90/ 10 – இது நம் வாழ்க்கையை மாற்றப் போகும் தாரக மந்திரம். எப்படி என்று கேட்கிறீர்களா? அதாவது நமது வாழ்க்கையின் 10% நடவடிக்கைகள் மட்டுமே நமது கட்டுப்பாட்டில் இல்லை. மீஹதமுள்ள 90% நடவடிக்கைகள் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதில் தான் இருக்கிறது.
இதற்கு ஒரு உதாரணம் எடுத்துக் கொள்வோம்.
சுரேஷ் தனது குடும்பத்துடன் காலைச் சிற்றுண்டி அருந்திக் கொண்டிருக்கிறார். அவருடைய பத்து வயது மகள், காபி கோப்பையைத் தட்டி விட்டுவிடுகிறாள். காபி, சுரேஷ் அணிந்திருக்கும் வெள்ளைச் சட்டையில் விழுந்து விடுகிறது.
காபி, சட்டையில் விழுந்த சம்பவம், சுரேஷின் கட்டுப்பாட்டில் அடங்காதது. இது நம்முடைய கட்டுப்பாட்டில் அடங்காத 10% நடவடிக்கைகளில் ஒன்றாக அமைகிறது. இதற்கு அடுத்து ஏற்படும் நிகழ்வுகள், சுரேஷ் எப்படி நடந்து கொள்கிறார் என்பதில் இருக்கிறது. இது நம்முடைய 90% நடவடிக்கைகளில் ஒன்றாக அமைகிறது.
சுரேஷ் மகளைத் திட்டுகிறார். அவளைக் கோபத்தில் சபிக்கிறார். அவருடைய மகள் அழத் தொடங்குகிறாள். பிறகு, காபி டம்ளரை மேஜை யின் விளிம்பில் வைத்ததற்காக சுரேஷ் தனது மனைவியைத் திட்டுகிறார். மனைவி திருப்பி இவரை ஏதோ கூறுகிறார். வாக்குவாதம் தொடருகிறது. சிறிது நேரத்திற்குப் பிறகு, சுரேஷ் தனது அறைக்கு அவசரமாகச் செல்கிறார். தனது உடைகளை மாற்றிவிட்டு திரும்புகிறார். அவருடைய மகள் அழுதுகொண்டே சிற்றுண்டியை முடித்துக்கொண்டு பள்ளிக்கு கிளம்புகிறாள். இந்தச் சண்டையின் காரணமாக தாமதமாக கிளம்பி சுரேஷின் மகள் அவளுடைய பள்ளிப் பேருந்தை விட்டு விடுகிறாள். சுரேஷின் மனைவி அவசரமாக அலுவலகம் செல்ல வேண்டி இருந்ததால் சுரேஷ் மகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்கிறார்.
போகும் வழியில் வேகமாக சென்றதற்காக 200 ரூபாய் அபதாரம் கட்டுகிறார். 15 நிமிடங்கள் தாமதமாக மகளை பள்ளியில் விடுகிறார். சுரேஷைத் திரும்பிக்கூட பார்க்காமல் பள்ளி வளாகத்திற்குள் ஓடி விடுகிறாள் அவருடைய மகள். சுரேஷ் 20 நிமிடங்கள் தாமதமாக அலு வலகம் செல்கிறார். அங்கு சென்ற பின்னர்தான் அவருக்கு ஞாபகம் வருகிறது அலுவலகக் கோப்பை மறந்து வந்து விட்டோம் என்று. அன்றைய தினம் அவருக்கு ஒரு வேதனைக்குரிய தினமாக ஆகிவிடுகிறது. எப்போழுது வீட்டிற்குச் செல்வோம் என்று நினைக்கிறார்.
வீட்டிற்கு வந்தால், காலையில் நடந்த நிகழ்ச்சி காரணமாக சுரேஷின் மனைவியும் மகளும் சரியாகப் பேசாமல் இருக்கிறார்கள்.
இவை அனைத்தும் எதனால் நடந்தது? சுரேஷ் நடந்து கொண்ட விதத்தால் நடந்தது.
அந்த நாள் ஏன் சுரேஷிற்கு ஒரு மோசமான நாளாக அமைந்தது?
1. காபியினாலா?
2. சுரேஷின் மகளாலா?
3. சுரேஷிற்கு அபராதம் விதித்த காவல் துறையினராலா?
4. சுரேஷினாலா?
முற்றிலும் இவை அனைத்தும் சுரேஷின் நடவடிக்கையால் நடந்தவை. சுரேஷிற்கு எப்படி நடந்து கொள்வது என்று தெரியாததால் இவை அனைத்தும் 5 நிமிடங்கள் அவர் நடந்து கொண்ட விதத்தால் ஏற்பட்டது.
இதற்கு மாற்று என்ன என்று பார்ப்போம்.
காபி கொட்டுகிறது. சுரேஷின் மகள் அழத் தொடங்குகிறாள். சுரேஷ் சிரித்துக் கொண்டே கூறுகிறார் “பரவாயில்லை, ஆனால் அடுத்தமுறை இது நடக்காமல் பார்த்துக்கொள்” என்கிறார். உடனே தனது அறைக்குச் சென்று உடை மாற்றித்திரும்புகிறார். மகள் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு பள்ளிக்குப் புறப்பட்டு, பள்ளிப்பேருந்தில் ஏறிச் செல்கிறார். சுரேஷ் மனைவியிடம் அன்பாக விடைபெற்றுக் கொண்டு 5 நிமிடங்கள் முன்னதாக அலுவலகம் செல்கிறார். உற்சாகமாக அன்றைய தினத்தைத் தொடங்குகிறார். அலுவலக நண்பர்கள் அனை வரும் அவருடைய உற்சாகத்தைப் பாராட்டு கிறார்கள்.
வித்தியாசத்தை கவனித்தீர்களா? இரண்டு சம்பவங்கள் ஆரம்பித்த விதம் ஒன்றுதான். ஆனால் முடிந்த விதம்?
நாம் எப்படி நடந்து கொள்கிறோம். என்பதில் இருக்கிறது. நமது வாழ்க்கையில் நடக்கும் 90% நடவடிக்கைகள்.
90/10 விதிமுறையை எப்படி கடை பிடிப்பது என்பதைப் பார்ப்போம்.
உங்களை யாராவது தவறாகப் பேசி விட்டால் உங்களைத் துணியாக பாவிக்காமல் கண்ணாடியாக பாவிக்கவும். தவறாகப் பேசியதை, கண்ணாடியில் வழிந்தோடும் தண்ணீர் போல கடந்து செல்ல விட்டு விடுங்கள். துணி போல அதனை உங்களுக்குள்ளே உறிஞ்சிக்கொண்டு வேதனைப்படாதீர்கள்.
எந்த நேரத்திலும் நாம் நம் நடத்தையில் பொறுமை காட்டினால் வாழ்க்கையில் பல சங்கடங்களைத் தவிர்க்கலாம். நம்முடைய தவறான நடவடிக்கையால், நண்பர்களை இழக்க நேரிடலாம். வேலையை இழக்க நேரிடலாம். மன அழுத்தம் ஏற்படலாம். இப்படிப் பல துன்பங்களை எதிர்கொள்ள வேண்டி வரும்.
இப்பொழுது புரிகிறதா நண்பர்களே? 90 / 10 விதிமுறை என்றால் என்ன என்று புரிந்து கொண்டீர்களா? இதனைப்பயன்படுத்தி நாம் நமது வாழ்க்கையை மாற்றலாம் வாருங்கள்!
நன்றி :- கே. ரஜினிகாந்த்
No comments:
Post a Comment