ஒவ்வொரு இண்டர்வியூவிலும் இதை நான் தவறாது கேட்கிறேன்: “இந்த பையன் ரொம்ப
இன்ட்ராவர்ட்டா இருக்கான். உம்மணாமூஞ்சி மாதிரி இருக்கற இவன் தேறமாட்டான்.
வாயைத் திறந்து கூட பேசாதவனை வச்சு எப்படி வேலை செய்யறது?”
இன்ட்ராவர்ட்:
“Introvert” : இன்று தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஒரு ஆளுமைப் பண்பு. கார்ல்
யூங் எனும் உளவியல் அறிஞர் ஆளுமைகளை வகைப்படுத்தினார். தன் இருப்பிற்குத்
தேவையான சக்தியையும் உந்துதலையும் உள்ளிருந்து பெறுபவனை இன்ட்ராவர்ட்
என்றார். இவற்றை வெளியிலிருந்து பெறுபவனை எக்ஸ்ட்ராவர்ட் என்றார்.
ஒரு இன்ட்ராவர்ட் தன் உலகில் திளைத்து இருப்பவன். யாரும் இல்லாமல் தன்னை
நிறைவாக வைத்து கொள்ளத் தெரிந்தவன். இவர்கள் தனியாக செய்யும் வேலைகளை
விரும்பி செய்வார்கள். உணர்வுகளை தாமாக முன் வந்து பகிராதவர்கள். பேசுவதை
விட கேட்பதில் கவனம் செலுத்துவார்கள்.
எக்ஸ்ட்ராவர்ட்
எக்ஸ்ட்ராவர்ட் ஆசாமிக்கு சுற்றிலும் ஆட்கள் வேண்டும். ரயிலில்
அன்னியர்களிடம் கூட இவர்கள் கேட்காமலேயே கருத்து சொல்வார்கள். அரட்டை
பிரியர்களான இவர்களுக்கு சீக்கிரம் எல்லாம் போரடித்துவிடும். ஒரு நிமிடம்
தனியே இருந்தாலும் உடனே செல்போனிலாவது யாரிடமாவது பேசினால் தான் உயிர்
வரும். இவர்கள் பிறர் சொல்வதை கேட்பதை விட தாம் பேசுவதில் குறியாக
இருப்பார்கள்.