Nov 3, 2013

பயமுறுத்தும் மருத்துவர்கள் ...

     என் அம்மாவுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் உடல்நிலை மிக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து, இரண்டு மாதங்களுக்கு பிறகு டிஸ்சார்ஜ் ஆகி வீடு வந்தார். அம்மா இருந்த இந்த இரண்டு மாதங்களில் டாக்டர் இரண்டு முறை "இன்னும் ஒரு நாள் கூட தாங்காது; அனைவருக்கும் சொல்லி அனுப்பி விடுங்கள்" என சொல்லி, வெவ்வேறு இடத்திலிருக்கும் உறவினர்கள் மற்றும் அம்மாவுடன் கூட பிறந்த அண்ணன், அக்கா என பலரும் ஓடி வந்தோம். இரு முறையும் அம்மாவுக்கு டாக்டர்கள் சொன்ன மாதிரி எதுவும் நடக்க வில்லை என்பது மகிழ்வான விஷயம் தான். இந்த இரு முறையும் ஐ.சி.யூ வெளியே சில நாட்கள் அட்டெண்டர் ஆக அமர்ந்திருந்தபோது சில விஷயங்கள் கவனிக்க முடிந்தது.

     ஐ.சி.யூ.க்கு மிக அதிகமாக வருவது ஹார்ட் அட்டாக் நோயாளிகள் தான். ஐ.சி.யூ.க்கு அழைத்து வருவோரிடம் எந்த வித நம்பிக்கையும் மருத்துவர்கள் தருவதில்லை. "பிழைக்கிறது கஷ்டம் தான். பார்க்கலாம்." என்று தான் சொல்கிறார்கள். இது பற்றி விசாரித்தபோது மருத்துவர்கள் பொதுவாய் பாசிடிவ் ஆக சொல்லவே மாட்டார்கள் என தெரிய வந்தது. பாசிடிவ் ஆக சொல்லி, பின்னர் வேறு ஏதாவது ஆகி, நோயாளி இறந்து விட்டால், உறவினர்கள் பிரச்சனை செய்து சண்டை போடும் நிகழ்வுகள் நடக்கிறதாம்!
அதுவே "பிழைக்கிறது கஷ்டம்" என்று கூறி விட்டு, பின் நோயாளி பிழைத்தால், "பிழைக்க முடியாத ஆளையும் பிழைக்க வச்சிட்டார் மகராசன்" என வாழ்த்தி விட்டு மகிழ்வோடு பில் கட்டி விட்டு போகிறார்களாம்!
மருத்துவர்களின் லாஜிக் இருக்கட்டும். அவர்கள் இப்படி நம்பிக்கை தராமல் பேசுவதால் என்ன நடக்கிறது தெரியுமா?

Oct 21, 2013

நோய் தீர்க்கும் சதுரகிரி மலை




        சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர்.
திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர்.

தாணிப்பாறை அடிவாரம் - கருப்பர் சந்நிதி அருகே உள்ள தீர்த்தம்
* மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை "சஞ்சீவி மலை' என்கின்றனர்.
*சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது.
*
ஆடி அமாவாசை முக்கிய விழா. தை அமாவாசை, மகாளய அமாவாசை, மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, மார்கழி முதல் நாள் ஆகிய நாட்களிலும் அதிக கூட்டம் இருக்கும்.
* பழநியிலுள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்தபோதே செய்ததாக கூறப்படுகிறது.
*இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு, இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும். பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக இந்த புல்லை உபயோகித்துள்ளார்கள்.
*மகாலிங்கம் கோயிலின் வடக்கே "ஊஞ்சல் கருப்பண சாமி' கோயில் உள்ளது.
*
சுந்தர மகாலிங்கத்திற்கு அமாவாசை நாட்களில் மதியம் 1 மணிக்கு அபிஷேகம் துவங்கும்.
* ஆடி அமாவாசை தவிர மற்ற அமாவாசை நாட்களில் தேனும், தினைமாவும் பிரசாதமாக தரப்படுகிறது.
* சதுரகிரி மலைக்கு மின்சார வசதி கிடையாது. ஜெனரேட்டர் பயன்படுத்துகின்றனர்.
இருப்பிடம்:
மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் பஸ்களில் சென்றால், தாணிப்பாறை விலக்கில் இறங்கலாம். இங்கிருந்து 7 கி.மீ., தூரம் சென்றால் சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை வரும். அங்கிருந்து மலை ஏறி, 10 கி.மீ., நடந்தால் மகாலிங்கத்தை தரிசிக்கலாம்.
அல்லது , மதுரையிலிருந்து ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் - செங்கோட்டை செல்லும் பஸ் உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் , செங்கோட்டை செல்லும் பஸ்ஸில் ஏறி - கிருஷ்ணன் கோவில் நிறுத்தத்தில் இறங்கி - அங்கிருந்து வத்திராயிருப்பு செல்லுங்கள். ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் பேருந்து வசதி உள்ளது.
அங்கிருந்து தாணிப் பாறைக்கு - மினிபஸ் அல்லது ஆட்டோவில் சென்று விடுங்கள்.
 
திறக்கும் நேரம்:
காலை 6- 12 மணி, மாலை 4- இரவு 9 மணி. விசேஷ நாட்களில் நடை திறக்கும் நேரம் மாறுபடும்.போன்: 98436 37301, 96268 32131
மலைக்கு மேலே - சாப்பாடு பற்றிய கவலை வேண்டாம். எந்த நேரமும், உங்கள் வயிறை குளிரவைக்க " கஞ்சி மடம் ' உள்ளது. உங்களுக்கு குறைந்த பட்சம், கஞ்சியோ , கூழோ , பழைய சோறோ - நிச்சயம் கிடைக்கும். 24 மணி நேரமும் என்பதுதான் விசேஷம். மிகப் பெரிய குழுவாக சென்றால், முன்கூட்டியே சொல்லி விடுங்கள். சுடச்சுட சாதம் கிடைக்கும்.

Mar 22, 2012

ஒரிஜினல் மாத்திரையும் எமனாகும் !..

ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

 
‘போலி மருந்துகள் விற்பனை.. காலாவதியான மருந்துகளை பாட்டில் மாற்றி விற்று மோசடி..’ என்று ஊரே பேசிக் கொண்டிருந்த நேரத்தில்தான், சைலன்ட்டாக ஒரு இ-மெயில் இந்தியா முழுக்கப் பரவிக் கொண்டிருந்தது.. அதை விட அதிர்ச்சியான தகவல்களைத் தாங்கி!



உலக அளவில் தடை செய்யப்பட்ட மாத்திரைகள் இந்தியாவில் தங்கு தடையின்றி விற்கப்படுகின்றன.. இதய பாதிப்பு, நுரையீரல் பாதிப்ப்பு, சிறுநீரக பாதிப்பு, மூளை பாதிப்பு என்று பல பக்க விளைவுகளைக் கொண்டிருப்பதால்தான் பெரும்பாலான உலக நாடுகள் அவற்றைத் தடை செய்துள்ளன!’ என்று எச்சரித்த அந்த இ-மெயிலில் அப்படிப்பட்ட ஆபத்தான மாத்திரைகளின் பட்டியலும் தரப்பட்டிருந்தது. அதில்தான் நம் நெஞ்சை உறைய வைக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.

ஆம்! நம் அன்றாடப் பயன்பாட்டில் உள்ள ஆக்ஷன் 500-ல் ஆரம்பித்து, நமக்குள் இரண்டறக் கலந்து விட்ட காய்ச்சல் - தலைவலி மாத்திரைகள் பலவும்தான் அந்தப் பட்டியலில் முதல் வரிசையில் நின்றன!

“இந்த மாத்திரைகளில் நிஜமாகவே இப்படிப்பட்ட பக்க விளைவுகள் உள்ளதா?” சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர், எம். பிரசன்னாவிடம் விளக்கம் கேட்டோம்..

“ஆமாம். இந்த இ-மெயிலில் சொல்லப்பட்டிருக்கும் விவரங்கள் நூற்றுக்கு நூறு உண்மைதான்!” என்று அதிர வைத்தவர், தன் பேச்சுக்கிடையே பிரபலமான வேறு சில வலி நிவாரணி மாத்திரைகளின் பெயர்களையும் சேர்த்தே-தான் குறிப்பிட்டார்..

“சாதாரண தலைவலி, காய்ச்சலுக்காக நாம் வாங்கும் மாத்திரைகளில் ‘பெனில்-ப்ரபோனாலமைன்’, ‘அனால்ஜின்’, ‘நிமுசுலைடு’ போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன. ‘பெனில் ப்ரபோனாலமைன்’, நம் நரம்பு மண்டலத்தை பாதித்து பக்கவாதத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. ‘அனால்ஜின்’, எலும்பு மஜ்ஜையின் செல் உற்பத்தியைக் கட்டுப்படுத்தி அதில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. ‘நிமுசுலைடு’, கல்லீரலையே செயலிழக்கச் செய்யக்கூடியது.

Sep 28, 2011

அய்யனார்...


     அய்யனார் யார்? அவர் பற்றிய வரலாற்று, புராண, இலக்கியக் குறிப்புகள் எப்போதுமுதல் காணப்படுகின்றன என்று முதலில் பார்ப்போம். நமக்குக் கிடைத்த தொன்மையான பண்டை இலக்கிய, இலக்கண நூல் எது என்றால் பரிபாடலையும் தொல்காப்பியத்தையும் சொல்லலாம். பரிபாடலில் முருகன், விஷ்ணு பற்றிய பாடல் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. தொல்காப்பியத்தில் ஐந்திணைக் கடவுள்களாக முருகன், மாயோன், இந்திரன், வருணன், கொற்றவை வழிபாடு பற்றிக் கூறப்படுகின்றது. இவற்றில் அய்யனார் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை.

     அப்படியானால் அய்யனார் யார்? அவரது வழிபாடு எப்போது முதல் தமிழகத்தில் தோன்றியிருக்கும்?

     சாஸ்தா அல்லது சாத்தான் என்ற கடவுளும் அய்யனாரும்  தோற்றத்தில் ஒன்று போலவே உள்ளனர். அய்யனார் தான் சாத்தன் எனக் கொண்டால் சங்க இலக்கியத்தில் ’சாத்தன்’ என்ற பெயரில் சில குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. சாத்தன் எனும் பெயருடைய புலவர்கள் பலர் இருந்துள்ளனர். மதுரை கூல வாணிகன் சீத்தலைச் சாத்தன் என்ற பெயரும் அதில் ஒன்று. அவர் சாஸ்தாவை அல்லது அய்யனாரை குலதெய்வமாக வழிபட்டவர். அதனால் தான் அப்பெயரை வைத்திருக்கின்றார் என்பது ஒரு சில ஆய்வாளர்கள் கருத்து. ஏனென்றால் குலதெய்வத்தின் பெயரைச் சூட்டுவது தொல் தமிழர் மரபு என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
     இதுகுறித்து தேவ நேயப் பாவாணர் கூறும் கருத்து சிந்திக்கற் பாலது. ”நாட்டின் பல இடங்களுக்கும் தத்தம் காவற்படையுடன் சென்று பொருளீட்டிய வணிகக் கூட்டங்களுக்கு சாத்து என்று பெயர். சார்த்து – சாத்து : சார்தல் – சேர்தல் என்பது பொருளாம்” என்கிறார் அவர். மேலும் அவர், “ வணிகக் சாத்துக்களின் காவல் தெய்வத்திற்கு சாத்தன் என்று பெயர். அவரே ஐயனார். அதனாலேயே அக்காலத்தில் வணிகர்கள் சாத்துக்கள், சாத்துவன், சாதுவன் என்றெல்லாம் அழைக்கப்பட்டனர். அக்காலத்தில் உள்ளூர் வணிகர்கள் பெரும்பாலும் குதிரைகளில் சென்றே வாணிகம் செய்தனர். அதனாலேயே ஐயனாருக்கு குதிரை வாகனமாகியது. சாத்தன் என்னும் தெய்வப் பெயர் வடமொழியில் சாஸ்தா எனத் திரியும். சாத்தன் எனும் வணிகக் கூட்டப் பெயர் ஸார்த்த என்று திரியும்.” என்று குறிப்பிடுகிறார்.
     ஆக, சங்ககாலத்தில் ஐந்திணைக் கடவுள்கள் பற்றிய குறிப்புகள் மட்டுமே உள்ளன. அதில் சாஸ்தா (அய்யனார்) வழிபாடு பற்றிய குறிப்புகல் கிடைத்தில. ஆனால் அய்யனாரை சங்க மக்கள் வழிபடவில்லை என்று கூறிடுதல் இயலாது. ஐந்திணை நூல்களில் சிவபெருமான் பற்றிய குறிப்புகள் ஏதும் காணப்படவில்லை. அதற்காக சங்க காலத்தில் சிவ வழிபாடே இல்லை என்று சொன்னால் அது எப்படித் தவறாக முடியுமோ அது போலத்தான் அய்யனார் வழிபாடே இல்லை என மறுப்பதும்.

     எனவே திடீர் என அய்யனார் வழிபாடு தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் என்பது சரியன்று. தொல் தமிழர் வரலாற்றோடு அய்யனார் வழிபாடு பின்னிப் பிணைந்திருக்க வேண்டும் என்பதே உண்மை. அதே சமயம் அய்யனார், சாஸ்தா வழிபாடுகள் பௌத்த மற்றும் சமண சமயத் தாக்கத்தால் விளைந்தவை என்ற கருத்தும் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் சமண, பௌத்தக் வழிபடு கடவுளாக இருந்து, பின்னர் சைவ சமய வழிபாட்டோடு இணைந்து விட்ட வழிபாடுதான் அய்யனார் வழிபாடு என்ற கூற்றும் மறுக்கக் கூடியதன்று.

Aug 16, 2011

கணினியில் வேவு பார்க்கப் பயன்படும் மென்பொருட்கள்.



நீங்கள் வீட்டுப்பாடம் செய்யாமல் 'அதோ பார் காரு, காருக்குள்ள யாரு' என்று பாட்டுப்பாடிய வயதில் உங்கள் குழந்தைகள் இணையத்தில் உலகைக் காண ஆரம்பித்து விடுகிற அளவிற்கு இணையமில்லா இல்லங்கள் இல்லையென்றாகிவிட்டது. இணையமென்பது மின்சாரம் மாதிரி, எந்த அளவுக்கு உபயோகமாக, மிக திறன்மிக்கதாக இருக்கிறதோ அதே அளவுக்கு மிக மிக ஆபத்தானதும் கூட. தமிழ் பேசும் நல்லுலகின் தெருக்களில் இணையம் முதன் முதலில் பவனி வந்த காலகட்டத்தில் மட்டுமின்றி, இன்றும் புதிதாக இணையத்தினைப் பயன்படுத்த ஆரம்பிக்கும் வாலிப, வயோதிக அன்பர்களே கண்டதையும் பார்த்து விட்டு கண்ணைக் கெடுத்து, ஒரு வாரம் காய்ச்சலில் கிடக்கும் சம்பவங்கள் பல நமக்கு பழக்கமானவையே. 



இப்படி வயது வந்தோருக்கான விஷயங்கள் மட்டுமின்றி, பலருக்குச் சாதரணமாகத் தெரியும் செய்திகளுக்கானப் புகைப்பட பதிவுகள், சிலருக்கு மனச்சிதைவைக்கூட ஏற்படுத்தலாம்.  பெரியவர்களுக்கே சவால் விடும் சக்திமிக்க ஊடகமான இணையத்தினை இன்றையக் குழந்தைகள் கையாளும் போது, இணையம் குறித்துத் தெரிந்த பெற்றோர்களுக்கு பதட்டமாக இருக்கும். அந்த பதட்டத்தின் காரணமாக மகனோ, மகளோ கணினி முன் அமர்ந்தால் வேறு வழியின்றி இவர்களும் கன்னத்தில் கைவைத்து திரையை வெறித்தபடி அமர்ந்திருப்பார்கள். இணையம் குறித்தான விவரங்கள அறியாத பெற்றோர்கள் தன் பிள்ளை சந்திரனுக்கு ராக்கெட் குறித்தான ஆராய்ச்சியில் இருப்பது போல மாயைத் தோன்றும், அதன் காரணத்தால் தனியறை ஒன்று ஏற்பாடு செய்து கணினியும், பிள்ளையும் சூடாகி விடக்கூடாதென்பதற்காக குளிர்வசதி செய்து கொடுத்து தூரத்தில் நின்று ரசிப்பார்கள்.