Dec 3, 2010

டீன் ஏஜ் பெண்ணின் அப்பாவா நீங்க ?

 
My Sweet and Sweetest Daddy
வயசுக்கு வந்த பிள்ளையை வளர்க்க வேண்டியது அம்மாவோட பொறுப்பு என நைஸாக நழுவும் அப்பாவா நீங்கள் ?  கொஞ்சம் நில்லுங்கள். உண்மையில் உங்கள் டீன் ஏஜ் மகளுக்கு அம்மாவை விட அதிகம் தேவை நீங்கள் தான். முழிக்காதீங்க…
தந்தையின்  நேசம் கலந்த வழிகாட்டுதல் இல்லாத பதின் வயதுப் பெண்கள் பல்வேறு சிக்கல்களில் விழுகிறார்கள். சிறுவயதிலேயே அவர்கள் பாலியல் ரீதியாக பலவீனப்படுகிறார்கள். தேவையற்ற தாய்மையைப் பெற்றுக் கொள்கிறார்கள். இதையெல்லாம் நான் சொல்லவில்லை ! அமெரிக்கா மற்றும் நியூசிலாந்தில் நடத்தப்பட்ட விரிவான ஆராய்ச்சி ஒன்று சொல்கிறது.
இந்த ஆராய்ச்சியை முன் நின்று நடத்தியவர் நியூசிலாந்திலுள்ள கேண்டர்பர்க் பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியரான புரூஸ் ஜே எல்லிஸ். டீன் ஏஜ் பருவத்திலேயே செக்ஸ் பிரச்சினைகளில் மாட்டி கர்ப்பமாவது அமெரிக்கா மற்றும் நியூசிலாந்தில் சர்வ சாதாரணம். இதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என அவர்கள் அலசி ஆராய்ந்தபோது தான் சிக்கியிருக்கிறது இந்த அதிர்ச்சியூட்டும் உண்மை. தந்தையின் சரியான வழிகாட்டுதல், அன்பு, அரவணைப்பு இல்லாதது தான் எல்லா பிரச்சினைக்கும் மூல காரணமாம். இப்போது சொல்லுங்கள், டீன் ஏஜ் பெண்ணின் வளர்ச்சிக்கு நீங்கள் தேவையா இல்லையா ?   
ஒரு டீன் ஏஜ் மகளுக்கு அப்பா என்பவர் வெறும் ஒரு நபரல்ல. ஒரு நண்பன், பாதுகாவலன், ஊக்கமூட்டுபவர், உற்சாகப்படுத்துபவர், தன்னம்பிக்கை வளர்ப்பவர், நம்பிக்கை ஊட்டுபவர், பண்புகளை ஊட்டுபவர், வழிகாட்டி என எக்கச்சக்க முகங்கள் அவருக்கு இருக்க வேண்டும். ஒரு பெண் முதலில் சந்திக்கும் ஆண் அவளுடைய அப்பா தானே ? அப்பாவிடமிருந்து தான் அவள் ஒரு ஆணுக்குரிய இலக்கணங்களைக் கற்றுக் கொள்கிறாள். ஆண் என்பவனின் குணாதிசயங்களைக் கற்றுக் கொள்கிறாள். ஆண் என்பவருடைய அளவீடுகளைக் கற்றுக் கொள்கிறாள். ஆண் என்பவரின் தேவையைக் கண்டு கொள்கிறாள். எனவே மகள் மழலையாய் இருக்கும் போதேஎல்லா வகையிலும் முன் மாதிரிகையான வாழ்க்கை வாழவேண்டியது அப்பாவின் கடமையாகிறது. 
சின்ன வயதில் மழலையாய் சிரித்துச் சிணுங்குகையில், அழகழகாய் ஆடைகள் வாங்கிக் கொடுப்பதானாலும் சரி, பென்சில், ரப்பர் வாங்குவதானாலும் சரி ரொம்பவே ஈடுபாடு காட்டுவீர்கள். எல்லாவற்றையும் தேடித் தேடி வாங்குவீர்கள். பாப்பாவும் ரொம்பவே சமர்த்தாய் உங்கள் கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தம் தருவாள். திடீரென ஒரு நாள் பார்த்தால்,