Jul 20, 2009

புத்தர் சிலையானார்


மதிப்பு
--------
நேரத்திற்கு தான் மதிப்பு
கடிகாரத்திற்கு அல்ல.

தேனீருக்கு தான் மதிப்பு
கோப்பைக்கு அல்ல.






வில்லு

-----------

கிளி தெரியவில்லை.
கிளியின் கண் மட்டும் தெரிந்தது.
விஜயன் ஜென் ஆனான்.


குரு
-----
குரு பாதுகை ஓசை கேட்டதும்
நான் விழித்தேன்.
குரு நடப்பதை நிறுத்தியதும்
அவரின் பாதுகை என்னிடத்தில்
இருக்கிறது.


காமம்
--------
மீன் குளத்தில் நிறைந்து இருக்கிறது.
அங்கும் இங்கும் அலைகிறது.
நிற்கும் போதும் செவுள் அசைகிறது.

வறட்சி வந்ததும்
குளமும் இல்லை.
மீனும் இல்லை.

சடங்கு
--------
பல காலம் புத்தரை வணங்கினேன்.
புத்தர் சிலையால் என் தலையில் அடித்தார் குரு.
புத்தர் சிலையானார்...!

Jul 19, 2009

சல்லிக்கட்டு


தமிழர்களுக்கென்று தனித்துவமான விளையாட்டுகள் இருந்தன என்பது இன்று மெல்ல-மெல்ல மறைக்கப்பட்டு, மறக்கப்பட்டு வருகின்றது. தமிழர்களுக்கென்று விளையாட்டுகள் இல்லை என்ற எண்ணக்கூடிய காலம் உருவாகியுள்ளது வருந்தற்தக்க செய்தியாகும்.அவ்வகையில் தமிழர்களால் மறக்கப்பட்டு வருகின்ற தமிழர் விளையாட்டுகளை வெளிக்கொணர்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பழந்தமிழர்கள் வாழ்வில் பல்வேறு விளையாட்டுகள் இடம் பெற்று வந்துள்ளன. அவ்வகையில் தமிழ்நாட்டுப்புற மக்களால் இன்றளவும் பேணி போற்றப்பட்டு விளையாடிவரும் விளையாட்டு சல்லிக்கட்டு எனப்படும் ஏறு தழுவுதலாகும். மாடி வாசலில் முரட்டுக் காளையினைத் தனித்து நின்று அடக்குதல் இவ்விளையாட்டின் நோக்கமாகும்.


இலக்கியங்களில் சுட்டப்படும் சல்லிக்கட்டும் ஏறுதழுவுதலும் ஒன்றே. ஆனால், மேனாட்டுக் காளைப் போர் சண்டையும் நம் பழந்தமிழரின் சல்லிக்கட்டையும் இணைத்துப் பார்த்தல் கூடாது. ஏனெனில், காளைப்போர் சண்டையின் இறுதியில் காளைகள் கொல்லப்படுகின்றன. ஆனால், காளைகளை அடக்குதல் என்ற செய்கை மட்டுமே இவ்விளையாட்டில் இடம்பெறுவதால் ஏறு தழுவுதலைத் தமிழருக்கே உரிய விளையாட்டாகக் கொள்ளலாம்.

ஏறு தழுவுதல் என்பது மிகுந்த துணிச்சலும் திறமையும் நிறைந்த விளையாட்டாக இன்றளவும் கருதப்படுகின்றது. இவ்விளையாட்டில் வீரமும் திறமும் கொண்ட இளைஞர்கள் பங்கெடுத்துக் கொள்வர். சங்ககாலத்தில் மஞ்சுவிரட்டு(காளைகளைப் பொது வீதியில் ஓடவிட்டு அவற்றை விரட்டுவது) மற்றும் எருது கட்டுதல்(காளைகளைக் கயிற்றால் கட்டி அடக்குதல்) எனும் விளையாட்டுகள் நடைப்பெற்றன எனக் கூறுகின்றனர். பின்னாளில் தமிழகத்தில் ஜமீன்தார்கள் தங்கள் பலத்தை உறுதிப்படுத்த பலமுள்ள முரட்டுக் காளைகளை வளர்த்தார்கள் என்ற தகவலும் உண்டு. ஆனால், அக்காளைகளை யாரும் அடக்கி வென்றுவிட்டால் தங்கள் மதிப்பினை இழந்து விடுவோம் என்று பயந்து சல்லிக்கட்டு போட்டிகள் எதையும் வைக்கவில்லை என்பது அறிஞர்களின் கருத்தாகும்.

சங்ககாலத்தில் மஞ்சுவிரட்டு நடைப்பெற்றது என்ற கருத்தை வலியுறுத்த நீலகிரிப்பகுதியில் கரிக்கியூர் என்ற ஊரில் உள்ள கற்பாறை ஓவியங்களை ஆதாரமாகக் காட்டுகின்றனர். அவ்வோவியங்கள் மூவாயிரம் வருடங்களுக்கு மேல் பழமையானது என்பது அறிஞர் பெருமக்கள் முடிந்த முடிபாகும்.

Jul 17, 2009

உடம்பு நல்ல வாட்டசாட்டமாக இருக்கும். இரத்தசோகை, பிரஸர், சீனி வருத்தம் ஏதும் இருக்காது, ஆனாலும் முகத்தில் சோர்வுடன் வருபவர்கள் பலர்.

'உடம்பு பலவீனமாக களைப்பாக இருக்கு. பலத்திற்கு என்ன சாப்பிடலாம்? எனக் கேட்பார்கள்.

உடல் ஆரோக்கியமாக இருக்கும் இவர்களுக்கும் ஏன் களைப்பு வருகிறது. ஊட்டக் குறைவுதான் இவர்களது களைப்பிற்குக் காரணமா?

இத்தகைய களைப்பிற்கு பெரும்பாலும் கடுமையான நோய்கள் காரணமாக இருப்பதில்லை. ஒருவரது தவறான பழக்கவழக்கங்களும், ஆரோக்கியமற்ற உணவுமுறைகளும் கூடக் காரணமாக இருக்கலாம்.

தூக்கக் குறைபாடு



முக்கிய பிரச்சனை போதிய தூக்கம் கிடைக்காததாக இருக்கக் கூடும். சிவராத்திரி முழிப்புப் போல இரவிரவாக விழிப்பிருந்தால்தான் மறுநாள் களைப்பு வரும் என்றில்லை. உங்களுக்கு தினமும் தேவைப்படும் தூக்கத்தில் ஒருமணி நேரம் குறைந்தால் கூட மறுநாள் சக்தி இழந்தது போன்ற உணர்வு ஏற்படலாம்.

உங்கள் தூக்கம் குறைந்ததற்குக் காரணங்கள் பலவாக இருக்கலாம். *உதாரணமாக வேலைப்பழு காரணமாக சரியான நேரத்திற்கு படுக்கைக்க்குப் போக முடியாதிருக்கலாம்.
*படுக்கைக்குப் போனாலும் மனஅழுத்தங்கள் காரணமாக நிம்மதியாகத் தூங்க முடியாது போயிருக்கலாம்.
*வயதாகும்போது பலருக்கு குழப்பமற்ற தூக்கம் வராதிருக்கலாம்.
*அல்லது வேளையோடு எழுந்திருக்க முடியாதிருக்கலாம்.

காரணம் எதுவாக இருந்தாலும் போதிய தூக்கமின்மை மறுநாள் சோர்வைக் கொண்டுவரும்.

சோம்பேறி வாழக்கை முறை

உடலுழைப்பற்ற சோம்போறித்தனமான வாழ்க்கை முறையும் இயலாமையைக் கொண்டு வரும். போதிய உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு மிக அவசியமாகும்.

உடற் பயிற்சி செய்வதற்கு நேரமில்லை அல்லது களைப்பாக இருக்கிறது என அதைத் தவிர்ப்பது தவறு. ஏனெனில் பயிற்சி இல்லையேல் உங்கள் உடலாரோக்கியம் கெட்டுவிடும். சிறு வேலை செய்வது கூடக் களைப்பைக் கொண்டுவரும்.

இதைத் தவிர்பதற்கு தினமும் அரை மணிநேரம் ஆயினும் உடலுழைப்பில் ஈடுபடுங்கள். வேகமாக நடக்கலாம், நீந்தலாம், தோட்டத்தில் வேலை செய்யலாம். எதுவானாலும் ஒரேயடியாக 30 நிமிடங்களை ஒதுக்குவது முடியாது எனில் அதனை இரண்டு தடவைகளாகப் பிரித்துச் செய்யுங்கள். உடல் உறுதியானால் களைப்பு வராது.

போஸாக்கான உணவு

போஸாக்கான உணவையும், நீராகாரத்தையும் எடுக்காவிட்டால் உங்கள் நாளாந்த வேலைக்கான எரிபொருளை உங்கள் உடல் கொண்டிருக்காது. காலை உணவு முதற்கொண்டு போஸாக்காக எடுக்கப் பழகிக்கொள்ளுங்கள்.



எண்ணெய், பட்டர், மார்ஜரீன் போன்ற கொழுப்புப் பொருட்கள் அதிகமுள்ள உணவுகளைத் தவிருங்கள். நார்ப்பொருட்கள் விற்றமின், தாதுப்பொருட்கள் அதிகமான உணவு வகைகளை தேர்ந்தெடுங்கள். தீட்டாத அரிசி, அரிசிமா, ஆட்டாமா, குரக்கன் போன்றவை நல்லது. பழவகைகளையும் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

சிறிய உணவுகள்

இனிப்புச் செறிந்த பழச்சாறுகள், மென்பானங்கள் போன்றவை நல்லதல்ல. பால், உடன் தயாரித்த பழச்சாறு போன்றவை விரும்பத்தக்கவை.

அதிகமாக வயிறு கொள்ளாமல் உண்பதைத் தவிருங்கள். சிறிய உணவுகளாக, அதுவும் கலோரிச் சத்துக் குறைந்த உணவுகளாக உண்ணுங்கள். வேண்டுமானால் 4-5 மணி நேரத்திற்கு ஒரு முறை அவ்வாறான உணவை எடுக்கலாம்.

மதுபானம்


மதுபானம் உட்கொள்ளும்போது உற்சாகம் அளிப்பதுபோலத் தோன்றினாலும் உண்மையில் நரம்பு மண்டலத்தைச் சோர்வுறச் செய்கிறது. உட்கொண்டு பல மணிநேரத்திற்கு ஒருவரைச் சோர்வுறச் செய்யலாம். அத்துடன் படுக்கைக்குச் செல்லமுன் மதுபானம் எடுத்தால் தூக்கத்தைக் கெடுத்து அடுத்த நாளையும் சோர்வுறச் செய்துவிடலாம்.

நெருக்கீடும் மனப்பதற்றமும்


ஆயினும் இன்றைய காலகட்டத்தில் பலரின் சோர்விற்கும் களைப்பிற்கும் காரணமாக இருப்பது நெருக்கீடு நிறைந்த வாழ்க்கையும், மனப்பதற்றமும்தான். ஓய்விற்கு நேரமின்றி ஒரு பணியிலிருந்து மற்றொரு வேலைக்கு இடைவெளியின்றி ஓடிக்கொண்ருப்பவர்களுக்கு களைப்பு ஏற்படவே செய்யும்.


நேர முகாமைத்துவம்


மனத்தில் நிறைவும் சந்தோசமும் இருந்தால் களைப்பு நெருங்காது.
இதனைத் தவிர்ப்பதற்கு நேர முகாமைத்துவம் முக்கியமானதாகும்.

*செய்து முடிப்பதற்கு சிரமமான பணிகளை பொறுப்பு ஏற்றுக் கொள்ளாதீர்கள்.
*முக்கிய வேலைகளுக்கு முன்னுரிமை கொடுத்து நிறைவு செய்யுங்கள். *குழப்பங்கள் ஏற்படாமல் பணிகளை ஒழுங்கு முறையில் செய்து முடிக்க திட்டமிட்டுச் செயலாற்றுங்கள்.
*பணிகளின் இடைவெளிகளில் சற்று நிதானித்து மூச்சுவிட்டுக் களைப்பாறுங்கள்.
*தினசரிக் கடமைகளுக்கு மேலாக உங்களை மகிழ்வுறுத்தும் பொழுதுபோக்கில் அல்லது விளையாட்டில் ஈடுபடுங்கள்.
*மதிய உணவின் பின் மீதி வேலைகளைத் தொடங்கு முன் முடியுமானால் குட்டித் தூக்கம் செய்யுங்கள். அல்லது சற்றுக் காலாற உலாவுங்கள்.
*அவசியமானால் காலையில் 15 நிமிடங்கள் முன்னதாகவே படுக்கை விட்டெழுந்து நாளாந்தக் கடமைகளை ஆரம்பியுங்கள்.

வேலைத்தள நெருக்கடி

உங்கள் வேலைத்தளத்திலும் களைப்பு ஏற்படுகிறது எனில் அது உங்கள் தொழில் சார்ந்ததாக இருக்கக் கூடும். நெருக்கடி மிக்க வேலையாக இருக்கலாம் அல்லது தொழிலில் அதிருப்தி அல்லது ஈடுபாடு குறைந்த வேலையாகவும் இருக்கலாம். திறந்த மனத்தோடு சுயமதிப்பீடு செய்து நிவர்த்தி செய்வது அவசியம்.

சகஊழியர்களுடன் நல் உறவை

சகஊழியர்களுடன் நல் உறவை வளர்த்துக் கொள்ளுங்கள். அவர்களுடனான உறவில் ஏதாவது உரசல் அல்லது நெருக்கடி இருந்தால் அதனைத் தீர்பதற்கு முன்னுரிமை கொடுங்கள்.

மேலதிகாரியுடனான உறவு

உங்கள் மேலதிகாரியுடனான உறவைப் பலப்படுத்துங்கள்.

அவர் உங்களிடம் எதனை எதிர்பார்க்கிறார் என்பதைத் தெளிவாகப் புரிந்து செயற்படுங்கள்.

உங்கள் திறமைகளின் எல்லைகளைப் புரிந்து கொள்ளுங்கள். தொழில் சார்ந்த உங்கள் பலவீனங்களை திறந்த மனத்தோடு ஏற்றுக்கொண்டு அதனை நிவர்த்தி செய்ய முயலுங்கள்.

மருந்துகள்

வேறு நோய்களுக்காக நீங்கள் உபயோகிக்கும் மருந்துகளும் களைப்பிற்குக் காரணமாகலாம். உதாரணமாக தடிமன் தும்மலுக்கு உபயோகிக்கும் பிரிட்டோன், செட்ரிசின் போன்றவை, தூக்க மருந்துகள், பிரஸருக்கு உபயோகிக்கும் பீட்டா புளக்கர் மருந்துகளும் காரணமாகலாம். இருமலுக்கு உபயோகிக்கும் மருந்துகளில் உள்ள கொடேன் போன்ற வேறு பல மருந்துகளையும் சொல்லலாம்.

டொனிக், சத்துமா, விற்றமின்

எனவே களைப்பு என்றவுடன் சத்து மருந்துகள், டொனிக், சத்துமா, விற்றமின் மருந்து ஊசி எனத் தேடி அலையாமல் காரணத்தைக் கண்டு அதனை நீக்க முயலுங்கள்.

உங்களால் முடியாவிட்டால் உங்கள் மருத்துவரை நாடுங்கள்.

Jul 16, 2009

எங்கள் தாய் !


இல்லத்தில் அம்மாதான் ராணி !
ஆயினும்
எல்லோருக்கும் அவள் அடிமை !
வீட்டு வேலிக்குள்
அத்தனை பேரும் ராஜா !
அம்மாதான் சேவகி !
எல்லோருக்கும் பணிவிடை முடிந்து
பாத்திரம் கழுவப்
பத்தாகி விடும் !

நித்தமும்
பின்தூங்குபவள் அம்மா !
சேவல் கூவ
முன்னெழுவாள் அம்மா !
அம்மாவைத் தேடாத
ஆத்மா இல்லை !
அம்மா இல்லா விட்டால்
வீட்டுக் கடிகாரத்தின்
அச்சு
முறிந்து விடும் !

எந்தப் பிள்ளைக்கும் அவள்
சொந்தத் தாய் !
பால் கொடுப்பாள்
பாப்பாவுக்கு !
முதுகு தேய்ப்பாள்
அப்பாவுக்கு !
இனிதாய் உணவு சமைப்பாள் !
எல்லாருக்கும் பரிமாறி
எனக்கு மட்டும் ஊட்டுவாள் !
வேலையில் மூழ்கி
வேர்வையில் குளிப்பாள் !

எப்போதாவது அடி வாங்குவாள்
அப்பாவிடம் !
தப்பாது மிதி வாங்குவாள்
தமயனிடம் !
கையை முறிப்பான்
கடைசித் தம்பி !
கலங்கும்
கண்ணீரைத் துடைப்பது
கனலும் காற்றும் !

பளுவைக் குறைப்பது அவளது
நோயும் நொடியும் !
ஆயுளை நீடிக்க வைப்பது
தாயுள்ளம் !
உயிருள்ள போது ஒருவராலும்
வணங்கப் படாது,


செத்த பிறகு
தெய்வ மாகிறாள் !


நன்றி:-சி. ஜெயபாரதன்...கனடா..

கணினியை இணைய வழங்கியாக மாற்றுதல்

கோப்புகளை பகிர கணினியை இணைய வழங்கியாக மாற்றுதல் . உங்களின் தனிப்பட்ட புகைப்படங்கள், கோப்புகள், பாடல்கள் வைத்து உள்ளீர்கள். அவற்றை உங்கள் உறவினர் / நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்கள். கோப்பு பகிரும் தளங்கள் (File Sharing Sites) , பிகாஸா போன்ற புகைப்படம் பகிரும் தளங்கள் மூலம் இணையத்தில் ஏற்றி அவற்றை பகிர விருப்பமில்லை.

உங்கள் முக்கிய கோப்புகளை இல்ல கணினியில் (Home PC) வைத்து உள்ளீர்கள். இல்லத்தில் உள்ள கணினியின் கோப்புகளை உங்கள் அலுவலகத்தில் இருந்து அணுக வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.

ஒரு இணைய தளம் உருவாக்கி அதனை HTML கோப்புகளாக உங்கள் கணினியில் வைத்து உள்ளீர்கள். அவற்றை இணையத்தில் ஏற்றி இணையதளமாக அனைவரும் பார்க்கும் வண்ணம் அமைக்க வேண்டும் எனில் Web Hosting சேவை காசு கொடுத்து வாங்க வேண்டி இருக்கும். அல்லது இலவச சேவைகளை தேடி அலைய வேண்டி வரலாம்.

இது போன்ற தருணங்களில் மேலே சொன்ன அனைத்து வேலைகளையும் உங்கள் கணினியையே இணைய வழங்கியாக (Web Server) மாற்றி செய்ய இயலும். இணைய உலாவிகளில் சிறப்பிடம் பிடித்த ஒபேரா (Opera) இதற்கான வசதியை Unite என்ற பெயரில் வழங்குகிறது. இத்தனை உபயோகிக்க ஆழ்ந்த இணையம் சார்ந்த அறிவு தேவை இல்லை.

இதனை இங்கு சென்று தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.

எப்படி உபயோகிப்பது? என்பதனை இந்த வீடியோ எளிய முறையில் விளக்குகிறது.


மெனு பட்டைக்கு கீழே Panels என்பதனை கிளிக் செய்து மூன்றாவதாக உள்ள Unite கிளிக் செய்து கொள்ளுங்கள். File Sharing, Photo Sharing உள்ளிட்ட சேவைகளை நீங்கள் ஸ்டார்ட் செய்து கொள்ளவும். புதிய உறுப்பினர் கணக்கு உருவாக்கி கொள்ளுங்கள்.


எந்த Folder ஐ பகிர வேண்டுமோ அதை செலக்ட் செய்து கொள்ளுங்கள். அவ்வளவுதான். உங்களுக்கு ஒரு URL , Password கிடைக்கும். அதனை நீங்கள் பகிர வேண்டியவரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர் அந்த URL ஐ அணுகுவதன் மூலம் Password அளித்து உங்கள் கோப்புகளை பார்க்க / தரவிறக்கி கொள்ள முடியும். மேலே கொடுத்துள்ள வீடியோவை பாருங்கள் எளிய முறையில் புரிந்து கொள்ளலாம்.

முக்கியமாக கோப்புகள் / புகைப்படங்களை பகிரும் போது உங்கள் கணினி இயக்கத்தில், இணைய இணைப்புடன் இருக்க வேண்டும். உங்கள் கோப்புகள் வேறெங்கும் ஏற்ற (Upload) படுவதில்லை. உங்கள் கணினியில் இருந்தே நேரடியாக உபயோகப்படுத்த படுகிறது. எனவே உங்கள் கணினி இயக்கத்தில் (ON) இருப்பது முக்கியம்.

Jul 13, 2009

“பூஜ்ய விவசாயம்” (Zero Farming)

எம். கே. கைலாஷ்மூர்த்தி வங்கித் தொழிலை விட்டுவிட்டு விவசாயத்தை மேற்கொண்டவர். கர்நாடகா மாநில சாம ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள டோடின்டு வாடி கிராமத்தைச் சேர்ந்தவர். அவரது 6.5 ஏக்கர் பண்ணையில் பூஜ்ய விவசாய முறை’யைக் கடைப்பிடிப்பதாகக் கூறுகிறார். அப்படியென்றால்...? இயற்கைக்குத் தன்னைப் பராமரிப்பது எப்படி என்று தெரியும்... அதன் போக்கிலேயே விட்டுவிடுவது நல்லது... நல்ல விளைச்சலைப் பெற நிலத்தை உழ வேண்டியதில்லை... உரம் போட வேண்டியதில்லை... களை எடுக்க வேண்டிய தில்லை என்பதுதான் பூஜ்ய விவசாயம். நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்கிறது இல்லையா? ஆனால் பூஜ்ய விவசாயம் குறித்து இவர் பரிசோதனை செய்து பார்த்து நமக்குச் சொல்லும் அனுபவங்கள் வித்தியாசமானவை. ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இயற்கை விஞ்ஞானி மாசனோபு ஃபுகோகாவின் ஒற்றை வைக்கோல் புரட்சி (The One-Straw Revolution) என்ற புத்தகத்தைப் படித்தபிறகு பூஜ்ய விவசாய முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற உந்துதல் தனக்குக் கிடைத்ததாகக் கூறுகிறார் கைலாஷ் மூர்த்தி.

விதைகள் மட்டுமே இடுபொருட்கள்

மற்ற விவசாயிகளைப் போலவே இவரும் முன்னர் நல்ல விளைச்சலைப் பெறவேண்டும் என்பதற்காக உரங்களையும் பூச்சி மருந்துகளையும் பயன்படுத்தி வந்தவர்தான். ஆனால் ஒவ்வோர் ஆண்டும் விளைச்சல் குறைந்து கொண்டே வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த இவர் இயற்கை விவசாயத்திற்கு மாற முயற்சி செய்திருக்கிறார். “விதைகளைத் தவிர வேறு இடுபொருட்கள் எதையும் நான் பயன்படுத்தாதபோது பிரமிக்கத்தக்க மாற்றங்கள் படிப்படியாக ஏற்படுவதைக் கண்டேன். மண்ணின் இயற்கைச் சமநிலை செயல்படத் தொடங்கி எனது பண்ணை சிறு காடாகவே மாறியது. மருத்துவப் பயன் உள்ள செடிகள் உட்பட ஆயிரக் கணக்கான தாவரவகைகள் வளரத் தொடங்கின... பற்பல பறவைகளும் ஊர்வன வகையினவும் பண்ணையைத் தங்கள் இருப்பிடமாகக் கொள்ளத் தொடங்கின. ஆனால் இந்த மாற்றங்கள் நிகழ சிறிது காலம் பிடித்தது... ஒரு ஏக்கர் நிலத்தில் நான் ஏக்கருக்கு 3 டன் நெல் அறுவடை செய்தபோது உரங்களும் நவீன தொழில்நுட்பமும் பயன்படுத்தப் பட்ட அண்டை நிலங்களில் ஏக்கருக்கு 1.18 டன் மட்டுமே கிடைத்தது... பூச்சி மருந்து தெளிப்பதால் பூச்சிகள் அழிக்கப் பட்டுவிட்டதாக முதலில் தோன்றினாலும் நாளாவட்டத்தில் மருந்தை மீறி உயிர் வாழும் கலையைப் பூச்சிகள் கற்றுக் கொள்கின்றன. பூச்சிகளை அப்படியே விட்டுவிட்டால் பயிர்கள் அவற்றைத் தாக்குப்பிடிக்கத் தொடங்கிவிடும்” என்று பல ஆச்சரியமான தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார் கைலாஷ் மூர்த்தி.

மாயை தகர்ந்தது

கலப்பின விதைகள், உரங்கள், பூச்சி மருந்துகள் ஆகியவற்றைப் பயன்படுத்தினால் மட்டுமே நல்ல விளைச்சலைப் பெற முடியும் என்ற மாயையை இயற்கை விவசாயம் தகர்த்து விட்டது. அதே சமயம், இரசாயன விவசாயத்திலிருந்து பூஜ்ய விவசாயத்திற்கு மாறுமுன் மூன்று ஆண்டுகளுக்கு இயற்கை உரங்களைப் பயன் படுத்தும் முறையை (Organic Farming) கடைப்பிடித்தபிறகே மாறவேண்டும். மண்ணின் வளத்தைப் பாதுகாக்க இது மிகவும் முக்கியமானது என்று இவர் எச்சரிக்கிறார். பூஜ்ய விவசாயம் பூமி சூடேறுவதைக் குறைக்கவும் உதவுவதால் எதிர் காலத்தில் உணவு உற்பத்தியை அதிகரிக்கவும் உயிரினப் பன்மையைப் பாதுகாக்க வும் பயன்படும் என்றும் இவர் கூறுகிறார்.அதெல்லாம் சரி... உலகின் மக்கள் தொகைக்கு உணவளிப்பதற்கு இயற்கை விவசாயம் கைகொடுக்குமா என்ற கேள்விக்கும் கைலாஷ் மூர்த்தி விடை வைத்திருக்கிறார். கடந்த 50, 60 ஆண்டுகளாக நிலத்தைப் பாழ்படுத்தி விட்டோம். அதன் பயனாக விளைச்சல் குறையத் தொடங்கி விட்டது. பூஜ்ய விவசாய முறை நிலத்திற்குப் புத்துயிரூட்டுகிறது. நிலத்திற்கு என்ன செய்யவேண்டும் என்பதைவிட என்ன செய்யக்கூடாது என்பது முக்கிய மானது என்று முடிக்கிறார் இவர்.பெங்களூர் தோட்டக்கலையியல் ஆய்வு நிறுவனத்தின் (Indian Institute of Horticultural Research) விஞ்ஞானிகள் இவரது பண்ணைக்கு வந்து பூஜ்ய விவசாய முறையைப் பரிசோதித்து ஏற்றுக் கொண்டுள்ளனர்.

கைலாஷ் மூர்த்தியுடன் தொடர்பு கொள்ள :
E-mail: kailashnatufarm@gmail.com


கைபேசி : 9880185757 / 9845125808

Jul 12, 2009

வயர்லெஸ் தொழில் நுட்பம்

இன்று மனித வாழ்க்கையில் வயர்லெஸ் தொழில் நுட்பம் இல்லாத இடமே இல்லை எனலாம். நாம் அனைவரும் பயன்படுத்தும் மொபைல் போன், ரேடியோ, ரிமோட் என எத்தனையோ சாதனங்களைப் பட்டியலிடலாம்.

முதலில் வயர்லெஸ் தொழில் நுட்பம் என்றால் அது எதனைக் குறிக்கிறது? சாதாரண மனிதனின் நோக்கில் இதனைக் கூற வேண்டும் என்றால் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட தொலைவின் இடையே தகவல்களை எந்தவித வயர் இணைப்பு மின்றி கடத்துவதே ஆகும்.

வயர்லெஸ் தொழில் நுட்பத்தின் இன்றைய நிலை அதன் 125 ஆண்டுகால வளர்ச்சியின் முதிர்ச்சி ஆகும். இன்னும் தொடர்ந்து பல முனைகளில் வளர்ந்து கொண்டிருக்கும் இதன் வளர்ச்சியை அதன் தொடக்கம் முதல் காணலாம்.

1887: முதன் முதலில் வயர்லெஸ் தொழில் நுட்பம் என்றால் என்ன என்பது குறித்து ஜெர்மானிய நாட்டு விஞ்ஞானி ஹெர்ஸ் என்பவர் எடுத்துரைத்தார். அவர் எவ்வாறு மின் காந்த அலைகளை வயர் எதுவுமின்றி ஒரு வெளியில் அனுப்பலாம் என்று காட்டினார். இது மைக்கேல் பாரடே அறிவித்த ஒளி குறித்த கோட்பாட்டின் விரிவாக்கம் ஆக இருந்தது. ஆனால் ஹெர்ட்ஸ் அதற்கு மேல் எதுவும் செய்திடவில்லை.

1893: நிக்கோலா டெல்ஸா என்பவர் ரேடியோ அலைகளை அனுப்பிக் காட்டினார்.

1897: மார்கோனி ரேடியோ அலைகளை அனுப்ப முடியும் என்று வரையறை செய்து அதற்கான கண்டுபிடிப்பு உரிமையினைப் பெற்றார்.

1898: டெல்ஸா ஒரு ரிமோட் கண்ட்ரோல் மூலம் படகு ஒன்றை இயக்க முடியும் என்பதைக் காட்டினார். இந்த சோதனை ஓட்டத்தைப் பார்த்தவர்கள் டெல்ஸா தன் மனதின் சக்தியால் தான் படகை இயக்குவதாக எண்ணினார்கள்.

1906: இன்று ஏ.எம். ரேடியோ என்று (Amplitude Modulation) அழைக்கப்படும் அலைவரிசை ஒலி பரப்பினை ரெஜினால்ட் என்பவர் காட்டினார்.

1915: வெர்ஜினியாவிலிருந்து பாரிஸ் நகரத்திற்கு ஏ.டி. அண்ட் டி நிறுவனம் ரேடியோ அலைகளை அனுப்பிக் காட்டியது.

1919: ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் ரேடியோ கார்ப்பரேஷன் ஆப் அமெரிக்காவினை நிறுவியது.

1921: Shortwave (SW) radio இயக்கிக் காட்டப்பட்டது.

1931: மிகத் தெளிவாக ரேடியோ அலைகளை அனுப்ப எப்.எம். (Frequency Modulation)தொழில் நுட்பம் உருவாக்கப்பட்டது.

1982: செல்லுலார் சிஸ்டத்திற்கான டிஜிட்டல் சிஸ்டத்தை அமைக்க GSM (Groupe Special Mobile) உருவாக்கப்பட்டது.

1987: ஜி.எஸ்.எம். தொழில் நுட்ப விபரங்கள் வரையறை செய்யப்பட்டன.

1990: டிஜிட்டல் ரேடியோ (எல் பேண்ட் ரேடியோ) முதன் முதலாக இயக்கிக் காட்டப்பட்டது.

1991: பின்லாந்தில் முதன் முதலாக ஜி.எஸ்.எம். வகை தொழில் நுட்பத்தில் முதல் போன் அழைப்பு ஏற்படுத்தப்பட்டது.

1992: ஐரோப்பாவிற்கு வெளியே முதல் முதலாக ஆஸ்திரேலியாவில் ஜி.எஸ்.எம். நெட்வொர்க் அமைக்கப்பட்டது. தொடர்ந்து 53% ஆஸ்திரேலியர்கள் ஜி.எஸ்.எம். தொலை தொடர்பு சேவையினைப் பெற்றார்கள்.

1997: வை–பி (WiFi) தொலை நுட்பம் உருவாக்கப்பட்டது.

1998: புளுடூத் தொழில் நுட்ப குழு உருவாக்கப்பட்டது.

1999: புளுடூத் 1.0 தொழில் நுட்பம் வெளியிடப்பட்டது.

2000: வர்த்தக ரீதியாக முதல் புளுடூத் சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டது.

2002: யு.எம்.டி.எஸ். (UMTS) அமைக்கப்பட்டு மொபைல் டிவி மற்றும் வீடியோ காலிங் போன்ற வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

2003: EDGE தொழில் நுட்பம் உருவாக்கப்பட்டது.

2004: வைமாக்ஸ் தரம் உயர்த்தப்பட்டது. புளுடூத் பதிப்பு 2.0 வெளியிடப்பட்டது.

2009: வை–பி தொழில் நுட்பத்தில் புதிய தரக்கட்டுப்பாடுகள் வெளியிடப்பட்டன.

Jul 10, 2009

கடன்,கடன் & கடன்...

1. மிக மிக அவசியத் தேவைகளுக்கு வாங்கலாம்.
2. தொழில் விரிவிற்குச் சரியாகத் திட்ட மிட்டு, கணக்கிட்டுக் கடன் வாங்குதல் வேண்டும்.

பலர் மிகக் குறைவான வட்டிக்குப் பணம் கிடைக்கிறது என்பதன் காரணமாகவும், சில மிக அவசியமில்லாத தேவைகளுக் காகவும், வாங்கி விடுகின்றனர். இவ்வாறு வாங்கிய கடனை திருப்பிச் செலுத்திக் கொண்டிருப்பதால் அவர்களது,
1. சேமிப்பு பாதிக்கப்படுகிறது.
2. எதிர்பாராத செலவுகள் அவர்களுக்கு வரும்போது தடுமாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பாய் அமையும்.
3. அவசியம் இல்லாததற்கு கடன் வாங்கும் பொழுது மனதில் சுமைதான்.

கடன் வாங்கும்பொழுதே இதைத் திருப்பிக் கட்டுவது எதன் மூலம் (Source of Income) என்பது பற்றியும் எப்பொழுது திருப்பிக் கட்டப் போகிறோம் என்பது பற்றியும், எவ்வளவு வட்டி என்பது பற்றியும் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். அதேபோல் வருமானம் வந்த உடன் கடனை திருப்பிச் செலுத்துவதற்கு மிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏனென்றால் சிலபேர் வருமானம் வந்த மகிழ்ச்சியால் வேறெதற்கோ செலவு செய்து விட்டு, அடுத்த வருமானத்தில் கொடுத்து விடலாம் என்று கடனைத் தள்ளிப் போட்டு விடுகின்றனர்.
கடனைக் குறிப்பிட்ட காலத்தில் திருப்பிச் செலுத்துவதால் கடன் வாங்கிய இடத்தில் நாணயம் காப்பாற்றப்படும் நமக்குள்ளே நம்மைப் பற்றிய ஒரு சுயமதிப்பு அதிகரிக்கும். கம்பீரம் பெருகும். நாணயத்தைக் காப்பாற்றி விட்டால் அவசரத் தேவைகளுக்கு எப்பொழுதும் பணம் கிடைக்கும்.

தொழில் தேவை தவிர வேறு எதற்குமே வாழ்க்கையில் கடன் வாங்காத அளவிற்கு வாழ்க்கையை திட்டமிட்டு அமைத்தால் வாழ்க்கை சந்தோசமாக அமையும். ‘கடனை நண்பர்களிடமும் உறவினர் களிடமும் வாங்க வேண்டாம்; கடனை வங்கியிடம் வாங்குங்கள். ஏனென்றால் உறவுகள் கோபப்படாமல் இருப்பது மிக முக்கியம். ஆடம்பரச் செலவுகளையும், தவிர்க்கக் கூடிய செலவுகளையும் தவிர்க்க வேண்டும். அது சேமிப்பாக மாறினால் வாழ்வுக்கு பாதுகாப்புக் கிடைக்கும்.
போலிக் கௌரவத்திற்காக செய்யப்படுகிற செலவுகளை நீக்க வேண்டும். அதனால் பெறுகிறமதிப்பைவிடப் பணம் நிறைய சேர்த்து வைத்தால் அதற்குக் கிடைக்கிற மதிப்பே வேறு. ஆடம்பரச் செலவுகள் செய்து கிடைக்கிற அங்கீகாரத்தைவிட அந்தப் பணத்தைச் சேமித்து ஆபத்துக்கு உதவினால் வருகிறசந்தோசம் பெரிது.

KIM WOO - CHOONG : Founder & Chairman, DAEWOO GROUP சொல்கிறார். ‘பணத்தை முதலீடு செய்யுங்கள். வீண் சுகங்களுக்காக அதைப் பயன்படுத்த வேண்டாம். சிறு சிறு செலவு களைப் பற்றியும் கவனமாக இருங்கள். ஏனென்றால் கப்பலில் உண்டாகும் சிறு துளை யானது அக்கப்பலையே மூழ்கடித்து விடும்.
சிலர் திருமணத்திற்காகக் கடன் வாங்கி செலவிடுகிறார்கள். பிறகு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். திருமணங்களில் செய்யப்படுகிற, பல செலவுகளைக் குறைத்து அந்த பணத்தை மணமக்களுக்குக் கொடுத்தால் அவர்களுடைய வாழ்க்கையைச் சந்தோசமாக ஆரம்பிப்பார்கள்.
வள்ளுவர் சொல்கிறார், ‘அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்’.
பொருள் : தன் வருவாய் அளவறிந்து வாழாதவனின் வாழ்க்கை இருப்பது போலத் தோன்றி இல்லாமலே கெடும்.

இப்பொழுது நிறுவனங்களில் Cost control, Cost Production என்று எந்தெந்த வகைகளில் எல்லாம் வீண் செலவுகளைக் குறைத்தால் வருமானத்தை அதிகப்படுத்தலாம் என்ற ஆராய்ச்சிகள் பெருகி வருகின்றன. சரியாகப் பட்ஜெட் போட்டுக் குடும்பத் திலும், தொழிலும் திட்டமிட்டு செலவு செய்தால் வாழ்க்கையை பிரச்சனை இல்லாமல் நடத்தலாம்.
சில தொழில் செய்வோர், தொழிலில் வருகிற இலாபத்தை மிகப்பெரும் வீடுகள் கட்டியும், பல கார்கள் வாங்கியும், விருந்தினர் மாளிகை கட்டியும் செலவிட்டு விடுகின்றனர். எதிர்பாராத விதத்தில் வரவேண்டிய பணம் வராத பொழுது, Working Capital - பொருள் உற்பத்தி செய்ய தேவைப்படுகிறபணம் இல்லாமல் தவித்துக் கடன் வாங்குவர். Market குறைந்து விட்டாலோ, எதிர்பாராத ஏதேனும் சிக்கல் ஏற்பட்டாலோ தொழில் முடக்கம் ஏற்பட்டுவிடும். ஆகவே, தொழிலுக்குத் தேவைப்படுகிற பணத்தை மற்றசெலவுகளுக்கு ஒரு நல்ல நிலைக்கு வரும்வரை மாற்றாமல் இருப்பது நல்லது.

பல தொழிலதிபர்கள் இன்னும் வாடகை வீட்டில்தான் வசித்து வருகின்றனர். மிகப்பெரும் கோடீஸ்வரர் TATA கூட பல ஆண்டுகள் வாடகை வீட்டில்தான் வசித்து வந்தார். தொழிலையும், தொழில் வளர்ச்சியையும் முக்கியமாகக் கருதுபவர்கள் பெரும் செல்வந்த ராக மாறுவார்கள்.
முதலீடு செய்தல் (Investment) இந்தியாவில் பல பொதுமக்கள் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு நிறுவனங்களைப் பற்றி சரியாக ஆராயாமல் அவற்றில் முதலீடு செய்து அவற்றில் கோடிக்கணக்கான பணத்தை இழந்தது எல்லோர்க்கும் தெரியும். இப்பொழுது ஒரு எச்சரிக்கை உணர்வு ஏற்பட்டிருக்கிறது. முதலீட்டு ஆலோசகர்களை (Investment Consultant) கண்டுபிடித்து அணுகி ஆலோசனை கள் கேட்டு முடிவெடுத்து முதலீடு செய்தால் பணத்திற்குப் பாதுகாப்பு கிடைக்கும்.
‘Investigate before investing’ அதாவது, ‘முதலீடு செய்யும் முன்பு தகவல் சேகரித்து அலசி ஆராயுங்கள்’ நீங்கள் பணம் போடும் நிறுவனம் பணத்தை வாங்கி வைத்து எதில் முதலீடு செய்கிறார்கள்? என்கிற விவரங்களைக் கேளுங்கள். அவர்கள் அதை தவறான வழியில் அல்லது வளர்ச்சியடையாத துறைகளில் முதலீடு செய்தால் பணம் திரும்பி வராது. நீங்கள் முதலீடு செய்யும் நிறுவனத்தில் உள்ள நிர்வாகிகள் மற்றும் கம்பெனியின் வரலாறு, அதன் நம்பகத்தன்மை அதன் அரசு அங்கீகாரம் போன்ற பல விபரங்களை தெளிவாக்கி பின் முதலீடு செய்யுங்கள். பொதுவாக எந்த முடிவு எடுப்பதற்கு முன்பும் எல்லாப் பகுதிகளும் வெளிச்சமாய்த் தெரிய வேண்டும். ஏதேனும், இருட்டுப் பகுதி இருந்தால் தோல்விகள் வர வாய்ப்புண்டு. ‘Whenever there is darkness There is a possibility for failure’ சேமிப்பு (Savings) உலக அளவில் பொதுவாகச் சொல்லப் படுகிற ஒரு கருத்து சம்பாதித்த வருமானத்தில் குறைந்தது 10% சேமிக்க வேண்டும்.
சேமிப்பு என்று போட்டுவிட்டால், அதை எந்தச் சிக்கலான நேரத்திலும் செலவழிக்க எண்ணக்கூடாது. சேமிப்பு விதி (The Law of Savings) என்ன சொல்கிறதென்றால், ஒரு மனிதன் பொருளாதார சுதந்திரம் அடைய வேண்டுமென்றால் வாழ்க்கை முழுவதும் தங்களுடைய வருமானத்தில் குறைந்தது 10% சேமிப்பு செய்து கொண்டே இருக்க வேண்டும்.
Parkinson’s Law என்ன சொல்கிற தென்றால், வருமானத்தின் அளவிற்குச் செலவுகள் பெருகிக் கொண்டே இருக்கும்.
சிலர் செய்வது என்னவென்றால் பணச் சிக்கல் என்று வந்துவிட்டாலே முதலில் கை வைப்பது சேமிப்பைத் தான். ஒருவருக்கு வருமானத்தைப் பெருக்கும் சக்தியும், காலமும் இருக்கும்பொழுதே சேமிப்பை எடுக்காமல் வாழ முடியவில்லை என்றால், வருமானம் இல்லாமல் போகும் வயதான காலத்தில் என்ன செய்ய முடியும்?...

Jul 8, 2009

எந்த உணவில் எவ்வளவு சர்க்கரை உள்ளது்?

சாப்பிடும் உணவுப் பொருளுக்கு ஏற்ப ரத்தத்தில் சர்க்கரை அளவு உயரும் என்பதால், அன்றாடம் சாப்பிடும் உணவில் சர்க்கரை நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும்.சர்க்கரை நோயாளிகளுக்கு உதவுவதற்காகவே கிளைசிமிக் இண்டெக்ஸ் (Glycemic Index) என்ற உணவு ஒப்பீட்டு அட்டவணை உள்ளது.




அதாவது ஏற்கெனவே ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவோடு நாம் சாப்பிடும் உணவுப் பொருள்களால் கூடுதலாகும் சர்க்கரை அளவை 100 கிராம் குளுக்கோஸýடன் ஒப்பிடுவதே கிளைசிமிக் இண்டெக்ஸ் ஆகும்.உதாரணமாக ஒருவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு 100 மி.கி. இருப்பதாகக் கொள்வோம். அவர் 100 கிராம் குளுக்கோஸ் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மேலும் 100 மி.கி. கூடுதலாகி மொத்தம் 200 மி.கிராமாக அதிகரிக்கும்.அவர் ஒரு குளோப் ஜாமூன் சாப்பிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம், சர்க்கரையின் அளவு ரத்தத்தில் 300 மி.கிராமாக உயரும். ஆனால் அவரே குளோப் ஜாமூனுக்குப் பதில் 100 கிராம் கொண்டைக் கடலை சுண்டல் சாப்பிட்டால் 40 மி.கி. தான் ரத்தத்தில் சர்க்கரை அளவு உயரும்.சாப்பிடும் உணவுக்கு ஏற்ப ரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரையின் அளவு கீழே தரப்பட்டுள்ளது.

பானங்கள் (200 மி.லி அளவு):
* தண்ணீர் குடித்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவில் எந்த மாற்றமும் இருக்காது.
* நீர்த்த மோர் குடித்தால் 10 மி.கி. அதிகமாகும்.ஏ சர்க்கரை இல்லாத பால் அல்லது காபி சாப்பிட்டால் 40 மி.கி. .ஏ சர்க்கரை போட்ட காபி குடித்தால் 140 மி.கி..
* உப்புப் போட்ட எலுமிச்சை பழச்சாறு அல்லது தக்காளி பழச்சாறு குடித்தால் 30 மி.கி..ஏ இளநீர் குடித்தால் 40 மி.கி..
* கஞ்சி குடித்தால் (சத்துமாவு கஞ்சி) 100 மி.கி.* இனிப்பான குளிர்பானங்கள் குடித்தால் 150 மி.கி
.* பழச்சாறு குடித்தால் 150 மி.கி. உடன் சர்க்கரை சேர்த்தால் 250 மி.கி.
* மில்க் ஷேக் குடித்தால் 300 மி.கி.எனவே 50 மி.கி.-க்கும் குறைவாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் பானங்களைக் குடிக்கலாம்.உணவு வகைகள்உணவு வகைகள் (100 கிராம் சாப்பிட்டால் அதிகரிக்கும் சர்க்கரை அளவு):
* கீரைத் தண்டு, வாழைத் தண்டு சாப்பிட்டால் 10 மி.கி.
* வாழைக்காய் தவிர பிற காய்கறிகள் 20 முதல் 30 மி.கி. அதிகமாகும்.
* பயறு மற்றும் பருப்பு சாப்பிட்டால் 30 முதல் 40 மி.கி.* கேழ்வரகு அல்லது கோதுமை சாப்பிட்டால் 50 முதல் 55 மி.கி.
* அரிசி சாப்பிட்டால் 55 முதல் 60 மி.கி..
* கம்பு சாப்பிட்டால் 60 முதல் 70 மி.கி.
* உருளைக் கிழங்கு, வள்ளிக்கிழங்கு சாப்பிட்டால் 100 முதல் 150 மி.கி.
* இனிப்பு வகைகள் சாப்பிட்டால் 150 முதல் 300 மி.கி.
எனவே ரத்தத்தில் சர்க்கரையின் அளவை 10 முதல் 30 மி.கி. வரை அதிகரிக்கும் உணவுகளை அதிகம் சாப்பிடலாம். 30 முதல் 60 மி.கி. வரை சர்க்கரையை அதிகரிக்கும் உணவு வகைகளைத் திட்டமாகச் சாப்பிடலாம். 60 மி.கி.க்கு மேல் சர்க்கரையை அதிகரிக்கும் உணவுகளை முடிந்த அளவு தவிர்க்கவேண்டும். 150 மி.கி. மேல் அதிகமாக்கும் உணவுகளைக் கண்டிப்பாகச் சாப்பிடக் கூடாது. இவ் வகை உணவுகளைச் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வராது. மேலும் சர்க்கரை நோய் நாளுக்கு நாள் மோசமடையும். எவ்வித சிகிச்சையும் பலன் தராது. இந் நோயின் பின் விளைவுகள் விரைவில் வரும்.

பழங்கள் (100 கிராம்)
* தக்காளி, எலுமிச்சை 20 முதல் 30 மி.கி..
* வெள்ளெரி, கிர்ணி, பப்பாளி - 30 முதல் 40 மி.கி.
* கொய்யா, ஆப்பிள், சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு - 40 முதல் 60 மி.கி..
* மா, பலா, வாழை - 100 முதல் 150 மி.கி.
* பேரீச்சை, திராட்சை, சப்போட்டா - 150 முதல் 250 மி.கி.
* ரத்தத்தில் சர்க்கரை அளவை 60 மி.கி. வரை அதிகரிக்கும் பழங்களை மட்டும் சாப்பிடலாம். மற்றவற்றைச் சாப்பிட்டால் சர்க்கரை நோயைக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது.

Jul 7, 2009

உடல் பருமன்


நவீன வாழ்க்கைச் சூழலில் மிகப்பெரும் சவாலாய், பூதாகரமான பிரச்சனையாய் எழுந்துள்ளது ‘உடல் பருமன்’. இது எந்த வயதிலும் எவருக்கும் வரலாம். பருவமடைந்த பின் ஆண்களை விடப் பெண்களிடம் பரவலாக அதிகளவு உடல் பருமன் ஏற்படுகிறது. குறிப்பாக திருமணத்திற்குப் பின் அல்லது கர்ப்பத்திற்குபின் அல்லது மாத சுழற்சி முற்றுப்பெற்றபின் உடல் பருமன் உண்டாகிறது.

மனிதரைத் தவிர பிற உயிரினங்களில்.... எலி, பூனை, நாய், ஆடு, மாடு, செடி, கொடி, மரம்... அனைத்திலும் அவற்றின் இயற்கையான உடல் அமைப்பு மற்றும் எடையைக் கடந்து மிதமிஞ்சி உடல் கொழுத்து நடக்க இயலாமல், மூச்சுவிட இயலாமல் அவதிப்படுவதைப் பார்க்கமுடியாது. மனிதர்கள் மட்டுமே தம் அளவுக்கு மீறி யானைகள் போல, மாமிசக் குன்றுகள் போல மாறுகின்றனர்.

அதிக எடையும் உடல் பருமனும்

‘அதிக எடை’ என்பதை எல்லா சந்தர்ப்பங்களிலும் ‘அதிக பருமன்’ என்று கூற முடியாது. உடற்பயிற்சியாளர்கள், விளையாட்டு வீஜ்ர்கள் சராசரி எடையைவிடச் சற்று அதிகமாக இருப்பார்கள். ஆனாலும் அவர்களிடம் அதிகக் கொழுப்புச்சத்தி இருப்பதில்லை. அது சதை வளர்ச்சி. கொழுப்பின் அளவும் அதிகரித்து, உடலின் சராசரி எடையும் அதிகமிருந்தால் அது உடல் பருமனின்றி வேறில்லை.

மனித எடையை தோராயமாகக் கணக்கிடும் முறை


ஒருவரின் உயரம் சென்டிமீட்டர் கணக்கில் எவ்வளவோ அதில் 100ஐக் கழிக்க வேண்டும். பின் அதிலிருந்து 90 சதவீத அளவை அறியவேண்டும். ஒருவர் 170 சென்டி மீட்டர் உயரமிருந்தால் 100ஐக் கழிக்கும்போது 70 வருகிறது. அதில் 90 சதவீதம் கணக்கிட்டால் 63 வருகிறது. 170 செ.மீ. உயரமுள்ளவருக்கு 63 கிலோ எடைதான் ஏறத்தாழ சரியான எடையாக இருக்கும். இந்த எடையில் பத்து சதவீதம் அதிகரித்தால் கூட ‘உடல் பருமன்’ என்று கூற முடியாது. மாறாக, அதற்கும் மேல் தொடர்ந்து எடை அதிகரிக்குமானால் உடல் பருமன் ஏற்பட்டே தீரும்.

சராசரி எடையில் 10 முதல் 15 சதம் அதிகரித்தால் அதனைச் சிறிதளவு பருமன் எனக் கருதலாம்.. 15 முதல் 20 சதம் அதிகரித்தால் நடுத்தர பருமன் எனக் கருதலாம். 20 சதவீதத்திற்கும் மேல் எடை அதிகரித்தால் அதிக பருமன் என அறியலாம்.

சிறிதளவு பருமனாக இருப்பவர்களுக்கு குறிப்பிடத்தக்க உடல் தொந்தரவுகள் இல்லாமலிருக்கலாம். இருப்பினும் தோற்றம் பார்ப்பதற்கு அழகாக இல்லை என்ற அழகுக் கோணத்திலிருந்து பார்ப்பவர்கள் உடல் எடையை குறைக்க விரும்புகின்றனர்.

நடுத்தர பருமனாளிகளும் அதிக எடையுள்ள குண்டர்களும் உடல் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்படுவதாலும், எடையைச் சுமக்க முடியாமலும், மூச்சு வாங்குவதாலும், இதர கடும் நோய்களாலும் அவதிக்கு ஆளாகின்றனர்.

உடல் பருமனுக்கு காரணங்கள் என்ன?

உடலில் அன்றாட இயக்கங்களுக்கு வேண்டிய சக்தியளிப்பதற்குத் தேவையான அளவைவிட அதிகளவு உணவு உண்பதால் தேவைக்கு அதிகமான கலோரிகள் கொழுப்பாகச் சேமிக்கப்படுகிறது. தேவையைவிட ஒருவர் தினம் 50 கலோரி அதிகம் எடுத்தால் ஒரே ஆண்டுக்குள் 2 கிலோ எடை அதிகரித்துவிடும்.

கலோரி என்பது ஒன்றரை லிட்டர் நீரை 15 டிகிரி செண்டிகிரேடிலிருந்து 160 டிகிரி வரைச் சூடாக்கத் தேவையான உஷ்ணசக்தி. இக்கலோரியை (எரிசக்தியை) உணவுகள், காய்கறிகள், பழங்கள் மூலம் நாம் பெறுகிறோம். வெவ்வேறு உணவுப் பொருட்களில் வெவ்வேறு அளவு கலோரிகள் கிடைக்கின்றன.

வசதியாக, உட்கார்ந்தே பணிபுரியும் சொகுசுப் பேர்வழிகளுக்கு அவர்களின் உடல் எடைக்கு ஒரு கிலோவிற்கு 20 கலோரிகள் தேவைப்படலாம். ஓரளவு உடலுழைப்பு உள்ளவர்களுக்கு அவர்களின் உடல் எடைக்கு ஒரு கிலோவிற்கு 25 கலோரிகள் தேவைப்படலாம். அதிகம் உடற்பயிற்சி, உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு அவர்களது எடையில் ஒரு கிலோவிற்கு 30 கலோரிகள் தேவைப்படலாம்.

மேலும் உண்ணும் உணவின் அளவைவிட தரத்தையும் கலோரிகளையும் கொள்ளவேண்டும். 100 கிராம் வெள்ளரியில் 16 கலோரி சத்தும் 100 கிராம் வறுத்த நிலக்கடலையில் 600 கலோரி சத்தும், 1 கிராம் புரதத்தில் 4 கலோரி சத்தும், 1 கிராம் கார்போஹைட்ரேட்டில் 4 கலோரி சத்தும், 1 கிராம் கொழுப்பில் 9 கலோரி சத்தும், 1 சப்பாத்தியில் 100 கலோரிகளும், 1 பிஸ்கட்டில் 40 கலோரிகளும், 75 கிராம் சாதத்தில் 100 கலோரிகளும், 1 அவுன்ஸ் ஆட்டுக்கறியில் 500 கலோரிகளும், 1 அவுன்ஸ் மீனில் 360 கலோரிகளும் கிடைக்கின்றன. வயது வந்த ஒரு நபருக்கு ஒரு நாளுக்கு 1400 முதல் 1900 வரை கலோரிகள் தேவைப்படக்கூடும். இதில் குறைவு ஏற்பட்டாலும், அதிகம் ஏற்பட்டாலும் உடலின் அமைப்பு, செயல்பாடுகள் பாதிக்கப்படும்.

ஒழுங்கற்ற உணவுப் பழக்கமும், அதிகக் கொழுப்பு உணவுகள் உண்பதும் குறிப்பாக எண்ணெய் பண்டங்கள், பால் பொருட்கள், அசைவ உணவுகள், சாக்லேட் இனிப்புகள், ஐஸ்கிரீம், மது, நெய், வெண்ணெய், முட்டை மஞ்சள் கரு போன்றவைகளால் உடல் எடை அதிகரிக்கிறது. வாயுப் பண்டங்களாலும் (பருப்பு, உருளைகிழங்கு) எடை கூடுகிறது. இருவேளை உணவுகளுக்கு இடையில் நொறுக்குத்தீனிகள் மெல்லும் பழக்கமும், டிவி பார்த்தபடி அல்லது வேறு வேலையின்போது நொறுக்குத்தீனிகள் தின்னும் பழக்கமும் உடல்எடையை அதிகரிக்கச் செய்கின்றன.

உடற்பயிற்சியோ, உடல் உழைப்போ இல்லாததால், பகலில் அதிகளவு சாப்பிட்டுவிட்டு அதிகம் நேரம் தூங்குவதால், பொதுவாக அதிக ஓய்வும் உறக்கமும் கொள்வதால் உடல்பருமன் ஏற்படுகிறது. சில குடும்பங்களில் பாரம்பரிய தன்மை காரணமாக பருமனான பெற்றோருக்கு பருமனான குழந்தைகள் பிறக்கின்றனர்.


ஹார்மோன் இயக்கக் கோளாறுகளாலும், அடிக்கடி பிரசவங்கள், கருச்சிதைவுகள், அறுவைச் சிகிச்சைகளைத் தொடர்ந்தும், NSAID போன்ற சில ஆங்கில மருந்துகள், உடலில் நீர் திரவத் தேக்கங்கள் உண்டாக்கும் ஸ்டீராய்டுகள், கருத்தடை மாத்திரைகள் போன்ற காரணங்களாலும் உடல் பருமன் ஏற்படுகின்றது. மேலும், இவை உடல் பருமனை உண்டாக்குவதில் முக்கியக் குற்றவாளிகளாகவும் உள்ளன.

உடல் பருமனால் பல பிரச்சனைகள் :

உடல் பருமனால் ஒரு மனிதனுக்கு உடல்ரீதியாக மட்டுமின்றி உளவியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஏற்படும் பிரச்சனைகள் ஏராளம். அதிக பருமனால் உயிராபத்தை விளைவிக்கக் கூடிய பல நோய்கள் தாக்குகின்றன. மாரடைப்பு, உயர்ரத்த அழுத்தம், நீரிழிவு, ஆஸ்துமா, ஆண்மைக் குறைவு, மலட்டுத்தன்மை, இடுப்பு எலும்புகள், முதுகுத்தண்டு, முழங்கால் மூட்டுகள் தேய்மானம், குடலிறக்கம், அசுத்த ரத்த நாளப் புடைப்பு... போன்ற பல மோசமான நோய்கள் முற்றுகையிடுகின்றன.

மந்த இயக்கம், சோர்வு, பலவீனம் காரணமாக அடிக்கடி கீழே விழ நேரிடலாம் அல்லது விபத்து நேரிடலாம். வீட்டில், வயலில், தொழிற்சாலையில், இதரபணியிடங்களில் நிற்பது, நடப்பது, பணியாற்றுவதும், உடல் சுகாதாரம் பேணுவதும் மிகச்சிரமம். உடல் பருமன் ஒருவித நரம்பியல் நோயை ஏற்படுத்துகிறது. உளவியல் ரீதியாக மனச்சோர்வு, தன்னம்பிக்கை குறைவு, பயம், தாழ்வு மனப்பான்மை போன்ற பிரச்சனைகள் பாதிக்கின்றன. தனது பருமன் தனக்கு மட்டுமின்றி குடும்பத் திற்கும், உலகத்திற்கும் சுமை எனும் உணர்வு ஏற்பட்டு விரக்தியும் மன அழுத்தமும் மேலோங்கும்.

என்ன செய்யவேண்டும்?

ஓரளவு மட்டுமே எடை அதிகமிருப்பவர்கள் அதிக மாவுப் பொருள், கொழுப்பு பொருள் உண்பதைக் குறைக்கவேண்டும். ஓரளவு உடற் பயிற்சி அல்லது யோகா மேற்கொள்ளவேண்டும்.

அதிக எடை எனில், உணவில் அதிகக் கட்டுப்பாடுகள் தேவை. உபவாசம், பழவகைள், வாரம் 1 நாள் திரவ உணவுகள் மட்டும் அருந்துதல் எனப் பழக்கப்படுத்தினால் பசியின் அளவு குறையும். குறைந்தது மாதம் 1 கிலோ எடையேனும் குறையும். கொழுப்பு மற்றும் மாவு உணவுகளுக்குப் பதிலாக கணிசமான அளவு பழங்கள் உண்ண வேண்டும். திறந்த வெளிக் காற்றில் அன்றாடம் உடற்பயிற்சி, யோகா, சுறுசுறுப்பான நடை போன்றவற்றை அவரவர் எடை, வயது, உடற்தகுதிக்கேற்ப எதுவாகவும் மேற்கொள்ளலாம்.

நிலையில் எடை குறையலாம். அடுத்தடுத்து பயன்படுத்தும்போது அவை பயனற்றவை என்று உறுதியாகும். அடிப்படையாக வாழ்க்கை முறையை, உணவு முறையை மாற்ற வேண்டும். உடல் பருமனைக் கட்டுப்படுத்த விரும்பு வோர் மும்முனைப் போருக்குத் தயாராக வேண்டும். 1. உணவுப் பழக்கங்களை ஒழுங்குப் படுத்தவேண்டும் 2. வாழ்க்கை நடைமுறைகளை ஒழுங்குப்படுத்த வேண்டும் 3. பக்கவிளைவு இல்லாத உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.