நம்மை நாம் எப்படி வெளிப்படுத்துகிறோமோ அப்படித்தான் உலகம் நம்மை அறிந்து கொள்கிறது. சமூக மரியாதை, செல்வாக்கு என்றெல்லாம் சொல்கிறார்களே, அதற்கெல்லாம் என்ன பொருள்? நம்மீது பிறர் கொண்டிருக்கிற அபிப்பிராயம்தான் அவையெல்லாம்!
இந்த அபிப்பிராயங்களை அவர்களாக உருவாக்கிக் கொள்வதில்லை. நம்முடைய வார்த்தைகள், செயல்பாடுகள், அணுகுமுறைகள் எல்லாம் சேர்ந்து நம்மீது சில அபிப்பிராயங்களைக் கட்டமைக்கிறது.
நாம் நல்ல மனநிலையில் இருப்பதைப் பார்ப்பவர்கள், இவர் ரொம்ப அன்பான மனுஷன் சார்” என்று முடிவெடுக்கிறார்கள். எதற்கோ, யார் மீதோ அளவு கடந்து கோபப்பட்டதைப் பார்ப்பவர்கள் அய்யோ! சரியான சிடுமூஞ்சி என்று முத்திரை குத்திவிடுகிறார்கள்.
மொத்தத்தில், நம்மீதான சமூக அபிப்பிராயங்களுக்கு நாமே காரணம். ஒவ்வொரு தனிமனிதரையும், அவரைச் சுற்றியுள்ள சமூகம் மிக உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.