Showing posts with label ஆண்கள். Show all posts
Showing posts with label ஆண்கள். Show all posts

Jun 20, 2010

அவளுக்கென்று ஒரு நல்ல கணவன்...

அந்த மாமியாருக்கு தெரியும் தான், அவள் மருமகள் பணக்காரி என்று, இருந்தாலும், அவளால் இப்படி எல்லாம் குத்தலாக பேசாமல் இருக்கவே முடியவில்லை. மருமகள் தன் கணவனுக்கு ஆசையாக எதையாவது சமைத்தால், ”இதை எல்லாம் மனிஷன் சாப்பிடுவானா,” என்று எல்லாவற்றையும் எடுத்து குப்பையில் கொட்டிவிட்டு, தன் வீட்டில் இருந்து கொண்டு வந்த பழைய சாம்பாரை எடுத்து தன் பையனுக்கு பரிமாறுவாள். மருமகள் தன் கணவனுக்கு கேக் என்றால் பிடிக்குமே என்று முட்டையை வாங்கி வந்தால், அதை ஒளித்து வைத்து விடுவாள் மாமியார். மருமகள் தன் கணவனின் சட்டைகளை தானே தன் கையால் இச்திரி செய்தால், “உனக்கு போட தெரியாது, நானே கடையில குடுத்து பண்ணிக்கிறேன், அது தான் அவனுக்கு பிடிக்கும்” என்பாள். இதை எல்லாம் விட பெரிய கூத்து, மகனும் மருமகளும் தனியாக இருந்தால் எங்கே மகன் மயங்கிவிடப்போகிறானோ என்று பயந்து வாரத்திற்கு நான்கு நாட்கள் பையன் வீட்டிலேயே டேரா போட்டுவிடுவாள், “என்னமோ தெரியலை, உடம்பே சரியில்லை…..” என்ற ஒரு வசனத்துடன்.

Feb 20, 2010

ஆண்களுக்கான எளிய கருத்தடை முறை ?!!..

No Scalpel Vasectomy

கேள்வி: பெண்கள் செய்து கொள்ளும் கருத்தடை விட ஆண்கள் செய்துகொள்ளும் புதிய குடும்பநல கருத்தடை எவ்வாறு சிறப்பு வாய்ந்தது?
பதில்: பெண்கள் செய்து கொள்ளும் கருத்தடை முறையானது பெண்களின் வயிற்றுப் பகுதியில் உள் உறுப்புகளில் செய்ய வேண்டியுள்ளது. இதனால் அவர்களுக்கு மயக்க மருந்து
கொடுக்க வேண்டியுள்ளது. கத்தி, கத்திரிக்கோல் ஆகியவைகளை உபயோகித்து அறுவை சிகிச்சை செய்வதால் பெண்களுக்கு இரத்தப்போக்கு ஏற்படும். வலி ஏற்படும், தழும்பு தெரியும். மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இருக்கும். அன்றாட பணிகளை முன்போல செய்யமுடியாத சிரமம் ஏற்படும். அவர்களின் உடல் பலவீனமடையும். இரத்தசோகை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே
பெண்களை விட ஆண்களுக்கு செய்யும் No Scalpel Vasectomy கருத்தடை எளிமையானது.
கேள்வி: ஆண்களுக்கான ‘No Scalpel Vasectomy (NSV)’ முறை என்றால் என்ன?
பதில்: ஆண்களுக்கான புதிய கருத்தடை

Oct 18, 2009

இளம் பெண்களுக்காக --- பிரம்மச்சாரியை அறிய உதவும் வழிகாட்டி.!.!.!


கூச்ச சுபாவமுல்ல பிரம்மச்சாரி....................

இவரிடம் நீங்கள், "அன்பே, நீ என்ன நினைக்கிறாய்?" என்று கேட்டால், கண் இமைகள் படபடக்க இவர் உங்களைப் பார்க்கும் பார்வை உங்கள் சிந்தனையை நிறுத்திவிடும் அளவுக்கு கூர்மையானதாக இருக்கும். அதோடு இவரது மேலுதட்டின் மேல் லேசாக வியர்த்திருக்கும். உங்களிடமிருந்து அதை மறைக்க விரும்புவார். தனது கண்களால் அறை முழுக்க தேடுவார், வெளியேற வழி இருக்கிறதா என்று.

இவரை நீங்கள் சோதித்துப் பார்க்க விரும்பினால், உங்கள் முகத்தை சற்று வெறுமையாக வைத்துக் கொண்டு, உங்கள் இருவருக்கு இடையிலான உறவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று அவரிடம் கேளுங்கள். உறவு பற்றி நீங்கள் பேச விரும்புவதாகவும் கூறுங்கள். கடிகாரத்தின் டிக்டிக் ஒலியை நினைவுபடுத்துவது போல் பட்பட்டென்று பேசுங்கள். உடனே அவர் உடல் சுருங்கி வேகமாக ஒரு மூலைக்கு போக எத்தனிப்பார். அவர் மயங்கிவிட்டாரோ என்று எண்ணி நீங்கள் அவர் முகத்தில் தெளிக்க சோடாவை தேட வேண்டிய நிலைமை கூட ஏற்படலாம். இந்த விளையாட்டு முடிவில்லாமல் தொடரும். மீண்டும் மீண்டும் நீங்கள் இதையே பேசினால் அவர் ஓலமிட்டு அழுதாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இவர் இப்படித்தான். இவரது கூச்சத்தை உங்களால் போக்க முடியாது. இதே போல் வேண்டுமானால் யாருடைய உதவியுமின்றி இவருடன் விளையாடிக் கொண்டிருக்கலாம்.

லட்சியவாதி பிரம்மச்சாரி.................

இந்த வகையைச் சேர்ந்தவர் தனது மனதில் ஒரு லட்சியத்தை வைத்துக் கொண்டு அதை நிறைவேற்றுவதற்காகத் தான் உலகில் தான் அவதரித்திருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பார். உலகம் போற்றும் நடிகனாவது, புற்றுநோயைக் குணப்படுத்துவது அல்லது நாட்டின் ஜனாதிபதியாவது போன்று ஏதாவதொரு எண்ணத்தை தனது லட்சியமாக கொண்டிருப்பார். இவரது எண்ணம் எல்லாம் அதை நோக்கியே இருக்கும். உங்களுக்காக நேரம் செலவழிக்க இவரால் முடியாது. அவரது சிந்தனை மற்றும் லட்சியம் நிச்சயமாக உங்களைக் கவரும்.

அதை அடைய அவருக்கு நீங்கள் உதவவும் முன்வரலாம். ஆனால் உங்களின் தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்ற அவர் முன்வருவது கடினம். உங்களுக்காக நேரம் ஒதுக்கும்படி இவரிடம் நீங்கள் கேட்டால், நீங்கள் நாள் முழுக்க காத்திருக்க வேண்டியது தான். இந்த நிலைமை யாருக்கு வேண்டும்? தன் விருப்பங்களைவிட உங்கள் விருப்பங்களை பூர்த்தி செய்ய விரும்புபவரை நீங்கள் தேடுங்கள்.

மணமான பிரம்மச்சாரி............

உங்கள் இருவரிடையேயான உறவு நிச்சயம் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். அவரை அவரது மனைவி நிச்சயம் புரிந்து கொண்டிருக்க மாட்டார். தனது மனைவியுடன் அவர் படுக்கையைப் பகிர்ந்து பல ஆண்டுகள் கூட ஆகியிருக்கலாம். அந்த மனைவியை உங்கள் முன் அவர் துச்சமாக நினைப்பார். உங்களிடம் இவர் அதிக அக்கறை காட்டுவார். தேன் தடவிய வார்த்தைகளில் பேசுவார். ரொமான்டிக்காக இருப்பார். இவர் திருமணம் ஆகாதவர் என்றே பலரும் கருதக்கூடும். நீங்களும் அப்படி கருதியிருந்தால்?

அதனால் இதை எப்படி தெரிந்துகொள்வது? அது மிகவும் சுலபம். இவர் தனது தொலைபேசி எண்களை உங்களிடம் தரமாட்டார். வார இறுதி நாட்கள் அல்லது விடுமுறைகளின்போது இவரை உங்களால் பார்க்க முடியாது. உங்கள் சந்திப்புகளைக் கடைசி நிமிடத்தில் இவர் ஏதாவதொரு காரணம் சொல்லி மாற்றிவிடுவார். உங்களிடத்தில் அதிக நேரம் இவர் இருக்க மாட்டார். எப்படியோ நீங்கள் இவரது தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து பேசினால் மறுமுனையில் நீங்கள் பேசும் நபர் பெரும்பாலும் இவரது மனைவியாக இருக்கக்கூடும். இந்த வகையினரை நீங்கள் தேர்ந்தெடுக்காமல் இருப்பதே உங்களுக்கு நல்லது.

திருமணம் முறிந்த பிரம்மச்சாரி....................

இவரது முன்னால் மனைவியின் நிழலில் தான் நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள், இருந்தாலும் நீங்கள் இவரை ஆட்சி புரிவதாக
நினைப்பீர்கள். இதுபோன்றவர்கள் அதிகம் வெறுமையாக இருப்பார்கள். இவர் வசிப்பிடம் பர்னீஷ் செய்யப்படாமல் தற்காலிகமான இடமாக இருக்கும். உங்கள் பார்வையில் படாத இடத்தில் சில புகைப்படங்களை அவர் வைத்திருக்கலாம். இவர் பிளாஸ்டிக் ஸ்பூன்களையும் காகித தட்டுகளையும் பயன்படுத்தபவராக இருக்கலாம்.

இவருக்கு சரியான ஜோடியாக இருக்க நீங்கள் விரும்பலாம், ஆனால் அது அவ்வளவு எளிதில் நடந்து விடாது. முன்னாள் மனைவியால் வெறுப்புக்கு ஆளாக்கப்பட்ட இவர், உங்களையும் அதுபோன்றவர்களில் ஒருவராகக் கருதலாம். இவரை உங்களவராக மாற்றிவிட முடியும் என நீங்கள் நம்புவீர்கள். ஆனால் பழைய நினைவுகளிலிருந்து அவரை மீட்டெடுப்பது அவ்வளவு சுலபமானதல்ல.


மன உளைச்சல் மிக்க பிரம்மச்சாரி...................

இவருக்கு தனது உடல் நலத்தின் மீது தான் அதிக கவனம் இருக்கும். வீட்டிலிருந்து இவருடன் நீங்கள் வெளியே செல்லும் முன்னர், அந்த நாளுக்குத் தேவையான மாத்திரை மற்றும் மருந்துகளை இவர் சேகரித்து எடுத்துக் கொள்கிற வரையில் நீங்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருக்கும். உடல் சத்து மாத்திரைகளை வாங்குவதற்காக இவர் அடிக்கடி மருந்து கடைக்குச் செல்வார். தனது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு செக்ஸில் அதிகம் ஈடுபட இவர் விரும்பால் போகலாம். இவர் முகத்தில் சிரிப்பைக் காண்பது அரிது. அடிக்கடி முதுகு மற்றும் கால்களைப் பிடித்து விட கூறுவார். இதையும் மீறி இவரை நீங்கள் விரும்பினால் அதற்குமேல் உங்கள் விருப்பம்.

பொறுப்பற்ற பிரம்மச்சாரி...................

துள்ளல் மனம் மிக்க இவர் பார்ப்பதற்கு அழகானவராகவும் உங்கள் கண்களுக்குத் தெரிவார். ஆனால் பொறுப்பான செயல்களை இவரிடம் நீங்கள் எதிர்பார்க்க முடியாது. இவரை பொறுப்பற்றவர் என்பதைவிட பொறுப்புகள் என்றால் என்ன என்பதையே அறியாதவர் அல்லது அறிந்து கொள்ள விரும்பாதவர் எனலாம். இவருடன் சில காலம் பழகிப் பார்த்தால் உங்களுக்கே அது புரியும். பர்சில் அல்லது கிரெடிட் கார்டில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதைக்கூட அறியாமல் உங்களை ஷாப்பிங் கூட்டிச் செல்வார். பணம் போதவில்லை என்பதை அறிந்தபின்னர் தான் தனது கணக்கு குறித்து விவரம் கேட்பார். அப்போது தான் பல காலமாக அவர் கணக்கில் பணம் அல்லது கடன் அட்டைக்கான வட்டியை அவர் சரிவர செலுத்தி வரவில்லை என்ற விவரமே அவருக்குத் தெரியவரும். இதுமட்டுமல்ல, தொலைபேசி, மின்சாரம் உள்ளிட்ட பில்களைக் கட்டுவதில் கூட இவர் அடிக்கடி காலதாமதம் ஏற்படுத்தியிருப்பார். சிறந்த அக்கவுண்டெண்ட் ஆக இருந்தால் தான் இவருடன் உங்களால் காலம் தள்ள முடியும். இப்படிபட்டவரால் உங்களுக்கு கிடைக்கப் போவது என்ன? என்ற கேள்வியை உங்களுக்குள்ளேயே கேட்டுப் பாருங்கள், விடை கிடைக்கும்.

படாஃபட் பிரம்மச்சாரி......................

எல்லா விஷயத்திலுமே கச்சிதமானவராக இவர் உங்களுக்குத் தெரிவார். பெருந்தன்மை மிக்கவராக இருப்பார். இவரது வசிப்பிடம் எல்லா பொருள்களுடன் அழகானதாக இருக்கும். உங்களை அன்பாகக் கவனித்துக் கொள்வார். ஆனால் அவரை நீங்கள் எதிர்க் கேள்வி கேட்டாலோ, அவர் விருப்பத்திற்கு எதிராக பொருள்களை மாற்றி வைத்தாலோ பொறுத்துக் கொள்ள மாட்டார். இதற்காக உங்களுடன் சண்டை கூட போடாமல் உறவையே படாஃபட் என்று முறித்துவிடுவார். இது அவரது கோப குணத்தின் வெளிப்பாடு அல்ல. அவர் அப்படித்தான்.

மதில்மேல் பூனை பிரம்மச்சாரி...........

இவர்கள் எந்த முடிவையும் அவ்வளவு சுலபமாக எடுத்துவிட மாட்டார்கள். சினிமாவுக்கு செல்வதானாலும் சரி யாருடன் செல்வது என்பதிலும் சரி, இவர்கள் முடிவு எடுப்பதற்குள் சினிமா காட்சி முடிந்துவிடும். இதற்கு முக்கிய காரணம் இவர்கள் எவ்வளவு வளமாக, மகிழ்ச்சியானதொரு சூழலில் இருந்தாலும் அதைவிட சிறந்ததை விட்டுவிட்டு அனாவசியமாக நேரத்தை வீணடித்துக் கொண்டிருப்பதாக இவர்கள் கருதுவதால் தான். இவர்கள் எப்போதுமே இப்படித்தான். உங்களுடன் நேரத்தை கழித்தாலும் மனம் முழுவதும் வேறெங்கோ இருக்கும். இதைவிட சிறந்த முறையில் நேரத்தை நாம் செலவழிக்கலாமோ என்ற எண்ணம் அவர்களுக்குள் இருந்து கொண்டே இருக்கும். இதனால் இவர் எப்போது எப்படி இருப்பார் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளவே முடியாது.

டைம்பாம் பிரம்மச்சாரி..............

உங்களுக்குப் பிடித்த சினிமா கதாபாத்திரத்தின் வாழும் உதாரணம் இவர். அறிமுக இளம் கதாநாயகர்களிடம் காணும் ஈர்ப்பை இவரிடம் நீங்கள் காணலாம். சிறந்த ஆளுமை கொண்டவராக இருந்தாலும், இவர், குடிகாரராகவோ, சூதாடியாகவோ, போதை மருந்து அடிமையாகவோ இருக்க வாய்ப்பு உண்டு. இவரைப் பற்றி நீங்கள் முபமையாக அறிந்தால் அலறியடித்துக் கொண்டு ஓடிப்போனாலும் ஆச்சரியம் இல்லை.

பிரச்சினை என்னவென்றால், பார்ப்பதற்கு சாதாரணமாக இருந்தாலும் எப்போது எப்படி மாறுவார் என்பதை யாராலும் உறுயுடன் கூற முடியாது. அதனால் மன்மதன் காதல் அம்பினை இவர் மூலம் உங்களுக்கு ஏவினால் நீங்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. இவர் முதல் முறை கோபப்படும்போது உங்களால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் சமையலில் சிறிய தவறு நேர்ந்துவிட்டதற்காக உங்கள் முகத்தாடையில் இவர் குத்து விடும்போது தான் உங்களுக்கு நிலைமை புரியும். ஆனால் ஒன்று, மறுநிமிடமே உங்களிடம் மன்னிப்பு கேட்க இவர் தயங்கமாட்டார். ஆனால் எவ்வளவு காலத்துக்கு தான் நீங்கள் மன்னிப்பை வழங்கிக் கொண்டிருக்க முடியும்?

விமர்சக வில்லன்...................

இவரைப் பொறுத்தவரையில் ஒரு விஷயத்தை நீங்கள் உறுதியாக நம்பலாம். உங்களிடம் இவருக்கு என்ன பிடிக்கும் எது பிடிக்காது என்பதைத் தெளிவாக உங்களிடம் தெரியப்படுத்திவிடுவார். அதனால் உங்களை இவர் தேர்ந்தெடுத்தற்காக உங்களை நீங்களே அதி;ரஷ்சாலியாக நினைத்துக் கொள்வீர்கள். உங்கள் இருவருக்கு இடையேயான விருப்பு வெறுப்புகளும் ஒன்றாகவே இருக்கும். இந்த கருத்தொற்றுமை நல்லது தான். ஆனால் விமர்சனம் என்று வரும்போது தான் நிலைமை மாறிவிடும்.

இந்த வகையைச் சேர்ந்தவர்கள் எல்லோரையுமே ஒரு தராசில் வைத்து தான் எடை போடுவார்கள். இவர்களின் விமர்சனத்துக்கு ஆளாகதவர்கள் யாரும் இருக்க முடியாது. நீங்கள் மட்டும் எம்மாத்திரம்.

நீங்கள் எப்படி உடை உடுத்த வேண்டும், குடும்பம் நடத்த வேண்டும் என்பது உள்பட எல்லாவற்றையும் உங்களுக்கு இவர் கற்றுத் தருவார். உங்களுக்கு உதவவும் செய்வார். ஆனால் அதில் ஒரு சிறிய தவறு நேர்ந்துவிட்டாலும் அவ்வளவுதான். அது தான் உங்கள் உறவு முடிவின் தொடக்கம் என்று யூகித்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு நீங்கள் எதை செய்தாலும் அதை விமர்சிக்க இவர் தவற மாட்டார். அதனால் தொடக்கத்திலேயே இவர்களிடம் நெருங்காமல் இருப்பது நல்லது.

விளையாட்டு பேர்வழி.......................

நாம் அனைவருமே இவரை அறிந்திருப்போம். நல்ல தோற்றம் மற்றும் அழகை பராமரிப்பதில் இவர் அதிக அக்கறை காட்டுவார். மனதுக்குள் தன்னை கதாநாயகனாகவே நினைப்பார். இவரது வலையில் நீங்கள் எளிதில் விழுந்துவிடுவீர்கள். படுக்கையைப் பகிர்ந்து கொள்வதிலும், சினிமா தியேட்டர் இருட்டில் இவர் செய்யும் சில்மிஷங்களிலும் மனதை பறிகொடுப்பீர்கள். ஆனால் இவை முடிந்த உடனேயே அடுத்த இரையை இவர் தேடத் தொடங்கிவிடுவார். இவரிடம் நீங்கள் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. தலைபோகிற பிரச்சினையை நீங்கள் இவரிடம் பேசிக் கொண்டிருந்தாலும் இவர் கண்ணாடியைப் பார்த்து தலை வாரிக் கொண்டிருப்பார். தனது அழகு தான் முக்கியம் என்று நினைக்கும் சுயநல மன்மதன். உங்களுக்கு ஒத்து வருமா?

உங்களவர் இவர் தான்........!!!!!!!!!

சிறந்த பிரம்மச்சாரி......!!!!!!!

இவர் தனக்கு விருப்பமான பணியில் இருப்பார். ஒரு கார், ஒரு பிளாட் கூட இருக்கலாம். (அது சுத்தமாகவோ, அழகாகவோ இல்லாவிட்டாலும் நிச்சயமாக படுமோசமாக இருக்காது.) கொஞ்சம் நகைச்சுவை உணர்வு இருக்கும். நேர்மை, அழகு, சார்ந்திருத்தல், நம்பகத்தன்மை உள்ளிட்ட குணங்களின் கலவை இவர். சமையலில் நீங்கள் செய்யும் சின்னஞ்சிறிய சோதனை முயற்சிகளைக்கூட இவர் பெரிதும் பாராட்டுவார். தொழில் ரீதியில் நீங்கள் முன்னேறவும் தன்னால் ஆன உதவிகள் செய்வார். உங்கள் குடும்பத்துடன் நன்றாகப் பழகுவார். காதல், அன்பு அனைத்தின் கலவையாக, சிறந்த சினேகிதனாக இருப்பார். நீங்களும் இவரை இளவரசர் போல் நடத்துவீர்கள். இவர் தான் உங்களின் கனவு நாயகன்.

Oct 11, 2009

ஆண்கள்

ஆண்கள் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று பெண்கள் நினைக்கிறார்கள் என்று பார்ப்போமா?

தொல்காப்பிய காலத்திலிருந்தே பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பது நான்கே நான்கு குணங்களைத் தான். அவையானவை (1) தன்மை, (2) நிறை, 3) ஓர்ப்பு, (4) கடைபிடி. அதென்ன தன்மை, நிறை, லொட்டு, லொசுக்கு... கேள்விப் பட்டதே இல்லையே என்கிறார்களா?

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு... இதைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இவை பெண்களின் குணம் என்று சொல்லப்படுவது போல, இதற்கு இணையாக ஆடவர் குணநலன்கள்தான் இந்த தன்மை, நிறை, ஓர்ப்பு மற்றும் கடைபிடி. பெண்களை ``இப்படி இரு, அப்படி இருக்காதே'' என்று சதா கட்டுப்படுத்திக்கொண்டே இருக்கும் சமுதாயத்தின் உபயத்தால் இந்த பெண் பால் குணங்கள் பிரபலமாகிவிட்டன. ஆண்களை இப்படி வற்புறுத்தாமல் விட்டதினாலோ என்னவோ இந்த ஆடவர் குணங்கள் இதுவரை பிரபலமாகவே இல்லை.

ஆனால் இப்படி தன்மையாக, நிறைவாக, பொறுமையாக சுயக்கட்டுப்பாடு அதிகம் கொண்டவனாய் இருப்பது தான் ஆண்களுக்கு அழகென்று தொல்காப்பியர் காலத்திலிருந்தே கருதப்பட்டு வந்தது.
இவை எல்லாம் போக, பெரும்பாலான பெண்கள் ஆண் என்றாலே தைரியமானவன், பொறுப்பானவன், தன்னை பூ மாதிரி பார்த்துக் கொள்ளப் போகிறவன், தன் கடமைகளை முன் நின்று செய்பவன். எதற்கும் கலங்காத அஞ்சா நெஞ்சம் படைத்தவன், பரந்த மனப்பான்மை கொண்டவன், உலக நடப்புக்களை விரல் நுனியில் வைத்துக் கொண்டிருப்பவன் அன்பை லிட்டர் லிட்டராய் பொழிந்து, அவளிடம் ஆசையாய் பேசி, அவளை காதல் மழையில் நனைத்து களிப்புற வைக்கப் போகிறவன், தன்னைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் திரும்பிக்கூட பார்க்க மனம் வராதவன் என்று எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள் பெண்களிடம் உள்ளன.

சரியான வழிகாட்டுதல் கிடைக்க கொடுத்து வைத்த மிகச் சில ஆண்களே மேலே சொன்ன மாதிரி எல்லாம் இருக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக இப்படிப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது. மீதமுள்ள சாமான்ய ஆண்கள் எல்லாம் யதார்த்தத்தில் எப்படி இருக்கிறார்கள் தெரியுமா?

* பொறுப்பைத் தட்டிக்கழிப்பதில் கில்லாடியாய் சிலர்,

* பிரச்னை என்றதும் இருந்த இடமே தெரியாமல் திடுமென மாயமாய் மறைந்து போகும் மகா கோழைகளாய் சிலர்,

* பெண்ணைக் காப்பாற்றுவது என்றால் என்ன என்றே தெரியாமல் ஆபத்து நேரத்தில்கூட அருகில் இருக்கும் பெண்ணைத் தள்ளிவிட்டு தான் முந்திக்கொண்டு தப்பிக்க முயலும் சிலர்,

* கடமையா? எனக்கா? கிலோ எவ்வளவு என்று கேட்கும் சிலர்?

* இம் எனும் முன் பயந்து நடு நடுங்கி, பெண்ணின் தலையில் பழியை போட்டுவிட்டு ஜகா வாங்கி ஓடும் சிலர்.

* போன நூற்றாண்டின் கட்டுப் பெட்டியான அபிப்ராயங்களை இன்னமும் அப்படியே அடிபிறழாமல் கடைபிடிக்கும் டைனோஸர் காலத்து பிற்போக்குவாதிகள் பலர்.

* உலகத்தைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் அடுத்த வேலை சாப்பாடும், தூங்க ஒரு ஓரமும் கிடைத்தால் போதும் என்று ஓசியில் உடம்பை வளர்க்கும் ஒட்டுண்ணிகளாக சிலர்.

* துணைவியிடம் அன்பாய் ஒரு வார்த்தை கூட பேசத் தெரியாத சிடுமூஞ்சிகளாக சிலர்.

* மனைவியை மகிழ்விக்கவே தெரியாத மண்டூகங்களாய் சிலர்.

* கணவனிடம் ஆசையாகப் பேசலாம் என்று இவள் காலையிலிருந்து காத்துக் கொண்டிருக்க, வந்ததும் வராததுமாய் தொலைக்காட்சியே கதி என்று கிடந்து விட்டு, அதிகாரம் செய்ய மட்டும் வாயை திறக்கும், மனைவியின் தேவைகளைப் புரிந்து நடந்து கொள்ளத் தெரியாத மக்குகளாக சிலர்.

* துணைவியை வெறும் ஒரு சமையல்காரி, சலவைத் தொழிலாளி, பிள்ளை பெறும் எந்திரம் என்ற அளவில் மட்டுமே நடத்திவிட்டு, தன் சுகம் மட்டுமே பிரதானம் என்று மனைவியை மனுஷியாகக் கூட மதிக்காத ஜந்துக்களாய் சிலர்.

* பக்கத்தில் மனைவி இருக்கும்போதே, போகிறவள் வருகிறவள் என்று எல்லாப் பெண்களையும், அவ்வளவு என்ன பெண் வடிவத்தில் இருக்கும் பொருட்களையும் பொம்மைகளையும் பார்த்தால் கூட ஓவராக ஜொள்ளு விடும் சபலக் கேசுகளாக சிலர்...

* மனைவியை அசிங்கமாகப் பேசியும், திட்டியும் அடித்தும், உதைத்தும், தான் எவ்வளவு பெரிய ஆண்மகன் என்று காட்டிக்கொள்ள முயலும் அரைகுறை ஆண்களாய் சிலர்.

இவை எல்லாம் சேர்ந்த மோசமான கலவையாய் சிலர் என்று பல ஆண்கள் இப்படி குறை ஆண்களாகவே இருக்கிறார்கள். ஏன் ஆண்கள் எல்லாம் இப்படி இருந்து தொலைக்கிறார்கள்?

பெண்கள் ஆசைப்படுவது போல ஆசையாய், ஹாஸ்யமாய், பாசமாய், கம்பீரமாய், குறும்பாய், துணிச்சலாய் ஆண்கள் ஏன் அதிகம் பேர் இருப்பதில்லை?

A man is not born, he is made. பிறக்கும் போதே எவனும் பேராண்மை மிக்கவனாய் இருப்பதில்லை. அவனை இப்படி ஓர் ஆண்மகனாய் மாற்றுவது தான் பெண்களின் மிகப் பெரிய சமூகப் பணி. தாயாய், தமக்கையாய், மனைவியாய், மகளாய், மருமகளாய், சகாவாய் இருந்து பெண்கள் எல்லோரும் தொடர்ந்து பதப்படுத்திக் கொண்டே இருந்தால் ஒழிய ஆதர்ஷ ஆண் உருவாவதே இல்லை.

நீங்கள் எந்த பேராண்மைமிக்க மனிதனை வேண்டுமானாலும் உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்களேன், அவர்கள் எல்லாம் அத்தனை பேராண்மையைப் பெறக் காரணம், அவர்களை அப்படி பதப்படுத்திய பெண்களே. ஆனால் இந்த பேராண்மைமிக்க ஆண்களிடம் ஒரு பெரும் பிரச்னை என்னவென்றால், இந்த மஹா உத்தமனான ஆண்களால் பெண்களுக்கு எப்போதுமே பிரயோஜனம் இருந்ததில்லை.

புத்தரும், மஹாவீரரும், சங்கரரும், விவேகானந்தரும், ரமணரும், முத்துராமலிங்கரும், காமராஜரும், பெரியாரும் மிகவும் மேன்மையான ஆண்கள்தான். ஆனால் அவர்கள் மேன்மைக்குக் காரணமே, அவர்கள் பெண்களை விட சமூக மாற்றமே மேல் என்று வேறு இலக்காக இருந்ததுதான். பெண்களை திரும்பியும் பார்க்காமல் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, கொள்கை, இலட்சியம் என்று தன் இலக்கிலேயே குறியாய் இருந்ததாலேயே இந்த மாதிரி ஆண்களின் மேல் பெண்களுக்கெல்லாம் பெரிய ஈர்ப்பிருந்தது. ஆனால் இவ்வளவு வகீகரம் இருந்தும், மிகச் சிறந்த உதாரண புருஷர்களாய் இருந்தும், இவர்களால் பெண்களின் அகவாழ்க்கைக்கு எந்த உபயோகமும் இல்லை. இதை எல்லாம் கடந்த நிலையை, அடைந்திருந்தார்கள், இந்த பேராண்மைமிக்க மனிதர்கள்.

இவர்களைத் தவிர மற்ற ஆண்கள் எல்லோருமே சாமானியர்கள்தான். அதனால் தான் அவர்களுக்கு பெண் ஒரு முக்கியமான ஈர்ப்பு விசை ஆகிறாள். இப்படி சாமானிய ஆண்களுக்கே பெண்ணின் துணை தேவைப்படுகிறது என்பதால், வேறு வழியில்லாமல் இந்த குறை ஆண்களோடு ஒப்பேற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் பெண்கள் எல்லாம்.

எந்த ஆணும் பெர்ஃபெக்ட் இல்லை. நாம் மஹாத்மா என்று நினைப்பவனும் மஹா கேவலமான வக்கிர கேஸாக இருக்கலாம்.
அதனால் ஆண்களை வெறுமனே தரப்பரிசோதனை செய்து மட்டம் தட்டுவதை நிறுத்தி விடுங்கள். பேரின்ப தேடலே பெரிது என்று பேராண்மைமிக்கவர்கள் போய்விடுவதால், சாதாரண ஆண்கள் மட்டுமே லௌகீக வாழ்க்கைக்கு மீந்து இருக்கிறார்கள்.
இந்த ஆண்கள் குறை ஆண்கள்தான் என்று நமக்கு ஏற்கெனவே தெரியுமே. பிறகு இவர்களை சும்மா சொல்லிக்கொண்டிருப்பதில் என்ன லாபம்? இவன் இப்படித் தான். இவனை இப்படியே ஏற்று பிறகு நீங்கள் விரும்பும்படி அவனை மாற்றிக் கொள்ளுங்கள்.

நன்றி:
Dr.N.ஷாலினி.