Nov 3, 2013

பயமுறுத்தும் மருத்துவர்கள் ...

     என் அம்மாவுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் உடல்நிலை மிக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து, இரண்டு மாதங்களுக்கு பிறகு டிஸ்சார்ஜ் ஆகி வீடு வந்தார். அம்மா இருந்த இந்த இரண்டு மாதங்களில் டாக்டர் இரண்டு முறை "இன்னும் ஒரு நாள் கூட தாங்காது; அனைவருக்கும் சொல்லி அனுப்பி விடுங்கள்" என சொல்லி, வெவ்வேறு இடத்திலிருக்கும் உறவினர்கள் மற்றும் அம்மாவுடன் கூட பிறந்த அண்ணன், அக்கா என பலரும் ஓடி வந்தோம். இரு முறையும் அம்மாவுக்கு டாக்டர்கள் சொன்ன மாதிரி எதுவும் நடக்க வில்லை என்பது மகிழ்வான விஷயம் தான். இந்த இரு முறையும் ஐ.சி.யூ வெளியே சில நாட்கள் அட்டெண்டர் ஆக அமர்ந்திருந்தபோது சில விஷயங்கள் கவனிக்க முடிந்தது.

     ஐ.சி.யூ.க்கு மிக அதிகமாக வருவது ஹார்ட் அட்டாக் நோயாளிகள் தான். ஐ.சி.யூ.க்கு அழைத்து வருவோரிடம் எந்த வித நம்பிக்கையும் மருத்துவர்கள் தருவதில்லை. "பிழைக்கிறது கஷ்டம் தான். பார்க்கலாம்." என்று தான் சொல்கிறார்கள். இது பற்றி விசாரித்தபோது மருத்துவர்கள் பொதுவாய் பாசிடிவ் ஆக சொல்லவே மாட்டார்கள் என தெரிய வந்தது. பாசிடிவ் ஆக சொல்லி, பின்னர் வேறு ஏதாவது ஆகி, நோயாளி இறந்து விட்டால், உறவினர்கள் பிரச்சனை செய்து சண்டை போடும் நிகழ்வுகள் நடக்கிறதாம்!
அதுவே "பிழைக்கிறது கஷ்டம்" என்று கூறி விட்டு, பின் நோயாளி பிழைத்தால், "பிழைக்க முடியாத ஆளையும் பிழைக்க வச்சிட்டார் மகராசன்" என வாழ்த்தி விட்டு மகிழ்வோடு பில் கட்டி விட்டு போகிறார்களாம்!
மருத்துவர்களின் லாஜிக் இருக்கட்டும். அவர்கள் இப்படி நம்பிக்கை தராமல் பேசுவதால் என்ன நடக்கிறது தெரியுமா?


உறவினர்கள் அனைவரும் மிக கவலையுடன் அழுது புலம்பியவாறே இருக்கின்றனர். நோயாளியிடம் நேரடியாக கூறாவிட்டாலும் தங்கள் உணர்வுகள் மூலம் "பிழைப்பது சிரமம்" என்கிற உணர்வை உடன் இருப்போர் நோயாளிக்கு தெரிவிக்கவே செய்கின்றனர்.

பிழைப்பது சிரமம் என எங்கள் அம்மாவை சொன்னதால், நடந்த சில விஷயங்களை கூறுகிறேன். எங்களில் சிலர் அம்மாவிடம் போய் "உனக்கு ஏதும் நிறைவேறாத ஆசை இருக்கா? எதுவா இருந்தாலும் சொல்லு. வேற யாரையும் பார்க்கணும் என நினைக்கிறியா?" என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தோம். இது அம்மாவுக்கு, தான் இறக்கப் போவதால் தான் இப்படி கேட்கிறார்கள் என்பதை மறைமுகமாக தெரிவிக்கும் தானே?

நோயாளிகள் பிழைப்பது பாதி மருந்தினால் என்றால், மீதம் பெரும்பகுதி நம்பிக்கையில் மட்டுமே. இது மருத்துவர்களுக்கும் நன்கு தெரியும். இருந்தும் அவர்கள் நம்பிக்கையை தங்கள் சுயநலத்துக்காக குலைப்பது எப்படி சரியாகும்? மருத்துவர்கள் இதனை உணர்ந்து இப்படி அனாவசியமாக பயமுறுத்தாமல் இருப்பது நல்லது!

***

எங்கள் வீட்டுக்கருகில் நடந்த இன்னொரு சம்பவம் பகிர்கிறேன்
சிங்கப்பூரில் பெண் மருத்துவராக இருக்கிறார் அவர். அவர் கணவரும் குழந்தைகளும் மட்டும் இங்கு மதுரையில் உள்ளனர். பெண் மருத்துவரின் கணவர் பெயரை ரவி என்று வைத்துக் கொள்வோம். ரவிக்கு சர்க்கரை நோய் உண்டு. காலில் கொப்பளமும், தோல் பிரச்னையும் வந்துள்ளது. டாக்டரிடம் காட்ட, சர்க்கரை நோயால் தான் இப்படி நடந்தது என்றும் கட்டை விரலை ஆப்பரேஷன் செய்து எடுக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார் .

ரவி, சிங்கப்பூரிலிருக்கும் தன் டாக்டர் மனைவியிடம் இதை தெரிவித்துள்ளார். அவர் "கொஞ்ச நாள் பொறுங்கள் நான் இந்தியா வரும்போது பார்த்து கொள்ளலாம்" என சொல்ல, ரவியோ தான் பாட்டுக்கு அந்த ஆபரேஷனுக்கு உடன்பட்டு கட்டை விரல் அகற்றப்பட்டு விட்டது.

இனி தான் இருக்கு விஷயம்!!

கட்டை விரலை எடுத்த பின்னும் ரவிக்கு மீண்டும் மீண்டும் காலில் கட்டி மற்றும் தோல் பிரச்சனை வந்திருக்கிறது! இன்னொரு டாக்டரிடம் காட்ட அவர் "சர்க்கரை நோய் அதிகமாகி விட்டது. இதய நோய் வந்து விட்டது. பை பாஸ் ஆபரேஷன் செய்ய வேண்டும் என கூறியிருக்கிறார். உடனே செய்யா விட்டால் பிரச்சனை ஆகி விடும் என்றும் கூறி இருக்கிறார்.

விஷயம் கேள்விப்பட்ட ரவியின் மனைவி சிங்கப்பூரிலிருந்து கிளம்பி வந்து விட்டார். அடுத்த சில வாரங்கள் இதற்காக பல மருத்துவர்களிடம் அலைந்து திரிந்து காலில் வந்தது தோல் வியாதி தானே அன்றி வேறு ஏதும் இல்லை என்று கண்டறிந்துள்ளார். தோல் மருத்துவர் தந்த மருந்து எடுத்து கொண்டதும், காலில் இருந்த கொப்பளம் மற்றும் தோல் பிரச்சனை முழுதும் சரியாகி விட்டது . ரவியின் கால் கட்டை விரல் போனது தான் மிச்சம்! பை பாஸ் ஆபரேஷன் ஆகாமல் தப்பி விட்டார் ரவி!

நினைத்துப் பாருங்கள்! தங்கள் சுய நலனுக்காக எப்படி என்ன ஆப்பரேஷன் செய்யலாம் என்று கணக்கு போடும் மருத்துவர்களும் இருக்கவே செய்கிறார்கள். குறிப்பாய் நீங்கள் தனியாகவோ, நிறுவனம் மூலமோ "இன்சூரன்ஸ் பாலிசி" வைத்திருப்பதாக சொன்னால் அவர்களின் அணுகுமுறை மற்றும் பேச்சு ரொம்பவே மாறி விடுகிறது.

உலகிலேயே மிக புனிதமாக கருதப்படும் துறைகளுள் முதன்மையானது மருத்துவ துறை. அந்தத் துறையில் இப்படிப்பட்ட புல்லுருவிகளும் உள்ளனர்!

நம்மைப் போன்ற மனிதர்களின் பயமே மருத்துவர்கள் பணம் செய்ய வாய்ப்பாக அமைந்து விடுகிறது! நண்பர்களே நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்! குறிப்பாய் ஆபரேஷன் என்றால் இரண்டு அல்லது மூன்று மருத்துவர்களிடம் கருத்து வாங்காமல் முடிவு எடுக்காதீர்கள்!

No comments: