கொஞ்சம் கதை கேட்போமா?
முதல் கதை:
பானை செய்து விற்கும் குயவன் அவன். கடவுள் மீது அபார நம்பிக்கை கொண்டவன். அதிகாலையில் எழுந்து தான் செய்த பானைகளை ஒரு வண்டியில் அடுக்கி சந்தைக்கு கொண்டு சென்று விற்பான். அவனுடைய அன்றாடத் தேவைகளை அந்தப் பணத்தைக் கொண்டு பூர்த்தி செய்து கொள்வது அவனுடைய வழக்கமாக இருந்தது.
முதல் கதை:
பானை செய்து விற்கும் குயவன் அவன். கடவுள் மீது அபார நம்பிக்கை கொண்டவன். அதிகாலையில் எழுந்து தான் செய்த பானைகளை ஒரு வண்டியில் அடுக்கி சந்தைக்கு கொண்டு சென்று விற்பான். அவனுடைய அன்றாடத் தேவைகளை அந்தப் பணத்தைக் கொண்டு பூர்த்தி செய்து கொள்வது அவனுடைய வழக்கமாக இருந்தது.
அன்றைக்கும் எப்போதும் போல பானைகளை வண்டியில் எடுத்துக் கொண்டு சந்தைக்கு கிளம்பினான். ஆனால் வண்டி வழியில் இருந்த சேறு நிறைந்த பள்ளத்தில் சிக்கிக் கொண்டது. அவன் கவலைப்படாமல் ஓரமாகப் போய் அமர்ந்து கொண்டான். எக்காரணம் கொண்டும் கடவுள் தன்னைக் கை விட மாட்டார், வண்டியை வெளியே எடுக்க உதவுவார் என்ற நம்பிக்கை.
வழியில் செல்வோர் எல்லாம் அவனை என்னவென்று விசாரித்தனர். நான் பார்த்துக் கொள்கிறேன், கவலை வேண்டாம் என்று எல்லோரையும் அனுப்பி விட்டான். நேரம் சென்றது. மாலை வேளை நெருங்கியவுடன் இருட்டத் தொடங்கியது. இப்போதுதான் முதல் முறையாக குயவனுக்கு பயம் தோன்றியது.
பானைகள் எதையுமே விற்காவிட்டால் இன்றைய பொழுதை எப்படிக் கழிப்பது? அழத் தொடங்கினான். அழுகை சிறிது நேரத்தில் கோபமாய் மாற கடவுளை திட்டத் தொடங்கினான். உன்னை நம்பினேனே, என்னை இப்படி மோசம் செய்து விட்டாயே என்றெல்லாம் புலம்பத் தொடங்கினான்.
சட்டென்று அவன் முன்னே கடவுள் தோன்றினார். பளாரென்று ஒரு அறை. குயவனுக்கு பொறி கலங்கிப் போனது.
"காலை முதல் கடவுள் காப்பாற்றுவார் எனச் சொல்லி சும்மாவே இருந்தாயே? அந்நேரத்திற்கு பள்ளத்தில் இறங்கி வண்டிச் சக்கரத்தைக் கொஞ்சமாவது நகட்ட முயற்சி செய்து இருந்தால் இந்நேரம் நான் உனக்கு உதவி இருப்பேன்... முதலில் உன்னை நீ நம்பி முயற்சி செய்.. வாழ்வில் தன்னம்பிக்கை தான் முக்கியம்.."
குயவன் புரிந்து கொண்டவனாக சந்தைக்கு கிளம்பினான்.
இரண்டாவது கதை:
குருவிடம் சிஷ்யன் சொன்னான்.
"தவசீலரே.. வாழ்க்கையில் முன்னேற நினைக்கிறேன். ஆனால் என்னைச் சுற்றி இருப்பவர்கள் ஏதேனும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். நான் என்ன செய்யட்டும்?"
"மகனே.. நீ வாழ்வில் என்னவாக இருக்க விரும்புகிறாய்? எருமையாகவா, கழுதையாகவா இல்லை குதிரையாகவா?" குரு கேட்டார்.
"புரியவில்லை குருவே.."
"எருமையின் பின்னால் தட்டினால் என்ன செய்யும்?"
"எதையும் கண்டு கொள்ளாது தன் வேலையைப் பார்க்கும்.."
"கழுதையைப் பின்னால் தட்டினால்?"
"தட்டியவரை எட்டி உதைக்கும்.."
"ஆனால் குதிரை..?"
"முன்னால் பாய்ந்து செல்லும்.."
"புரிந்ததா.. நம் மீது பிறர் கூறும் அவதூறுகளைக் கூட நம் வாழ்வின் முன்னேற்றத்துக்கான படிக்கட்டுகளாக மாற்றிக் கொள்ள வேண்டும்.. இதுதான் வாழ்வின் ரகசியம்.."
சிஷ்யன் சந்தோஷமாகத் திரும்பிச் சென்றான்.