Jul 20, 2011

குழந்தைகள் போகப்போக சரியாக படிக்காதது ஏன்?

     குழந்தைகளின் படிக்கும் திறமை அவர்களுக்கு இயற்கையிலேயே அமைந்துள்ள நுண்ணறிவையும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் அவர்களுக்கு அளிக்கும் பயிற்சியையும் பொறுத்து அமையும். பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பும் தொடக்க காலத்தில் பெற்றோர் குழந்தையின் கல்வியில் அதிகம் ஆர்வம் காண்பிப்பர். குறிபாக மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு சொல்லிகொடுப்பது முறையாக நடந்து கொண்டிருக்கும்.
           தொடக்ககால ஆர்வமும், குழந்தைகளின் பாடங்கள் பெற்றோரல் கற்பிக்கக் கூடிய வகையில் மிக எளிமையானதாகவும் இருப்பது ஆகியவை அவ்வாறு முறையாக வீட்டில் குழந்தைகளுக்கு கற்பிப்பதற்கு காரணங்கள் எனலாம். குழந்தை அடுத்தடுத்த வகுப்புகளுக்கு செல்லும்போது பாடங்கள் பெற்றோரால் புரிந்து கற்பிக்க முடியாத வகையில் கடினமாகி விடுவதாலும், குழந்தையின் கல்வி மீது இருந்த தொடக்க கால ஆர்வம் குறைந்து போவதாலும்
வீட்டில் கற்பிப்பதை பெற்றோர்கள் மெதுவாக கைவிட்டு விடுகின்றனர். அதற்கு பதிலாக குழந்தைகளை டியூசன் போன்ற பிற வகுப்புகளுக்கு அனுப்பி விடுகின்றனர். பள்ளியில் சொல்லிக் கொடுத்தாலும் பெற்றோரின் கவனிப்பும் அக்கறையும் குழந்தைகள் நன்கு படிக்க அவசியமாகும்.
          இதன் காரணமாகவே நாளாக நாளாக குழந்தைகளின் படிப்பார்வம் குறையத் தொடங்குகிறது.  பெண்களுக்கு 10 வயதிலிருந்து 13 ½ வயது வரையும் ஆண்களுக்கு 11 வயதிலிருந்து 14 ½ வயது வரையும் பூப்பெய்துவதற்கான பாலியல் மாற்றங்கள் உடலில் நடந்து கொண்டிருக்கும். இச்சயமத்தில் விவரிக்க இயலாத அளவுக்கு ஹார்மோன் மாற்றங்கள் உடலுக்குள் நடந்து கொண்டிருக்கும். இதனால் குழப்பமான மனநிலை, எதிலும் கவனம் செலுத்த இயலாத மனநிலை ஆகியவற்றுடன் குழந்தைகள் இருப்பர். அதனால்தான் 8ம் வகுப்பு வரை முதல் மதிப்பெண்ணே பெற்றுவரும் ஓர் மாணவனோ மாணவியோ ஒன்பதாம் வகுப்பு முதல் பல பாடங்களில் மிகக் குறைவான மதிப்பெண் எடுப்பதும் தோல்வியடைவதும் நடைபெறுகிறது.

           பெற்றோர்கள் பாலியல் முதிர்ச்சியினால் குழந்தைகளின் உடல், மன நிலையில் ஏற்படும் மாற்றங்களையும் அதனால் அவர்கள் கல்வித் திறன் குறைவதையும் கவணத்தில் கொண்டு குழந்தைகளை படிபடி என்று துன்புறுத்தாமலும், குறைந்த மதிப்பெண் பெற்று வரும்போது அவமானப்படுத்தாமல் ஆறுதளாக இருப்பதும் குழந்தைகள் தன் குறைபாட்டிலிருந்து மீண்டு வர உதவியாக இருக்கும். மேலும் எல்.கே.ஜி படிக்கும் போது குழந்தைகளின் படிப்பில் காட்டிய அதே ஆர்வத்தை இறுதிவரை கொண்டிருப்பது குழந்தைகளின் மதிப்பெண் குறையாமல் காக்க உதவும்.

No comments: