Aug 7, 2010

பாசமும் நட்பும் - நிதர்சனமான உண்மை.

        நம்முடைய கல்வித் திட்டங்கள் குழந்தைகளுக்குக் கல்வியைப் புகட்டும் (புகட்டுவது என்பதன் நேரடியான பொருள் உங்களுக்குத் தெரியும்) வேலை ஒன்றை மட்டுமே செய்து வருகின்றன.  அக்குழந்தைகளின் நுண்மாண் நுழைபுலத்தை வலுப்படுத்தும் எந்தக் காரியத்தையும் மறந்து கூடச் செய்வதற்கு இப்பள்ளிகளும் நம் கல்வித் திட்டமும் வழிவகுக்கவில்லை. 


 பள்ளிகளின் கடமைகள் ஒருபுறம் இருக்க பெற்றோரின் கடமையும் இங்கே இருக்கிறது.  தங்கள் குழந்தைகளின் ஆர்வத்தையும் தனிப்பட்ட திறமைகளையும் கண்டெடுத்து அவர்களை அந்தத் திசையில் வெற்றிகரமாகப் பயணிக்கச் செய்வது பெற்றோர்களின் தலையாய கடமையாகிறது.  பள்ளிகள் பாடங்களைப் "புகட்டினால்'' வீட்டில் பெற்றேர்கள் அந்தப் பிள்ளைகளை வெறும் மதிப்பெண்களைப் பெறும் இயந்திரமாக மாற்றத்தான் அதிகமாக முயற்சிக்கிறார்கள்.  அதற்கு சாதகமான பள்ளிகளில் தேடித்தேடித் தங்கள் பிள்ளைகளை சேர்க்க அலைகிறார்கள்.
குழந்தைகளின் பன்முகத் திறன்களை ஊக்குவிக்கும் வகையில் பள்ளிகள் செயல்படத் துவங்கினால் சில நேரங்களில் பெற்றோர்களே ஒன்று திரண்டு, காரியத்துக்கு ஆகாத இந்தக் காரியத்தை விட்டுவிட்டு எங்கள் குழந்தைகள் நல்ல மதிப்பெண்கள் எடுக்கும் வகையில் ஏதாவது செய்யுங்கள் என்று அந்தப் பள்ளிகளுக்கு நெருக்கடி தருவதையும் நாம் காண முடிகிறது.

பெரியவர்களுக்கும் சரி. குழந்தைகளுக்கும் சரி.  புத்திமதி சொல்வது என்பது யாருக்குமே பிடிக்காத ஒன்று.  புத்திமதி என்பது அதனைத் தருபவர்களுக்கு ஏதாவது ஒருவகையில் பிடித்து இருந்தாலும் பெறுபவர்களுக்குப் பல நேரங்களில் அது தங்களை ஏதோ தண்டனைக்கு உட்படுத்தி விட்டது போலத்தான் தோன்றும்.  

குறிப்பாக குழந்தைகளுக்கு புத்திமதி என்கிற விஷயம் அறவே பிடிக்கின்ற விஷயமாக எப்போதும் இருப்பதில்லை.  மனத்தளவில் அயர்ச்சி தரும் பாடத்திட்டங்கள் ஒருபுறம், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் தொடர்ச்சியான புத்திமதிகள் ஒருபுறம் எனக் குழந்தைகள்  ஏறத்தாழ ஒரு இயந்திரத் தன்மையான ஒரு சூழலில்தான் உழல வேண்டி இருக்கின்றது.  

குழந்தைகளின் தேடல்கள் கேள்விகள் வழியாகத் துவங்குகின்றன. அந்தக் கேள்விகளே அவர்களுடைய மதி நுட்பத்தைக் கூர்மைப் படுத்தும் ஆயுதம்.    

குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.   எல்லாவற்றையும் பெற்றோர்களே சொல்லிக் கொடுக்க முடியாது.  அதற்காகத் தான் குறிப்பிட்ட வயதில் குழந்தைகளை பள்ளி என்ற ஒரு அமைப்பிற்கு அனுப்பி பலவனற்றையும் கற்றுக் கொடுக்க நாம் முயற்சிக்கிறோம்.  ஆனால் நம்மில் பெரும்பாலோனோர், சகல வசதிகளும் நிறைந்த ஒரு பள்ளிக்கு குழந்தையை அனுப்பி விட்டாலே தங்களுடைய வேலை முடிந்தது என நினைப்பது மிகவும் தவறு.  பள்ளிப்படிப்பு மட்டுமே அல்லாது குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டியவை மிகப் பரந்த அளவில் உள்ளன.
சொல்லப் போனால் பள்ளியில் நம் குழந்தைகள் படிக்கும் படிப்பு அவர்களுக்கு பெரும்பாலான அளவில் இன்று நேரடி வாழ்க்கைக்குத் தொடர்பு இல்லாததாக இருக்கிறது.    எந்த வகையிலும் அது பயனை நோக்கியதாக இல்லை. 

எனவே பள்ளி தரும் கல்வியைத் தாண்டிய ஒரு சமுதாயக் கண்ணோட்டத்துடன் குழந்தைகளின் அறிவுத் திறனை கூர்மைப்படுத்துவதில் பெற்றோர்களும் பங்கு வகிக்க வேண்டும்.  இந்தக் கண்ணோட்டத்தில் பெற்றோர்களும் பள்ளிகளும் தங்களுடைய கடமையை உணர்ந்து செயல்படவேண்டும். 

இன்றைய கல்வி வெறும் மதிப்பெண்களை மட்டுமே பெற்றுத்தரும் ஒரு கருவியாக இருக்கிறபடியால், பள்ளிகள் புத்தகங்களை மட்டுமே வைத்துக் கொண்டு காலத்தை தள்ளிக் கொண்டிருக்கின்றன. 

ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்.  

சென்னையிலுள்ள ஒரு புகழ் பெற்ற கல்லூரியில் ஒரு பன்னாட்டு நிறுவனம் இரு மாதங்களுக்கு முன்பு Campus Interview ஒன்றை நடத்தியது.   அந்தத் தேர்வினை ஆங்கிலத்தில் நடத்தியது அந்த நிறுவனம்.  தங்களுக்கான ஒரு சாதுரியமான பணியாளரைத் தேர்ந்தெடுக்கும் நோக்கில் அந்தத் தேர்வை வடிவமைத்து இருந்தார்கள். சரியான வகையில் பிரச்னைகளை சமாளித்தல், மற்றவர்களுடன்   அழகாக உரையாடுதல், துரிதமாக முடிவுகளை எடுத்தல் போன்றவற்றில் மாணவர்கள் எப்படி சிறந்து விளங்குகிறார்கள் என்பதைக் கண்டறியும் வகையில் ஒரு தேர்வு. 

அந்தத் தேர்வில் மிகவும் சிறப்பான முறையில் தேர்ச்சி பெற்ற ஒரு மாணவர் தன்னுடைய கல்லூரிப் படிப்பில் தொடர்ந்து நான்கு செமஸ்டர்களிலும் தோல்வியடைந்திருந்தார்.  அந்தப் பன்னாட்டு நிறுவனம் அதைப்பற்றி சிறிதும் கவலை கொள்ளவில்லை!!. 

அதற்குப் பதிலாக அந்த மாணவரை அழைத்து அடுத்த ஆண்டில் தங்கள் நிறுவனத்தில் வேலைக்கு சேரும்படியானை கடிதத்தைத் தந்து வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் அவர் தேர்ச்சி பெறாத பாடங்களை முடிக்குமாறு அறிவுறுத்தி சென்றது.  

இதனை ஒரு சாதாரண சம்பவமாக தயவு செய்து எடுத்துக் கொள்ள வேண்டாம்.  பெற்றோர்களும், நம்முடைய அரசாங்கமும் இதை நன்கு உணர்ந்து நம்முடைய கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும்.   நான் இதில் கல்விக் கூடங்களை சேர்க்காதற்கு காரணம், அரசாங்கம் வகுக்கும் கல்வித்திட்டத்தை அவர்கள் செயல்படுத்த வேண்டிய நோக்கத்தில் மட்டுமே  இவர்கள் கல்வி நிறுவனங்களை நடத்துகிறார்கள்.  அதற்கு மேல் அவர்களிடமிருந்து நீங்கள் வேறெதுவும் எதிர்பார்க்க முடியாது.

மேற்சொன்ன "துரிதமான வகையில் முடிவெடுத்தல், தெளிவான முறையில் உரையாடி மற்றவர்களுக்குப் புரிய வைத்தல், எந்த நிலையிலும் நிதானம் தவறாமை, தலைமைப் பண்பு'' போன்றவற்றை எந்தப் பள்ளியோ, கல்லூரியோ போதிக்கின்றனவா என்பதை கண்டு உங்கள் குழந்தைகளை அந்த நிறுவனங்களில் பயில வையுங்கள். 

ஏனெனில் பிற்காலத்தில் இவைதான் உங்கள் குழந்தைகளை உலகிற்கு சிறந்த முறையில் அடையாளம் காட்டுவனவாகும்.  படிப்பு இப்போது CD க்களில் வந்து எல்லா கடைகளிலும் விற்க ஆரம்பித்து விட்டது.   மற்ற சாதுர்யங்களை பெற்றோர்கள் தான் குழந்தைகளுக்கு ஊக்கம் தருவதன் மூலம் வளர்க்க முடியும்.

கல்வி ஒன்றுக்கு மட்டுமே அல்லாது பொழுது போக்கு, தியானம் போன்றவை எல்லாவற்றிற்குமே  முக்கியத்துவம் அளிக்க  வேண்டும்.  இதற்கு இந்த வயது என்றெல்லாம் வேண்டாம்.  மாணவப் பருவம், குழந்தைப் பருவம் போன்றவை எதையும் கற்பதற்கு ஏற்ற  பருவம்.  

அதற்கு குழந்தைகளுடன் நல்லதொரு நட்பை ஏற்படுத்திக் கொள்வது மிகவும் அவசியமான காரியம்.  நல்லதொரு நட்பை நம்முடைய குழந்தைகளுக்கு நாம் கொடுப்போம்.  பாசத்தைப் பின்னுக்குத் தள்ளி நட்பை முன்னுக்கு கொண்டு வருவோம், இதில் தவறேதும் இல்லை.  காலத்திற்கேற்றவாறு நம்மை மாற்றிக் கொள்வோம். 

அதுதான் நிதர்சன உண்மை.
மிக்க நன்றி,
வடக்கு வாசல்-டெல்லி.
சி.டி.சனத் குமார்
தொலைபேசி: 04343-226537
கைப்பேசி: 09443207061
மின்னஞ்சல்: sanathkumar5252@yahoo.com

.
.
 

No comments: