எல்லா சந்தர்ப்பங்களிலும் எல்லா உண்மைகளையும் போட்டு உடைத்துவிட முடியாது.
நம் பொருளாதாரக் கஷ்டங்களைச் சொன்னால் அவை குறித்து இரக்கப்படுகிறவர்கள், உதவ முன்வருபவர்கள் மட்டுமல்ல உள்ளூர மகிழ்பவர்களும் இருக்கிறார்கள். இவர்களிடம் நாம் ஏன் புலம்ப வேண்டும்? விழுங்க வேண்டியதுதான்.
ஊரறியப் பெருமைப்பட்டுக் கொள்வதற்காகத் தங்களது வசதி வாய்ப்புகளை, வளங்களைப் பேசுபவர்கள் இருக்கிறார்கள். இதில் மகிழ்பவர்கள் சில சதவிகிதமே. பொறாமைப்பட்டுச் சாகிறவர்களும்; அப்படியா சேதி? உன்னை இனியும் வளர விடுவேனா பார் என்று கெடுதல் வேலையிலும் அவதூறு பிரசாரத்திலும் இறங்குபவர்கள் இருக்கிறார்கள். இவர்களை அடையாளம் கண்டு, இவர்கள் குடையும்போது வார்த்தைகளை விழுங்க வேண்டியதுதான், நாம் பிறரைப் பற்றி எத்துணையோ இரகசியங்களை அறிந்து வைத்திருக்கிறோம். அவை வெளிப்பட்டால் அவர்களுக்குச் சிறுசிறு பாதிப்பிலிருந்து தலைதூக்க முடியாத பாதிப்புகள் வரை ஏற்படலாம் என்பதையும் உணர்ந்திருக்கிறோம். ”சும்மா சொல்லுங்க; இருக்கிறதைத்தானே சொல்லப் போறீங்க? கூட்டிக் குறைச்சுப் பேசுகிறவர் இல்லையே நீங்க” என்று தாஜா செய்கிற பாணியில் பேசி விஷயத்தைக் கறக்க நினைப்பவர்களிடமும் வார்த்தைகளை விழுங்க வேண்டியதுதான்.
பிறரைப் பற்றிய புகார்ப் பட்டியலை வேறு வழியின்றி நாமே முன்வந்து வாசிக்க நேரும்போது, அதனால் அவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளின் வீரியத்தை மனத்தில் கொண்டு வார்த்தைகளைச் சற்று விழுங்கலாம். நம் நோக்கம் பழிவாங்குவது அல்ல. இனி அத் தவறு மறுபடி நிகழக்கூடாது என்பது. அதற்கு ஏற்றவாறு அடக்கி வாசிக்கலாம். அதுமட்டுமல்ல, கண்டிச்சு வையுங்க. தண்டிச்சிராதீங்க என்றும் நான்கு வார்த்தை சேர்த்துச் சொல்லலாம்.
நன்றி;அனுபவத்திற்கு...
No comments:
Post a Comment