Jul 12, 2009

வயர்லெஸ் தொழில் நுட்பம்

இன்று மனித வாழ்க்கையில் வயர்லெஸ் தொழில் நுட்பம் இல்லாத இடமே இல்லை எனலாம். நாம் அனைவரும் பயன்படுத்தும் மொபைல் போன், ரேடியோ, ரிமோட் என எத்தனையோ சாதனங்களைப் பட்டியலிடலாம்.

முதலில் வயர்லெஸ் தொழில் நுட்பம் என்றால் அது எதனைக் குறிக்கிறது? சாதாரண மனிதனின் நோக்கில் இதனைக் கூற வேண்டும் என்றால் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட தொலைவின் இடையே தகவல்களை எந்தவித வயர் இணைப்பு மின்றி கடத்துவதே ஆகும்.

வயர்லெஸ் தொழில் நுட்பத்தின் இன்றைய நிலை அதன் 125 ஆண்டுகால வளர்ச்சியின் முதிர்ச்சி ஆகும். இன்னும் தொடர்ந்து பல முனைகளில் வளர்ந்து கொண்டிருக்கும் இதன் வளர்ச்சியை அதன் தொடக்கம் முதல் காணலாம்.

1887: முதன் முதலில் வயர்லெஸ் தொழில் நுட்பம் என்றால் என்ன என்பது குறித்து ஜெர்மானிய நாட்டு விஞ்ஞானி ஹெர்ஸ் என்பவர் எடுத்துரைத்தார். அவர் எவ்வாறு மின் காந்த அலைகளை வயர் எதுவுமின்றி ஒரு வெளியில் அனுப்பலாம் என்று காட்டினார். இது மைக்கேல் பாரடே அறிவித்த ஒளி குறித்த கோட்பாட்டின் விரிவாக்கம் ஆக இருந்தது. ஆனால் ஹெர்ட்ஸ் அதற்கு மேல் எதுவும் செய்திடவில்லை.

1893: நிக்கோலா டெல்ஸா என்பவர் ரேடியோ அலைகளை அனுப்பிக் காட்டினார்.

1897: மார்கோனி ரேடியோ அலைகளை அனுப்ப முடியும் என்று வரையறை செய்து அதற்கான கண்டுபிடிப்பு உரிமையினைப் பெற்றார்.

1898: டெல்ஸா ஒரு ரிமோட் கண்ட்ரோல் மூலம் படகு ஒன்றை இயக்க முடியும் என்பதைக் காட்டினார். இந்த சோதனை ஓட்டத்தைப் பார்த்தவர்கள் டெல்ஸா தன் மனதின் சக்தியால் தான் படகை இயக்குவதாக எண்ணினார்கள்.

1906: இன்று ஏ.எம். ரேடியோ என்று (Amplitude Modulation) அழைக்கப்படும் அலைவரிசை ஒலி பரப்பினை ரெஜினால்ட் என்பவர் காட்டினார்.

1915: வெர்ஜினியாவிலிருந்து பாரிஸ் நகரத்திற்கு ஏ.டி. அண்ட் டி நிறுவனம் ரேடியோ அலைகளை அனுப்பிக் காட்டியது.

1919: ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் ரேடியோ கார்ப்பரேஷன் ஆப் அமெரிக்காவினை நிறுவியது.

1921: Shortwave (SW) radio இயக்கிக் காட்டப்பட்டது.

1931: மிகத் தெளிவாக ரேடியோ அலைகளை அனுப்ப எப்.எம். (Frequency Modulation)தொழில் நுட்பம் உருவாக்கப்பட்டது.

1982: செல்லுலார் சிஸ்டத்திற்கான டிஜிட்டல் சிஸ்டத்தை அமைக்க GSM (Groupe Special Mobile) உருவாக்கப்பட்டது.

1987: ஜி.எஸ்.எம். தொழில் நுட்ப விபரங்கள் வரையறை செய்யப்பட்டன.

1990: டிஜிட்டல் ரேடியோ (எல் பேண்ட் ரேடியோ) முதன் முதலாக இயக்கிக் காட்டப்பட்டது.

1991: பின்லாந்தில் முதன் முதலாக ஜி.எஸ்.எம். வகை தொழில் நுட்பத்தில் முதல் போன் அழைப்பு ஏற்படுத்தப்பட்டது.

1992: ஐரோப்பாவிற்கு வெளியே முதல் முதலாக ஆஸ்திரேலியாவில் ஜி.எஸ்.எம். நெட்வொர்க் அமைக்கப்பட்டது. தொடர்ந்து 53% ஆஸ்திரேலியர்கள் ஜி.எஸ்.எம். தொலை தொடர்பு சேவையினைப் பெற்றார்கள்.

1997: வை–பி (WiFi) தொலை நுட்பம் உருவாக்கப்பட்டது.

1998: புளுடூத் தொழில் நுட்ப குழு உருவாக்கப்பட்டது.

1999: புளுடூத் 1.0 தொழில் நுட்பம் வெளியிடப்பட்டது.

2000: வர்த்தக ரீதியாக முதல் புளுடூத் சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டது.

2002: யு.எம்.டி.எஸ். (UMTS) அமைக்கப்பட்டு மொபைல் டிவி மற்றும் வீடியோ காலிங் போன்ற வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

2003: EDGE தொழில் நுட்பம் உருவாக்கப்பட்டது.

2004: வைமாக்ஸ் தரம் உயர்த்தப்பட்டது. புளுடூத் பதிப்பு 2.0 வெளியிடப்பட்டது.

2009: வை–பி தொழில் நுட்பத்தில் புதிய தரக்கட்டுப்பாடுகள் வெளியிடப்பட்டன.