ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்
‘போலி மருந்துகள் விற்பனை.. காலாவதியான மருந்துகளை பாட்டில் மாற்றி விற்று மோசடி..’ என்று ஊரே பேசிக் கொண்டிருந்த நேரத்தில்தான், சைலன்ட்டாக ஒரு இ-மெயில் இந்தியா முழுக்கப் பரவிக் கொண்டிருந்தது.. அதை விட அதிர்ச்சியான தகவல்களைத் தாங்கி!
உலக அளவில் தடை செய்யப்பட்ட மாத்திரைகள் இந்தியாவில் தங்கு தடையின்றி விற்கப்படுகின்றன.. இதய பாதிப்பு, நுரையீரல் பாதிப்ப்பு, சிறுநீரக பாதிப்பு, மூளை பாதிப்பு என்று பல பக்க விளைவுகளைக் கொண்டிருப்பதால்தான் பெரும்பாலான உலக நாடுகள் அவற்றைத் தடை செய்துள்ளன!’ என்று எச்சரித்த அந்த இ-மெயிலில் அப்படிப்பட்ட ஆபத்தான மாத்திரைகளின் பட்டியலும் தரப்பட்டிருந்தது. அதில்தான் நம் நெஞ்சை உறைய வைக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.
ஆம்! நம் அன்றாடப் பயன்பாட்டில் உள்ள ஆக்ஷன் 500-ல் ஆரம்பித்து, நமக்குள் இரண்டறக் கலந்து விட்ட காய்ச்சல் - தலைவலி மாத்திரைகள் பலவும்தான் அந்தப் பட்டியலில் முதல் வரிசையில் நின்றன!
“இந்த மாத்திரைகளில் நிஜமாகவே இப்படிப்பட்ட பக்க விளைவுகள் உள்ளதா?” சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர், எம். பிரசன்னாவிடம் விளக்கம் கேட்டோம்..
“ஆமாம். இந்த இ-மெயிலில் சொல்லப்பட்டிருக்கும் விவரங்கள் நூற்றுக்கு நூறு உண்மைதான்!” என்று அதிர வைத்தவர், தன் பேச்சுக்கிடையே பிரபலமான வேறு சில வலி நிவாரணி மாத்திரைகளின் பெயர்களையும் சேர்த்தே-தான் குறிப்பிட்டார்..
“சாதாரண தலைவலி, காய்ச்சலுக்காக நாம் வாங்கும் மாத்திரைகளில் ‘பெனில்-ப்ரபோனாலமைன்’, ‘அனால்ஜின்’, ‘நிமுசுலைடு’ போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன. ‘பெனில் ப்ரபோனாலமைன்’, நம் நரம்பு மண்டலத்தை பாதித்து பக்கவாதத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. ‘அனால்ஜின்’, எலும்பு மஜ்ஜையின் செல் உற்பத்தியைக் கட்டுப்படுத்தி அதில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. ‘நிமுசுலைடு’, கல்லீரலையே செயலிழக்கச் செய்யக்கூடியது.