஆணாகவே முன்வந்து அட்டெண்டென்ஸ் போட்டால், அவனை ஏற்றுக்கொள்வதா, வேண்டாமா? என்பதை முடிவு செய்யும். முடிவு எப்போதுமே பெண்ணைப் பொருத்ததுதான்.

ஆனால் முயற்சி செய்வது ஆணின் கடமை.

உதாரணத்திற்கு ஏதாவது ஒரு பூவை எடுத்துக்கொள்ளுங்களேன். பூவின் நட்டநடுவில் ஆடாமல் அசையாமல் பெண் உருப்பான கைனீஷியம் அமைந்திருக்கும். அது இப்படி சும்மா இருந்தாலும், எங்கிருந்தோ பல மகரந்தத் தூள்கள் பறந்தோ, மிதந்தோ, பிற ஜீவராசிகளின் மேல் தொற்றிக்கொண்டோ வந்து இந்த கைனீஷியத்தின் வாசலை அடையும். கடைசியில் எந்த மகரந்தத்திற்கு வெற்றி என்பதை அந்த கைனிஷியம்தான் முடிவு செய்யும். சூல் கொள்ள கைனிஷியத்திற்கு ஒன்றோ, இரண்டோ மகரந்தம்தான் தேவைப்படும். அப்படி இருந்தும், எல்லா பூக்களுமே தங்கள் மகரந்தத்தை பரப்பத்தானே செய்கின்றன. எந்தப் பூவும், ``எப்படியும் சிலதுதானே தேர்வாகும்.

எதற்கு வேலைமெனைக்கெட்டு இத்தனை மகரந்தத்தை உற்பத்தி பண்ணிக்கிட்டு, ஒரு வேலை நமக்கு சான்ஸ் கிடைக்கலைனா?'' என்று பெசிமிஸ்டிக்காய் இருப்பதில்லையே!

``சான்ஸ் கிடைக்குதோ இல்லையோ, முன் ஏற்பாடாக போட்டிக்கு தயாராகிடணும், வெற்றி தோல்வி முக்கியம் இல்லை, விளையாட்டுல கலந்தே ஆகணும்'' என்ற ரீதியில்தான் எல்லா ஜீவராசி ஆண்களுமே களமிறங்குகின்றன.

இதே விதியை அனுசரித்துதான் மனித ஆணும், முன் ஏற்பாடாக எப்போதுமே, ``ரெடி ஸ்டெடி, ஸ்டார்ட், ஜூட்'' என்று தயாராகவே இருக்கிறான். எப்போது எங்கே தன்னை ஆதரிக்க ஒரு பெண் கிடைப்பாள் என்கிற இந்த வேட்கைதான் அவனுடைய இயல்பு. ஆண்கள் மட்டும் இப்படி இயங்கவில்லை என்றால் உலகில் எந்த உயிரினமும் இன்று உயிர்வாழ முடியாது.

இது மற்ற ஜீவராசிகளை பொருத்தவரை எந்த சிக்கலையும் ஏற்படுத்தியிருப்பதாக இதுவரை தகவல் இல்லை. ஆனால் மனித வர்க்கத்தை பொருத்தவரை, ஆணின் இந்த ``எந்தப் பெண் கிடைப்பாள்?'' வேட்கை, அநாகரீகமாய் கருதப்படுகிறது.
காரணம் மிருகம் மாதிரி, பெண்ணைப் பிடித்து புணர்ந்துவிட்டு, பிறகு அவளை மறந்துவிட்டு அடுத்த பெண்ணைத் தேடிப் போகும் போக்கு மனிதர்களுக்கு ஒத்து வராததே காரணம்.

மிருகக் குட்டிகளுக்கு அப்பா என்ற ஒரு கேரக்டரே தேவை இல்லை. அம்மா மட்டுமே போதும்.

ஆனால் மனிதக் குழந்தைகளுக்குத்தான் அப்பா அம்மா இரண்டு பேருமே வேண்டுமே. இரண்டு பேரும் இணைந்து செயல்பட்டால்தான் குழந்தையின் வாழ்வு நல்லபடியாய் அமையும் என்பதினால்தான் இன்றைய புத்திசாலி ஆண்கள் ஒரே ஒருத்தியோடு, காலம் முழுக்க உறவு கொள்கிறார்கள். இந்த ஒருவனுக்கு ஒருத்தி என்கிற ஏற்பாடுதான் குழந்தை வளர்ப்பிற்கு மிக சாதகமானது என்பதாலேயே முதிர்ச்சி அடைந்த கலாச்சாரங்கள் இதையே ஆதரிக்கின்றன. இந்த அளவு, புரிதலும், அறிவும் இருக்கும் ஆண்கள் இதனாலேயே, தன் துணை அல்லாத பிற பெண்களிடம் கண்ணியமாய், கட்டுப்பாடாய் பழகுகிறார்கள்.

இத்தனை புத்திசாலித்தனம் இல்லாத ஆண்கள்தான் இன்னும் தொடர்ந்து மிருகபாணியில் மானாவரி சாகுபடி செய்கிறார்கள். எப்போது எந்தப் பெண்ணைப் பார்த்தாலும், ஈஷிக்கொள்ள முயல்கிறார்கள். இவர்கள் இப்படி மானாவாரியாக பெண்களுக்கு ரூட் விடுவது அத்தனை புத்திசாலித்தனமான போக்கில்லை என்றாலும் என்ன செய்வது, இன்னும் பல ஆண்கள் மிருகங்களாகவேதான் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

நன்றி:Dr.ஷாலினி.

Oct 24, 2009

குழந்தைகளுக்கு தேவையான அடிப்படை நாகரீகங்கள்.


முன்பெல்லாம் பள்ளியில் மாரல் ஸ்டடி என்று ஒரு
வகுப்பு உண்டு. நல்லது கெட்டது கதைகளாக
சொல்லப்படும்.

value education என்று பிறகு மாற்றினார்கள்.

இப்போது இரண்டு வகையும் இல்லை. அதனால்
பிள்ளைகள் மெத்த படித்திருந்தும் அடிப்படை
நாகரீகம் கூடத் தெரியாமல் வளர்கிறார்கள்.

இது அவர்களின் வளர்ச்சியில் ஒரு குறைபாடாகிறது.
ஏட்டிக்குபோட்டியான வாழ்க்கைக்கு கொண்டு
செல்கிறது.


குழ்ந்தைகள் நாம் சொல்வதை கேட்டு புரிந்துகொள்ளும்
பொழுதிலிருந்தே சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்கலாம்.

குழந்தைகள் நல்லவிதமாக நடந்து கொண்டால்
உடன் பாராட்டு பத்திரம் வாசித்து தவறு செய்தால்
அடித்து திட்டி செய்வோம்.

தவற்றை சுட்டிக்காட்டுவதற்கு பதில், எப்படி
நல்ல விதமாக செய்திருக்கலாம் என்று எடுத்துச்
சொல்லலாம்.

10 முக்கியமான அடிப்படை நாகரீங்கள்
என்னவென்று பார்ப்போம்.

************************************

1. பெரியவர்களோ சின்னவர்களோ பேசிக்கொண்டிருக்கும்பொழுது
கவனத்தை திசை திருப்ப பிள்ளைகள் குறுக்கே புகுந்து பேசுவார்கள்.
இப்படி பிள்ளை செய்யும் முதல் முறையே,”நாங்கள் பேசி
முடிக்கும் வரை காத்திருக்க வேண்டும்” என்று தெளிவாக
சொல்ல வேண்டும்.Waiting their turn என்று ஆங்கிலத்தில்
சொல்வோம். அப்படி பேசிக்கொண்டிருக்கும்பொழுது அருகில்
இருக்கும் குழந்தையின் கைகளை பிடித்துக்கொண்டிருத்தல்/
தோள்மீது கைபோட்டுக்கொண்டிருத்தலால் பிள்ளையின் மீது
கவனம் இருக்கிறது என்று புரிய வைக்கிறோம்.

2.பேரைச் சொல்லவா? அது நியாயமாகுமா? நியாமே இல்லை.
பெரியவர்களை பெயர் சொல்லி அழைக்ககூடாது என்று சொல்வதோடு
மட்டுமல்லாமல் அவ்வாறு அழைத்தலால் அவர்கள் மனது என்ன
வேதனைப்படும் என்றும் புரிய வைக்க வேண்டும்.

(நண்பர்களை கூட வாடி,போடி, அடா,புடா என்று பேசுவதை
தவிர்த்து பெயர் சொல்லி மென்மையாக அழைக்கப்பழக்குவது
நலம்)

3. வீட்டுக்கு யாராவது வந்தால் பிள்ளைகள் கதவை
திறந்து விட்டு ஓடியே போய்விடுவார்கள். வந்தவர்கள்
வாயிலில் தேமே என்று நிற்க வேண்டும்.

வீட்டுக்கு வரும் விருந்தினரை வரவேற்க பழக்க வேண்டும்.
கை குலுக்கி ஹாயோ, வணக்கமோ சொல்ல வேண்டும்.
இதனால் விருந்தினர்களுக்கும் மனது மகிழ்ச்சி.

4. sorry, please, thank you போன்ற வார்த்தைகளைச்
சொல்ல பழக்க வேண்டும். நம்மிடம் நன்றி சொல்லும்பொழுது
"You're welcome" சொல்ல மறக்காதீங்க.

5. சில வீடுகளில் பிள்ளைகள் சாப்பிட்ட தட்டைக் கழுவுவதில்லை.
பால் டம்பளர், சாப்பிட்ட தட்டு எல்லாம் டேபிளிலேயே இருக்கும்.
அதே போல் தான் விளையாடி முடித்த பிறகு அதை அப்படியே
போட்டுவிட்டு வேறு ஏதேனும் செய்யப்போய்விடுவார்கள்.
இது தவறு. முதலில் அந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டு
அடுத்த வேலையை பார்க்கச் சொல்லுங்கள்.

6.விளையாட்டில் கூட தோல்வியை சில குழந்தைகள்
ஒப்புக்கொள்ள மாட்டார்கள். எஜமான் பட நெப்போலியன்
போல,”கல்யாண வீட்டுல நான் தான் மாப்பிள்ளை, செத்த
வீட்டுல நா தான் பொணம், மாலையும் மரியாதையும்
எனக்குத்தான்” எனும் அந்த வசனம் சினிமாவில் சரி
நிஜத்தில் வெற்றி/தோல்வி இரண்டையும் ஏற்கும் பக்குவத்தை
வளர்க்க வேண்டும். அதுதான்Good sportsmanship.

7. யாராவது குழந்தைகளை பாராட்டினால் நன்றி சொல்லப்
பழக்க வேண்டும். தவிர்த்து மற்றவர்களின் குற்றங்களை
சொல்லத்துவங்கக்கூடாது.

8. வயதானவர்களுக்குத்தான் முதலிடம். இதை குழந்தைகளின்
மனதில் பதிய வைக்க வேண்டும். அதே போல் வீட்டுக்கு
வந்திருந்த விருந்தினர்கள் கிளம்பியதும் கதவை டமால்
என்று அடித்துச் சாத்தக்கூடாது என்பதையும் புரிய வைக்க
வேண்டும்.

9. லிஃப்ட் கதவு திறந்ததும் முண்டியடித்து உள்ளே
நுழையாமல் உள்ளே இருப்பவர்கள் வெளியே
வந்ததும், நாம் உள்ளே செல்ல வேண்டும் என
பிள்ளைக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.
ஒரு அறை அல்லது கட்டிடத்தில் உள்ளே/வெளியே
செல்லும் பாதை ஒரே கதவாக இருந்தால் வெளி
வருபவரை முதலில் அனுமதிக்க வேண்டும்.பிறகுதான்
நாம் உள் செல்ல வேண்டும்.

10.வேற்றுமையை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.
மொழி,கலாசாரம்,மதம், பழக்க வழக்கங்கள் இது
மனிதருக்கு மனிதர், குடும்பத்துக்கு குடும்பம் மாறு
படும். இதை கேலி செய்வதை விடுத்து அவர்களின்
பழக்கத்தை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.

ஒவ்வொரு குடும்பத்தினருக்கு ப்ர்த்யேக பழக்க
வழக்கங்கல்,கலாசாரங்கள் இருக்கின்றன. அவை
அந்தக் குடும்பத்துக்கு முக்கியமானது என்பதை
பிள்ளைகள் உணரவேண்டு.

Oct 18, 2009

இளம் பெண்களுக்காக --- பிரம்மச்சாரியை அறிய உதவும் வழிகாட்டி.!.!.!


கூச்ச சுபாவமுல்ல பிரம்மச்சாரி....................

இவரிடம் நீங்கள், "அன்பே, நீ என்ன நினைக்கிறாய்?" என்று கேட்டால், கண் இமைகள் படபடக்க இவர் உங்களைப் பார்க்கும் பார்வை உங்கள் சிந்தனையை நிறுத்திவிடும் அளவுக்கு கூர்மையானதாக இருக்கும். அதோடு இவரது மேலுதட்டின் மேல் லேசாக வியர்த்திருக்கும். உங்களிடமிருந்து அதை மறைக்க விரும்புவார். தனது கண்களால் அறை முழுக்க தேடுவார், வெளியேற வழி இருக்கிறதா என்று.

இவரை நீங்கள் சோதித்துப் பார்க்க விரும்பினால், உங்கள் முகத்தை சற்று வெறுமையாக வைத்துக் கொண்டு, உங்கள் இருவருக்கு இடையிலான உறவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று அவரிடம் கேளுங்கள். உறவு பற்றி நீங்கள் பேச விரும்புவதாகவும் கூறுங்கள். கடிகாரத்தின் டிக்டிக் ஒலியை நினைவுபடுத்துவது போல் பட்பட்டென்று பேசுங்கள். உடனே அவர் உடல் சுருங்கி வேகமாக ஒரு மூலைக்கு போக எத்தனிப்பார். அவர் மயங்கிவிட்டாரோ என்று எண்ணி நீங்கள் அவர் முகத்தில் தெளிக்க சோடாவை தேட வேண்டிய நிலைமை கூட ஏற்படலாம். இந்த விளையாட்டு முடிவில்லாமல் தொடரும். மீண்டும் மீண்டும் நீங்கள் இதையே பேசினால் அவர் ஓலமிட்டு அழுதாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இவர் இப்படித்தான். இவரது கூச்சத்தை உங்களால் போக்க முடியாது. இதே போல் வேண்டுமானால் யாருடைய உதவியுமின்றி இவருடன் விளையாடிக் கொண்டிருக்கலாம்.

லட்சியவாதி பிரம்மச்சாரி.................

இந்த வகையைச் சேர்ந்தவர் தனது மனதில் ஒரு லட்சியத்தை வைத்துக் கொண்டு அதை நிறைவேற்றுவதற்காகத் தான் உலகில் தான் அவதரித்திருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பார். உலகம் போற்றும் நடிகனாவது, புற்றுநோயைக் குணப்படுத்துவது அல்லது நாட்டின் ஜனாதிபதியாவது போன்று ஏதாவதொரு எண்ணத்தை தனது லட்சியமாக கொண்டிருப்பார். இவரது எண்ணம் எல்லாம் அதை நோக்கியே இருக்கும். உங்களுக்காக நேரம் செலவழிக்க இவரால் முடியாது. அவரது சிந்தனை மற்றும் லட்சியம் நிச்சயமாக உங்களைக் கவரும்.

அதை அடைய அவருக்கு நீங்கள் உதவவும் முன்வரலாம். ஆனால் உங்களின் தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்ற அவர் முன்வருவது கடினம். உங்களுக்காக நேரம் ஒதுக்கும்படி இவரிடம் நீங்கள் கேட்டால், நீங்கள் நாள் முழுக்க காத்திருக்க வேண்டியது தான். இந்த நிலைமை யாருக்கு வேண்டும்? தன் விருப்பங்களைவிட உங்கள் விருப்பங்களை பூர்த்தி செய்ய விரும்புபவரை நீங்கள் தேடுங்கள்.

மணமான பிரம்மச்சாரி............

உங்கள் இருவரிடையேயான உறவு நிச்சயம் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். அவரை அவரது மனைவி நிச்சயம் புரிந்து கொண்டிருக்க மாட்டார். தனது மனைவியுடன் அவர் படுக்கையைப் பகிர்ந்து பல ஆண்டுகள் கூட ஆகியிருக்கலாம். அந்த மனைவியை உங்கள் முன் அவர் துச்சமாக நினைப்பார். உங்களிடம் இவர் அதிக அக்கறை காட்டுவார். தேன் தடவிய வார்த்தைகளில் பேசுவார். ரொமான்டிக்காக இருப்பார். இவர் திருமணம் ஆகாதவர் என்றே பலரும் கருதக்கூடும். நீங்களும் அப்படி கருதியிருந்தால்?

அதனால் இதை எப்படி தெரிந்துகொள்வது? அது மிகவும் சுலபம். இவர் தனது தொலைபேசி எண்களை உங்களிடம் தரமாட்டார். வார இறுதி நாட்கள் அல்லது விடுமுறைகளின்போது இவரை உங்களால் பார்க்க முடியாது. உங்கள் சந்திப்புகளைக் கடைசி நிமிடத்தில் இவர் ஏதாவதொரு காரணம் சொல்லி மாற்றிவிடுவார். உங்களிடத்தில் அதிக நேரம் இவர் இருக்க மாட்டார். எப்படியோ நீங்கள் இவரது தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து பேசினால் மறுமுனையில் நீங்கள் பேசும் நபர் பெரும்பாலும் இவரது மனைவியாக இருக்கக்கூடும். இந்த வகையினரை நீங்கள் தேர்ந்தெடுக்காமல் இருப்பதே உங்களுக்கு நல்லது.

திருமணம் முறிந்த பிரம்மச்சாரி....................

இவரது முன்னால் மனைவியின் நிழலில் தான் நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள், இருந்தாலும் நீங்கள் இவரை ஆட்சி புரிவதாக
நினைப்பீர்கள். இதுபோன்றவர்கள் அதிகம் வெறுமையாக இருப்பார்கள். இவர் வசிப்பிடம் பர்னீஷ் செய்யப்படாமல் தற்காலிகமான இடமாக இருக்கும். உங்கள் பார்வையில் படாத இடத்தில் சில புகைப்படங்களை அவர் வைத்திருக்கலாம். இவர் பிளாஸ்டிக் ஸ்பூன்களையும் காகித தட்டுகளையும் பயன்படுத்தபவராக இருக்கலாம்.

இவருக்கு சரியான ஜோடியாக இருக்க நீங்கள் விரும்பலாம், ஆனால் அது அவ்வளவு எளிதில் நடந்து விடாது. முன்னாள் மனைவியால் வெறுப்புக்கு ஆளாக்கப்பட்ட இவர், உங்களையும் அதுபோன்றவர்களில் ஒருவராகக் கருதலாம். இவரை உங்களவராக மாற்றிவிட முடியும் என நீங்கள் நம்புவீர்கள். ஆனால் பழைய நினைவுகளிலிருந்து அவரை மீட்டெடுப்பது அவ்வளவு சுலபமானதல்ல.


மன உளைச்சல் மிக்க பிரம்மச்சாரி...................

இவருக்கு தனது உடல் நலத்தின் மீது தான் அதிக கவனம் இருக்கும். வீட்டிலிருந்து இவருடன் நீங்கள் வெளியே செல்லும் முன்னர், அந்த நாளுக்குத் தேவையான மாத்திரை மற்றும் மருந்துகளை இவர் சேகரித்து எடுத்துக் கொள்கிற வரையில் நீங்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருக்கும். உடல் சத்து மாத்திரைகளை வாங்குவதற்காக இவர் அடிக்கடி மருந்து கடைக்குச் செல்வார். தனது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு செக்ஸில் அதிகம் ஈடுபட இவர் விரும்பால் போகலாம். இவர் முகத்தில் சிரிப்பைக் காண்பது அரிது. அடிக்கடி முதுகு மற்றும் கால்களைப் பிடித்து விட கூறுவார். இதையும் மீறி இவரை நீங்கள் விரும்பினால் அதற்குமேல் உங்கள் விருப்பம்.

பொறுப்பற்ற பிரம்மச்சாரி...................

துள்ளல் மனம் மிக்க இவர் பார்ப்பதற்கு அழகானவராகவும் உங்கள் கண்களுக்குத் தெரிவார். ஆனால் பொறுப்பான செயல்களை இவரிடம் நீங்கள் எதிர்பார்க்க முடியாது. இவரை பொறுப்பற்றவர் என்பதைவிட பொறுப்புகள் என்றால் என்ன என்பதையே அறியாதவர் அல்லது அறிந்து கொள்ள விரும்பாதவர் எனலாம். இவருடன் சில காலம் பழகிப் பார்த்தால் உங்களுக்கே அது புரியும். பர்சில் அல்லது கிரெடிட் கார்டில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதைக்கூட அறியாமல் உங்களை ஷாப்பிங் கூட்டிச் செல்வார். பணம் போதவில்லை என்பதை அறிந்தபின்னர் தான் தனது கணக்கு குறித்து விவரம் கேட்பார். அப்போது தான் பல காலமாக அவர் கணக்கில் பணம் அல்லது கடன் அட்டைக்கான வட்டியை அவர் சரிவர செலுத்தி வரவில்லை என்ற விவரமே அவருக்குத் தெரியவரும். இதுமட்டுமல்ல, தொலைபேசி, மின்சாரம் உள்ளிட்ட பில்களைக் கட்டுவதில் கூட இவர் அடிக்கடி காலதாமதம் ஏற்படுத்தியிருப்பார். சிறந்த அக்கவுண்டெண்ட் ஆக இருந்தால் தான் இவருடன் உங்களால் காலம் தள்ள முடியும். இப்படிபட்டவரால் உங்களுக்கு கிடைக்கப் போவது என்ன? என்ற கேள்வியை உங்களுக்குள்ளேயே கேட்டுப் பாருங்கள், விடை கிடைக்கும்.

படாஃபட் பிரம்மச்சாரி......................

எல்லா விஷயத்திலுமே கச்சிதமானவராக இவர் உங்களுக்குத் தெரிவார். பெருந்தன்மை மிக்கவராக இருப்பார். இவரது வசிப்பிடம் எல்லா பொருள்களுடன் அழகானதாக இருக்கும். உங்களை அன்பாகக் கவனித்துக் கொள்வார். ஆனால் அவரை நீங்கள் எதிர்க் கேள்வி கேட்டாலோ, அவர் விருப்பத்திற்கு எதிராக பொருள்களை மாற்றி வைத்தாலோ பொறுத்துக் கொள்ள மாட்டார். இதற்காக உங்களுடன் சண்டை கூட போடாமல் உறவையே படாஃபட் என்று முறித்துவிடுவார். இது அவரது கோப குணத்தின் வெளிப்பாடு அல்ல. அவர் அப்படித்தான்.

மதில்மேல் பூனை பிரம்மச்சாரி...........

இவர்கள் எந்த முடிவையும் அவ்வளவு சுலபமாக எடுத்துவிட மாட்டார்கள். சினிமாவுக்கு செல்வதானாலும் சரி யாருடன் செல்வது என்பதிலும் சரி, இவர்கள் முடிவு எடுப்பதற்குள் சினிமா காட்சி முடிந்துவிடும். இதற்கு முக்கிய காரணம் இவர்கள் எவ்வளவு வளமாக, மகிழ்ச்சியானதொரு சூழலில் இருந்தாலும் அதைவிட சிறந்ததை விட்டுவிட்டு அனாவசியமாக நேரத்தை வீணடித்துக் கொண்டிருப்பதாக இவர்கள் கருதுவதால் தான். இவர்கள் எப்போதுமே இப்படித்தான். உங்களுடன் நேரத்தை கழித்தாலும் மனம் முழுவதும் வேறெங்கோ இருக்கும். இதைவிட சிறந்த முறையில் நேரத்தை நாம் செலவழிக்கலாமோ என்ற எண்ணம் அவர்களுக்குள் இருந்து கொண்டே இருக்கும். இதனால் இவர் எப்போது எப்படி இருப்பார் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளவே முடியாது.

டைம்பாம் பிரம்மச்சாரி..............

உங்களுக்குப் பிடித்த சினிமா கதாபாத்திரத்தின் வாழும் உதாரணம் இவர். அறிமுக இளம் கதாநாயகர்களிடம் காணும் ஈர்ப்பை இவரிடம் நீங்கள் காணலாம். சிறந்த ஆளுமை கொண்டவராக இருந்தாலும், இவர், குடிகாரராகவோ, சூதாடியாகவோ, போதை மருந்து அடிமையாகவோ இருக்க வாய்ப்பு உண்டு. இவரைப் பற்றி நீங்கள் முபமையாக அறிந்தால் அலறியடித்துக் கொண்டு ஓடிப்போனாலும் ஆச்சரியம் இல்லை.

பிரச்சினை என்னவென்றால், பார்ப்பதற்கு சாதாரணமாக இருந்தாலும் எப்போது எப்படி மாறுவார் என்பதை யாராலும் உறுயுடன் கூற முடியாது. அதனால் மன்மதன் காதல் அம்பினை இவர் மூலம் உங்களுக்கு ஏவினால் நீங்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. இவர் முதல் முறை கோபப்படும்போது உங்களால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் சமையலில் சிறிய தவறு நேர்ந்துவிட்டதற்காக உங்கள் முகத்தாடையில் இவர் குத்து விடும்போது தான் உங்களுக்கு நிலைமை புரியும். ஆனால் ஒன்று, மறுநிமிடமே உங்களிடம் மன்னிப்பு கேட்க இவர் தயங்கமாட்டார். ஆனால் எவ்வளவு காலத்துக்கு தான் நீங்கள் மன்னிப்பை வழங்கிக் கொண்டிருக்க முடியும்?

விமர்சக வில்லன்...................

இவரைப் பொறுத்தவரையில் ஒரு விஷயத்தை நீங்கள் உறுதியாக நம்பலாம். உங்களிடம் இவருக்கு என்ன பிடிக்கும் எது பிடிக்காது என்பதைத் தெளிவாக உங்களிடம் தெரியப்படுத்திவிடுவார். அதனால் உங்களை இவர் தேர்ந்தெடுத்தற்காக உங்களை நீங்களே அதி;ரஷ்சாலியாக நினைத்துக் கொள்வீர்கள். உங்கள் இருவருக்கு இடையேயான விருப்பு வெறுப்புகளும் ஒன்றாகவே இருக்கும். இந்த கருத்தொற்றுமை நல்லது தான். ஆனால் விமர்சனம் என்று வரும்போது தான் நிலைமை மாறிவிடும்.

இந்த வகையைச் சேர்ந்தவர்கள் எல்லோரையுமே ஒரு தராசில் வைத்து தான் எடை போடுவார்கள். இவர்களின் விமர்சனத்துக்கு ஆளாகதவர்கள் யாரும் இருக்க முடியாது. நீங்கள் மட்டும் எம்மாத்திரம்.

நீங்கள் எப்படி உடை உடுத்த வேண்டும், குடும்பம் நடத்த வேண்டும் என்பது உள்பட எல்லாவற்றையும் உங்களுக்கு இவர் கற்றுத் தருவார். உங்களுக்கு உதவவும் செய்வார். ஆனால் அதில் ஒரு சிறிய தவறு நேர்ந்துவிட்டாலும் அவ்வளவுதான். அது தான் உங்கள் உறவு முடிவின் தொடக்கம் என்று யூகித்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு நீங்கள் எதை செய்தாலும் அதை விமர்சிக்க இவர் தவற மாட்டார். அதனால் தொடக்கத்திலேயே இவர்களிடம் நெருங்காமல் இருப்பது நல்லது.

விளையாட்டு பேர்வழி.......................

நாம் அனைவருமே இவரை அறிந்திருப்போம். நல்ல தோற்றம் மற்றும் அழகை பராமரிப்பதில் இவர் அதிக அக்கறை காட்டுவார். மனதுக்குள் தன்னை கதாநாயகனாகவே நினைப்பார். இவரது வலையில் நீங்கள் எளிதில் விழுந்துவிடுவீர்கள். படுக்கையைப் பகிர்ந்து கொள்வதிலும், சினிமா தியேட்டர் இருட்டில் இவர் செய்யும் சில்மிஷங்களிலும் மனதை பறிகொடுப்பீர்கள். ஆனால் இவை முடிந்த உடனேயே அடுத்த இரையை இவர் தேடத் தொடங்கிவிடுவார். இவரிடம் நீங்கள் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. தலைபோகிற பிரச்சினையை நீங்கள் இவரிடம் பேசிக் கொண்டிருந்தாலும் இவர் கண்ணாடியைப் பார்த்து தலை வாரிக் கொண்டிருப்பார். தனது அழகு தான் முக்கியம் என்று நினைக்கும் சுயநல மன்மதன். உங்களுக்கு ஒத்து வருமா?

உங்களவர் இவர் தான்........!!!!!!!!!

சிறந்த பிரம்மச்சாரி......!!!!!!!

இவர் தனக்கு விருப்பமான பணியில் இருப்பார். ஒரு கார், ஒரு பிளாட் கூட இருக்கலாம். (அது சுத்தமாகவோ, அழகாகவோ இல்லாவிட்டாலும் நிச்சயமாக படுமோசமாக இருக்காது.) கொஞ்சம் நகைச்சுவை உணர்வு இருக்கும். நேர்மை, அழகு, சார்ந்திருத்தல், நம்பகத்தன்மை உள்ளிட்ட குணங்களின் கலவை இவர். சமையலில் நீங்கள் செய்யும் சின்னஞ்சிறிய சோதனை முயற்சிகளைக்கூட இவர் பெரிதும் பாராட்டுவார். தொழில் ரீதியில் நீங்கள் முன்னேறவும் தன்னால் ஆன உதவிகள் செய்வார். உங்கள் குடும்பத்துடன் நன்றாகப் பழகுவார். காதல், அன்பு அனைத்தின் கலவையாக, சிறந்த சினேகிதனாக இருப்பார். நீங்களும் இவரை இளவரசர் போல் நடத்துவீர்கள். இவர் தான் உங்களின் கனவு நாயகன்.

Oct 14, 2009

பெண் வயதிற்கு வருவது..!.!

ஒரு பெண் வயதிற்கு வந்துவிட்டால், அவளுக்கு மஞ்சள் நீராட்டி, புது உடைகள் அணிய கொடுத்து, பிட்டு சுற்றி, ஒரு வைபவமாய் அதை கொண்டாடுவது தான் பாரம்பரியமாய் நம்மூர் கலாச்சாரமாக இருந்து வருகிறது.
இப்படி ஒரு பெண் வயதிற்கு வரும் இந்த சம்பவத்தை நம்மூரில் பூப்பெய்தல், ருதுவாகுதல், வயதிற்கு வருதல் என்றெல்லாம் பல பெயர்களால் அழைக்கிறோம். மருத்துவத்திலும் இதற்கு ஒரு தனி பெயர் உண்டு. மெனார்கீ, (Menarche) பெண்ணின் மகபேற்று உருப்புக்கள் முதன்முதலாய் இயங்க ஆரம்பித்து விட்டன என்பதன் அறிகுறியாய், அப்பெண்ணின் ஜனன குழாயிலிருந்து உதிரப்போக்கு ஏற்பட ஆரம்பிப்பதை தான் மெனார்கீ என்கிறோம்.
இந்த உதிர போக்கு எங்கிருந்து எதற்காக வருகிறது தெரியுமா? ஒரு பெண் குழந்தை பிறக்கும் போதே, அவள் அடி வயிற்றில் ஒரு பிஞ்சு கருப்பை + இரண்டு, சினைபைகளுடன் தான் ஜனிக்கிறாள். இந்த சினை பையினுள் அவளுடைய வாழ்நாளில் அவள் வெளியேற்ற வேண்டிய அத்தனை கருமுட்டைகளும் ஒதுங்கி இருக்கும். ஆனால் இவை எதுவுமே இயங்காமல் சிக்னலுக்காக காத்துக்கொண்டு, இருக்கும் இடமே தெரியாமல் கப் சிப் என்று அசைவற்று இருக்கும்.
இந்த பெண்ணின் மூளையில் பிட்யூட்டரி என்று ஒரு சுரபி உண்டு. இந்த சுரபி, அந்த பெண்ணின் உடலை நோட்டம் விட்டுக்கொண்டே இருக்கும். அவள் ரத்ததில் ஊரும் சத்து, அவள் உடம்பில் உள்ள கொழுப்பளவு, அவளது உயரம், மாதிரியான வளர்ச்சி குறிகளை இந்த பிட்யூட்டிரி பரிசோதித்துக்கொண்டே இருக்கும். அவள் போதுமான உயரத்தை எட்டி விட்டாள், அவள் ரத்தத்தில் போதுமான அளவு சத்துக்கள் ஊறத்தான் செய்கின்றன என்று பிட்யூட்டரிக்கு உரைத்தால் போதும், உடனே அது துரிதமாய், FSH, என்கின்ற சினைவளர்ப்பு ஹார்மோனை நேரடியாக ரத்தத்தினுள் சுரந்து விடுகிறது. இந்த ஹார்மோன் அந்த பெண்ணின் சினைபையினுள் போய் அங்குள்ள திசுவை தூண்டினால், உடனே அது, ஈஸ்டிரஜன், என்கின்ற இன்னொரு ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.
இந்த ஈஸ்டிரஜன் அந்த பெண்ணின் உடம்பு முழுக்க பறவி, அவளை மேலும் உயரமாக்கி, மார்பகங்களை வளர்விக்கிறது. அது வரை ஒடிசலாய் எலும்பும் தோலுமாய் இருக்கும் பெண், திடீரென்றூ பளிச்சென்றூ மின்ன ஆரம்பித்து, முக பருவெல்லாம் வர, உடம்பு பருமனாக, வளைவு, நெளிவுகளை பெற துவங்குகிறாள்.
இந்த மாற்றங்களை தூண்டும் அதே ஈஸ்டிரஜன் தான், அந்த பெண்ணின் சினைகளை முதிர்ச்சி அடைய செய்கிறது. இப்படி சினை முதிர்ச்சி அடைந்தால், அது டப் பென்று வெடித்து, சூல் கொள்ள தயாராகி விடும். சுலை சுமந்து போஷக்களிக்கவே கர்பப்பை என்கிற ஒரு பிரத்தியேக உருப்பிருக்கிறதே.
இந்த உருப்பின் வேலை, சினை பையிலிருது வெடித்து வெளியேறும், முட்டையை அப்படியே லாவகமாக கைபற்றி, தன்னுள் கொண்டு வந்து பதுக்கி பாதுகாப்பது தான். இப்படி பாதுகாக்கப்படும் முட்டையோடு ஆணின் விந்தணு கலந்துவிட்டால், கரு உருவாகி விடும். இப்படி உருவாகும் கருவிற்கு போஷாக்கு வேண்டுமே. நிறைய போஷாக்கு இருந்தால் தானே, கரு ஜம்மென்று சத்துக்களை உள்வாங்கி, ஸ்பஷ்டமாய் வளர்ந்து குழந்தையாய் வந்து இந்த பூலோகத்தில் அவதரிக்கும்.
மனித உடலில் போஷக்கு என்பது உதிரத்தில் இருந்து தானே கிடைக்கிறது. அதனால் கர்ப்பப்பையின் உள் தோளில் உள்ள ரத்த குழாய்கள் எல்லாம் ஸ்பான்ஞ் மாதிரி உப்பி, பெருத்து, புடைத்துக்கொள்ளும். இதனால், கரு உருவானல் அது சவுகரியமாய் சஞ்சரிக்க மெத்தையும் தயார். கருவிற்கு போஷக்களிக்கும் அதிக பட்ச ரத்த ஓட்டமும் தயார்!
இப்படி கர்பப்பை ரத்தமெத்தை ரெடி என்று சமிஞ்சை தந்ததும், டாண் என்று சினை பை முட்டையை வெளியேற்ற, உடனே முட்டையை லபக்கென்று பிடித்துக்கொண்டு வந்து தன் மெத்தையில் பத்திரமாக கிடத்திக்கொள்ளும் கர்பப்பை!
இப்படி மெத்தையின் மேல் முட்டை வசதியாய் சாய்ந்து, தன்னோடு கூடிவிட விந்தணு வருகிறதா என்றூ காத்துக்கொண்டிருக்கும். விந்தணு வந்து முட்டையோடு சேர்ந்து கருவுருவானால் சரி. இல்லாவிட்டால், முட்டை காலாவிதியாகி, சூம்பிப்போய், சிதைய ஆரம்பித்துவிடும். இப்படி முட்டை வீணாகி போனால், ஒரு வேளை அது கருவானால் அதற்கு போஷக்கு அளிக்க அதுவரை தயார் படுத்தி வைத்த ரத்த மெத்தையும் வீண் தானே. அதனால் முட்டையோடு, அந்த ரத்த மெத்தையிம் உரிந்து, வழிந்து வெளியேறி விடும். இப்படி முதல் முதலில் வெளியேரும் உதிரத்தை கண்டு தான், “ஓகோ, அப்படினா, இவ முட்டைகளை உற்பத்தி செய்ய ஆரம்பிச்சிட்டா, இவளுடைய இனபெருக்க உருப்புக்கள் பூப்படைந்து பணியாற்ற ஆரம்பித்து விட்டன” என்று அதை கொண்டாடத்தான் விழா மாதிரியான வைபவங்களை நடத்துகிறார்கள் நம்மூர்காரர்கள்.
மனிதர்களை போல, நம்முடைய மிக நெருங்கிய பந்துக்களான, சிம்பான்சி, பொனோபோ ஆகிய மற்ற மனிதகுரங்குங்களுக்கும், இப்படி பூப்படையும் தன்மையும், மாதாமாதம் மாதவிடாய் உண்டாகும் தன்மையும் உண்டு. என்ன, இந்த மிருகங்களுக்கு இந்த முதிர்ச்சி வந்த உடனே அவை துணை தேட ஆரம்பித்துவிடும். சட்டு புட்டு என்று இனபெருக்கத்தில் ஈடுபட்டு, வம்சத்தை விருத்தி செய்யும்.
ஆரம்பகால மனிதர்களிலும் இதே போக்கு தான் இருந்தது. பெண் பூப்படைந்து விட்டாள், அவள் அந்த பிரதேசத்தில் இருக்கும் தோதான ஆணோடு கூடி, குலம் வளர்த்தாள். அதற்கு மேல், இந்த உதிர போக்கை யாரும் பெரிது படுத்தவில்லை. இது அசுத்தம், இந்த சமயத்துல வீட்டுக்கு தூரமா தான் இருக்கணும், மதம் சார்ந்த சமாச்சாரங்களை பங்கேற்க்கக்கூடாது என்றெல்லாம் ஆரம்பகால மனிதர்கள் கருதி இருக்கவில்லை.
இன்றூம், உலகின் பல ஓரங்களில் வாழும் பழங்குடி மனிதர்களிடையே இந்த தன்மை இருந்து வருகிறது. அவர்கள் பெண் வயதிற்கு வருவதை தங்கள் வம்சா விருத்திக்கு உதவக்கூடிய ஒரு சந்தோஷ நிகழ்சியாக மட்டுமே கருதுகிறார்கள்.
ஆதிகால குடியானவ கலாச்சாரங்களில், இந்த மாதவிடாய் உதிரத்தை சேகரித்து, விவசாயத்திற்கான விதைகளை அதில் கலந்து ஊரவைத்து, பிறகு விதைகளை தூவினால் அமோக விளைச்சல் கிடைக்கும் என்கின்ற நம்பிக்கை இருந்ததாம்.
தாய் வழி சமூகமாய் மனிதர்கள் வாழ்ந்த காலம் வரை, மாதவிடாய் உதிரபோக்கை பற்றி யாரும் பெரிய அபிப்ராயங்கள் கொண்டிருந்ததாய் தெரியவில்லை.
ஆனால் ஆண்கள் ஆட்சி பொருப்பிற்கு வந்த பிறகு, பெண் வெறும் போக பொருளாகவும், பிரசவ யந்திரமாகவும் பயன்படுத்த படலானள். இந்த காலகட்டத்தில் தான் மனித கலாச்சாரத்தில் புது மாறுதல்கள் தலை தூக்க ஆரம்பித்தன.
பெண் நேரடியாக தன் துணைவனை தேர்தெடுக்கும் மரபு மாறி, அவள் பெற்றோர், தங்களுக்கு பிடித்த ஒருவனுக்கு அவளை ஒரு பொருளை போல கன்னிகாதானம் செய்து தரும் வழக்கம் உருவாக ஆரம்பித்தது.
இப்படி பெற்றோர், தங்கள் மகளை இன்னொருவனுக்கு தானமாய் தரும் பழக்கம் வந்த பிறகு, “என் மக வயசுக்கு வந்துட்டா!” என்று அறிவிக்கும் வைபவங்களும் நடைமுறைக்கு வந்தன. இப்படி புதிதாய் பூப்படைந்த பெண்ணுக்கு மஞ்சள் நீராட்டி, புத்தாடை அணிவித்து, அலங்காரமெல்லாம் செய்து, “இந்த பெண் இப்போது இனபெருக்க தகுதியை அடைந்து விட்டாள்” என்று அறிவித்தால், அடுத்த முகூர்த்ததிலேயே, புதிதாய் பூப்படைந்த பெண்ணை கல்யாணமே செய்து கொடுத்து விடலாம். சின்ன ஊர்களில், குட்டி குட்டி இனக்குழுக்களாக மனிதர்கள் வாழ்ந்த காலத்தில், முறைப்பையன் வந்து ஓலை கட்டி, சீர் செய்து, பெண்ணை ”புக்” செய்துக்கொள்ளும் மரபுகளும் இருந்தன.
ஆஃப்ரிகா, அரேபியா போன்ற நாடுகளில் பெண் பருவம் அடைந்த உடனே, அந்த வீட்டின் வாசலில் ஒரு கொடியை கட்டி பறக்க விடுவார்களாம். அந்த கொடியை கவனித்து விட்டு, பெண் கேட்டு மாப்பிள்ளை வீட்டார் வரிசை கட்டி வருவார்களாம்.
இப்படி பெண் பூப்படைந்த உடனே திருமணமும் ஆகி, திருமணமான உடனே கருவும் உற்று விட்டால், பிறகு அவளுக்கு கர்பகாலம், முழுக்க மாதவிடாயே ஏற்படாது. குழந்தை பிறந்த பிறகு தான் மீண்டும் உதிரபோக்கு ஏற்படும். அதன் பிறகு அவள் குழந்தைக்கு பால் கொடுக்கும் அத்தனை மாதமுமே மாதவிடாயே ஏற்படாது. மகபேற்று காலத்தில் இல்லாமல், மற்ற காலத்தில் மட்டும் இருந்து தொலைத்ததால், மாதவிடாய் “இவள் இன்னும் கருவுரலை, பிள்ளை பெக்கலை” என்பதன் அறிகுறியாக கருதப்பட்டது.
அந்த கால மனிதர்களை பொருத்தவரை, பெண் என்றால் வெறும், பிரசவ யந்திரம் மட்டுமே. பெண்ணின் ஒரே பிறவிப்பயனே பிள்ளை பெற்று போடுவது தான் என்று மனிதர்கள் நினைத்த காலம் அது என்பதால் அவள் பிள்ளை பெறாமல் இருந்த காலம் எல்லாமே வீண் என்றே அவர்கள் நினைத்தார்கள். அதனால் மாதவிடாயை ஒரு வித மகபேற்று இயலாமையாகவே அவர்கள் கருதினார்கள்.
அதுவும் போக அந்த காலத்தில் மாதவிடாய் உதிரத்தை உரிஞ்சி உட்படுத்தும் வஸ்துக்கள் ஏதும் இருந்திருக்கவில்லை. பழங்குடி பெண்கள் சும்மாவே ஆடை அணியமாட்டார்கள். அதனால் மாதவிடாய் உதிரத்தை அவர்கள் சட்டை செய்யாமல் அப்படியே விட, “காலில் சிகப்பு கோடு கொண்டவள்” என்றே கன்னிப்பெண்களை அந்த கலாச்சாரத்தில் கூப்பிடுவார்களாம்.
ஆனால், யூதர்கள், பாரசீகர்கள், சமனர்கள், பௌதர்கள், ஹிந்துக்கள் மாதிரியான தந்தைவழி நாகரீகத்தில் எல்லாம், மனிதர்கள் அனைவரும் உடை அணிந்திருந்தார்கள், வீடுகளில் வசித்தார்கள். இந்த இன பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால், எல்லா இடத்தையும் ரத்தக்கரை ஆக்க வேண்டாமே, பிறகு சுத்தம் செய்வது கடினம். பேசாமல் உதிரம் நிற்கும் வரை ஒரே இடமாய் உட்கார்ந்து கிடக்கலாம், என்று இந்த இன பெண்கள் மாதவிடாய் காலத்தில் சுத்தம் கருதி பிறர் புழங்காத ஓரத்தில் கிடக்க ஆரம்பித்தார்கள். உதிர உரிஞ்சான்கள் இல்லாத அந்த காலத்தில் இதுவே சுகாதாரமான சுலபமான யுத்தியாகவும் இருந்திருக்கும். சதா வேலை என்று பம்பரமாய் சுற்றிய பெண்களுக்கு இது ஒரு சவுகரியமான ஓய்வுக்காரணமும் ஆகிவிட, பெண்கள் எல்லாம் மிக சாமர்த்தியமாய், “நான் தூரம்” என்று விடுப்பு எடுத்துக்கொள்ள ஆரம்பித்தார்கள்.
ஆண்களும் தங்கள் பங்கிற்கு “பெண்கள் அசுத்தமானவர்கள்! அதனால் மதம் சார்ந்த விஷயங்களில் பெண்கள் பங்கு கொள்ளாமல் இருக்கக்கடவது!” என்று முடிவு செய்தார்கள்.
இதெல்லாம், ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைவரம். 1960களில் பெண்களில் இனபெருக்க உருப்புக்கள் பற்றிய பல புது தெளிவுகள் ஏற்பட, பெண்களுக்கென்றே பிரத்தியேக உதிர உரிஞ்சான்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றின் உபயத்தால், அசுத்தமாகி விடும், என்ற அச்சமே இன்றி, பெண்கள் தம் பாட்டிற்கு உரிஞ்சானை மாட்டிக்கொண்டு எங்கு வேண்டுமானாலும் போகலாம் என்ற சுதந்திரத்தை பெற்றார்கள். இந்த சுதந்திரம் கிடைத்த அரை நூற்றாண்டிலேயே பெண்கள் மாபெரும் சாதனைகள் பலவற்றை புரிந்து பெண்மை ஒரு ஊனமல்ல என்பதை நிருபவித்தார்கள்.
இதற்கிடையில் மனித ஜனத்தொகையும் முன்பு எப்போதும் இல்லாத உச்சத்தை தொட்டு நிற்க, பூப்படைந்த உடனேயே பிள்ளைகளை பெற்று போட்டு, ஜனதொகையை மேலும் பெருக்கி தள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. அதனால் படித்தவர்கள் மத்தியில், “என் மக வயசுக்கு வந்துட்டா, அவ இனபெருக்கத்திற்கு தயார்” என்று அறிவிக்கும் வைபவங்கள் செல்வாக்கை இழந்தனர்.
அதுவும் போக உறவிற்குள்ளேயே திருமணம் செய்தால் இந்த கலப்பில் பிறக்கும் குழந்தைகளுக்கு வீரியம் குறைந்துவிடுகிறது என்பது எல்லோருக்கும் தெரிய ஆரம்பித்துவிட, முறை பையன் என்று ஒரு சொந்த காரன் வந்து பரிசம் போடும் நடைமுறையும் மாறலானது. கிராமங்களில் சின்ன குலங்களாய் வாழ்ந்த காலம் போய், நகர் புறத்தில் முற்றிலும் அன்னியர்களோடு வாழ்வது நடைமுறையான பிறகு, மகள் வயதிற்கு வந்ததை பிறரிடம் போய் சொல்லிக்கொள்வது, கொஞ்சம் அநாகரீகமாகவும் கருதப்பட, பூப்படைந்த பெண்களுக்கு பெரிய விழா எடுக்கும் தன்மை நகரங்களில் குறைய ஆரம்பித்து விட்டது. அதை போல, சேனிடரி நேப்கின்களின் உபயத்தால், பெண்களை மாதவிடாய் காலத்தில் ஓரம்கட்டும் மரபும் மாறிவிட்டது.
இத்தனை இருந்தும், இன்னும் சில பழம் பஞ்சாங்கள், “மாதவிடாய் உதிரம் அழுக்கு. தீட்டு, கோயிலுக்கு போயிடாதே” என்று சொல்லத்தான் செய்கிறார்கள். இதெல்லாம் சேனிடரி நேப்கின் இல்லாத கால்ததின் லாஜிக், இப்போது தான் கம கம சேனிரரி நேப்கின் வந்துவிட்டனவே, இதை மாட்டிக்கொண்டு பெண்கள் எல்லாம் வெளி கிரகத்திற்கே போய் வருகிற போது, ஆஃப்டரால் மனிதன் கட்டிய கோயிலுக்கு போககூடாதா? ”கூடாது, கோயிலில் சாமி இருக்கிறது” என்று தர்க்கம் செய்தாலும் ,இந்த கால பெண்கள் மிக சமர்த்தாக கேட்கிறார்கள், “கோயில்ல மட்டும் தான் சாமி இருக்கா?” என்று. அப்படியும் கன்வின்ஸ் ஆகாத பழைமைவாதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். சுயமாக யோசித்து சுதந்திர முடிவிற்கு வர முடியாத அறிவியல் அறியாதவர்கள் பாவம். ஆனால் அவர்களை விட ரொம்ப பாவம் யார் தெரியுமா? ஆண்கள்!
பெண்களுக்காவது வயதிற்கு வந்தவுடன், “இது இது, இப்படி இப்படி” என்று பெரிய பெண்கள் எல்லாம் ஒன்று கூடி, கூச்சம், நாச்சம் இல்லாமல் எல்லாவற்றையும் புட்டு புட்டு வைத்து விடுகிறார்கள். ஆனால் ஆண்கள் வயதிற்கு வந்தால், அவர்களை சட்டை செய்ய கூட நாதி இருப்பதில்லை. பெரும்பாலான ஆண்களுக்கு தாங்கள் வயதிற்கு வந்ததே தெரிவதில்லை. அப்புறம் எங்கே கொண்டாடுவது.
இத்தனை காலம் தான் பெண்கள் வயதிற்கு வருவதை பெரிய வைபவமாய் கொண்டாடினோமே. இது தான் பாலியல் சமத்துவ யுகமாயிற்றே, இனி ஆண்கள் வயதிற்கு வருவதையும் கொண்டாட ஆரம்பித்தால் தானே இருபாலோரையும் சமமாய் நடத்தியதாகும்!

Oct 11, 2009

ஆண்கள்

ஆண்கள் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று பெண்கள் நினைக்கிறார்கள் என்று பார்ப்போமா?

தொல்காப்பிய காலத்திலிருந்தே பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பது நான்கே நான்கு குணங்களைத் தான். அவையானவை (1) தன்மை, (2) நிறை, 3) ஓர்ப்பு, (4) கடைபிடி. அதென்ன தன்மை, நிறை, லொட்டு, லொசுக்கு... கேள்விப் பட்டதே இல்லையே என்கிறார்களா?

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு... இதைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இவை பெண்களின் குணம் என்று சொல்லப்படுவது போல, இதற்கு இணையாக ஆடவர் குணநலன்கள்தான் இந்த தன்மை, நிறை, ஓர்ப்பு மற்றும் கடைபிடி. பெண்களை ``இப்படி இரு, அப்படி இருக்காதே'' என்று சதா கட்டுப்படுத்திக்கொண்டே இருக்கும் சமுதாயத்தின் உபயத்தால் இந்த பெண் பால் குணங்கள் பிரபலமாகிவிட்டன. ஆண்களை இப்படி வற்புறுத்தாமல் விட்டதினாலோ என்னவோ இந்த ஆடவர் குணங்கள் இதுவரை பிரபலமாகவே இல்லை.

ஆனால் இப்படி தன்மையாக, நிறைவாக, பொறுமையாக சுயக்கட்டுப்பாடு அதிகம் கொண்டவனாய் இருப்பது தான் ஆண்களுக்கு அழகென்று தொல்காப்பியர் காலத்திலிருந்தே கருதப்பட்டு வந்தது.
இவை எல்லாம் போக, பெரும்பாலான பெண்கள் ஆண் என்றாலே தைரியமானவன், பொறுப்பானவன், தன்னை பூ மாதிரி பார்த்துக் கொள்ளப் போகிறவன், தன் கடமைகளை முன் நின்று செய்பவன். எதற்கும் கலங்காத அஞ்சா நெஞ்சம் படைத்தவன், பரந்த மனப்பான்மை கொண்டவன், உலக நடப்புக்களை விரல் நுனியில் வைத்துக் கொண்டிருப்பவன் அன்பை லிட்டர் லிட்டராய் பொழிந்து, அவளிடம் ஆசையாய் பேசி, அவளை காதல் மழையில் நனைத்து களிப்புற வைக்கப் போகிறவன், தன்னைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் திரும்பிக்கூட பார்க்க மனம் வராதவன் என்று எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள் பெண்களிடம் உள்ளன.

சரியான வழிகாட்டுதல் கிடைக்க கொடுத்து வைத்த மிகச் சில ஆண்களே மேலே சொன்ன மாதிரி எல்லாம் இருக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக இப்படிப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது. மீதமுள்ள சாமான்ய ஆண்கள் எல்லாம் யதார்த்தத்தில் எப்படி இருக்கிறார்கள் தெரியுமா?

* பொறுப்பைத் தட்டிக்கழிப்பதில் கில்லாடியாய் சிலர்,

* பிரச்னை என்றதும் இருந்த இடமே தெரியாமல் திடுமென மாயமாய் மறைந்து போகும் மகா கோழைகளாய் சிலர்,

* பெண்ணைக் காப்பாற்றுவது என்றால் என்ன என்றே தெரியாமல் ஆபத்து நேரத்தில்கூட அருகில் இருக்கும் பெண்ணைத் தள்ளிவிட்டு தான் முந்திக்கொண்டு தப்பிக்க முயலும் சிலர்,

* கடமையா? எனக்கா? கிலோ எவ்வளவு என்று கேட்கும் சிலர்?

* இம் எனும் முன் பயந்து நடு நடுங்கி, பெண்ணின் தலையில் பழியை போட்டுவிட்டு ஜகா வாங்கி ஓடும் சிலர்.

* போன நூற்றாண்டின் கட்டுப் பெட்டியான அபிப்ராயங்களை இன்னமும் அப்படியே அடிபிறழாமல் கடைபிடிக்கும் டைனோஸர் காலத்து பிற்போக்குவாதிகள் பலர்.

* உலகத்தைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் அடுத்த வேலை சாப்பாடும், தூங்க ஒரு ஓரமும் கிடைத்தால் போதும் என்று ஓசியில் உடம்பை வளர்க்கும் ஒட்டுண்ணிகளாக சிலர்.

* துணைவியிடம் அன்பாய் ஒரு வார்த்தை கூட பேசத் தெரியாத சிடுமூஞ்சிகளாக சிலர்.

* மனைவியை மகிழ்விக்கவே தெரியாத மண்டூகங்களாய் சிலர்.

* கணவனிடம் ஆசையாகப் பேசலாம் என்று இவள் காலையிலிருந்து காத்துக் கொண்டிருக்க, வந்ததும் வராததுமாய் தொலைக்காட்சியே கதி என்று கிடந்து விட்டு, அதிகாரம் செய்ய மட்டும் வாயை திறக்கும், மனைவியின் தேவைகளைப் புரிந்து நடந்து கொள்ளத் தெரியாத மக்குகளாக சிலர்.

* துணைவியை வெறும் ஒரு சமையல்காரி, சலவைத் தொழிலாளி, பிள்ளை பெறும் எந்திரம் என்ற அளவில் மட்டுமே நடத்திவிட்டு, தன் சுகம் மட்டுமே பிரதானம் என்று மனைவியை மனுஷியாகக் கூட மதிக்காத ஜந்துக்களாய் சிலர்.

* பக்கத்தில் மனைவி இருக்கும்போதே, போகிறவள் வருகிறவள் என்று எல்லாப் பெண்களையும், அவ்வளவு என்ன பெண் வடிவத்தில் இருக்கும் பொருட்களையும் பொம்மைகளையும் பார்த்தால் கூட ஓவராக ஜொள்ளு விடும் சபலக் கேசுகளாக சிலர்...

* மனைவியை அசிங்கமாகப் பேசியும், திட்டியும் அடித்தும், உதைத்தும், தான் எவ்வளவு பெரிய ஆண்மகன் என்று காட்டிக்கொள்ள முயலும் அரைகுறை ஆண்களாய் சிலர்.

இவை எல்லாம் சேர்ந்த மோசமான கலவையாய் சிலர் என்று பல ஆண்கள் இப்படி குறை ஆண்களாகவே இருக்கிறார்கள். ஏன் ஆண்கள் எல்லாம் இப்படி இருந்து தொலைக்கிறார்கள்?

பெண்கள் ஆசைப்படுவது போல ஆசையாய், ஹாஸ்யமாய், பாசமாய், கம்பீரமாய், குறும்பாய், துணிச்சலாய் ஆண்கள் ஏன் அதிகம் பேர் இருப்பதில்லை?

A man is not born, he is made. பிறக்கும் போதே எவனும் பேராண்மை மிக்கவனாய் இருப்பதில்லை. அவனை இப்படி ஓர் ஆண்மகனாய் மாற்றுவது தான் பெண்களின் மிகப் பெரிய சமூகப் பணி. தாயாய், தமக்கையாய், மனைவியாய், மகளாய், மருமகளாய், சகாவாய் இருந்து பெண்கள் எல்லோரும் தொடர்ந்து பதப்படுத்திக் கொண்டே இருந்தால் ஒழிய ஆதர்ஷ ஆண் உருவாவதே இல்லை.

நீங்கள் எந்த பேராண்மைமிக்க மனிதனை வேண்டுமானாலும் உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்களேன், அவர்கள் எல்லாம் அத்தனை பேராண்மையைப் பெறக் காரணம், அவர்களை அப்படி பதப்படுத்திய பெண்களே. ஆனால் இந்த பேராண்மைமிக்க ஆண்களிடம் ஒரு பெரும் பிரச்னை என்னவென்றால், இந்த மஹா உத்தமனான ஆண்களால் பெண்களுக்கு எப்போதுமே பிரயோஜனம் இருந்ததில்லை.

புத்தரும், மஹாவீரரும், சங்கரரும், விவேகானந்தரும், ரமணரும், முத்துராமலிங்கரும், காமராஜரும், பெரியாரும் மிகவும் மேன்மையான ஆண்கள்தான். ஆனால் அவர்கள் மேன்மைக்குக் காரணமே, அவர்கள் பெண்களை விட சமூக மாற்றமே மேல் என்று வேறு இலக்காக இருந்ததுதான். பெண்களை திரும்பியும் பார்க்காமல் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, கொள்கை, இலட்சியம் என்று தன் இலக்கிலேயே குறியாய் இருந்ததாலேயே இந்த மாதிரி ஆண்களின் மேல் பெண்களுக்கெல்லாம் பெரிய ஈர்ப்பிருந்தது. ஆனால் இவ்வளவு வகீகரம் இருந்தும், மிகச் சிறந்த உதாரண புருஷர்களாய் இருந்தும், இவர்களால் பெண்களின் அகவாழ்க்கைக்கு எந்த உபயோகமும் இல்லை. இதை எல்லாம் கடந்த நிலையை, அடைந்திருந்தார்கள், இந்த பேராண்மைமிக்க மனிதர்கள்.

இவர்களைத் தவிர மற்ற ஆண்கள் எல்லோருமே சாமானியர்கள்தான். அதனால் தான் அவர்களுக்கு பெண் ஒரு முக்கியமான ஈர்ப்பு விசை ஆகிறாள். இப்படி சாமானிய ஆண்களுக்கே பெண்ணின் துணை தேவைப்படுகிறது என்பதால், வேறு வழியில்லாமல் இந்த குறை ஆண்களோடு ஒப்பேற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் பெண்கள் எல்லாம்.

எந்த ஆணும் பெர்ஃபெக்ட் இல்லை. நாம் மஹாத்மா என்று நினைப்பவனும் மஹா கேவலமான வக்கிர கேஸாக இருக்கலாம்.
அதனால் ஆண்களை வெறுமனே தரப்பரிசோதனை செய்து மட்டம் தட்டுவதை நிறுத்தி விடுங்கள். பேரின்ப தேடலே பெரிது என்று பேராண்மைமிக்கவர்கள் போய்விடுவதால், சாதாரண ஆண்கள் மட்டுமே லௌகீக வாழ்க்கைக்கு மீந்து இருக்கிறார்கள்.
இந்த ஆண்கள் குறை ஆண்கள்தான் என்று நமக்கு ஏற்கெனவே தெரியுமே. பிறகு இவர்களை சும்மா சொல்லிக்கொண்டிருப்பதில் என்ன லாபம்? இவன் இப்படித் தான். இவனை இப்படியே ஏற்று பிறகு நீங்கள் விரும்பும்படி அவனை மாற்றிக் கொள்ளுங்கள்.

நன்றி:
Dr.N.ஷாலினி.

Oct 4, 2009

அவசர தேவை: வெற்றி மனோபாவம்!



நாம் ஒரு செயலை செய்ய ஆரம்பிக்கும் போது வெற்றி மனோபாவத்துடன் ஆரம்பிக்கிறோமா?

'கண்டிப்பாக அப்படித்தான் ஆரம்பிக்கிறோம்..ஆமாம் வெற்றி மனோபாவம் என்றால் என்ன?' என்று யாராவது கேட்கலாம்.

அவர்களுக்கெல்லாம் நான் இரண்டு வரிகளுக்கு மிகாமல் சிறுகுறிப்பு வரைந்து சொல்ல வருவது என்னவென்றால் அந்த செயல் கண்டிப்பாக வெற்றி பெறும் என்ற உறுதியான உணர்வு நம் மனதில் ஏற்படுகின்றதல்லவா? அது தான்.

நண்பர்கள் நன்றாக கவனிக்கவும் - நான் உறுதியான உணர்வு என்று தான் சொல்கிறேன். எண்ணம் என்று சொல்லவில்லை.

ஏனென்றால் எண்ணம் என்பது நமது மேல் மட்ட மனதில் தோன்றுவது. உணர்வு என்பது உள்மனதில் ஏற்படுவது. அதற்கு சக்தி அதிகம்!
அந்த சக்தி நம்மை சரியான வழியில் நடத்திச் சென்று நமது குறிக்கோளை அடைய உதவும்.

சும்மா நமது உணர்வு மனதில் அந்த செயலில் ஜெயித்துக் காட்டுவோம் என்று வற்புறுத்தி நாம் நினைக்கலாம்.

ஆனால் சக்தி வாய்ந்த நமது ஆழ்மனக் கிடங்கில் உள்ள நாம் சேர்த்து வைத்த நமது பழைய குப்பைகள் அந்த நம்பிக்கைகளுக்கு எதிரானவையாக இருந்தால் பயனில்லை.
அந்த நீண்ட நாளைய சேமிப்புக்கு தான் சக்தி அதிகம். அவை 'இவரு ஜெயிச்சுருவாரோம்ல...என்ன கொடுமை சார் இது?' என கேலி செய்யலாம்.

ஆக அந்த குப்பைகளை காலி செய்ய வேண்டும். எதிர்மறை எண்ணங்களை வேரோடு பிடுங்கி களைய வேண்டும். விழிப்புணர்வுடன் இருந்து மேலும் அவை முளைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆழ்மனதில் நன்னம்பிக்கைகளை விதைக்க வேண்டும்.

அந்த நல்ல நம்பிக்கைகள் நமக்கு வெற்றி மனோபாவத்தை ஏற்படுத்தும்.

சாதிக்கும் சக்தியை கொடுக்கும்.

வெற்றி மனோபாவத்துடன் நாம் செயல்பட ஆரம்பித்தோமானால் நமது சாதனைகளுக்கு வானமே எல்லை!!