மகன் தனியாக மாட்டினால் போதும், அவன் மாட்டாவிட்டாலும் ஃபோன் செய்தாவது புலம்பித்தள்ளூவாள், “அம்மா உனக்காக எவ்வளவோ கஷ்டபட்டிருக்கேன், என்ன இருந்தாலும் அவ நேத்து வந்தவ…..” பொருத்து பொருத்து பார்த்த மருமகளுக்கு போக போக சகிப்புத்தன்மை தேய்ந்துக்கொண்டே போக, தன் கணவனிடம் தனக்குண்டான உரிமையை பெற அவள் முயற்சிக்க ஆரம்பிக்க, வழக்கம் போல குடும்பத்தில் பெரிய குருக்ஷேத்திரமே வெடித்தது…..
இதில் பெரிய கேள்வியே, “இந்த மாமியாரும் ஒரு பெண் தானே, அவளும் கல்யாணம், கணவன், குழந்தைகள் என்று வாழ்ந்தவள் தானே, ஒரு பெண்ணின் மனதை அவளும் புரிந்துக்கொண்டு நடப்பது தானே இயல்பு. அப்புறம் ஏன் இப்படி எல்லாம் அற்பமாக நடந்து வாழ வந்தவளின் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொள்கிறாள் இந்த அம்மாள்? ” என்பது தானே. இங்கே தான் மாமனாரின் கேரெக்டர் முக்கியமாகிறது.அந்த ஆசாமி தன் மனைவியை மகிழ்ச்சியாக வைத்திருந்தால் இந்த வம்பே வந்திருக்காது.
ஆனால் அவர் அந்த காலத்து ரோமியோ, மனைவியை தவிற மற்ற பெண்களிடமெல்லாம் தித்திப்பாய் பேசியே தன் வாழ்வின் பெரும் பொழுதை கழித்திருந்தார். ரிடையர் ஆகும் வரை பெரிதாய் எதையும் சம்பாதித்திருக்கவும் இல்லை. வாய் கிழிய வீண் ஜம்பப்பேச்சு, சதா சுய பிரதாபம், என்று எப்போதுமே அரைக்குடமாய் இருந்த அவர், அறம், பொருள், இன்பம், வீடு என்று எல்லா விஷயத்திலும், மனைவிக்கு குறையை மட்டுமே வைத்து விட, அவர் மனைவி தான் பாவம் என்ன செய்வாள்?
வெளிநாட்டு பெண் என்றால், கணவன் சரியில்லை என்று கண்டு பிடித்த உடனே அவனை விவாகரத்து செய்துவிட்டு, மறுமணம் செய்திருப்பாள், ஆனால் இவள் இந்திய பெண்ணாயிற்றே, அதுவும் அந்த காலத்து பெண். கல்லானாலும் அதே கணவனை கட்டிக்கொண்டு அழுவதை தவிற அவளுக்கு வேறு வழி இல்லை. ஆனாலும் அவளும் பெண் தானே. அவளுக்கும், பாசம், பற்று, அன்பு, அரவணைப்பு, எல்லாம் தேவைபடுமே. அவளை பாராட்டி, ஊக்குவித்து, ”உனக்கு நான் இருக்கிறேன், கவலை படாதே,” என்று ஆறுதல் சொல்ல ஒரு ஆண் மகன் கிடைக்க மாட்டானா என்று அந்த தாயும் ஏங்கத்தானே செய்வாள்? இந்த இமோஷனல் தேவையை எப்படி தீர்த்துக்கொள்வாள்? சந்தர்ப்பம் அமைந்து, அதற்குண்டான துணிச்சலும் இருக்கும் பெண்கள், யாராவது ஒரு கள்ளக்காதலனையாவது கொண்டு இந்த இமோஷனல் தேவையை தீர்த்துக்கொள்கிறார்கள். அந்த அளவு துணிவில்லாத தாய் என்ன செய்வாள்? தனக்கு பிறந்த மகனையே தன் இமோஷனல் தேவைக்காக பயன்படுத்திக்கொள்வாள்…..
“உன் அப்பா சரியில்லை, பார் அம்மா இவ்வளவு கஷ்டப்படுகிறேன். எனக்குன்னு யார் இருக்கா? நீயாவது வளர்ந்து ஆளாகி, அம்மாவை பார்த்துகிட்டா சரி…” பையனிடம் புளம்பி தள்ளி அம்மா செண்டிமெண்ட்டை அதிக பட்சமாய் இவள் பிரயோகிக்க, பையனும், “பாவம் அம்மா, அப்பா தான் அவளிடம் அன்பாகவே இல்லையே, அம்மாவை நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று சின்ன வயதில் இருந்தே அம்மாவுக்காக தன் உடல், பொருள், ஆவி என்று சகலத்தையும் செலவழிக்க தயாரானான். சம்பாதிக்க ஆரம்பித்த உடனே, அம்மாவுக்கு புடவை, நகை, வீடு, வசதி, என்று மகன் தாராளமாய் செலவழிக்க, அம்மாவும் ”என் புருஷனால தான் நான் சுகப்படலை, என் மகனாவது என்னை நல்லா பார்த்துக்குறானே” என்று உச்சி குளிர்ந்து போனாள்…..அம்மா இவ்வளவு குஷியாவதை பார்த்து, மகனும் அவளை மேலும் மேலும் கவனித்துக்கொண்டே போக, கடைசி வரைக்கும் அந்த பையனுக்கு தெரியவே தெரியாது, அவன் தன் தாய்க்கு செய்வதெல்லாம், ஒரு கணவன் செய்ய வேண்டிய கடமைகளை என்று.
மகன் போய் கணவனின் கடமைகளை செய்வதா, அதுவும் இந்த புண்ணிய மண்ணிலா, இதென்ன அபாண்டம் என்று உடனே ஓவர் ரியாக்ட் செய்துவிடாதீர்கள். கணவனின் கடமை என்றால் உடனே கலவியல் கடமைகளை மட்டும் நினைத்துக்கொண்டால் எப்படி? பேச்சுத்துணை, பாராட்டு, அவசரத்தில் உதவி, போக்குவரத்து துணை, உடை, நகை, வீடு, வசதி, கேளிக்கை, கௌரவம், இதை எல்லாம் விட பெண்களின் மிக முக்கிய தேவையான பவர்! இப்படி எத்தனையோ விஷயங்களுக்காக பல பெண்கள் இன்னமும் ஆணையே நம்பி இருக்க, அவளுக்கு வாய்த்த கணவன் இதை எல்லாம் கொடுத்தருளவில்லை என்றால், உடனே அம்மாக்காள் இவற்றை எல்லாம் தன் மகனிடம் இருந்து தான் பெற முயல்கிறார்கள்.
இதை எல்லாம் மகன் செய்யும் போது, அவன் தன்னை அறியாமல் தன் தாயுக்கே, கணவன் ஸ்தானம் வகித்து விடுகிறான். அவளுக்கே அவளுக்கு என்று அந்த தாய்க்கு ஒரு நல்ல கண்வன் வாய்த்திருந்தால், “எனக்கு இதை எல்லாம் செய்ய உன் அப்பா இருக்கிறார், நீ உன் குடும்பத்தை பார்” என்று சொல்வாள். ஆனால் கணவன் சரியாக வாய்க்காத பெண்களால் இப்படி சொல்ல முடியாதே, “பொண்டாட்டி வந்துட்டானு அம்மாவை மறந்துடாதேடா” என்று தானே கெஞ்சுவாள்? மருமகளையும் ஏதோ, தன் மகனை தன்னிடம் இருந்து பிரித்து கொண்டுபோக வந்த பூச்சாண்டி மாதிரித்தானே நடத்துவாள்?
இதனாலேயே, இது வரை தான் அனுபவித்த சொகுசான வாழ்க்கையையும், செக்யூரிட்டியையும் கெடுக்கவே வந்த எதிரி என்கிற மாதிரியே, பல மாமியார்கள் மருமகள்களை பாவிக்கிறார்கள். மருமகளை இப்படி எதிரியாக நினைப்பதினால் தான், ”அவ சரியில்லைடா, அம்மாவை மன்னிச்சிடு, நான் தெரியாம உன்னை இப்படி ஒரு பாழும் கிணத்துல பிடிச்சு தள்ளீட்டேன்” என்று மருமகளை மட்டம் தட்டி, “உனக்கு நான் முக்கியமா, அவ முக்கியமா?” என்று மகனிடம் சண்டைகள் போட்டு, ”தாயா தாரமா” என்று தேர்ந்தெடுக்கும் தர்ம சங்கடத்திற்கு அவனை தள்ளி, சின்னத்தனமாக நடந்துக்கொள்கிறார்கள். தன் மகனின் விஸ்வாசத்தை தன் பக்கமே நிலைநிறுத்திக்கொள்ள முயல்கிறார்கள். எல்லாம் எதனால்? அவளுக்கென்று ஒரு நல்ல கணவன் வாய்க்காத இன்செக்யூரிட்டியை சரிகட்டிக்கொள்ள…..
இதற்கு நேர் எதிராய், தனக்கென்று ஒரு நல்ல கணவன் வாய்த்த மாமியார்கள் எல்லாம் சொல்லி வைத்தார்மாதிரி, மருமகளிடம் மிகவும் ஆசையாக பழகுகிறார்கள். யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று பெருந்தன்மையாக நடந்துக்கொள்கிறார்கள். ஆனால் கணவன் சரியில்லை, மகனை நம்பி தான் வாழ்க்கையே என்றிருக்கும் மாமியார்களோ, ராட்ஷசிகள் மாதிரி போராடி, மகனின் குடும்ப வாழ்க்கையே நாசமாக்கி விடுகிறார்கள்.
ஆக, பையனை ஓகே சொல்வதற்கு முன்பு, அவன் அப்பாவை தரபரிசோதனை செய்துபாருங்கள். அவர் நல்ல கணவனாக இருந்தால், உங்கள் கணவன் உங்களுக்கே தான். அவர் சுத்த வேஸ்டாக இருந்தால், போச்சு, உங்கள் கணவர் உங்கள் மாமியாருக்கு தான்!
குமுதம் ஸ்நேகிதி-இல் இருந்து
No comments:
Post a Comment