Apr 9, 2009

முழு விழிப்புணர்வு ...

நம் கண்ணில் ஒரு தூசு விழுந்தால், இமை தானே மூடிக்கொள்ளும். கையில் சூடு பட்டுவிட்டால் சடாரென வாய்க்குள் நுழைத்துக்கொண்டு சூடாற்றிக் கொள்கிறோம். இது போன்ற உடல் சார்ந்த விஷயங்கள் தானே அனிச்சையாய் நடைபெறும்.

அதுபோல தானே அனிச்சையாய் நடக்கக்கூடிய விஷயங்கள் பல உண்டு.

சைக்கிள் சாவியை தினமும் வைக்கவேண்டிய இடத்தில் சரியாய் வைப்போம். புதுப்பேனா வாங்கினால் நம் பெயரை எழுதிப்பார்ப்போம். வேறு எதையும் பெரும்பாலும் எழுதுவதில்லை. சன் மியுசிக் சேனல் வைக்கத் தானே கை ரிமோட்டில் ஒரு நம்பரின் மேல் வைக்கும்.

தினமும், ஒரே பாதையில் எட்டு வருடமாகக் காலை எட்டு மணிக்குப் போய்க்கொண்டிருந்தால், செல்லும் பாதையின்மீது நம் கவனம் இருக்கவேண்டிய அவசியமில்லை. பொதுவாக எல்லோருக்குமே எங்கேயாவது சென்று கொண்டிருக்கும்போது முந்தினநாள் விஷயங்களையோ, அல்லது இன்று அலுவலகத்தில் செய்யப்போகின்றவையோ, ஏதோ ஒன்றை மனம் போட்டுத் தாளித்துக் கொண்டிருக்கும். ஆனால் ஆச்சரியப்படும் விதமாக சாலையில் யாரிடமும் மோதிக்கொள்ளாமல், திரும்ப வேண்டிய சந்துபொந்துகளில் சரியாய்த் திரும்பி போய்ச் சேரவேண்டிய இடத்திற்கு சரியாய்ச் சென்று சேர்ந்திருப்போம்.

ஒரு வேலையை அல்லது செயலை (Activity) நாம் செய்யும்போது, நாம் செய்வது நம் மனதில் பதிகிறதா? அல்லது மனது சொல்கிறபடி நாம் செய்கிறோமா?

இரண்டும் ஒரு வகையில் ஒன்றுக்கொன்று தொடர்புடையதுதான். முதன்முதலில் நாம் செய்வதுதான் நம் மனதில் பதிகிறது. ஒருமுறை பதிந்துவிட்டால் அதன்பின் மனது சொல்கிறபடி நாம் செய்ய ஆரம்பித்துவிடுகிறோம்.

சிகரெட் பிடிக்க நினைப்பதும், சூடா டீ சாப்பிடணும்போலத் தோணுது என்பதும், அழகான பெண்ணைப் பார்த்தவுடன் 'லுக்கு' விடத் தூண்டுவதும் இந்த மனதினால்தான். உணர்வு மனதுடன் (Conscious mind) முதன்முதலில் நாம் செய்யும் ஒரு செயல், ஆழ்மனதில் (Subconscious mind)பதிந்து விடுகிறது. நமது உணர்வு மனதில் பதிந்த எந்த விஷயத்தையும் எளிதாக நாம் அழிக்க முடியும். ஆனால் ஆழ் மனதில் பதிந்தவற்றை அகற்றுவதென்பது அவ்வளவு எளிதல்ல.

சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களைக் கவனித்திருப்போமே. அவர்களாகவே அதை விட்டுவிடவேண்டும் என ஆசைப்பட்டாலும் அது முடிவதில்லை, அவ்வளவு எளிதில். நல்லதோ கெட்டதோ முதன்முதலில் பதிந்த விஷயம், பதிந்ததுதான். திடமான நம்பிக்கை (Will power) வேண்டும் அதை மாற்றுவதற்கு.

இப்படி பற்பல விஷயங்களைப் பழக்கத்தினால் நாம் அறியாமலேயே சரியாகச் செய்துகொண்டிருப்போம்.
அதையே அறிந்து செய்தால் என்ன?


இதிலென்ன 'அறிய' வேண்டிக் கிடக்கிறது?

ஐய்யோ..சாமி.. 'அறிந்து' செய்துதான் பார்ப்போமே!

சரி.. எப்படி செய்வது? எதற்காக செய்கிறோம்?

நாம் ஒன்றும் புதிதாகச் சொல்லப் போவதில்லை. புதிய மொந்தையில் பழைய கள்! தற்போது உலகத்தில் சொல்லப்படும் தத்துவங்கள் எல்லாமே ஏற்கனவே சொல்லப்பட்ட விஷயங்கள்தான். சொல்லப்பட்ட விஷயங்களை தங்கள் மொழி நடைக்கேற்ப கூட்டியோ குறைத்தோ சுவாரசியமாகச் சொல்கிறார்கள், அல்லது சொல்ல நினைக்கிறார்கள்!

புத்தர் காலத்தில் நடந்ததாக ஒரு சம்பவம் படித்திருப்போம். புத்தரும் அவரது சீடர்களும் யாசகம் பெற்றுசாப்பிடுவதுதான் வழக்கம். ஒரு நாள், ஒரு இளம் சீடர் தனது மனம் அதிகம் சலனமடைவதாக புத்தரிடம் சொன்னார்.

விளக்கிக் கூறுமாறு புத்தர் கேட்க, இளம் சீடரும் தாம் ஒரு வீட்டுக்கு பிக்ஷை வாங்கப்போகும்போதேல்லாம் அந்த இல்லத்தம்மணியின் அழகு தம் மனதைச் சலனமடையச் செய்வதாகவும், பிக்ஷை வாங்கும்போது குற்ற உணர்ச்சியினால் கைகள் நடுக்கமடைவதாகவும் கூறினார். மேலும் அந்த வீட்டுக்கு இனிமேல் தன்னால் செல்ல இயலாதெனவும் தனது எண்ணங்கள் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாகவும் சற்று நடுக்கமுடன் கூறினார்.

புத்தர் வாஞ்சையுடன் பதிலளித்தார், "உனது எண்ணங்களைக் உற்றுக் கவனி. நீ யார் என்பதையும் மனதில் நிறுத்து. பிட்சை கேட்க மட்டுமே நீ சென்றிருக்கிறாய் என்பதை உணர்வில் வைத்திரு"

அந்த வீட்டிற்குச் சென்ற சீடருக்கு மீண்டும் மனம் தடுமாற, அப்பெண்மணி கேட்டார், "எம்மை அடைய வேண்டுமென்று உமக்குத் தோன்றுகிறதா?"

அரண்டு போய்க் கேட்டார் சீடர். "எனது எண்ணங்கள் உன்னை எட்டுகின்றனவா?"

பெண்மணி சொன்னார், "ஆம். தியானம் செய்து செய்து மனம் சூன்யமாகி விட்டது"

சீடர் திரும்பி வந்து நடந்ததைக் கூற, புன்னகை புரிந்த புத்தர் "இனிதான் நீ அங்கே அடிக்கடி செல்ல வேண்டும். உனது எண்ணங்களை மீண்டும் மீண்டும் உற்றுக் கவனி. நீ யார் என்பதையும் மனதில் நிறுத்து. நீ யார் என்ற தெளிந்த எண்ணத்துடன் அந்த அம்மணியைக் காண்பாயானால் உன் மனம் சலனமடையாது" என்றார்.

தொடர்ந்து அந்த வீட்டிற்குச் சென்ற சீடர், மீண்டும் மீண்டும் விடாப்பிடியாக தனது எண்ண அலைகளை உற்று கவனித்து, அது தடுமாறும் போதெல்லாம் தான் ஒரு துறவி என்றும், தான் வந்திருப்பது யாசகம் கேட்க மட்டுமே என்றும், அப்பெண்மணியின் முகத்தைக் காணும்போதெல்லாம் மனதில் விழிப்புணர்வோடு யாசகம் கேட்கலானார்.

நாளடைவில் எந்தச் செயலைச் செய்தாலும் முழு விழிப்புணர்வுடன் தனக்கு தேவை எது, தேவையில்லாதது எது என்று தெளிந்த அறிவுடன் செய்வது பழக்கமாகவே ஆகிவிட்டது சீடருக்கு.

அவ்வளவுதான் விஷயம்.

தன் மனதைக் கவனிக்கும் இந்த சுயவிழிப்புணர்வு நிலையினால் கிடைக்கும் பயன்கள் :

ஒரு செயலில் நிலைத்த மனம் (Concentration)
நல்ல/கெட்ட பழக்கங்களைப் பகுத்தறியும் தெளிந்த அறிவு
மன அழுத்தத்திற்கு ஆட்படாமை
விளைவுகளை முன்கூட்டியே அறியும் திறன்

மிக மிக முக்கியமான இன்னொரு பயன், நாம் மட்டும் தெளிவடைவது மட்டுமன்றி, நமது நேர்மறையான எண்ண அலைகள் நம்மைச் சுற்றியுள்ளோர்களையும் அரவணைத்து அவர்களுக்கும் தெளிவை உண்டாக்கும்.

இதைப் படித்ததோடல்லாமல் பழக்கமாக்கிக் கொள்ளவேண்டும். முதலில் மூன்று மணிநேரம் செய்து பார்ப்போம் என ஆரம்பியுங்கள். தினமும் வேலை நேரங்களில் மூன்று மணி நேரம் போதும். சிறிது நாட்களுக்குப் பின் மூன்றை ஆறு ஆக்குங்கள்.

தினமும் காலையில் மனதில் இன்றைய பொழுதை என் முழு மன விழிப்புணர்வுடன் கழிப்பேன். எந்தக் காரியமானாலும் சரி, நான் செய்வதை நானே கவனிப்பேன், ஒரு மூன்றாம் நபரைப்போல.

படிப்படியாகச் செய்யுங்கள், அவசரம் வேண்டாம். இரண்டு வாரங்களிலேயே குறிப்பிடத்தக்க மாற்றம் தெரியும். இரண்டே மாதங்களில் அது பழக்கமாகவே ஆகிவிடும்.

அலுவலகத்தில் முக்கிய வேலையில் இருக்கும்போது தேவையில்லாமல் முதல்நாள் பார்த்த சினிமாவின் தாக்கம் மனதில் நெருடுகிறதா, எண்ணங்களை தன் போக்கில் இழுத்துச்செல்கிறதா?

வேலையை நிறுத்துவோம் - மனதைக் கவனிப்போம் - தற்போது என்ன செய்கிறோம் என்ற தெளிவு பெறுவோம் - வெற்றிப் புன்னகையுடன் வேலையைத் தெடர்வோம்.

No comments: