Dec 7, 2009

பிரச்சனையை எதிர்கொள்வது எப்படி?

உங்கள் முன் ஒரு பிரச்சனை வந்துள்ளது. அது எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் தைரியமாக எதிர்கொள்ளுங்கள்.ஓடி ஒளிய வேண்டாம்! நெஞ்சை நிமிர்த்தி வீரமாக அதனை அணுகுங்கள்!

'அச்சமில்லை, அச்சமில்லை.. உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்' என்ற மகாகவியின் பாடலை நினைவு படுத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் சிறிது கூட எதிர்பார்க்காத பிரச்சனை ஆனாலும், 'சரி நடந்தது நடந்து விட்டது. நடந்ததை மாற்ற முடியாது. அதனை நினைத்து அப்படி செய்திருக்கலாம், இப்படி நடந்திருக்கலாம் என குழம்பி ஒன்றும் ஆகப்போவதில்லை. இப்போது நாம் செய்ய முடிந்ததெல்லாம் ஒன்று தான். என்னவென்றால் இந்த பிரச்சனையில் இந்த சமயத்திலும் நமக்கு சில சாதகமான விஷயங்கள் கண்டிப்பாக இருக்கும். அவற்றை கண்டுபிடித்து அவற்றை உபயோகித்து இந்த பிரச்சனையை இருந்த இடம் தெரியாமல் வெற்றி கொள்ள முடியும்' என்ற உறுதி ஏற்க வேண்டும்.

பிரச்சனையில் ஜெயிப்பதை ஒரு சவாலாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் துணிவுடன் எதிர் கொண்டு ஜெயிப்பதில் தான் மனிதனின் வீரம் உள்ளது.

'இப்படி நடந்திருக்கலாம்..அப்படி பண்ணியிருக்கலாம்' என இறந்த காலத்தையே நினைத்து வருந்துவது கோழைகளின் செயல்!

நடந்தது நடந்து விட்டது. இப்போது நிகழ்காலத்தில் அதனை அலசி ஆராய்ந்து நாம் எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் தான் பிரச்சனையை போக்கும்.
குறைந்த பட்சம் இப்போது என்னென்ன செய்யலாம் என்று முடிவு எடுக்க வேண்டும். நல்ல வேளை பிரச்சனையை தீர்க்க இப்போது ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதை நினைத்து கவலையை போக்கிக் கொள்ள வேண்டும்.

முடிவெடுக்காமல் நடந்ததையே நினைத்து கோழையாய் வருந்துவது நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை தடுக்கும். பிரச்சனையை மேலும் அதிகப் படுத்தும்.

முக்கியமான விஷயமென்னவென்றால் தவறான முடிவுகள் மட்டும் தோல்விக்கு காரணமல்ல. முடிவெடுக்காத தன்மையும் தான்!
ஆனால் நாம் தைரியமாக எடுக்கும் முடிவுகள் கூட நமது தன்னம்பிக்கையை அதிகரித்து பிரச்சனையின் வீரியத்தை குறைப்பதற்கு உதவும்.


ஆனால் பயந்து கொண்டு எந்த முடிவும் எடுக்காமல் இருந்தால் நாம் மனதின் ஆழத்தில் அந்த பிரச்சனையை பார்த்து பயந்து அப்படி ஆகி விடுவோமோ, இப்படி ஆகி விடுவோமோ என்று பயப்படுகிறோம் என்று அர்த்தம். அந்த ஆழ்மன பயமே நாம் விரும்பத்தகாத விளைவுகளை அழைத்து வரலாம்.

ஆக பிரச்சனை வந்து விட்டால் துணிந்து அதனை எதிர் கொள்ள வேண்டும்.

'இந்த பிரச்சனைக்கு நாம் விரும்பும் முடிவு என்ன? இந்த முடிவு நமக்கும், மற்றவர்களுக்கும் இப்போதும், வருங்காலத்திலும் என்னென்ன முடிவுகளை ஏற்படுத்தும்' என நன்கு ஆழமாக அலசி எண்ணி பார்க்க வேண்டும்.

முடிவுகளின் விளைவுகளை நமது அனுபவத்தை வைத்தும், நண்பர்களின் ஆலோசனையை கேட்டும் கணித்து முடிவு எடுக்க வேண்டும்.

சிறிய முடிவுகள் வாழ்க்கையையே மாற்றும் வல்லமை படைத்தவை என்பதை உணர்ந்து நன்கு ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும்.

அதற்காக பயந்து எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது இன்னும் பிரச்சனையை கொடுமையாக்கும்.

மேலும் அலசி ஆராய்ந்து முடிவு எடுப்பது சரியான முடிவு எடுப்பதற்கு மட்டும் உதவாமல், நாளை நாம் எடுக்கும் முடிவு எந்த விளைவை ஏற்படுத்தினாலும் ' நாம் ஒன்றும் ஒற்றையா ரெட்டையா போட்டு முடிவெடுக்கவில்லை..நன்கு அலசி ஆராய்ந்து தான் எடுத்தோம் என்று மனம் சமாதானமாகும்.

அடுத்தது நமது முடிவை அடைய, செயல் படுத்த தற்போது என்னென்ன வழிகள் உள்ளன என்று ஆராய வேண்டும்.

கண்டிப்பாக பிரச்சனையை ஆராய்ந்தால் நமக்கு சாதகமான ஆயிரம் வழிகள் இருக்கும்! அவற்றை ஒரு தாளில் எழுத வேண்டும். இதற்கு நமது படைப்பு ஆற்றலை உபயோகப்படுத்தினால் வித விதமான யோசனைகள் வரும்.

அடுத்தது தைரியமாக அவற்றை ஒவ்வொன்றாக செயல் படுத்த வேண்டும்.


அவ்வாறு செய்தால் பிரச்சனை இருந்த இடம் தெரியாமல் போவதை கண் கூடாக பார்க்கலாம்.

மேலும் இந்த பிரச்சனையை அணுகும் செயல்பாடுகள் முழுவதிலும் நமது மனோபாவம் நேர்மறையாகவும், வெற்றியை எதிர் நோக்கி இருப்பதாகவும் இருக்க வேண்டும்.

ஒரு கப்பல் மாலுமியின் மனக் கண்ணில் சென்று சேர வேண்டிய இடம் குறிக்கோளாக இருப்பது போல் வெற்றி நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.

அது நமக்கு சரியான யோசனைகளையும், சரியான சூழ்நிலைலைகளையும் நம்முடன் இணைத்து விடும். வெற்றியை தேடித்தரும்.

இது என்னுடைய கருத்து மட்டுமே ஏற்கனவே நீங்கள் Probelm solving ங்கிற்கு சிறந்த நுட்பத்தை கையாண்டு வந்தால் அதனை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

Nov 26, 2009

மாயாக்கள் இருந்தார்களா?-2


இன ஒழிப்பு இன்னமும் நடந்தேறிக் கொண்டிருக்கும் சமாசாரம் என்றே கூற வேண்டும். உண்மையில் ஒரு இனத்தைப் பூண்டோடு அழித்துவிடுவது என்பது சாத்தியமற்றது. மாயாக்கள் விசித்திர குணாதிசயங்கள் கொண்ட மனித இனம். தென் அமேரிக்க பகுதியின் வாழ்ந்த இவ்வினம் இப்போது இல்லை. மாயாக்கள் அழிக்கப்பட்டார்களா, அழிந்து போனார்களா அல்லது மறைந்து போனார்களா?

அவர்கள் அழிக்கப்பட்டிருக்கலாம் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது. ஆரம்ப காலம் முதல் பல முறை ஸ்பெயின் நாட்டினர் அங்கு படையெடுத்து இருக்கிறார்கள். ஸ்பெயின் நாட்டின் படையெடுப்பின் போது அவர்களுக்கு மாயக்களின் நுட்ப ஆய்வுகளை அறியும் ஆவல் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் மாயாக்களின் வாழ்வியல் முறை அவர்களுக்குப் பிடிக்காமல் இருந்திருக்கலாம்.

மாயாக்களிடம் கட்டிடக் கலை, கணித, சமய நுட்பங்கள் அபரிமிதமாகவே இருந்திருக்கின்றன. ஸ்பெயின் சிப்பாய்களிடம் போர் கருவிகள் அதிகமாக இருந்தன. மாயாக்களிடம் நவீனப் போர் கருவிகள் இருந்திருப்பதற்கான வாய்ப்புகள் செற்பம். மாயாக்கள் வாழ்ந்த காடு, அவர்களின் கண்டுபிடிப்புகள் அனைத்தையும் கைப்பற்றுவதற்காக அவர்கள் அழிக்கப்பட்டிருக்க வேண்டும்.

மாயாக்களின் கண்டுபிடிப்புகள் பல. அவற்றில் குறிப்பிடத்தக்கது வான்கணித முறைகள். அவற்றின் அடிப்படையில் உருவானதே மாயக்களின் நாட்காட்டி. மாயாக்களின் நாட்காட்டி இரகசியம் மிகுந்ததா? "இல்லை, அது விளங்காத ஒன்று" என்றே பலரும் சொல்வார்கள்.

புரியாத ஒன்றை வைத்து பல குளறுபடிகள் செய்கிறார்கள், கணிப்புகள் செய்கிறார்கள், இறுதியில் ஏதோ ஒரு முடிவு கட்டி இது தான் அது என சொல்லிவிடுகிறார்கள், எல்லாம் பிசகு, பொய் புரட்டு நிறைந்து கிடக்கிறது, என சிலர் அவற்றை ஒதுக்கி வைத்துவிடுவார்கள். சில பழமை நிகழ்வுக்கான காரணங்களைக் கண்டறிவதும் ஒரு சுகம் தான்.

மாயாக்களின் நாள்காட்டியில் ஒரு விசித்திரத்தைக் கண்டார்கள் ஆய்வாளர்கள். அந்த நாள்காட்டி 21 டிசம்பர் 2012-ஆம் ஆண்டு நிறைவடைகிறது. கி.மு 3113-ஆம் ஆண்டு அந்நாள்காட்டி தொடக்க ஆண்டாக அமைகிறது. இது முழுமை பெறாத நாள்காட்டியா? அல்லது மாயாக்களின் மறுபட்ட கணிப்பு முறையில் கண்டறியப்பட்டவையா?

அது என்ன மாயாக்களின் கணக்கு? அவர்களின் கணித முறை இப்படி விரிகிறது.
கின், உனியல், துன், கதுன், பக்துன், பிக்துன், கலப்துன்.

நாள் என்பதை அவர்கள் கின் எனக் குறிக்கிறார்கள்.
19 கின் (19 நாள்)= 1 உனியல்
359 நாள் = 1 துன்
7200 நாள் = 1 கதுன்
144 002 நாள் = 1 பக்துன்
1 872 025 நாள் = 13 பக்துன்
2 880 025 நாள் = 1 பிக்துன்
57 600 025 நாள் = 1 கலப்துன்

இந்த கணக்கியல் முறை இப்படி வியப்பளிப்பதாக இருக்கலாம். மாயாக்களின் நாள்காட்டி இயற்கை மாற்றங்கள் மற்றும் சீற்றங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. இவையாவும் இரு முக்கிய புத்தகங்களில் குறிக்கப்பட்டுள்ளது. அப்புத்தகங்கள் 'கொடெக்ஸ்' என அழைக்கப்படுகிறது. கொடெக்ஸ் பூமியை மட்டுமன்றி கோள் மாற்றங்களின் குறிப்புகளும் உள்ளடங்கியது. கோடெக்ஸ் வான் நிபுண மாயாக்களால் எழுதப்பட்டதாக அறியமுடிகிறது.

மாயா வகுப்பை சேர்ந்த வான் நிபுணர்கள் மாய மந்திர வேலைகள் கைதேர்ந்தவர்கள். அப்படியானால் இந்நாள்காட்டியின் நம்பகத்தன்மை எவ்வகையது எனும் கேள்வி நம்முள் எழுவது சாத்தியமாகிறது. ஆரம்ப கால வாழ்க்கையில் மனிதன் ஏதோ ஒரு வகையில் இயற்கையை சார்ந்தே வாழ்ந்திருக்கிறான். ஆதாலால் இயற்கையை போற்றும் வண்ணம் இம்மாதிரியான மாய மந்திர வேலைகள் ஏற்பட்டிருக்கலாம்.

கோடெக்ஸ், கணிதமும் சிறு சிறு சின்னங்களும் பொறிக்கப்பட்டிருக்கும் புத்தகம். அச்சிறு சிறு எழுத்து வகைகளை ஹிரோகிலிஃப் எழுத்துகள் என அறிகிறோம். அந்த எழுத்துகள் எப்படி அமைந்திருக்கின்றன? பூமியில் உள்ள மனிதன் ஆகாயத்தில் இருக்கும் உயிரினங்களோடு தொடர்பு கொள்வது போலும், அவர்களுடைய கடவுளர்களோடு பேசுவது போலவும் உள்ளன.

இந்நாள்காட்டி கி.மு 20 செப்டம்பர் 3113-ஆம் திகதியில் தொடங்குகிறது. இக்காலகட்டம் மாயாக்களின் காலமென அழைக்கப்படுகிறது. அவர்களின் நம்பிக்கைப்படி இவ்வுலகம் புதுபிக்கப்படும். அப்படி புதுபிக்கப்படும் நாளானது மனித சரித்திரத்தில் முக்கிய நாளாக அமையும்.

கோள்களின் இட மாற்றமும் பூமியின் கால மாற்றமும் மனித வாழ்க்கையில் ஏற்படும் நன்மை தீமைகளுக்கு பாதிப்பை விளைவிற்கின்றன என்பது இவர்களின் கருத்தாகும். பூர்வ கால எகிப்திய மக்களிடையேயும் இவ்வகை நம்பிக்கை இருப்பதை நாம் காண முடிகிறது. Asy Syi'ra நட்சத்திரம் நைல் நதியை கடக்கும் வேளையில் தீமைகள் விளையும் எனும் நம்பிக்கையை கொண்டிருந்தார்கள் அவர்கள்.

21 டிசம்பர் 2012 End of Times என ஆய்வாலர்களாலும் அறிஞர்களாலும் குறிப்பிடபடுகிறது. இந்த End of Times எனும் சொல்லுக்காகன விவாதங்கள் இன்னமும் மள்ளுக்கட்டிக் கொண்டுதான் இருக்கின்றன. எடுத்த எடுப்பில் அதுதான் பூமியின் இறுதி நாள் என சொல்லிவிடுவோர் பலர் உண்டு. ஆனால் ஆய்வாளர்கள் மற்றும் அறிஞர்களின் பார்வையில் அச்செற்களுக்கான ஆய்வுகள் ஆழமானவை. அவற்றில் வேடிக்கையான சில சேதிகளும் உண்டு.

பூமி சுற்றுவது நின்றுவிடும் ( கால நேர மாற்றம் இருக்காது), காலம் Pisces எனப்படும் மீனத்தில் ஒரு சுற்று முடிந்து Aquarius எனப்படும் மேஷத்தில் ஆரம்பமாகப் போகும் நாள், உலகம் வெள்ளி நூற்றாண்டில் இருந்து தங்க நூற்றாண்டிற்கு மாற்றம் காண்கிறது, அதீதமான இயற்கைச் சீற்றம் ஏற்பட்டு உலகில் மாற்றங்கள் உறுவாகும், உலகைக் காக்க கடவுளர் எழும் நாள், காலம் பின்நோக்கி நகரும், வேற்றுக் கிரக வாசிகளோடு தொடர்பு உண்டாகும் நாள்.

அத்திகதியை பற்றிய மேற்காணும் விடயங்கள் நகைப்புக்குறியவை. தமிழில் செலுத்தப்பட்ட ஆரிய கதைகளைப் போலவே மனிதர்களின் மனதில் மடத்தனத்தை உட்புகுத்துபவை.

இன்று எழுதப்படுபவனவற்றில் சில வேளைகளில் உண்மைகள் கேள்விக்குறியானதாக இருக்கிறது. 1999-ஆம் ஆண்டு முடிந்தவுடன் உலகத்தின் கதி முடிவடையும் என நாஸ்ட்ராடாமஸ் குறிப்பிட்டதாக ஒரு புத்தகத்தில் எழுதியுள்ளார்கள். ஆனால் இன்றோ ஆண்டு 2009 ஆகிவிட்டது. நாஸ்ட்ராடாமஸ் சொன்னது பொய்யா இல்லை புத்தகத்தில் எழுதிய விடயம் பொய்யா?

உலக சரித்திரத்தின் அடிப்படையில் மாயாக்கள் மாய மந்திர வேலைகளில் கைதேர்ந்தவர்கள் எனக் குறிப்பிடபடுகிறது. திறமையான சிந்தனை வளத்தினால் அருமையான நாகரிகத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அதைப் போலவே அவர்களின் நாட்காட்டியும் முழுமையான நிலையில் கணிக்கப்பட்டிருப்பதாக அறியப்படுகிறது.

இந்த மாயாக்களின் ஒரு பிரிவினர் தென் மெக்சிக்கோவின் Guetmala, Belize மற்றும் Honduras போன்ற பகுதிகளில் வாழ்ந்திருப்பதாக குறிப்பிடப்படுகிறது. பூர்வகால கட்டிடங்களும், பிரமீடுகளும், மற்றும் கோவில்களும் இங்கு இருக்கிறது.

1517-ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டின் படையெடுப்பின் போது மாயாக்களின் கலை மற்றும் இதர தொழில்நுட்ப வேலைப்பாடுகள் பலவும் பரவலாக அழிந்து போனது. அவற்றில் முக்கியமாக மாயாக்களின் நூலகமும் அழிந்தது. அவ்வகையில் காண்போம் என்றால் இந்த நாட்காட்டியிலும் பிசகு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது.

Dr. Jose Argulles ஓர் அமேரிக்கர். அவர் சரித்திர ஆய்வாளர் ஆவார். Zhou Yi எனும் சீனக் குடியினரின் கணக்கியல் முறையும் மாயாக்களின் கணக்கியல் முறையும் ஒத்துப் போகிறது என்பது இவர் கருத்தாகும்.

1973-ஆம் ஆண்டு வெளிவந்த 'The Mayan Factor' எனும் தமது நூலில் பல விடயங்களை அவர் குறிப்பிட்டிருக்கிறார். தற்போதய நிலையில் இப்பிரபஞ்சத்தில் "The Great Cycle' எனும் மாபெரும் சுழற்சி ஏற்பட்டுக் கொண்டிருக்கிது. அதன் கால அளவு ஏறக்குறைய 5000 ஆண்டுகள் என குறிக்கப்படுகிறது. அதன் அடிப்படியில் மாயாக்களின் கி.மு 3113 முதல் கி.பி 2012 வரையிலான நாள்காட்டி அமைந்திருக்கக் கூடும் என கருத்துரைக்கிறார்.

இந்த மாபெரும் சுழற்சி முடியும் தருவாயில் உலகில் மாறுதல்கள் உண்டாகும் சாத்தியங்கள் இருப்பதாக மாயக்கள் நம்பிக்கைக் கொண்டிருக்கிறார்கள். இக்கணித முறை சிறு கூறுகளாக பிரிக்கப்பட்டு ஓவ்வொரு காலகட்டத்திற்கும் குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவை இருபது இருபது ஆண்டுகளாக பிறிக்கப்படுகிறது.

அக்கணித முறையின் இறுதி காலகட்டமாக கருதப்படுவது 1992 முதல் 2012 ஆண்டுகளாகும். இது மொத்தம் 20 ஆண்டுகளைக் கொண்டிருக்கிறது. இதை 'The Earth Regenaration Period எனக் குறிப்பிடுகிறார்கள்.

நன்றி:- திரு.விக்னேஸ்வரன்.
மலேசியா.

Nov 24, 2009

மாயாக்கள் இருந்தார்களா?-1

பல நூற்றாண்டுகளுக்கு முன், தெளிவற்ற காரணத்தோடு, ஒரு இனம் உலகின் பார்வையிலிருந்து காணாமற் போகிறது. அந்த இனத்தின் பெயர் மாயா. அவர்கள் எங்கே போனார்கள் என்ற காரணம் யாருக்கும் தெரியவில்லை. நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருந்த கோவிலின் வேலைபாடுகள் நிறைவடையவில்லை. சிலைகள் பாதியாய் ஊருவம் வாங்கி நிற்கின்றன. அனைத்துக் கட்டுமாணங்களும் பாழடைந்து புதைந்து கொண்டிருக்கிறது.

வேண்டுதல்களும், மாய மந்திர வேலைகளும் நின்றுவிட்டது. அன்று முதல், இவ்வினத்தின் மூதாதைகளின் புத்திசாலிதனமும், கற்பித்தலும் காற்றோடு கலந்துவிட்டது. மிச்சம் மீதி இருந்த மாயா இனத்தவர்களுக்கு எழுத்தின் மீதும் படிப்பறிவின் மீதும் கண் பார்வையற்று போயிற்று. அவர்களுக்கு வாழ்க்கை நேறியும் மறந்து போயிற்று. அவ்வினம் மிருகத்தன்மையை அடைந்தது. மேற் கூறியவை மெக்ஸிகோ நாட்டின் காட்டுப் பகுதியில் மர்மமாய் தோன்றி மறைந்த மாயா நாகரிக அராய்ச்சியாளர்களின் அறிக்கை.

1000 வருடங்களுக்கும் மேலாக இவ்வளவு ஆச்சரியமும், அற்புதமும் நிறைந்த நாகரிகம் புதைந்து கிடந்த்தை யாரும் கண்டறியவில்லை. 1839-ஆம் ஆண்டு, அமேரிக்காவை சேர்ந்த எழுத்தாளரான John Lloyd Stephens தமது உதவியாளர் ஒருவரின் துணையோடு அங்கே செல்கிறார். பாழடைந்த பழமைமிக்க நகர பகுதி அங்கே உதித்து மறைந்ததை அவர் கண்டுபிடிக்கிறார்.

பல்லாயிரம் ஆண்டுகாலமாக செடிகொடிகள் படர்ந்திருந்த கட்டிடங்கள் கலைதிறன் மிக்க வேலைபாடுகளோடு உறுதியோடு இருக்கக் காண்கிறார். அடுத்ததாக அவர் ஒரு விசித்திரத்தை காண்கிறார். அவ்விடத்தில் மனிதர்கள் யாரையும் காண முடியவில்லை. நீண்ட காலமாக அவ்விடம் நாதியற்று கிடந்திருக்கிறது.

அன்று முதல் அவ்விடம் ஆராய்ச்சிக்குள்ளாகிறது. ஆராய்ச்சியின் மேல் ஆராய்ச்சிகள் நடந்து புதைந்து போன மாயா இனத்தவரின் வரலாற்றைத் தோண்டி எடுக்கிறார்கள். மாய இனத்தவர்கள் ஆச்சரியமிக்க நாகரிகத்தை உருவாகியுள்ளார்கள், பலப் பல துறைகளில் அறிவு திறன்மிக்கவர்களாக திகழ்திருக்கிறார்கள். இவையாவும் உலக நாகரிகம் வளர்ராத காலத்தில் நடந்தவை.

இந்த கண்டுபிடிப்பின் மகிழ்ச்சியில், ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு விந்தையும் உதித்தது. ஒரு நகரத்தை வளர்ச்சியடைய செய்து பின்னர் எதற்காக அதைவிட்டு மறைந்தார்கள் என்பதே அவர்களின் வியப்பாகும்.

மாயா இனத்தவர்கள், அவர்களின் பொற்காலத்தின் போது உலகிற்குப் பயனுள்ள பல துறைகளின் நுணுக்கங்களை ஆராய்ந்திருக்கிறார்கள், கலைத்திறனும் புத்திக் கூர்மையும் பெற்று விளங்கினார்கள். 16-ம் நூற்றாண்டின் போது தென் அமேரிக்கப் பகுதியை ஆட்சி செய்த ஸ்பெயின் நாட்டினரின் கடுமையான தாக்குதலால் இப்பகுதி அழிந்து போனது. அவர்களின் கண்டுபிடிப்பும் எழுதிய நூல்களும் அச்சமயம் அழிக்கப்பட்டது.
இச்செயல் உலகிற்கு மாயா இனத்தவரை பற்றிய பல உண்மைகளை உணர்த்த முடியாமலும் செய்துவிட்டது. அது நமக்கு பெரும் நஷ்டமும் கூட. தற்சமயம் நமக்கு வெளிபடையாக கிடைத்திருப்பது அந்நாகரித்தை பற்றிய சிறு துளியளவு கண்டுபிடிப்புகள் மட்டுமே. இவையாவும் அவ்விடத்தில் கிடைக்கப் பெற்ற சில துண்டு எழுத்துகளின் வடிவில் கிடைத்தவையாகும்.

இந்த மர்ம நகரில் பெரும் கற்களைக் கொண்ட கட்டிட வேலைபாடுகள் உள்ளன, பெரிய அளவிளான நகர வடிவமைப்பு, எழுத்துக்கள், மற்றும் அறிவு நுணுக்கங்கள் மாயா இனத்தவரின் போற்றதக்க கலைத்திறன்களாகும். இவை தற்போதய தொழில்நுட்பத்தைவிடவும் மேலானவையாகவே கருதப்படுகிறது.

எகிப்தியப் பிரமிடுகளை அடுத்து இந்நகரில் காணப்படும் பிரமிடுகளே பிரசித்தி பெற்று விளங்குகிறது. இப்பிரமிடுகளை சுற்றிலும் 4 பெரிய படிகட்டுகளும் அவற்றுள் அடங்கிய 365 படிக்கட்டுகளும் காணபடுகிறது. இவையாவும் ஒரு ஆண்டிற்கான 4 காலங்களையும் 365 நாட்களையும் குறிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலை மாயா இனத்தவரின் வான் ஆராய்ச்சி நுட்பத்தை குறிக்கிறது. இதைத் தவிர்த்து கட்டிடங்களின் உட்புறமும் வெளிப்புறமும் பல வகையான எண்களால், வான் மாற்றங்களை பற்றிய விடயங்கள் செதுக்கப்பட்டிருக்கிறது.



மாயாக்களால் எப்படி ஆசாத்தியமிக்க கட்டிடங்களை எழுப்ப முடிந்தது? அதுவும் அடர்ந்த காட்டிற்குள்? இவர்களது கட்டிடங்கள் ‘டன்’ கணக்கிலான கற்களை கொண்டு அந்த மர்ம நகரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மாயக்கள் இப்பெரிய கற்களை அடர்ந்த காட்டிற்குள் கொண்டு வந்ததும், அவற்றை சரிவர அடுக்கி கட்டிடங்களையும் பிரமிடுகளையும் அமைத்துள்ளதும் ஆச்சரியமிக்கவையாகும். மாயாக்கள் எவ்விதமான தொழில்நுட்பத்தை கையாண்டு இத்தகய நகரத்தை அமைத்தார்கள் என்பதும் கோள்விக்குறியே.

அராய்ச்சியாளர்கள் மாயாக்களின் நாகரிகம் கி.மு. 2000-ஆம் ஆண்டில் தொடங்கி சிறுகச் சிறுக வளர்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்கள். கி.மு 2000 முதல் 250 வரை வளர்ச்சிக் காலமாகவும், 250 தொடங்கி 900 வரை மாயாக்களின் பொற்காலமாகவும் கருதப்படுகிறது. 7 மற்றும் 8-ம் நூற்றாண்டுகள் மாயாக்களின் உச்சகட்டப் பொற்காலம் எனவும் கூறுகிறார்கள்.

900-ஆம் ஆண்டில், நாகரிக உச்சத்தை அடைந்த பின் மாயாக்களின் ஆதிக்கம் மர்மமாய் மறைந்ததாய் கூறுகிறார்கள். அனாலும் இது முற்றிலும் உண்மையாகாது. ஆரம்ப காலத்தில் மாயாக்கள் மறைந்து போன மர்மத்தை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். இதற்குக் காரணம் மாயா நகரப் பகுதி குடிகள் இல்லாமல் நாதியற்றுக் கிடந்தது தான்.

இதன் பின் ஆராய்ச்சியாளர்கள், மாயாக்களின் வம்சாவழியினர் தென் அமேரிக்க பகுதிகளில் இன்றளவும் வாழ்கிறார்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் மாயாக்களில் பல பிரிவினர் இருந்ததாகவும் அவர்களில் ஒரு பிரிவினர் மட்டுமே இவர்கள் எனவும் குறிப்பிடுகிறார்கள்.

மாயாக்களின் மறைவிற்கு இயற்கை சீற்றங்களே முக்கியக் காரணம் என கூறுகிறார்கள். மாயாக்களின் கலைத் திறன் மிகவும் நுட்பமானது, சிற்பக் கலையும் வரையும் திறனும் இவர்கள் விட்டுச் சென்ற அற்புத பொக்கிஷங்களின் வடிவில் இன்றளவும் நம்மால் காண முடிகிறது. கட்டிட கலையும் இவற்றுள் அடங்கும். மாயாக்களால் Tikal, Palenque, Copan, Kalakmul, Dos Pilas, Uaxactun, Altun Ha போன்ற நகரங்கள் மிகவும் திறம்பட உருவாக்கப்பட்டுள்ளது.

இவற்றுள் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குவது பிரமிடும் அரண்மனையும் ஆகும். மாயா நகர பகுதியில் காணப்படும் stelae எனப்படும் கல் வகையில் இவர்களின் ஆட்சிமுறை, போர்களில் பெற்ற வெற்றி மற்றும் பல முக்கிய தகவல்கள் heiroglyphik எழுத்துவடிவில் செதுக்கப்பட்டுள்ளது. மாயாக்கள் தூர தேச வியாபாரத்திலும் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதும் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கபட்ட உண்மை.

Bonamak என்ற இடத்தில் அமைந்த மாயாக்களின் சிற்ப கலைகள் எவ்விதப் பாதிப்பும் இன்றி கிடைக்கப் பெற்றதால் ஆராய்ச்சியாளர்கள் இவற்றை முறையாகத் தங்களது ஆய்விற்குப் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. இச்சிற்பங்கள் மாயாக்களின் நாகரிக வளர்ச்சியைச் சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றன.

மாயாக்களின் எழுத்தின் அடிப்படையில், இச்சிற்பங்களை வடிவமைத்தவர்கள் தங்களது பெயரை சிற்பத்தின் எதாவது ஒரு இடத்தில் பொறித்துள்ளார்கள். இதனால் சிற்பிகள் மாயாக்களின் காலத்தில் பேற்றதக்கவர்களாக மதிப்பளிக்கப்பட்டிருக்கிறார்கள் என அறிய முடிகிறது. சிற்பகலை வருங்கால சந்ததியினருக்கு இவர்களின் சரித்திரத்தை அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என முன்னதாகவே இவர்கள் அறிந்திருக்கின்றனர்.

மாயாக்களால் நுட்பமாய் செய்யப்பட்டிருக்கும் கட்டிடங்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாயினும் உறுதியாகவே இருக்கின்றன. பிரமிடு, வழிபாட்டு இடங்கள் மற்றும் வியாபார தளங்கள் இந்நாகரிக வளர்ச்சிக்குப் பெரிதும் துணை புரிந்துள்ளன. இவையே ஆராய்ச்சியாளர்கள் மாயா நாகரிகத்தை அறிந்து கொள்ளச் சிறந்த தடயமாய் அமைந்தது.

மாயாக்கள் பிரமிடுகளின் மேல் கோவிலை அமைத்துள்ளார்கள். பிரமிடுகள் உயரமான மலை பாங்கான இடத்தில் அமைந்திருக்கும் பிரமிடுகளின் மேல் கோவிலை அமைப்பதால் இறைவன் இருக்கும் சொர்க வாசலை அவர்கள் சுலபமாக நெருங்க முடிவதாக நம்பிக்கை கொண்டுள்ளனர் .

ஆராய்ச்சியாளார்களின் கவனத்தை ஈர்த்த இன்னோரு விசயம் மாயாக்களின் விளையாட்டு மையம். ஒவ்வோரு மாயா நகர பகுதிகளிலும் மிகப் பெரிய பந்து விளையாட்டு மைதானம் காணப்படுகிறது. இம்மைதானங்கள் ஆங்கில எழுத்தின் ‘I’ ‘ஐ’ வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

மாயாக்களின் எழுத்து வகைகள் நீண்ட நாட்கள் ஆராய்ச்சியாளர்களின் பார்வையில் இருந்தவையாகும். 19-ஆம் நூற்றாண்டில் மாயா நகர பகுதி கண்டுபிடிக்கப்பட்டது 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை அவையாவும் புரியாத புதிராகவே இருந்தது.
1960 முதல் 1970 வரையில் அனைத்து எழுத்துக்களுக்கும் அர்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டு படிக்கப்பட்டன. இதன் வழி ‘ஸ்பெயின்’ நாட்டினரின் படையெடுப்பும், பல்லாயிர காணக்கான புத்தகங்கள் எரிக்கப்பட்டதும் வருத்தத்துடன் தெரிந்து கொள்ள முடிந்தது. அவர்களின் 4 புனித நூல்களில் மூன்றும் நான்காம் நூலின் சில பக்கங்களும் மட்டுமே கிடைத்துள்ளது.
இந்திய நாகரிகத்தை அடுத்து மாயாக்களும் ‘0′ பூஜியத்தை கணக்கு வழக்குகளில் பயன்படுத்தி இருக்கிறார்கள். இவர்கள் 0 முதல் 20 வரையிலான எண் வகைகளை அமல்படுத்தியிருக்கிறார்கள். கல்வெட்டுகளில் இவர்கள் லட்சம் வரையில் கணக்கு வழக்குகளை எழுதிப் பார்த்திருக்கிறார்கள். அவை பெரும்பாலும் வான் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கிரகங்களின் அசைவுகளும், வான் நிகழ்வுகளும் துல்லியமாகக் கணிக்கப்பட்டுள்ளன.

சுவாரசியமான ஒரு நாவலில் கடைசிப் பக்கம் இல்லாமல் போனால் எப்படி இருக்கும். அப்படித்தான் இருக்கிறது மாயாக்களின் வரலாறும்.

நன்றி:- திரு.விக்னேஸ்வரன்.
மலேசியா.

Nov 20, 2009

...எனவே முத்தமிடுங்கள்!

என்னதான் பொறுமை, நிதானம், மற்றவர்கள் பேசுவதற்குக் காது கொடுப்பது, பொறுப்பாக நடந்து கொள்வது, சின்சியாரிடி என்று பல்வேறு குணாம்சங்கள் ஒரு தம்பதிக்கு இருந்தாலும் அந்தத் திருமண வாழ்க்கையின் மகிழ்ச்சியை நிர்ணயிப்பதில் முக்கியமான பங்கு தாம்பத்திய உறவுக்கு உண்டு.

அதனால்தான் அந்த உறவுக்கு இருவரில் யாராவது ஒருவர் தகுதியில்லாதவராக இருக்கிறார் என்று நிரூபிக்கப்பட்டால் உடனே வேறு எந்தக் கேள்விக்கும் இடமின்றி டைவர்ஸ் கூட சுலபமாகக் கிடைத்துவிடுகிறது.

ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ அந்த உறவுக்கு தகுதியில்லாத நிலை எதனால் ஏற்படுகிறது? அதைப் பற்றிப் பின்னால் பார்க்கலாம். ஆனால், உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தகுதியும் திறனும் இருந்தும்கூட சிலரது வாழ்க்கையில், தாம்பத்திய உறவு என்பது ஈர்ப்பும் ஆர்வமும் அற்ற ஒரு விஷயமாக, ஏதோ குளிப்பது போல் ஒரு கடமையாக அல்லது கோடைமழை போல் சட்டென்று கொட்டி அடங்கிவிடும் ஒரு விஷயமாக இருக்கிறது.

ஆர்வமற்ற இதுபோன்ற தாம்பத்திய உறவு இருக்கும் தம்பதியர்களுக்குள், மற்ற எந்த விஷயத்திலும்கூட பெரிய நெருக்கம் இருப்பதில்லை என்கிறார்கள் நிபுணர்கள்.

சரி.. சிலருக்கு தாம்பத்திய உறவில் ஈர்ப்பும் ஆர்வமும் ஏன் குறைகிறது?

கணவனோ அல்லது மனைவியோ, குறிப்பிட்ட தன் துறையில் தான் வேகமாக முன்னேற வேண்டும் என்ற முனைப்புடன் ‘வேலை வேலை’ என்று கவனம் முழுக்க வேலை பற்றியே சிந்திக்கும்போது, தாம்பத்திய உறவில் பெரிய ஈர்ப்பு இல்லாமல் போகலாம்.

அதிக வேலை அல்லது சரியான நேரத்தில் முடியாத வேலையால் ஏற்படும் உடல் அசதியும்கூட இதுபோன்ற ஆர்வமின்மைக்கு இட்டுச் செல்லலாம். கணவருக்கோ மனைவிக்கோ ஒருவரைப் பார்த்தவுடன் மற்றவருக்கு கிளர்வான உணர்வை ஏற்படுத்தும் டோப்பாமைன், நைட்ரிக் ஆக்ஸைடு, ஆக்ஸிடோஸின், டெஸ்டோஸ்டிரான் போன்ற சமாச்சாரங்கள் உடலில் போதுமான அளவில் இல்லாமல் குறைவாக சுரக்கும் நிலையும் காரணமாகலாம்.

சில வீடுகளில் கணவருக்கோ அல்லது மனைவிக்கோ சில குண நலன்களால் ஒருவர் மேல் மற்றவருக்கு மனசில் மரியாதை இல்லா ஒட்டாத நிலை ஏற்படுவதும் காரணமாகலாம்.

தாம்பத்தியத்தைத் தவிர வெளியே வேறு யாருடனாவது இருக்கும் ஆர்வத்தாலும் இப்படி தம்பதிகளுக்குள் ஈர்ப்பு குறையலாம்.. இதுபோல் இன்னும் ஏகப்பட்ட காரணங்கள்!

ஆனால், இந்த எல்லாவற்றையும் விட மிக முக்கியமான ஒரு காரணம் இருக்கிறது. சொல்லப் போனால் இந்தக் காரணம் பெண்களில் பலருக்கு மிகவும் பொருந்தும்.

அது.. தாம்பத்திய உறவு என்பது முறையாக, அதன் சுவாரஸ்யத்துடன் இதமாக அறிமுகம் ஆகாமல் போவதால், அதன் பேரில் சில பெண்களுக்கு ஏற்படும் பயமும் எரிச்சலும் கலந்த கஷ்ட உணர்வு!

எடுத்த எடுப்பில் ஒரு பெரிய பாத்திரம் நிறைய சாதத்தை அள்ளிப் போட்டால் சாப்பிடத் தோன்றுமா? அந்தப் பாத்திரத்தைப் பார்த்தவுடனே இருக்கும் பசியும் அல்லவா பறந்து போகும்!

என்னதான் பசிக்கு சாப்பிடவேண்டி இருந்தாலும் சாப்பிடத் தூண்டும் வகையில், அதை அழகாகப் பார்வையாக வைத்தால்தான் சாப்பிடும் ஆர்வம் வருகிறது. என்னதான் தேர்வுக்கு மார்க் எடுப்பதற்காக படிக்க வேண்டி வந்தாலும், ஆசிரியர் சுவாரஸ்யமாக சொல்லிக் கொடுத்தால்தான் அதைப் படிக்கவே ஆர்வம் வருகிறது.

அதேபோல்தான்.. என்னதான் மனதை மயக்கும் விஷயமாக இருந்தாலும் சுவாரஸ்யமாக, இதமாக அதை அறிமுகப்படுத்தும் போதுதான் தாம்பத்திய உறவும்கூட பல பெண்களை விரும்பி ஆர்வம் கொள்ள வைக்கிறது.

பெண்களுக்கு தாம்பத்திய உறவை சுவாரஸ்யம் மிக்கதாக அறிமுகப்படுத்துவதில் முதல் முக்கிய பங்கு வகிக்கிறது முத்தம்....

இளம் மனைவியை எடுத்த எடுப்பிலேயே முரட்டுத்தனமாக அணைத்து, தங்கள் தேவைகளை ஆண்கள் நிறைவேற்ற முயலும்போது சில பெண்கள் பயந்து போகிறார்கள். அதனால் அவளைப் பொறுத்தவரை அந்த விஷயம் சுகமான ஒரு அனுபவிப்பாக இல்லாமல், டென்ஷனையும் பயத்தையும் ஏற்படுத்துவதாக மாறிப்போகிறது.



அதே இளம் மனைவியை கணவன் இதமாகப் பேசியபடியே மென்மையாக அவளை ஸ்பரிசித்து, மெதுவாக அவள் நெற்றியில் முத்தமிட ஆரம்பித்து கன்னம், கழுத்து என்று ஒவ்வொரு இடமாக அவன் முன்னேறி வரும்போது அவளுக்குள் மனமெழுகு உருகத் தொடங்கிவிடும். அந்த விஷயத்தையே அப்புறம் அவள் ஆவலுடன் எதிர்கொள்ள ஆரம்பித்துவிடுகிறாள்.

முத்தம், உங்கள் தாம்பத்தியத்தை திருப்திகரமாகக் கொண்டு செல்வதற்கு மட்டும் பயன்படுவதில்லை... ஆச்சர்யப்படுத்தும் பல விஷயங்களையும் செய்கிறது.

முதலில் கணவன் _ மனைவிக்கான மன நெருக்கத்தை அதிகப்படுத்துகிறது. ரொமான்டிக்காக தரப்படும் முத்தம், பிரியங்களை அதிகப்படுத்துவதில் சம்பந்தப்பட்ட ஆக்ஸிடோஸின் கெமிக்கலை நிறைய சுரக்கத் தூண்டுகிறது.

ஆசையுடனும் ஆர்வத்துடனும் முத்தமிடுபவர்கள் நீண்டநாள் வாழ்கிறார்கள் என்று பல ஆய்வுகளுக்குப் பின் கண்டு பிடித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

பல்வேறு காரணங்களால் நம் தினசரி வாழ்க்கையில் ஏற்படும் கவலை, மன அழுத்தம், டென்ஷன் என்று பல பிரச்னைகள் தீர மெடிக்கல் ஸ்டோர் போகாமலே நீங்கள் வாங்க முடியும் ஒரே மருந்து முத்தம்தான்! அதனால் நோயற்ற ஹெல்தியான வாழ்க்கை வாழ முடிகிறது!

சோர்ந்த உடலுக்கும் மனசுக்கும் ஒரு மெகா பூஸ்ட் சாப்பிட்ட புத்துணர்ச்சி முத்தத்தால் கிடைக்கிறது. அதாவது இயல்பாக, ஒரு பெண்ணின் சராசரி இதயத் துடிப்பு நிமிடத்துக்கு 84 ஆகவும், ஆண்களுக்கு 72 ஆகவும் இருக்கிறது. முத்தமிடும் சமயத்தில் பெண்களின் துடிப்பில் 24_ம் ஆண்களின் துடிப்பில் 38_ம் அதிகரித்து, அதன் காரணமாக ரத்தம் வேகமாக பாய்ந்து தன்னை சுத்தப்படுத்திக் கொள்கிறது. ரத்தம் சுத்தமாவதால் புத்துணர்ச்சி கிடைக்கிறது!



குறிப்பாக அடிக்கடி முத்தமிடுபவர்களின் முகம் இளமை குறையாமல் இருக்கிறது. ஒரு முறை முத்தம் தர சாதாரணமாக 12 முதல் 30 தசைகள் வரை இயங்க வேண்டியுள்ளது. அவற்றின் இயக்கம் முகத்தின் இளமையைக் காப்பாற்றித் தருகிறது. தவிர ஜப்பான் டாக்டர் டோமா என்பவர், தம்பதிகளின் வாயில் சுரக்கும் உமிழ்நீரை ஆராய்ந்துப் பார்த்துவிட்டு, முத்தமிடும்போது சுரக்கிற உமிழ்நீரில் ஏராளமான ஹார்மோன்கள் வெளிப்பட்டு அது மற்றவருடைய இரத்த ஓட்டத்தில் கலந்து, மனிதர்களுக்கு முதிர்ச்சி ஏற்படுவதைத் தடுக்கிறது என்று கண்டு பிடித்திருக்கிறார்.

வேகமான இரத்த ஓட்டம் உடல் திசுக்களுக்கு அதிக ஆக்ஸிஜனை அளிப்பதால், திசுக்கள் இளமையாகவும் உற்சாகத்துடன் இருக்கின்றன என்கிறார் மற்றொரு இத்தாலி நாட்டு நிபுணர்.

‘அடிக்கடி முத்தமிடுங்கள். உங்கள் வாய் நாற்றமில்லாமல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்’ என்கிறார்கள் பல் மருத்துவர்கள்.

வயதாக ஆக எச்சில் சுரப்பது குறைவதால்தான், பல்லிலும் வாயிலும் உற்பத்தியாகும் பாக்டீரியாக்கள் சுத்தப்படுத்தப்படாமல் அங்கேயே தங்கி வாயை நாற்றம் ஏற்படுத்துகின்றன. ஆனால் முத்தமிடும்போது அதிக அளவில் எச்சில் சுரப்பதால், பாக்டீரியாக்கள் அவ்வப்போது சுத்தப்படுத்தப்பட்டு வாய் புத்துணர்ச்சியுடன் இருக்கிறது.

முத்தத்தால் உடல்ரீதியில் ஒரு கிளர்வான மகிழ்ச்சியும் கிடைக்கிறது. நாம் ஏற்கெனவே பேசிய டோப்பாமைன், எண்டார்பின் போன்ற விஷயங்களை முத்தம் தூண்டுவதால் இந்த கிளர்வும், திருப்தியும் ஒரு த்ரில்லான மகிழ்வும் கிடைக்கிறது.

தியானம் செய்தது போன்ற பலனையும் முத்தம் கொடுக்கிறது. மன அமைதியும், புத்துணர்ச்சியும் தந்து அடுத்தடுத்து செய்யும் வேலைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொள்ள வைக்கிறது. எனவே முத்தமிடுங்கள்!

நன்றி:- திருமதி.லோகநாயகி அவர்கள்.

Nov 16, 2009

டீன் – ஏஜ் மகளிடம் அப்பா எப்படி நடந்து கொள்ளவேண்டும்?..

எனது நண்பர் தன் 14வயது மகளை எப்பொழுதும் நச்சரித்துக் கொண்டே இருப்பார். “சொல் பேச்சை கேக்குறதில்லை எதை எடுத்தாலும் வாதம் பண்ணிக்கிட்டே இருக்கா” என நச்சரிப்புக்குக் காரணம் கூறுகிறார்.

நண்பர் எதையும் தன் கட்டுப் பாட்டிற்குள் வைத்துக் கொள்ள விரும்புகிற மனிதர் அவருடைய இந்த அணுகுமுறை தன் மகளிடம் ஒரு பாதகமான போக்கை உருவாக்கும் என்று அவரிடம் கூறியிருக்கிறேன்.

அந்தப் பெண்ணுக்கு ஒரு பத்து வயது தங்கையும் இருக்கிறாள். அவள் அடக்கமும் கீழ்படியும் குணமும் கொண்டவள். அதனால் தந்தையுடன் அவள் எளிதாக ஒத்துப் போகிறாள். இது மூத்தவளிடம் பொறாமை யையும் எரிச்சலையும் தூண்டுகிறது.

14 வயது என்பது ஒரு சிக்கலான பருவம். இதை நண்பர் உணரவில்லை. அவருடைய ஆத்திரமும், இயலாமையும் அந்த வீட்டின் நிம்மதியைப் பெரிதும் குலைக்கின்றது.

உங்களுடைய பிள்ளைகள் கைக்குழந்தை நிலையிலிருந்து தத்தித் தவழும் பருவத்தை எட்டிய அந்த கால கட்டத்தை நினைத்துப் பாருங்கள். மெல்ல பரிணமித்த அவள் குணாதிசியங்களுக்கேற்ப (ஆளுமை) நீங்கள் தாம் அப்பொழுது உங்களை மாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது.

அவளுடைய அழுகைகளுக்கும், ஆட்டங்களுக்கும் காரணம் புரியாமல் அப்பொழுது நீங்கள் கொஞ்சம் எரிச்சல் கூட அடைந்திருக்கலாம்.

டீன் ஏஜ் பருவம் என்பது கூட அத்தகைய ஒருபருவ மாறுதல்தான். இந்தக் காலகட்டத்தில் உங்கள் மகள் வேகமாக வளர்கிறாள். இவ்வளர்ச்சி உடல், அறிவு மற்றும் உணர்வு ரீதியானது. இந்த வயதில் அவள் பாதி பெரியவள் என்பதை மறந்துவிட வேண்டாம். அதனால்தான், ஒரு குழந்தையாக நடத்தப்படும்போது அவளைப் புண்படுத்துகிறது.

உங்களை அறியாமல் நீங்கள் அவளுடைய தன்னம்பிக்கையை காயப் படுத்தக் கூடும். “என்னுடைய வாழ்க்கையை என்னாலேயே திறம்பட நடத்த முடியும் என்கிற போது இவர்கள் ஏன் தேவையின்றி இடையே புகுந்து அறிவுரைகள் வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள்?” என்று அவள் நினைப்பாள்.

உங்கள் ஆணைகளும், கட்டளை களும் தன்னை ஒரு குழந்தைபோல் உணர வைப்பதால் அவற்றை வெறுக்கிறாள்.

இந்த வயதில் தன்னுடைய அந்தரங்க மானவைகளை கட்டிக் காப்பவளாகவும், அதை வெளியில் சொல்ல விரும்பாதவளா கவும் இருப்பாள். “எங்கே போனாய்?”, “என்ன செய்தாய்“ போன்ற கேள்விகளை அவள் விரும்புவ தில்லை வளர்ந்துவிட்ட ஒரு நபர் மீது நீங்கள் வைக்கக்கூடிய நம்பிக்கையை ஏன் தன்மீது வைப்பதில்லை என்று சலித்துக்கொள்வாள்.

ஏனென்றால், அப்பொழுது அவளைப் பொறுத்தவரை நன்கு வளர்ச்சியடைந்து விட்ட ஒரு பெண் இந்த வயதில் தன்னை சுயசோதனைக் குள்ளாக்குவதிலும் அதிக நேரம் செலவழிப்பாள்.

டீன் ஏஜ்ஜிற்கே உரிய குழப்பங் களையும், மனப்போராட்டங்களையும் புரிந்து கொள்வதற்கும் களைவதற்கும் அவள் முயற்சி செய்யும் காலம் இது. தன் உடலிலும், மனதிலும் நிகழும் மாற்றங்கள் அவளை குழப்பமடையச் செய்யும். இந்த நேரத்தில் நீங்கள் காட்டுகின்ற எந்த அதீதமான அக்கறையும் தேவையற்றதாகவே அவளுக்குப் படும். அவள் அந்தரங்கத்தில் மூக்கை நுழைப்பதாகவே அவளுக்குத் தோன்றும்.

ஆனால் மகளுக்கும் உங்களுக்கும் இடையில் எழுந்த தடுப்புச் சுவர் எதனால் உருவானது என்கிற குழப்பத்தில் நீங்கள் இருப்பீர்கள். தன் அந்தரங்க உணர்வுகள், எண்ணங்கள் சிக்கல்கள் ஆகியவற்றை பற்றி உங்களுடன் கலந்துரையாடுவதை உங்கள் மகள் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திக் கொள்ளுவாள். இந்தப் போக்கு உங்கள் குழப்பத்தை மேலும் அதிகரிக்கும்.. அதுமட்டுமல்ல அவள் தொடர்பான சிக்கல்களை களைய முடியாமல் திண்டாடுவீர்கள். நாம் ஒரு சிறந்த அப்பாவாக இல்லையோ? எனும் ஐயங்கள் உங்களை அலைக்கழிக்கும். இந்த சிக்கல்கள் பிள்ளைக்கும், பெற்றோர்க்கும் இடையிலான இடைவெளியை அகலப்படுத்தும்.



அச்சங்களும், ஐயப்பாடுகளும் நிறைந்த டீன்-ஏஜ் பருவம்...

பொதுவாகவே டீன்-ஏஜ் பருவத்தைச் சேர்ந்தவர்கள், தன்னம்பிக்கையை குறைவாகக் கொண்டிருப்பார்கள். தம்மில் தோற்றத்தில் நிறைய குறைகளைக் காண்பார்கள். இத்தகைய அச்சங்களும், ஐயப்பாடுகளும் கொண்டவர் களிடம் பழகுவது சிக்கலான காரியம் .சாதாரணமாக நாம் சொல்லுகிற சொற்களை திரித்து அர்த்தப்படுத்திக் கொள்கிற போக்கு இந்த கால கட்டத்தில் மிகுந்திருக்கும்.
தன் கட்டளைகளை பிள்ளைகள் மீறும்போது தன் அதிகாரத்தையே அவர்கள் தட்டிக் கேட்பதாக அப்பாவுக்குத் தோன்றும். ஏன் தந்தை என்கிற தன் நிலையையே அவர்கள் உதாசினப்படுத்துவதாக நினைப் பீர்கள். ஒரு அப்பாவால் இதைத் தாங்கிக் கொள்ள முடியாது.

சின்ன வயதில் எந்தப் பெண் குழந்தையும் தன் அப்பாவிடம் மிகவும் பாசமாக இருக்கும். அவரை ஆராதிக்கும் இந்த பாசத்திற்கும், ஆராதனைக்கும் பழக்கப்பட்டுபோன ஒரு தந்தையால் தன் டீன்-ஏஜ் மகளின் கலக்கத்தை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது தானே.

தாய்-மகள் உறவு முறை என்பது தகப்பன் - மகள் உறவு முறையிலிருந்து மிகவும் மாறுபட்டது.

டீன் -ஏஜ் பருவத்தில் எந்த ஒரு பெண் பிள்ளையும் தன் தாயிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது இயல்பு. தந்தையுடன் பகிர்ந்துக்கொள்ள இயலாத அச்சங்களையும், ஐயப்பாடுகளையும் தாயுடன் பகிர்ந்துக் கொள்கிறாள். தாயுடன் ஒட்டுதலாக இருக்கின்ற மகள் தன்னுடன் அப்படி இல்லையே என்று தந்தை ஏங்குகிறார். விலக்கி வைக்கப்பட்டது போல் உணருகிறார். இன்னொரு கருத்து கூட இதை மேலும் சிக்கலாக்குகின்றது.

ஒரு தந்தையின் பார்வையில், தம் மகள் எப்பொழுதும் குழந்தையாகவே தென்படுகிறாள். அவள் வளர்ந்து கொண்டிருக்கிறாள் என்பதை உணரத் தவறி விடுகிறார். டீன்-ஏஜ் மகளின் ஒவ்வொரு புதிய பழக்கமும் - மகளைப் பற்றி தன் மனதில் தான் பதித்து வைத்திருக்கும் படிமத்திற்கு முரணாக இருப்பதால் அவரை வெறுப்பேற்றுகிறது.

இந்த சூழ்நிலையில் தாய் என்கிற முறையிலும் மனைவி என்கிற முறையிலும் பெண்களுக்கு பெரிய கவலை ஏற்படும், சச்சரவுகளை தவிர்க்கும் பொருட்டு, அப்பாவும் மகளும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்வ தையும் தவிர்க்கத் தொடங்குவர். வீடே ஒரு போட்டிக் களமாகக் காட்சியளிக்கும்.

“என் விருப்பப் படித்தான் நடப்பேன்” என அடம் பிடிக்கும் 14வயது மகளுக்கும். குடும்பத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முனையும் அப்பாவுக்கும் இடையில் நடக்கின்றன போட்டி, வீட்டை அல்லோல கல்லோலப் படுத்திவிடும். இவர்கள் இருவருக் கும் நடுவில் ஒரு சமாதான உடன்படிக்கையை ஒரு தாயால் தான் ஏற்ப்படுத்த முடியும்.

ஒருவருடைய குணாதிசயத்தை இன்னொருவர் மாற்றியமைக்க முடியாது என்பது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அப்பாக்கள் தங்களின் அதிகாரத்தை அவ்வப்போது தளர்த்திக் கொள்ளுவதால் குடும்பத்தில் சமாதானத்தை நிலைநாட்ட வழி வகுக்கும், உங்கள் பிடிவாதங்கள் அனைத் தையும் மறுபடியும் ஒருமுறை பரிசீலியுங்கள். உங்களுக்கு இன்றியமையாததாக தோன்றும் சில,உண்மையில் முக்கிய மற்றதாக இருக்கக்கூடும். எடுத்துக்காட்டாக உங்கள் பெண் விரும்புகிற வரையில் தொலை பேசியில் பேச அனுமதியுங்கள். இந்த விட்டுக் கொடுக்கும் அணுகுமுறை உங்கள் டீன்ஏஜ் மகளை சிந்திக்க வைக்கும். வழக்கமாக சண்டை பிடிக்கும் அப்பா இவ்வளவு நேரம் பேசியும் அமைதியாக இருக்கிறாரே? என்று வியப்புறுவாள்.

காலப்போக்கில் உங்கள் மீதும் உங்கள் தேவைகளின் மீதும் அவளுக்கு மரியாதை கூடும். என்னதான் டீன்-ஏஜ் பருவத்தை எட்டிவிட்டாலும், உங்கள் அன்புக்காகவும், உறவுக்காகவும் ஏங்கும் குழந்தையாகவே மனதளவில் அவள் இருக்கிறாள். குடும்ப உறவு பிணக்குகள் கொண்டதாக இல்லாமல் பாசத்தை அடிப்படையாகக் கொண்டு இருப் பதையே அவளும் விரும்புகிறாள். பிடியை கொஞ்சம் தளர்த்த வேண்டும் என்றவுடன் பிள்ளைகளின் நடவடிக்கைகளில் அறவே கவனம் செலுத்தாமல் இருப்பது என்று நினைத்துவிடக்கூடாது. அதிகமாக தலையி டாமல் அவள் நடவடிக்கைகளை மேற்பார் வையிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். உலகத்தை எதிர்கொள்வதற்கான வயது, பக்குவமும் ஒரு டீன்-ஏஜ் பெண்ணிடம் இருக்காது. உங்கள் அறிவுரையும் வழிகாட்டு தலும் அவளுக்குத் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கும்.

டீன்-ஏஜ் பருவம் என்பது பரிணாம வளர்ச்சியை குறிக்கிறது. பார்க்காததைப் பார்க்கவும். கேட்காததைக் கேட்கவும் ஆவல் மேலிடுகிறது. சில சமயங்களில் இந்த ஆவல் உணர்ச்சியே உங்கள் டீன்-ஏஜ் பிள்ளையை சிக்கலில் மாட்டியும் விடுகின்றது. அதனால் அவள் வாழ்க்கையில் நீங்கள் பங்கு பெறுவது முக்கியம்.

மகளின் நண்பர்கள் வீட்டிற்கு வரும்போது அவர்களுடன் கலந்துரையாடுங்கள். உங்கள் மகளின் நட்புவட்டம் எத்தகையது என்பதைப் புரிந்துகொள்ள இது உதவும். டீன்-ஏஜ் பருவத்தில் நிகழும் இன்னொரு முக்கியமான வளர்ச்சி. மொட்டுவிடும் பாலியல் உணர்வு . இந்த பாலியல் உணர்ச்சியை முழுவதும் புரிந்துக் கொள்ள முடியாமல் உங்கள் மகள் தடுமாறும் காலம் இது. இந்த தடுமாற்றத்தின் விளைவாக உங்களைக் கூட அவள் தவிர்க்க விழைவாள். சிடுசிடுப்பாகவும், முரட்டுத்தனமாகவும் நடந்துகொள்ளத் துவங்குவாள்.

இந்த நேரத்தில்தான் நீங்கள் மிக அனுசரனையாக இருக்க வேண்டும். அப்படி இருப்பது கடினம்தான். எனினும் இந்த அனுசரணையின் பயனைத் தெரிய வரும் போது பெரும் மகிழ்ச்சி அடைவீர்கள்.

உங்களை எதிர்த்துப் பேசிக் கொண்டும். முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டும் அவள் வலம் வருகின்ற நேரங்களை விட, தன் பொறுப்பை மறவாமல் அவள் சில வேலைகளைச் செய்யக்கூடும். அவை மிகச் சிறிய செயல்களாகவும் இருக்க லாம. எனினும் நீங்கள் அவற்றை மறக்காமல் பாராட்ட வேண்டும். அதிக அலட்டல் இல்லாமல் சாமர்த்தியமாக பாராட்டுங்கள்.

டீன்-ஏஜ் பருவத்தில் உணர்வுகளை வெளிப்படுத்த உங்கள் மகள் சங்தேக மொழி யைக் கைக்கொள்வாள். தன் எண்ணங்களை நாசுக்கான குறிப்புகள் மூலம் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவாள்; இந்த மாதிரி தருணங் களில் எந்த ஒரு அப்பாவுக்கும் அறிவுரைகளை வாரி வழங்கிடத்தான் மனம் துடிக்கும். அவசரப்பட்டு விடாதீர்கள் இலேசாக மனம் திறந்து காட்டியிருக்கின்ற உங்கள் மகள் அதை மறுபடியும் பட்டென மூடாமல் இருக்க வேண்டுமானால் நீங்கள் புத்திசாலித்தனமா நடந்து கொள்ள வேண்டும். உங்கள் மகள் சுற்றி வளைக்காமல் நேரடியாக கேள்வி கேட்பாளேயானால் நீங்களும் அவ்விதமா கவே பதிலளிக்க வேண்டும்.



கூச்சப்பட்டுக் கொண்டு சுற்றி வளைத்தால் உங்கள் பதில்கள் அதற்குத் தக்கவாறு அமைய வேண்டும். இந்த நேரத்தில் போய் சொற்பொழிவு செய்து கொண்டு இருப்பீர்களேயானால் அவள் மறுபடியும் உங்களிடம் ஆலோசனை கேட்டு வராம லேயே போகக்கூடும். எந்த நேரத்தில் எந்த விதமாக பேச வேண்டும் என்பதை புரிந்துக் கொண்டு பேசினால், உங்கள் டீன்-ஏஜ் பெண்ணுக்கும் உங்களுக்கும் இடையிலான உறவு ஆழப்படும்.