Aug 16, 2011

கணினியில் வேவு பார்க்கப் பயன்படும் மென்பொருட்கள்.



நீங்கள் வீட்டுப்பாடம் செய்யாமல் 'அதோ பார் காரு, காருக்குள்ள யாரு' என்று பாட்டுப்பாடிய வயதில் உங்கள் குழந்தைகள் இணையத்தில் உலகைக் காண ஆரம்பித்து விடுகிற அளவிற்கு இணையமில்லா இல்லங்கள் இல்லையென்றாகிவிட்டது. இணையமென்பது மின்சாரம் மாதிரி, எந்த அளவுக்கு உபயோகமாக, மிக திறன்மிக்கதாக இருக்கிறதோ அதே அளவுக்கு மிக மிக ஆபத்தானதும் கூட. தமிழ் பேசும் நல்லுலகின் தெருக்களில் இணையம் முதன் முதலில் பவனி வந்த காலகட்டத்தில் மட்டுமின்றி, இன்றும் புதிதாக இணையத்தினைப் பயன்படுத்த ஆரம்பிக்கும் வாலிப, வயோதிக அன்பர்களே கண்டதையும் பார்த்து விட்டு கண்ணைக் கெடுத்து, ஒரு வாரம் காய்ச்சலில் கிடக்கும் சம்பவங்கள் பல நமக்கு பழக்கமானவையே. 



இப்படி வயது வந்தோருக்கான விஷயங்கள் மட்டுமின்றி, பலருக்குச் சாதரணமாகத் தெரியும் செய்திகளுக்கானப் புகைப்பட பதிவுகள், சிலருக்கு மனச்சிதைவைக்கூட ஏற்படுத்தலாம்.  பெரியவர்களுக்கே சவால் விடும் சக்திமிக்க ஊடகமான இணையத்தினை இன்றையக் குழந்தைகள் கையாளும் போது, இணையம் குறித்துத் தெரிந்த பெற்றோர்களுக்கு பதட்டமாக இருக்கும். அந்த பதட்டத்தின் காரணமாக மகனோ, மகளோ கணினி முன் அமர்ந்தால் வேறு வழியின்றி இவர்களும் கன்னத்தில் கைவைத்து திரையை வெறித்தபடி அமர்ந்திருப்பார்கள். இணையம் குறித்தான விவரங்கள அறியாத பெற்றோர்கள் தன் பிள்ளை சந்திரனுக்கு ராக்கெட் குறித்தான ஆராய்ச்சியில் இருப்பது போல மாயைத் தோன்றும், அதன் காரணத்தால் தனியறை ஒன்று ஏற்பாடு செய்து கணினியும், பிள்ளையும் சூடாகி விடக்கூடாதென்பதற்காக குளிர்வசதி செய்து கொடுத்து தூரத்தில் நின்று ரசிப்பார்கள்.