Mar 15, 2009

விஜயகாந்தின் வெற்றிக்கு காரணங்கள..!?

2006 சட்டமன்றத் தேர்தலில் கணிசமான அளவு வாக்குகளைப் பெற்றதோடு விருத்தாசலம் தொகுதியில் வெற்றிபெற்ற சமயத்தில் விஜயகாந்தின் வெற்றிக்கு என்னென்ன காரணங்கள் சொல்லப்பட்டன?

பிரபலமான நடிகர். அபரிமிதமான ரசிகர்கூட்டம். கைவசம் நிறைய பணம் இருக்கிறது. எம்.ஜி.ஆர் விசுவாசிகளைத் தன்பக்கம் இழுத்தார். கறுப்பு எம்.ஜி.ஆர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். இப்படி ஆளுக்கொரு கோணத்தில் ஆயிரத்தெட்டு கருத்துகள். இவற்றில் எது நிஜம்? என்னுடைய பார்வையில் ‘தேர்தலைத் தனித்து சந்திப்பேன்’ என்று விஜயகாந்த் சொன்னதுதான் அவருடைய நிஜமான பலம். அதுதான் சுமார் எட்டரை சதவீத வாக்குகளையும் அவருடைய கட்சிக்குப் பெற்றுக்கொடுத்துள்ளது.

திமுக, அதிமுகவுக்கு மாற்றாக இன்னொரு கட்சியை அடையாளம் காட்டவேண்டும் என்றால் யாரைக் காட்டுவது? காங்கிரஸ். மதிமுக. பாமக. ம்ஹூம். இவை எல்லாமே தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் திமுக அல்லது அதிமுகவின் அரவணைப்பில் இருக்கின்ற கட்சிகள். ஆனால் விஜயகாந்தின் தேமுதிக இந்தக் கட்சிகளுக்கு நேர் எதிரான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

தேமுதிகவின் தேர்தல் அறிக்கைகளில் ஒன்றும் பிரமாதமான திட்டங்கள் இல்லை. வசீகரிக்கும் வாக்குறுதிகள் எதுவும் இல்லை. வீட்டுக்கு வீடு பசு மாடு தருவேன் என்பன போன்ற அமெச்சூர் சங்கதிகள் அதிகம் எட்டிப்பார்த்தன. இருந்தும் வாக்காளர்கள் அவருடைய கட்சிக்கு வாக்களித்தார்கள். பெரும்பாலான தொகுதிகளில் இரண்டு கழகங்களின் வெற்றி, தோல்வியைப் புரட்டிப் போட்டனர் தேமுதிக வேட்பாளர்கள். இத்தனைக்கும் காரணம், ‘நான் தனி ஜாதி’ என்ற விஜயகாந்தின் அறிவிப்புதான்.

2011ல் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பதுதான் விஜயகாந்தின் இலக்கு என்றால் மக்கள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைப் காப்பாற்றிக் கொள்ளவேண்டியது மிக அவசியம். கட்சி செலவுக்கு டெல்லி நிதி தருகிறது, கூட்டணி அமைத்தால் ஒன்று அல்லது இரண்டு எம்.பி சீட்டுகள் கிடைக்கும் என்பன போன்ற சிற்றின்பங்களுக்கு அடிமையாகும் பட்சத்தில் அதற்காக அவர் கொடுக்க வேண்டிய விலை மிகவும் அதிகம்.

கூட்டணியில் இணைந்தால் குட்டையில் ஊறுகின்ற மட்டைகள் பட்டியலில் தேமுதிகவும் இடம்பெற்றுவிடும். இதன்மூலம் மாற்றுசக்தி என்ற பிம்பம் சுக்கல்நூறாகச் சிதறுவது நிச்சயம். தனித்துப்போட்டி என்பது பொன் முட்டையிடும் வாத்து. அவசரப்படு அறுத்துவிடுவது ஆபத்து.

ஒருவேளை திமுக அணியில் சேர்வதாக வைத்துக் கொள்வோம். அப்படிச் சேர்ந்தால் குறைந்தபட்சம் ஒரு வெற்றியாவது கிடைக்கும். ஆனால் அந்த வெற்றிக்கு விஜயகாந்தால் எந்தக்காலத்திலும் உரிமை கொண்டாட முடியாது. மூச்சுக்கு முந்நூறு தடவை சொல்லிக்காட்டி விடுவார் கலைஞர். (உதாரணம்: இந்திய கம்யூனிஸ்டின் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டின் டி.கே. ரங்கராஜன்) இதன்மூலம் தேமுதிகவின் இமேஜ் அதளபாதாளத்துக்குச் செல்வவதற்கான அத்தனை வாய்ப்புகளும் இருக்கின்றன. அதிமுக அணியில் சேர்ந்தால் கேட்கவே வேண்டாம். தன்மானத்தைக் காவு கொடுத்துவிட்டுத்தான் கூட்டணி ஒப்பந்தத்திலேயே கையொப்பமிட வேண்டும்.

இந்தமுறை திமுக அணியில் இணைந்து போட்டியிடுகிறது தேமுதிக. வெற்றி அல்லது தோல்வி. திடீரென உறவில் சிக்கல் ஏற்படுகிறது. கூட்டணி முறிகிறது. அடுத்து அதிமுக அழைக்கிறது. கவர்ச்சிகரமான வாய்ப்புகளை வழங்குகிறது. உதாரணமாக, சரிபாதி இடம், ஆளுக்கு இரண்டரை ஆண்டுகள் ஆட்சி. இப்படி ஏதோ ஒரு ஆஃபர். என்ன செய்வார் விஜயகாந்த்?

முழுசாக நனைந்துவிட்ட தொண்டர்கள் முக்காடை உதறுவதற்குத் தயாராகிவிடுவார்கள். அதிமுகவுடன் அணி அமைக்கவேண்டும் என்று குரலெழுப்புவார்கள். தவிர்க்க முடியாமல் அதிமுக அணியில் இணைந்தால் தேமுதிகவின் எதிர்காலம் என்னவாகும்? தேர்தலுக்குத் தேர்தல் அணி மாறுகின்ற பாமக, மதிமுக போன்ற கட்சிகளில் இருந்து தன்னுடைய கட்சியை எப்படி வேறுபடுத்திக் காட்டுவார் விஜயகாந்த்? திண்டாட்டம்தான்.

நாடாளுமன்றத் தேர்தல் சூடு அடங்குவதற்குள் சட்டமன்றத் தேர்தல் வந்துவிடும். கூட்டணியும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம் என்று தனித்துப் போட்டியிட்டால் எந்த முகத்தை வைத்துக் கொண்டு இரு கழகங்களையும் சாட முடியும்? அவர்களுக்கு நான் சரியான மாற்று என்று எப்படி மக்களிடம் மார்தட்ட முடியும்? வாய்ப்பே இல்லை. சப்பை கட்டு கட்டுவதைத் தவிர வேறு வழியில்லை.

ஒவ்வொரு முறை கூட்டணி மாறும்போதும் கலைஞரும் சரி, ஜெயலலிதாவும் சரி, அழகாக தன்னிலை விளக்கம் கொடுப்பார்கள். தொண்டர்களும் அதை ஏற்றுக் கொள்வார்கள். மக்களும்கூட அதைக் கண்டுகொள்ள மாட்டார்கள். அதன் விளைவாகவே திமுக பாஜகவுடன் அணி அமைத்த போதும் வெற்றி கிடைத்தது. காங்கிரஸுடன் அணி அமைத்தபோதும் வெற்றி கிடைத்தது. அதிமுகவுக்கும் அப்படியே.

அதே பாதையில் விஜயகாந்த்தும் நாம் ஏன் கூட்டணி அமைத்தேன் அல்லது தனித்துப் போட்டியிடுவதற்கு என்ன காரணம் என்று தனித்தனியே விளக்கம் கொடுத்தால் தொண்டர்களும் ஏற்கமாட்டார்கள். மக்களும் வரவேற்க மாட்டார்கள். கலைஞர், ஜெயலலிதா சொல்லும் விளக்கத்தை விஜயகாந்த்திடம் இருந்தும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை. இதை அவர் புரிந்துகொள்ளவேண்டும்.

தனித்தன்மை என்பது தேமுதிகவின் பொக்கிஷம். அதை பத்திரமாகப் பாதுகாத்து வைத்துக் கொள்வதில்தான் தேமுதிகவின் எதிர்காலம் இருக்கிறது. தன்னுடைய பொக்கிஷத்தை போயஸ் தோட்டத்திலோ அல்லது கோபாலபுரத்திலோ அடகு வைத்துவிட்டால் அதை மீட்பது மிகக்கடினம்.

‘உன்னுடை பலம் எது? அதை அடிப்படையாகக்கொண்டு உன்னுடைய அடுத்தகட்ட நகர்வுகளைத் தீர்மானி’

இது எனக்கு மிகவும் பிடித்தமான வாசகம்.

நான் படித்ததில் பிடித்தது...

No comments: