Showing posts with label மனிதப்பண்பு. Show all posts
Showing posts with label மனிதப்பண்பு. Show all posts

Jan 10, 2010

மாத்ரு பஞ்சகம்


ஆதி சங்கரர் அவர்களது அருமை அன்னைக்குப் பாடிய மாத்ரு பஞ்சகம.

இதில் பரமாசாரியார்கள் அருளிய தமிழாக்கம் அடங்கியுள்ளது

மாத்ரு பஞ்சகம்

சுலோகங்களின் தமிழாக்கமும் அவைகளுக்கு விளக்கங்களூம் அருளியது காஞ்சி மாமுனிவர் அருள்மிகு சந்திரசேகர ஸரஸ்வதி அவர்கள்.

ஆஸ்தாம் தாவதியம்ப்ரஸூதி ஸமயே துர்வார சூலவ்யதா|
நைருச்யம் தனுசோஷணம் மலமயீ சய்யாச ஸாம்வத்ஸரீ|
ஏகஸ்யாபி ந கர்ப்ப பாரபரண க்லேசஸ்ய யஸ்யாSக்ஷம:|
தாதும் நிஷ்க்ருதி முன்னதோபி தனய: தஸ்யை ஜனன்யை நம:||

மஹத் புண்யத்தால் சம்பாதிக்கப்பட்ட மனுஷ்ய ஜன்மா செய்ய வேண்டியதை வேதம் கூறும். ''மாத்ரு தேவோ பவ'' மாதா என்ற தெய்வத்தை உபாசிக்கிறவனாக இரு என்று கூறியதற்கிணங்க ஸ்ரீ பகவத் பாதாள் தனது தாய் முக்தியடையும் நிலையில் இருப்பதைக் கண்டு மனம் நெகிழ்ந்து ப்ரம்ம ஞானியான ஆதிசங்கரர் கூறிய மாத்ரு பஞ்சகம்.
தனது கீர்த்தி, தான் செய்த காரியம் எதுவானாலும் இருக்கட்டும்; எனது தாயார் என்னை கர்ப்பத்தில் வைத்து ஒவ்வொரு நிமிஷமும் என்னைத் தாங்கும் பொழுது அரும்பாடுபட்ட கஷ்டத்திற்கு நான் அதற்குப் பதில் பிரதியுபகாரம் ஏதாவது செய்திருக்கிறேனோ? அது இருக்கட்டும்; பிரசவ சமயத்தில் போக்க முடியாததும், பொறுத்துக்கொள்ள முடியாததுமான சூலைவலி என்கிற கொடுமையான ஒரு வலிக்கு நான் பதில் உபகாரம் செய்திருக்கின்றேனா? அதுவுமிருக்கட்டும்; என்னைப் பெற்றதும், என்னை ரக்ஷக்க ருசியில்லாத பொருளைச் சாப்பிட்டு ஜீவித்த எனது தாய்க்கு ஏதாவது செய்திருக்கிறேனா? தனது சரீரத்தை இளைக்கச் செய்வதும், தூக்கsமில்லாமலும், எனது மலத்திலேயே படுத்து ஒரு வருஷம் என்னைக் காத்த தாயாருக்கு ஏதாவது செய்திருக்கிறேனா? தன்னையே கஷ்டப்படுத்திக் கொண்டு பொறுமையுடன் காப்பாற்றிய குழந்தைகளில் எவனாவது தாயாருக்கு பிரதியுபகாரம் செய்ததுண்டா? யாராலும் தாயாருக்கு பிரதியுபகாரம் செய்ய முடியாது. எனவே அம்மா, உனக்கு நமஸ்காரம் செய்கின்றேன். ஏற்றுக்கொள்.

குருகுல முபஸ்ருத்ய ஸ்வப்ன காலேது த்ருஷ்ட்வா
யதி ஸமுசித வேஷம் ப்ராவ்ருதோமாம் த்வமுச்சை:|
குருகுல மத ஸர்வம் ப்ராரு தத்தே ஸமக்ஷம்
ஸபதி சரண யோஸ்தே மாதரஸ்து ப்ரணாம: ||

நான் வித்யாப்யாஸம் செய்யச் சென்றபொழுது அம்மா, நீங்கள் தன்னை மறந்து தூங்கிவிட்டீர்கள். தூக்கத்தில் நான் சன்யாசியானதுபோல் ஒரு கனவைக் கண்டு, அழுதவண்ணமாய் குருகுலம் வந்து கதறியது குருகுலவாசிகளும் கதறும் படிச் செய்த அம்மா, உனக்கு நமஸ்காரம்.

ந கஸ்தம் மாகஸ்தே மரண மையே தோயமபி வா
ஸ்வதாவா நோ தத்தா மரண திவஸே ச்ராத்த விதினா|
ந ஜப்தோ மாதஸ்தே மரணஸமயே தாரக மனு:
அகாலே ஸம்ப்ராப்தே மயிகுரு தயாம் மாதரதுலாம் ||

அம்மா! நீ முக்தியடையும் சமயத்தில், உனக்குக் கொஞ்சம் ஜலமாவது வாயில் விட்டேனா? பிறகும் ஸ்வதா மந்திரத்தினால் ச்ராத்தம், தர்ப்பணமாவது செய்தேனா? உனது முக்தி சமயத்தில் தாரக மந்திரமாவது உன் காதில் ஓதினேனா? அச்சமயம் எனக்குக் கிடைக்காததாலும், எதுவும் செய்ய அதிகாரமில்லாததாலும், சன்யாசியானதாலும் எந்த வைதீகமும் அனுஷ்டிக்க முடியாது போனதால், மனம் தவிக்கின்ற உனது மகனான என்னிடம் தயவுசெய்ய வேண்டுமம்மா! உனது சரண கமலத்தைப் பிடித்து வேண்டுகின்றேன்.

முக்தாமணிஸ்த்வம் நயனம் மமேதி
ராஜேதி ஜீவேதி சிரம் ஸுதத்வாம் |
இக்யுக்தவத்யாஸ்தவ வாசி மாதர்
ததாம்யஹம் தண்டுல மேவசுஷ்கம் ||

அம்மா! என்னைக் காணும்போதெல்லாம், என் முத்தே, என் கண்ணே, என் அப்பனே, ராஜா! நீ சிரஞ்சீவியாக இருக்க வேண்டுமென்று எப்பொழுதும் சொல்லி என்னிடத்தில் கருணையையும், அன்பையும், தயையும் கலந்த அம்ருத மயமான சொல்லும் தாரையினால் என்னைச் சீராட்டி, பாலூட்டி, தாலாட்டி என்னை வளர்த்த எனது அன்னைக்கா வாயிலே, வேகாத அரிசியைச் சமர்ப்பிப்பேன். இதைப் பொறுக்க முடியவில்லையே! அம்மா உன்னைச் சரணடைகிறேன்.

அம்பேதி தாதேதி சிவேதி தஸ்மின்
ப்ரஸுதி காலே யதவோச உச்சை |
க்ருஷ்ணேதி கோவிந்த ஹரே முகுந்தேத்
யஹோ ஜனன்யை ரசிதோய மஞ்ஜலி: ||

அம்மா, என்னைப் பெற்றெடுக்கும்போது பொறுக்க முடியாத வேதனை சமயத்தில் அம்மா! அப்பா! சிவபெருமானே என்றும்; கிருஷ்ணா, கோவிந்த, ஹரே முகுந்தா என்று அழைத்த அந்த வாக்கோடு கூடிய என் கருணைத் தெய்வமே! என் இரு கைகளையும் தூக்கி உனக்கு அஞ்சலி செய்து, உன்னைச் சரணடைகின்றேன் என்று பெற்ற தாய்க்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.



Aug 23, 2009

இரவலராய் மாறிய மன்னன்


இன்றைய உலகில் தனக்குக் கீழ்நிலையில் உள்ள ஒருவர் நற்செயல் செய்யும்போது அவர்களைப் பாராட்டுவது என்பதோ, அவர்தம் செயல்களுக்கு ஆதரவு தருவது என்பதோ கிடையாது. ஆனால் மனச்சான்று சிறிதும் இன்றி அவரை இகழ்வர். இத்தகைய மனிதப் பண்பற்ற இழிகுணங்கள் மனிதனிடம் இருத்தல் கூடாது. தன்னைவிடத் தாழ்நிலையில் ஒருவர் நற்செயல்களைச் செய்தால், அவரைப் பாராட்டுவதுடன் அவர்தம் செயல்களுக்கும் உறுதுணையாக இருத்தல் வேண்டும். இத்தகைய மனிதப் பண்பினை புறநானூற்றில் இடம்பெறும் பாடல் ஒன்று தெளிவுற எடுத்துரைப்பது நினைத்தற்குரியதாகும். வள்ளல்களைப் புலவர்களும், பரிசிலர்களும் வாழ்த்திப் பாடுவர். இது இயற்கை.

ஆனால் வள்ளல் ஒருவனை அவனினும் ஆற்றலால் உயர்ந்திருந்த மன்னன் போற்றிப் பாடுவது அரிது.

சிறுகுடி என்ற சிற்றூருக்குத் தலைவனாக பண்ணன் என்பவன் வாழ்ந்து வந்தான். அவனைக் கிழான் என்றும் பண்ணன் என்றும் கூறுவர். அவனது நெல்லித்தோட்டமும் தீஞ்சுவை நீர் அளிக்கும் கிணறும் இலக்கியத்தில் இடம்பெற்று இறவாத் தன்மையடைந்துள்ளன.

இப் பண்ணனைப் பற்றி மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் என்ற புலவர்,
""இடுக்கண் இரியல் போக உடைய கொடுத்தோன்! கொடைமேந் தோன்றல்'' (புறம்-388)
என்று அவனது வள்ளல் தன்மையை எடுத்துக்காட்டிப் புகழ்கிறார். இப்பண்ணன் ஆட்சியாலும் அரசாலும் மிகப் பெரியன் என்று கொள்ளுதற்கில்லை. இவன் குறுநில மன்னரிலும் சிறு நிலப்பரப்பினை உடையவன். எனினும் முடியுடை மூவேந்தரிலும் கொடைத்திறம் மிக்கவன். இதனால் இவன் பெற்ற சிறப்புப் பெயர், "பசிப்பிணி மருத்துவன்' என்பதாகும். பசியாகிய நோயைப் போக்கும் மருந்தினை அளித்து மகிழும் வள்ளல் என்பது இதன் பொருளாகும். இவனது இப்பெரும் புகழைப் புலவரேயன்றி இவனினும் மிக்க ஆற்றலும் அறிவும் உடைய சோழ மன்னனும் போற்றி இருக்கின்றான். சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவன் என்பது அச்சோழ மன்னனது பெயராகும். இம்மன்னன் பேராற்றலும் பெருவளமும் உடையவனாகத் திகழ்ந்தான். எனினும் பண்ணனது பண்பைக் கண்டு, இரவலனாக மாறி அவனைப் பாராட்டிப் புகழ்கிறான்.

இதன்மூலம் இரண்டு பெரிய உண்மைகளை நமக்கு எடுத்துக்காட்டுகிறார். ஒன்று, அவன் கவிதை வளம் உடையவன் என்பது. மற்றொன்று, அவன் பண்பில் சிறந்து விளங்குபவன் என்பது. சோழனின் மனிதநேயப் பண்பையும் வாழ்வியல் உண்மைகளையும்,

""யான்வாழும் நாளும் பண்ணன் வாழிய! பாணர் காண்கிவன் கடும்பினது இடும்பை யாணர்ப் பழுமரம் புள்இமிழ்ந்தன்ன ஊண்ஒலி அரவம் தானும் கேட்கும் பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி முட்டை கொண்டு வற்புலம் சேரும் சிறுநுண் எறும்பின் சில்லொழுக்கு ஏய்ப்பச் சோறுடைக் கையர் வீறுவீறு இயங்கும் இருங்கிளைச் சிறாஅர்க் காண்டும் கண்டும் மற்றும் மற்றும் வினவுவதும் தெற்றெனப் பசிப்பிணி மருத்துவன் இல்லம் அணித்தோ சேய்த்தோ கூறுமின் எமக்கே!''(புறம்-173)

என்ற பாடல் தெளிவுற எடுத்துத்துரைக்கிறது. பண்ணனின் சிறப்பறிந்த மன்னர் மன்னனின் உணர்ச்சி பொங்குகிறது; ஊற்றெனச் சுரக்கிறது; கவிதை பிறக்கிறது. முதலிலே தோன்றுவது பண்ணன் நெடுங்காலம் வாழ வேண்டுமே என்ற உணர்வுதான். எவ்வாறு நெடுங்காலம் வாழ்வான்? அவனும் மனிதன்தானே! கூற்றுவனுக்கு இலக்காக ஒருநாள் மடிய வேண்டியவன் தானே! கூற்றுவனை வேண்டுகிறான் மன்னன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
தனது ஆயுளையும் எடுத்துக் கொடுத்துப் பண்ணனை நெடுநாள் வாழவைக்குமாறு வேண்டுகிறான். எவ்வளவு பெரிய நல்லுள்ளம்!
அடுத்த வேளை உணவுக்கு என் செய்வேன் என ஏங்கும் ஏழை ஒருவன் இதைக் கூறவில்லை. வாழ்வை வெறுத்தொதுக்கும் வளமிலான் கூற்றும் அன்று. செல்வ வாழ்வில் புரளும் மன்னர் மன்னன் இதைக் கூறுகிறான். பண்ணனின் பண்புக்கேற்ற வண்ணம் பாராட்டும் சோழ மன்னனின் புலமையை இதில் காணலாம். தன்னையும் ஓர் இரவலனாக வைத்து மதித்தால்தான் வள்ளல், பண்ணனது பெருமையை உணர்த்த முடியும் என எண்ணிய மன்னன் தன்னிலை மறந்து தன்னை எளியவனாகத் தாழ்ந்த நிலையில் வைத்து நோக்குகிறான். அந்த நோக்கிற்குப் பண்ணன் வெறும் பண்ணனாகவோ வள்ளலாகவோ தோன்றவில்லை. "பசிப்பிணி மருத்துவ'னாகக் காட்சியளிக்கிறான். "பசிப்பிணி மருத்துவன்' என்ற சொற்றொடர் ஆழம் வாய்ந்ததாக அமைந்து, எளிதாகப் பொருள் உணர்த்துகிறது.

மேலும், ஆட்சியாளர்கள் பிறர் செய்யும் நல்லனவற்றைப் பாராட்டுதல் வேண்டும். மாறாக அவர்களைத் தூற்றக் கூடாது. மக்களுக்குப் பயன் நல்கும் செயல்களைச் செய்வோருக்கு உறுதுணையாக இருப்பது ஆள்வோரின் கடமையாகும் என்ற இக்காலத்துக்குப் பொருந்தும் அரிய வாழ்வியல் கருத்துகளையும் சோழமன்னன், இப்பாடல் வழி எடுத்துரைப்பது நோக்கத்தக்கதாகும்.