மார்க்கபந்து எப்போது என்ன கூறினாலும் அது அவ்வண்ணமே நடக்கும் என்பதில் அவன் நண்பர்களுக்கு படு டென்ஷன் & பேஜார். அப்படித்தான் பாருங்கள், திடீரென வீட்டுக்கு தேவையான பொருட்களை பாதி விலைக்கு விற்கும் விஷயம் ஊருக்கு வந்தது. எல்லோரும் அதில் போய் விழ இவன் மட்டும் அது நல்ல விஷயம் அல்ல எனக்கூறி, முழுக்கவே ஒதுங்கி இருந்தான். முதலில் சிலருக்கு மட்டும் பொருட்களை தந்து விட்டு ஒரு நல்ல சுபயோக சுபமுகூர்த்தத்தில் அந்த வியாபாரி எல்லோர் பணத்தையும் சுருட்டிக் கொண்டு கடுக்காய் கொடுத்து போனான்.
ஏமாந்த அவன் நண்பர்களுக்கு பணம் போனதை விட இவன் “அப்போதே நான் சொன்னேன், யாருமே கேட்கவில்லை” என்று கூறும் தோரணையில் முகத்தை வைத்து கொண்டதுதான் தாங்கவில்லை. இம்மாதிரியே ஊருக்கெல்லாம் ஒரு வழி என்றால் ஒன்றரைக்கண்ணனுக்கு தனி வழி என்றுதான் இவன் இருந்தான். ஒவ்வொரு முறையும் இவன் சொன்னதுதான் நடந்தது.
அவன் நண்பன் சாம்பமூர்த்திக்கு அது தாங்கவில்லை. “என்னடா இது, ஒவ்வோர் முறையும் நீ சொல்லறபடி நடக்குது? ஒரு முறை கூட நீ தப்பா யோசிச்சதே இல்லையா”? என ஆதங்கத்துடன் கேட்டான் அவன். “ஏன் இல்லை? ஒரு முறை நான் யோசித்தது தப்பா போயிருக்கே” என்றான் மார்க்கபந்து. “அது என்ன சமாச்சாரம்”? என ஆவலுடன் சாம்பமூர்த்தி கேட்டான்.
“அதாகப்பட்டது, போன வருடம் குபேரா கம்பெனி ஷேர்கள் விலை திடீரென விழும்னு நான் சொன்னேனே, ஞாபகமிருக்கா”? என்று அவன் கேட்க, “ஏன் இல்லை? ஆனால் நீ சொன்னபடித்தானே நடந்தது? எனக்குக்கூட அதில் ஒரு லட்சம் பணால் ஆயிற்றே. அதுக்கென்ன இப்போ?” என சாம்பமூர்த்தி வயிற்றெரிச்சலுடன் சொன்னான். “அதுல என்ன விஷயம்னா, நான் கூட ஒரு கட்டத்துலே நான் இந்த ஷேர்கள் பற்றி சொன்னது தவறாக இருக்கும்னு நினைச்சேன். ஆனால் அவற்றின் விலை திடீரென விழுந்து அவ்வாறு நான் முதல்லே நினைத்தது தப்புன்னு நினைத்ததுதான் தப்புன்னு நிருப்பிச்சதைத்தான் இப்போ சொன்னேன்” என்றான் மார்க்கபந்து.
ஏனோ தெரியவில்லை, மார்க்கபந்துவை அவன் நண்பர்கள் யாருக்குமே பிடிக்கவில்லை.
வேறு சில மார்க்கபந்துகள் எப்போதுமே நல்லவர்களாக இருப்பது கூட மற்றவர்களுக்கு எரிச்சலாக இருக்கும். மகாபாரதத்திலேயே பார்க்கலாம். துரியன் மிகக்கொடியவன். யுதிஷ்டிரன் நல்லவன், தர்மவான். ஆனாலும் பலருக்கு துரியனைத்தான் பிடிக்கும். மனிதர்களின் இயல்பான பலவீனங்கள் அவன் குணத்தில் உண்டு. ஆகவே அவனுள் தங்களைக் காண்பார்கள். ஆனால் யுதிஷ்டிரனை போல இருப்பது மிகக் கடினம். ஆகவே அவ்வாறு இருப்பவர்கள் மீது டீஃபால்டாக ஒரு பொறாமை கலந்த எரிச்சல் ஏற்படுகிறது. எப்படா அவன் சருக்குவான், கைகொட்டி சிரிக்கலாம் என எல்லோரும் காத்திருக்கின்றனர்.
யுதிஷ்டிரனின் உதாரணத்தையே இங்கு பார்ப்போம்.
மஹாபாரத யுத்தத்தின் பதினைந்தாம் நாள்.
முதல் தடவையாக இரவிலும் யுத்தம் தொடர்ந்தது. கிருஷ்ணரின் திட்டப்படி பீமசேனனின் மகன் கௌரவ சேனையைப் படாதபாடுபடுத்தியதால், கர்ணனின் பொறுமையை சோதித்து அருச்சுனனைக் கொல்ல அவன் வைத்திருந்த சக்தி ஆயுதத்தை அவன் மேல் பிரயோகிக்க வேண்டியிருந்தது. குரு துரோணாச்சாரியார் தன்னை மறந்து யுத்தம் செய்கிறார். அவர் பிரும்மாஸ்திரத்தை எடுத்துவிட யோசித்து கொண்டிருக்கிறார்.
இப்போது பார்த்தசாரதியின் அடுத்தத் திட்டம். பீமன் காதோடு ஒரு விஷயம் சொல்ல அவன் விரைந்து சென்று, கௌரவர் சேனையில் இருந்த அஸ்வத்தாமன் என்னும் யானையைக் கொன்று விட்டு பிறகு வெற்றி கோஷத்துடன் துரோணர் இருக்கும் இடத்துக்கு வந்து அவர் காது கேட்க "கொன்றேன் அசுவத்தாமனை" என கொக்கரிக்கின்றான். அஸ்வத்தாமா துரோணரின் ஒரே மகனின் பெயரும் கூட. அவனும் சிறந்த போர்வீரன். இருப்பினும் சொன்னது பீமன் ஆயிற்றே, அவன் பலமும் உலகம் அறிந்ததே என துரோணர் மனம் மயங்குகிறார். அவருக்கு இச்செய்தியை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம்.
பொய்யே பேசாத யுதிஷ்டிரனைப் பார்த்து கேட்கிறார் அவர், "எனது மகன் அஸ்வத்தாமா மாண்டானா, கூறு யுதிஷ்டிரா" என்று. யுதிஷ்டிரனோ இறுதலைக் கொள்ளி எறும்பாகிறான். திணறிக் கொண்டே "கூறுகிறான் "அஸ்வத்தாமா ஹதஹ,...குஞ்சரஹ" (இறந்தது அஸ்வத்தாமன் ... என்னும் யானை). இறந்தது அஸ்வத்தாமன் என்பதை உரக்கக் கூறிவிட்டு, தயங்கியவாறு இரண்டாவது பாகத்தைக் கூறும்போது பார்த்தசாரதி தனது பாஞ்சஜன்ய சங்கை எடுத்து ஊத, துரோணருக்கு 'என்னும் ஒரு யானை' என்பதே காதில் விழவில்லை. அவர் உடனே யுத்தத்தை நிறுத்தி தரையில் அமர்ந்து தியானத்தைத் துவங்குகிறார். அப்போது புயல்போல கிளம்பிய த்ருபத ராஜாவின் மகனும், துரோணரைக் கொல்லவே பிறவி எடுத்த திருஷ்டத்யும்னன் தன் கத்தியை எடுத்து ஆச்சாரியரின் தலையைச் சீவி அவரைக் கொல்கிறான். ஆனால் இது இப்பதிவின் முக்கிய விஷயம் அல்ல.
இப்போதுதான் இப்பதிவின் விஷயத்துக்கு வருகிறேன். யுதிஷ்டிரனின் வாயில் இருந்து அந்த வார்த்தைகள் வந்த வினாடியிலேயே அவன் தேர்ச் சக்கரங்கள் பூமியைத் தொட்டனவாம். அதுவரை அவை தரையிலிருந்து நான்கு அங்குலம் உயரத்திலேயே இருந்தனவாம். அவனும் பொய் சொன்ன பிறகு பொய்மை நிறைந்த பூமியின் பகுதியாக அவனும் ஆகிவிட்டான் என வியாசர் அழகாகக் கூறுகிறார்.
அது மட்டுமா, பிற்காலத்தில் சொர்க்கம் செல்ல நேர்ந்த போது ஒரு முகூர்த்த காலம் நரகத்துக்கும் போய் விட்டு வருகிறான். இவ்வளவு பொய் புனைசுருட்டு எல்லாம் செய்து பாரத யுத்தத்துக்கே காரணமாக இருந்த துரியனுக்கு கூட அவ்வளவு வசை சேரவில்லை. ஆனால் யுதிஷ்டிரன் பெற்ற கெட்ட பெயர் மிகப்பெரியது. இதற்கு முக்கியக் காரணமே அவன் பொய் சொல்ல மாட்டான் என்ற மக்களது அசைக்கமுடியாத நம்பிக்கை அசைந்ததே ஆகும்.
அதே போல எப்போதும் தியாகம் செய்து வருபவர்களும் ரொம்பவுமே போர். உதாரணத்துக்கு குடும்பத்துக்கு மூத்த மகன் தன் தம்பி தங்கைகளுக்காக தியாகம் செய்து எல்லோரையும் முன்னேற்றி தான் மட்டும் சந்தியில் நிற்பது பல தமிழ், இந்தி ஆகிய மொழிப்படங்களில் காட்டப்பட்டுள்ளன. படிக்காதவன், ஆறிலிருந்து இருபது வரை, குலவிளக்கு ஆகிய பல படங்கள் வந்து பார்வையாளர்களின் கண்களை குளமாக்கிச் சென்றுள்ளன.
ஆனால் எனக்கு மட்டும் இம்மாதிரி தியாகம் செய்பவர்களைக் கண்டாலே பற்றிக் கொண்டு வரும். அது என்ன இவங்க மட்டும் பெரிய புடுங்கிகள் மாதிரி வளைய வராங்கன்னு என்ணுவேன். சரி, எனக்குத்தான் பிடிக்கவில்லை சம்பந்தப்பட்ட கதைகளில் கூட மற்ற பாத்திரங்கள் அவர்களை விரும்புவதில்லை, ஏன்? இத்தனைக்கும் அவர்கள் இந்த தியாகங்களின் பலன்களை பெற்றவர்களே.
இதில்தான் மனித மனத்தின் ஒரு சூட்சுமம் புலன்படும். தாங்கள் ஒரு முயற்சியும் செய்யாது மற்றவர்கள் செய்யும் தியாகத்தின் பலனை மட்டும் அனுபவிப்பவர்கள் மிகுந்த தாழ்வுணர்ச்சியை அடைகின்றனர். அவர்களது நன்றிக்கடன் அளவுக்கு மீறி போகிறது, ஒரு நிலைக்கு அப்புறம் அவர்களது மனது கடுமையாகிறது. என்ன பெரிசா செஞ்சு கிழிச்சான் இவன். செய்ய வேண்டிய கடமை அதனால்தானே செஞ்சான் என்றெல்லாம் விட்டேற்றியாக யோசித்து பிறகு ஒரு புள்ளியில் வெளிப்படையாக சொல்லவும் சொல்கின்றனர்.
தேவையான அளவுக்கு மட்டுமே உதவி, பிறகு அவரவர் தத்தம் பலத்தால் தங்களை பார்த்து கொள்ள செய்வதுதான் மிகச்சரியான அணுகுமுறை. அதை விடுத்து, “அவனுக்கு என்ன தெரியும் அவன் குழந்தைதானே” என்று சம்பந்தப்பட்ட குழந்தையே 30 வயது தாண்டிய பிறகும் தியாகம் செய்யும் அண்ணாவோ அக்காவோ கூறினால் குழந்தைக்கு என்ன போச்சு? எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு தியாகம் செய்பவரை அம்போ என விடுவதுதான் நடக்கிறது.
இங்கு அளவுக்கு மீறி தியாகம் செய்பவர்களைத்தான் நான் குற்றம் சொல்வேன். அவர்களை மன நோயாளிகளாகத்தான் நான் பார்க்கிறேன். ஒரு பதிவில் கூட பார்த்தேன், “கோலங்கள் சீரியலில் அபி மனநோயாளியா, தொல்காப்பியன் மன நோயாளியா” என்று கேட்டிருந்தார்கள். இருவருக்குமே இதில் சம அளவு போட்டிதான். இப்படி நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கடைசி அரை எபிசோடில் ஆதி திருந்தி, “அக்கா என்னை மன்னிச்சுடுன்னு” சொல்ல அபியும் மன்னிச்சு தொலைப்பாள். நேயர்கள் வாயில் விரலை வச்சுண்டு பாத்திண்டிருப்பாங்க.
நன்றி ..திரு.ராகவன்.
டோண்டுராகவன்...............