அம்பு வில்லுடன் இருக்கும் அப்பாவிகளை அடியோடு அழிக்கவந்த பூமியில் உள்ள கேவலமான மனிதரால்,மாற்றுக்கிரக மக்கள் படும் அவலம் நமக்கு முள்ளிவாய்க்காலை நினைவுபடுத்துகிறது.
டைட்டானிக் திரைப்படத்தின் பின்னர் ஜேம்ஸ் கமரூன் எடுத்த AVATAR திரைப்படம் இன்று உலகம் முழுவதையும் ஓர் உலுக்கு உலுக்கிக் கொண்டிருக்கிறது.
இந்தத் திரைப்படத்தில் வக்கிர மனம் கொண்ட மனிதர்களால் தாக்கப்படும் மாற்றுக்கிரக அபலை மனித்கள் உயிரைக் காக்கப் படும்பாடு, முள்ளிவாய்க்காலில் நடந்த கொடிய தாக்குதலை கண் முன் கொண்டு வருகிறது. இதில் ஒரு மாற்றம் முள்ளிவாய்க்காலில் கெதியற்றவர்கள் அழிக்கப்பட்டார்கள், இங்கு காக்கப்படுகிறார்கள் இதுதான் வேறுபாடு. இப்படம் திரையுலக வரலாற்றில் 21 ம் நூற்றாண்டின் அவதாரம் என்று போற்றப்பட வேண்டிய மேன்மை கொண்டது. அனைவரும் திரையரங்கு சென்று முப்பரிமாணத்தில் அதைக் காண வேண்டும்.
முப்பரிமாணத்தில் முன்னரும் திரைப்படங்கள் வந்துள்ளன. தமிழில் 25 வருடங்களுக்கு முன்னரே மைடியர் குட்டிச்சாத்தான் என்ற படம் வந்து சக்கை போட்டது. ஆனால் இப்போது ஜேம்ஸ் கமரூன் தந்துள்ள முப்பரிமாணப் படம் அடுத்த கட்ட சினிமாவிற்கான பொன்னான படிக்கட்டாக உள்ளது. படத்தைப் பார்க்கப் போவோர் முதலில் இரு பரிமாணம், முப்பரிமாணம் என்றால் என்ன என்ற தகவலை சரியாக புரிந்து கொண்டு திரைக்குள் போக வேண்டும்.
திரைப்படத்தின் கதை
வேற்றுக்கிரகத்தில் மனிதர்கள்போல அதேவேளை நீண்ட காதுகளும், வாலும் உள்ள, நீல நிறமான மக்கள் கூட்மொன்று இருக்கிறது. இவர்கள் இருக்கும் இடத்திற்கு அடியில் விலை மதிக்க முடியாத வளம் இருக்கிறது. இம்மனிதர்களோடு சேர்ந்து அவர்களாகவே மாறி, உண்மையை புரிய வைத்து அவர்களை அங்கிருந்து அகற்றி, அந்த வளத்தை எடுக்க முயல்கிறது நல்லவர்கள் கூட்டம். அவர்களை அடியோடு அடித்து விரட்டி, சூறையாட முயல்கிறது வில்லன் கூட்டம். இரண்டு போராட்டங்களுக்கு இடையில் ஒரு காதல். இறுதியில் மாற்றுக்கிரக மனிதரை காதலே காப்பாற்றுகிறது. அன்பே வெல்லும் என்ற உண்மையையும், பகுத்தறிவுள்ளவன் என்று தன்னைப் பெருமைப்படுத்தும் மனிதனே பிரபஞ்சத்தில் மோசமானவன் என்ற முத்தாய்ப்பையும் உரைக்கிறது கதை.
திரைப்படத்தின் மையக் கதைக்கான தலைமைக் கோட்பாடு
ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாடே திரைக்கதை அமைவிற்கு அடிப்படை. இந்தப் பிரபஞ்சத்தில் ஈதர் என்ற வெளி நிலையாக இருக்கிறது. மற்றவை எல்லாம் அசைகின்றன என்பது சேர். ஐசாக் நியூட்டனின் விதியாகும். ஆனால் இக் கொள்கை தவறானது, நிலையான பொருள் என்று எதுவும் கிடையாது, ஈதர் வெளி என்பதும் வெறும் கற்பனையே, பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே ஒன்றோடு ஒன்று சார்ந்து நிற்கின்றன. நாமும் நாம் வாழும் இயற்கையும் வேறு வேறல்ல என்பதே ஐன்ஸ்டைன் கூறியதாகும்.
இந்தத் திரைப்படத்தில் மாற்றுக்கிரகத்தில் வாழ்ந்த மக்கள் இயற்கையோடு பேசுகிறார்கள். மரங்கள், பூக்கள், பறவைகள் எல்லாமே ஒன்றின் செய்தியை ஒன்று அறிந்து சார்பியல் கொள்கையில் இயங்குகின்றன. ஆனால் மனிதனோ தனக்குள் வேறுபாடுகளை ஏற்படுத்தி, ஒன்றோடு ஒன்று சார்ந்து நிற்கவில்லை என்று தப்பாகக் கணக்கிட்டு கொலைகளிலும் அழிவிலும் குதிக்கிறான். கடைசியில் ஆயுதக் கலாச்சாரத்தாலும், பொருளாதார, அரசியல் அதிகார வெறியாலும் கவரப்பட்ட மனிதன் பிரபஞ்சத்திலேயே ஒரு நாசமான படைப்பு என்று சொல்லாமல் சொல்லும் விதமாக கதைக் கோட்பாடு பின்னப்பட்டுள்ளது. ஒன்றே உலகம் என்ற கணியனின் கோட்பாடே ஜேம்ஸ் கமரூனின் திரைக்கதையின் எதிர் பார்ப்பாக உள்ளது.
திரைப்பட ஜாலங்கள்
இந்தத் திரைப்படத்தில் பிரமாண்டமே தொடக்கம் முதல் முடிவுவரை நம்மை அதிசயிக்க வைக்கிறது. போதுமா போதுமா என்று கேட்டு கேட்டு பிரமாண்டங்களை கொட்டித்தள்ளுகிறார். கிராபிக்ஸ், ஒலி என்பன படைத்துள்ள சாதனைகள் அற்புதத்திலும் அற்புதமாக உள்ளன.
கற்பகத்தின் பூங்கொம்போ ! காமன் தன் பெரு வாழ்வோ !
புயல் சுமந்து விற்குவளை மதிமலர் பூத்த விரைக்கொடியோ!
பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ
அற்புதமோ சிவனருனோ அறியேனென்று அதிசயித்தார் !
என்று பெரிய புராணத்தில் பரவையாரைப் பார்த்து அதிசயித்த சுந்தரரின் கற்பனை வடிவிலான கற்பக மரங்கள் இங்கு அதைவிட அழகாக காட்சிக்கு வருகின்றன. நீலகண்டனான சிவனை ஒரு சிந்தனையாக வைத்து நீல நிறமான மனிதர்களை கமரூன் வடிவமைத்தார் என்றும் சிலர் கூறுகிறார்கள்.
மேலும் கதாநாயகனை ஊனமுற்ற ஒருவனாக் காட்டும்போதே டைரக்டர் ஊனமுற்றுள்ள மனித மனத்தை சித்தரித்துவிட்டார். கதாநாயகன் மாற்றுக் கிரகத்தில் உருமாறி, கால் பெற்று, காதலித்து, இயற்கையை அனுபவித்து, பறவைகளில் ஏறி பயணித்து, காதலித்து காணும் இன்பங்கள் கோடி கோடி.. எத்தனை கோடி இன்பங்கள் படைத்தாய் எங்கள் இறைவா என்ற பாடலின் யதார்த்தத்தை கண் முன் நிறுத்துகிறார். இந்த நூற்றாண்டில் நடுப்பகுதியில் வரவுள்ள புதுமைகள் எல்லாம் 25 வருடங்களுக்கு முன்னரே திரையில் பயணிக்கின்றன. தமிழில் உள்ள புராணங்களை விஞ்சிய அழகுகளை முப்பரிமாணம் படைத்துக் கொட்டுகிறது. காதலின் மகத்துவத்தை புரிந்தவன் கொலைஞனாகமாட்டான், அவன் இயற்கையையும் நாசம் செய்ய மாட்டான் என்ற செய்தி கதையில் உள்ளது.
ஜீவனுள்ள காதல்
உலகம் முழுவதிற்குமே பொதுவான உணர்வு காதல்தான். டைட்டானிக் என்ற கப்பலை படமாக்கிய கமரூன் அங்கும் ஒரு ஜீவனுள்ள காதலை ஓடவிட்டு கதைக்கு வலுவூட்டினார். இங்கும் காதலே ஜீவநாடியாக உள்ளது. காதலுக்காக கதாநாயகன் உலகத்தையே கைவிட்டு மாற்றுக்கிரக வாசியாகவே மாறுகிறான். காதல் எத்தனை வலிமையானது என்பதை இங்கு அவர் சொல்லியுள்ளார். அன்று உலகமே வேண்டாம் காதலே வேண்டும் என்று உயிர் கொடுத்ததோடு ரோமியோ – யூலியட் முடிந்தது. ஆனால் இன்றோ உலகமே வேண்டாம் என்று விலகி காதலுக்காக ஒரு புதிய அற்புத உலகமே போகும் காதலரை தருகிறார் கமரூன். இன்னொரு பிறவி இருந்தால் மறுபடி சந்திப்போம் என்று பிரியும் காதலருக்கு, இன்னொரு உலகமே இருக்கிறது என்ற உன்னதத்தைத் தருகிறார். பன்னிரண்டு வருடங்களாக இதற்காகவே அவர் போராடியுள்ளார். 12 வருடங்களில் 100 வது படம் தருவேன் என்று கூத்தாடும் நம்மூர் நாயகர்களுக்கு 12 வருடங்களில் ஒரு படம் என்ற கமரூனின் முயற்சி நல்லதோர் பாடமாக அமைந்தால், நமது சினிமாவும் உயர்வு பெறும்.
குறைபாடுகள்
எல்லாமே பிரமாண்டமாக இருந்தால் அந்தப் பிரமாண்டமே ஓரிடத்தில் தெவிட்டிவிடும் நிலை வரும். லோட் ஒப் த றிங்ஸ் போன்ற பிரமாண்டமான தயாரிப்புகளில் இருந்த தெவிட்டல் இதிலும் சிறியளவில் உண்டு. பிரமாண்டங்களில் பரவசமடையும் ஒருவர் கதையைக் கோட்டைவிடவும் வாய்ப்புண்டு. இதுவரை அவதார் பற்றி தவறான கணிப்புகள் தமிழகத்தில் நிறைய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
திரைப்படம், திரைக்கதை, தொழில் நுட்பம், சினிமா என்ற மகத்துவத்தை எப்படிப் பயன்படுத்துவது என்ற பாதையில் கொலிவூட்டுக்கு கமரூன் புத்துயிர் கொடுத்துவிட்டார் என்பது முற்றிலும் உண்மை. அடுத்த ஆண்டு டைட்டானிக் போல 11 ஆஸ்கார் விருதுகளை தட்டும் இப்படம் என்பதில் அதிக சந்தேகம் தேவையில்லை. 2009 ல் அவட்டாரை மிஞ்ச ஒரு பிரமாண்டமான படம் வரவில்லை.
நன்றி;-கி.செ.துரை