அய்யனார்
யார்? அவர் பற்றிய
வரலாற்று, புராண, இலக்கியக் குறிப்புகள் எப்போதுமுதல் காணப்படுகின்றன என்று
முதலில் பார்ப்போம். நமக்குக்
கிடைத்த தொன்மையான பண்டை இலக்கிய, இலக்கண நூல் எது என்றால் பரிபாடலையும்
தொல்காப்பியத்தையும் சொல்லலாம். பரிபாடலில் முருகன், விஷ்ணு பற்றிய பாடல்
குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. தொல்காப்பியத்தில் ஐந்திணைக் கடவுள்களாக
முருகன், மாயோன், இந்திரன், வருணன், கொற்றவை வழிபாடு பற்றிக்
கூறப்படுகின்றது. இவற்றில் அய்யனார் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை.
அப்படியானால் அய்யனார் யார்? அவரது வழிபாடு எப்போது முதல் தமிழகத்தில் தோன்றியிருக்கும்?
இதுகுறித்து தேவ நேயப் பாவாணர் கூறும்
கருத்து சிந்திக்கற் பாலது. ”நாட்டின் பல இடங்களுக்கும் தத்தம்
காவற்படையுடன் சென்று பொருளீட்டிய வணிகக் கூட்டங்களுக்கு சாத்து என்று
பெயர். சார்த்து – சாத்து : சார்தல் – சேர்தல் என்பது பொருளாம்” என்கிறார்
அவர். மேலும் அவர், “ வணிகக் சாத்துக்களின் காவல் தெய்வத்திற்கு சாத்தன்
என்று பெயர். அவரே ஐயனார். அதனாலேயே அக்காலத்தில் வணிகர்கள் சாத்துக்கள்,
சாத்துவன், சாதுவன் என்றெல்லாம் அழைக்கப்பட்டனர். அக்காலத்தில் உள்ளூர்
வணிகர்கள் பெரும்பாலும் குதிரைகளில் சென்றே வாணிகம் செய்தனர். அதனாலேயே
ஐயனாருக்கு குதிரை வாகனமாகியது. சாத்தன் என்னும் தெய்வப் பெயர் வடமொழியில்
சாஸ்தா எனத் திரியும். சாத்தன் எனும் வணிகக் கூட்டப் பெயர் ஸார்த்த என்று
திரியும்.” என்று குறிப்பிடுகிறார்.
ஆக,
சங்ககாலத்தில் ஐந்திணைக் கடவுள்கள் பற்றிய குறிப்புகள் மட்டுமே உள்ளன.
அதில் சாஸ்தா (அய்யனார்) வழிபாடு பற்றிய குறிப்புகல் கிடைத்தில. ஆனால்
அய்யனாரை சங்க மக்கள் வழிபடவில்லை என்று கூறிடுதல் இயலாது. ஐந்திணை
நூல்களில் சிவபெருமான் பற்றிய குறிப்புகள் ஏதும் காணப்படவில்லை. அதற்காக
சங்க காலத்தில் சிவ வழிபாடே இல்லை என்று சொன்னால் அது எப்படித் தவறாக
முடியுமோ அது போலத்தான் அய்யனார் வழிபாடே இல்லை என மறுப்பதும்.
எனவே
திடீர் என அய்யனார் வழிபாடு தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் என்பது
சரியன்று. தொல் தமிழர் வரலாற்றோடு அய்யனார் வழிபாடு பின்னிப் பிணைந்திருக்க
வேண்டும் என்பதே உண்மை. அதே சமயம் அய்யனார், சாஸ்தா வழிபாடுகள் பௌத்த
மற்றும் சமண சமயத் தாக்கத்தால் விளைந்தவை என்ற கருத்தும் கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் சமண, பௌத்தக் வழிபடு கடவுளாக இருந்து, பின்னர் சைவ சமய
வழிபாட்டோடு இணைந்து விட்ட வழிபாடுதான் அய்யனார் வழிபாடு என்ற கூற்றும்
மறுக்கக் கூடியதன்று.