சிதம்பரம் நடராஜ பெருமானை எல்லாரும் அறிந்திருப்பீர்கள். உங்களில் சிலபேர் அவரது ஆலயத்துக்குச் சென்று தரிசனமும் செய்திருப்பீர்கள்.
இந்த ஸ்தலத்துக்கு விசேஷமே சிவபெருமானான நடராஜ பெருமானின் நர்த்தனம் தான். ஒருநாள்... மிகப்பழைய காலத்தின் அழகான நாள்... சிதம்பரத்தில் ஒரு போட்டி நடனப்போட்டி. கலந்து கொள்பவர்கள் யார், யார்?
பரமசிவன், தில்லை காளி. யாரிந்த தில்லை காளி? சிவபெருமானுடன் நடனப்போட்டி போட வந்தவள். மிகச் சிறந்த நர்த்தன நாட்டியக்காரி. இயற்கையிலேயே ஆண்களை விட பெண்கள்தான் நடன அசைவுகளிலும் இசைத் துடிப்புகளிலும் அழகாக இழைவார்கள். புருஷர்கள் ஆடும்போது ஏற்படும் ரசனையை விட ஸ்தீரிகள் நர்த்தனமாடும் போது அதிகபட்ச அழகு மிளிரும். இது இயற்கையின் ஏற்பாடு. அதிலும், தில்லைகாளி நடனப்பயிற்சி பெற்றவள் பின் சொல்ல வேண்டுமா?
அவளது சலங்கை ஒலி கேட்டு காற்றே ஆடிப்போகும். அவளது நடனத்துக்குப் போட்டியாக ஆட வருபவர்களே ஆடிப்போய் விடுவார்கள். இப்படிப்பட்ட தில்லை காளிதான் சிவபெருமானின் நடனப் போட்டிக்கு வந்தாள். ஏற்பாடுகள் நடந்தன.
இரண்டு மேடைகள் எதிரெதிரே. அதில்தான் சிவபெருமானும் காளியும் நடனமாட வேண்டும். கூட்டம் கூடியிருக்கிறது. ஆட்டம் தொடங்க இருக்கிறது. போட்டியில் யார் ஜெயிப்பார்கள் என கூடியிருந்தவர்களிடையே ஒரு கிசுகிசு நுழைந்து நெளிந்து கொண்டிருந்தது. தொடங்கியாகி விட்டது. தனது ஆர்ப்பாட்டமான அசைவுகளோடு ஆட ஆரம்பித்தாள் காளி. அவளது பாதங்கள் சலங்கைகளை ஒலியோடு சுருதி சேர்த்தன. காளியின் கைவிரல்கள் காற்றில் நடனச் சித்திரங்கள் தீட்டின.