Nov 16, 2013

குழந்தைகள் மற்றவர்களிடம் பழகும் விதம் ?.!...

என்னை சந்திக்க தங்கள் ஆறு வயது குழந்தையுடன் பெற்றோர் இருவர் வந்தனர். பேசிக் கொண்டிருந்தவர்கள் குழந்தையைப் பற்றிய குறைகளை பகிர்ந்து கொள்ளத் தொடங்கினர். படித்தல், திறமைகள் என ஒவ்வொன்றாக
குழந்தையைப் பற்றிய தங்கள் எதிர்பார்ப்புகளையும், குழந்தையின் உண்மையான நடத்தைகளையும் விவரித்துக் கொண்டே வந்தனர். அதுவரை அறைக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த பையன் அப்போது உள்ளே நுழைந்தான். உடனே பையனின் அம்மா ‘சாருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களைச் சொல்’ என
பையனிடம் கூறினார். பையனோ மிகவும் வெட்கத்துடன் மறுத்தான். ஆனால் பெற்றோர்கள் விடவில்லை. திரும்பத் திரும்பத் அதட்டி அப்பையன் என் கையைப் பிடித்து குலுக்கி வாழ்த்துச் சொல்லும் வரை கட்டாயப்படுத்தினர். கடும் நிராகரிப்புக்குப் பின்னும் கைகுலுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதை உணர்ந்த அவர்களின் மகன்
அழுது கொண்டே அறையை விட்டு ஓடிவிட்டான். அவனுக்கு மிகுந்த அவமானமாகப் போய் விட்டது.

பையன் வெளியேறி விட்ட பின் அவனின் பெற்றோர் மீண்டும் தொடர்ந்தனர். ‘இப்படித்தான் சார், யாரிடமும் பேசுவதில்லை. எப்படி பழகுவது என்று தெரியவில்லை. ஆனால் நாங்கள் விடுவதில்லை. செய்ய வேண்டியதை செய்யும் வரை, சொல்ல வேண்டியதை சொல்லும் வரை விடமாட்டோம்’ என்றனர்.

அவர்களிடம் இதே சூழ்நிலையில் நானாக இருந்தால் என்ன செய்வேன் என்பதைக் கேளுங்கள் என்றேன். பையனின் பெற்றோர் இருவரும் அவ்வாறே வினவினர். ‘பையனை அழைத்து உங்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறுமாறு கேட்டுக் கொள்வேன். ஆனால் என் மகன் அவ்வாறு வாழ்த்துக்கூறவில்லை என்றால் நான் அவனை கட்டாயப்படுத்த மாட்டேன். என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்ல உரிமை உண்டு. செய்தும் காட்டலாம். ஆனால் கட்டாயப்படுத்த நமக்கு உரிமை இல்லை. நாம் சொல்வது நல்லதானாலும் கெட்டதானாலும் அதைச் செய்யலாமா வேண்டாமா என்று தீர்மானிப்பது குழந்தையின் உரிமை. இந்த அணுகுமுறையைப் பின்பற்றினால் ஓரிருமுறை நாம் சொல்வதை செய்யாவிட்டாலும் பின்னர் குழந்தைகள் தானாக நாம் சொல்லும், செய்யும் நல்லவற்றை பின்பற்றுவார்கள்’ என்றேன்.

சமூக சூழல்களில் குழந்தைகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை நாம் அவர்களின் மேல் திணிக்கக்கூடாது. மாறாக உதாரண புருஷர்களாக நாம் திகழ வேண்டும். தொடர்ந்து அவ்வாறு நாம் நடந்து கொள்வதை உன்னிப்பாக கவனித்து வருவார்கள் குழந்தைகள். ஆனால் சொல்லும் போதெல்லாம் அவ்வாறு நடந்து கொள்ளாமல் போகலாம். அதே சமயத்தில் தேவை ஏற்படும் போது நம் நல்ல நடத்தை குழந்தைகள் வழியாக இயல்பாக வெளிப்படும்.

எனவே, குழந்தைகள் பிறரிடம் எவ்வாறு பழக வேண்டும் என்று பெற்றோர்கள் நினைக்கிறார்களோ அவ்வாறு பெற்றோர்கள் குழந்தைள் முன் பிறரிடம் பழகிவர வேண்டும். ஒவ்வொரு முறையும் நல்ல நடத்தைகளை விடாமல் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். உதாரணமாக, வீட்டுக்கு விருந்தினர் வரும்போது குழந்தைகள் முன் விருந்தினரை முகமலர்ச்சியோடு பெற்றோர் வரவேற்க வேண்டும். அவ்வாறு வரவேற்பு அளிக்கும் போது குழந்தைகள் வேறெங்கேனும் விளையாடிக் கொண்டு இருந்தாலும் அவர்களை அழைத்து விருந்தினரை வரவேற்கும்படி கூற வேண்டும். அதைப் போலவே விருந்தினர்கள் புறப்படும் போது சென்று வாருங்கள் எனக் கூறி வழி அனுப்புமாறு கூற வேண்டும். அதைக் குழந்தைகள் செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி. அதுபற்றி கவலைப்பட வேண்டாம். காலம் கனியும் போது அவர்கள் தானாகவே விருந்தினரை உபசரிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

பிறரிடமும் பிறர் முன்னும் குழந்தைகள் நடந்து கொள்ள வேண்டிய முறைகளை கற்பிப்பது இவ்வாறு தான். பெற்றோர்களின் பழகும் விதம் நல்ல விதமாக இருக்கும்பட்சத்தில் குழந்தையின் பழகும் விதமும் நன்றாகவே இருக்கும். இதற்காக பெற்றோர்கள் பிறரிடம் நன்முறையில் பழகும் விதத்தைக் கற்றுக் கொள்வது நல்லது.

No comments: