Dec 8, 2015

இந்து மதத்தால் யாருமே வாழ முடியாது



இந்த நாட்டில் நிலவும் இத்தகைய சூழல், புத்துணர்வற்ற நிலையை இனி ஆயிரம் ஆண்டு காலத்திற்கு அளித்துவிடும். இந்தச் சூழல் நிலவும் வரை, நம்முடைய முன்னேற்றத்திற்கானப் புத்துணர்வு ஒருபோதும் கிடைக்காது. இந்த மதத்திலிருந்து கொண்டு நாம் இதை எதிர்கொள்ளவே முடியாது.
மநுஸ்மிருதியில் சதுர் வர்ணம் இருக்கிறது. சதுர்வர்ண அமைப்பு முறை மனித இனத்தின் முன்னேற்றத்திற்கு மாபெரும் ஊறு விளைவிக்கக் கூடியது. சூத்திரர்கள் அனைத்து வகையான இழிவான பணிகளைத்தான் செய்ய வேண்டும் என்று மநுஸ்மிருதி கூறுகிறது. அவர்களுக்கு ஏன் கல்வி அளிக்கப்பட வேண்டும்? பார்ப்பனர்கள்தான் கல்வி கற்க வேண்டும். சத்ரியன் ஆயுதங்களை எடுக்க வேண்டும். வைசியர்கள் வணிகம் செய்ய வேண்டும்.
ஆனால், சூத்திரர்கள் தொண்டூழியம் செய்ய வேண்டும். இந்த அமைப்பு முறையை யார் அழித்தொழிப்பது? இந்த அமைப்பு முறையில், பார்ப்பனன், சத்ரியன், வைசியன் எல்லோருக்கும் ஏதோ ஒரு வகை பயன் இருக்கிறது. ஆனால், சூத்திரர்களுக்கு என்ன இருக்கிறது? இந்த மூன்று வர்ணத்தைத் தவிர, பிற சாதியினருக்குப் புத்துணர்வு எப்படி வரும்? சதுர்வர்ண முறை என்பது ஒரு வழக்கமல்ல. அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவே முடியாது, அதுதான் மதம்.

இந்து மதத்தில் சமத்துவம் இல்லை. நான் ஒரு முறை காந்தியை சந்தித்தபோது, அவர் சொன்னார், ‘நான் சதுர்வர்ணத்தை நம்புகிறேன்.' நான் சொன்னேன்: உங்களைப் போன்ற ‘மகாத்மா'க்கள்தான் சதுர்வர்ணத்தை நம்புகிறார்கள். ஆனால், இந்த சதுர்வர்ணம் என்பது என்ன? சதுர்வர்ணம் என்பது மேல் அல்லது கீழ் என்று உள்ளது. அது எங்கு தொடங்கி எங்கு முடிகிறது?
இந்தக் கேள்விக்கு காந்தி பதில் சொல்லவில்லை. அவர் என்ன பதில் சொல்ல முடியும்? நம்மை அழித்தவர்களும் இந்த மதத்தால் அழிக்கப்படுவார்கள். நான் தேவையில்லாமல் இந்து மதத்தைக் குற்றம் சொல்லவில்லை. இந்து மதத்தால் யாருமே வாழ முடியாது; அந்த மதமே ஓர் அழிவு மதம்.

இந்து மதத்தில் படிநிலைப்படுத்தப்பட்ட சாதி முறையில், மேலிருக்கும் வர்ணத்தைச் சார்ந்தவர்கள்தான் பயன் பெற்றார்கள். மற்றவர்களுக்கு என்ன பயன்? ஒரு பார்ப்பனப் பெண் குழந்தை பெற்றால், அவருடைய மனம் ஓர் உயர் நீதிமன்ற நீதிபதி பதவி எப்பொழுது காலியாகும் என்பது பற்றி சிந்திக்கிறது.
ஆனால், இதற்கு நேர் மாறாக நம்முடைய துப்புரவுத் தொழிலாளர் பெண்மணி குழந்தை பெறும்போது, அரசாங்கத்தில் ஒரு துப்புரவுப் பணி எப்பொழுது காலியாகும் என்று நினைக்கிறார். இந்து மதத்தின் வர்ண அமைப்பு முறை தான் இத்தகைய விந்தையான சமூக அமைப்புக்கு காரணம். இதிலிருந்து என்ன வகையான மேம்பாட்டை நாம் காண முடியும்? பவுத்த மதத்தின் மூலமே நீங்கள் எதையும் சாதிக்க முடியும்.

பவுத்த மதத்தில் 75 சதவிகித பிக்குகள் பார்ப்பனர்களாக இருந்தார்கள். 25 சதவிகிதம் சூத்திரர்களும் மற்றவர்களும் இருந்தனர். ஆனால், புத்தர் சொன்னார் ‘பிக்குகளே! நீங்கள் பல்வேறு நாடுகளிலிருந்தும் பல்வேறு சாதிகளிலிருந்தும் வந்திருக்கிறீர்கள். அந்தந்தப் பகுதிகளில் ஓடும் ஆறுகள் தனித்தனியாகப் பெயரிட்டு அழைக்கப்பட்டாலும், அவை கடலில் சங்கமிக்கும்போது, தங்களின் அடையாளத்தை இழந்து விடுகின்றன. அவை ஒன்றாகக் கலந்து விடுகின்றன.
பவுத்த சங்கம் கடலைப் போன்றது. இந்த சங்கத்தில் அனைவரும் சமம். எல்லாரும் கடலில் கலந்த பிறகு கங்கை நதி தண்ணீரையோ, மகாநதி தண்ணீரையோ தனியாக அடையாளப்படுத்திப் பார்க்க முடியாது. அதேபோல, நாம் பவுத்த சங்கத்தில் சேர்ந்த பிறகு நாம் நம்முடைய சாதிகளை இழந்து சமமாகிறோம்.' இத்தகைய சமத்துவத்திற்கான கொள்கைப் பிரச்சாரத்தை மாமனிதர் புத்தர் மட்டுமே செய்தார்.

சிலர் என்னைக் கேட்கிறார்கள்: மதம் மாறுவதற்கு இவ்வளவு நாட்களாக நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? இது ஒரு முக்கியமான கேள்வி. ஒரு மதத்தை வலியுறுத்துவது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அது தனி ஒரு மனிதனின் பணியும் அல்ல. மதத்தைப் பற்றி சிந்திக்கும் யாரும் இதைப் புரிந்து கொள்ள முடியும். உலகில் யாரும் சுமக்காத அளவுக்கு நான் பாரத்தை சுமந்து கொண்டிருக்கிறேன்.
நான் நீண்ட நாட்கள் வாழ்ந்தால், நான் திட்டமிட்ட இந்தப் பணியை முடித்தே தீருவேன். ஒரு மகர் பவுத்தராக மாறினால் என்ன நடக்கும் என்று சிலர் கேட்கிறார்கள். நீங்கள் இவ்வாறு கேட்கக் கூடாது. அது ஆபத்தானது. உயர்ந்த வசதியான வகுப்பினருக்கு மதம் தேவையில்லாமல் இருக்கலாம். அவர்களுக்கு பெரிய பங்களாக்களும், அவர்களுக்கு வேலை செய்ய வேலையாட்களும், பணமும், சொத்தும், மரியாதையும் கிடைக்கும்.
இத்தகைய மனிதர்கள் மதத்தைப் பற்றி சிந்திக்க வேண்டியதில்லை. ஆனால், ஏழை மக்களுக்கு மதம் தேவையாக இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மதம் தேவையாக இருக்கிறது. ஏழை மனிதன் நம்பிக்கையில்தான் வாழ்கிறான். அவனுடைய வாழ்க்கையின் வேரே நம்பிக்கைதான். அந்த நம்பிக்கையை அவன் இழக்க நேரிட்டால், அவனுடைய வாழ்க்கை என்னவாகும்? மதம் ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் பயப்படாமல் இருக்க, நம்பிக்கையான வாழ்க்கையை அளிக்கிறது. எனவேதான் ஏழை ஒடுக்கப்பட்ட மக்கள், மதத்தின்பால் ஈர்க்கப்படுகிறார்கள்.


(
அம்பேத்கர் - 15.10.1956 அன்று மாபெரும் மதமாற்ற நிகழ்வையொட்டி ஆற்றிய உரை)

Dec 7, 2015

காந்தி ஒரு மகாத்மாவா?

      காந்தி ஒரு மகாத்மாவா? இந்தக் கேள்வி குறித்து நான் மிகவும் மனவருத்தமடைகிறேன். இந்தக் கேள்வி எனக்கு எரிச்சலூட்டுகிறது என்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவதாக, நான் எல்லா மகாத் மாக்களையும் வெறுக்கிறேன். அவர்கள் ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என்று உறுதியாக நம்புகிறேன். அவர்கள் இருந்து வருவது அவர்கள் பிறந்த நாட்டுக்கு ஒரு சாபக்கேடு என்று கருதுகிறேன்.
      நான் ஏன் இவ்வாறு கூறுகிறேனென்றால் அவர்கள், அறிவுக்கும் பகுத்தறிவுக்கும் பதிலாக, குருட்டுத்தன மான நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்கு முயல் கின்றனர்.
      இரண்டாவதாக, மகாத்மா என்கிற சொல்லினால் மக்கள் திட்டவட்டமாக என்ன புரிந்து கொள்கிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை.
      தனது உடையை மாற்றுவதன் மூலமாகவே மட்டும் இந்தியாவில் யாரும் மிக எளிதில் ஒரு மகாத்மா ஆகிவிடலாம். நீங்கள் ஒரு சாதாரண வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தால், நீங்கள் மிகவும் அசாதார ணமான உன்னதமான செயல்களைச் செய்த போதி லும், யாரும் உங்களைக் கவனிக்கமாட்டார்கள். ஆனால் வழக்கமான முறையில் நடக்காத ஒருவர், சில விநோத மான போக்குகளைக் காட்டினால் - தனது பண்பாட்டில் இயற்கைக்கு மாறான குணங்களைக் கொண்டிருந் தால், அவர் ஒரு மகான் அல்லது ஒரு மகாத்மா ஆகி விடுகிறார்.
நீங்கள் வழக்கமான ஒரு சாதாரண உடையணிந்து கொண்டு ஏதாவது செய்திருந்தால், மக்கள் உங்களைப் பார்க்கவும் கூட விரும்பமாட்டார்கள். ஆனால் அதே ஆள், தனது ஆடைகளைக் களைந்தெறிந்துவிட்டு, நிர் வாணமாக ஓடினால், நீண்ட முடிவளர்த்துக் கொண்டு, மக்களைக் கேவலமாகப் பேசி, சாக்கடையிலிருந்து அசுத்தமான தண்ணீரைக் குடித்துக் காட்சியளித்தால், மக்கள் அவருடைய காலில் விழுந்து, அவரை வழி படுவதற்குத் தொடங்குவார்கள்.
      இந்தச் சூழ்நிலையில், இந்தியாவில் காந்தி, மகாத் மாவானால் இதில் வியப்படைவதற்கு ஏதுமில்லை. வேறு எந்த நாகரிகமான நாட்டிலாவது இவைகள் கடைப்பிடிக்கப்பட்டால் மக்கள் அவரை ஏளனம் செய்து சிரிப்பார்கள். ஒரு சாதாரணப் பார்வையாளருக்குக் காந்தியின் போதனைகள் மிகவும் இனிமையாகவும், மனதைக் கவர்வதாகவும் தோன்றுகின்றன. உண் மையும் அகிம்சையும் உன்னதமான கோட்பாடுகள். சத்தியத்தையும் (உண்மை) அகிம்சையையும் காந்தி போதித்ததாக உரிமை கொண்டாடப்படுகிறது. மக்கள் இதை மிகவும் விரும்பினார்கள். எனவே ஆயிரக்கணக் கில் அவர்கள் காந்தி சென்றவிடமெல்லாம் அவரைச் சூழ்ந்தார்கள். அவர்கள் ஏன் அவ்வாறு செய்தார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
      ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால், மகான் புத்தர் உண்மை, அகிம்சை என்ற போதனையை உலகுக்கு அளித்தார். இந்த விசயத்தில் காந்தி தான் இதனுடைய மூலகர்த்தா என்று ஓர் அறிவற்ற முட்டா ளையும் இயல்பாகவே அறிவிலியாகவும் உள்ளவரைத் தவிர, வேறு யாரும் அவருக்கு மதிப்புக் கொடுக்கமாட் டார்கள். ‘மெய்மை’, ‘அகிம்சை’ மீதான பரிசோதனை யிலிருந்து எழும் சிக்கலான பிரச்சினைகளின் மீது காந்தி கொஞ்சம் வெளிச்சம் போட்டுக் காட்டியிருந் தாரேயானால், அவருடைய மகாத்மா தன்மைக்கு அது ஒளியைக் கூட்டியிருக்கும். உலகம் என்றென்றும் அவருக்கு இதற்காக நன்றி செலுத்தியிருக்கும். இரண்டு புதிர்களுக்கு - அதாவது ‘உண்மை’ என்ற உன்னத மான கோட்பாட்டை எவ்வாறு கடைப்பிடிப்பது, எந்த சூழ்நிலைகளில் ‘வன்முறை’ ஒரு சரியான செயலாகக் கருதப்படுவது என்பவற்றுக்கான தீர்வை உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது. ‘உண்மை’ மற்றும் ‘அகிம்சை’யின் பாலான கண் ணோட்டம் நடைமுறை சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று மகான் புத்தர் போதித்தார்.
      காந்தி இந்தக் கேள்விக்குப் பதில் அளித்திருக்கிறாரா? நான் எங்கும் இதைக் காணவில்லை. அவருடைய போதனைகளையும் உபதேசங்களையும் நாம் ஆய்வு செய்தால், அவர் மற்றவர்களின் மூலதனத்தின் மீது விளையாடி வருகிறார் என்பதைக் காண்கிறோம். ‘உண்மையும்’, ‘அகிம்சையும்’ அவருடைய மூலக் கண்டு பிடிப்புகள் அல்ல. காந்தியின் குணாம்சத்தை நான் ஆழந்து ஆராயும் போது, அவருடைய குணாம்சத்தில் ஆழ்ந்த தன்மையையோ அல்லது நேர்மையையோ காட்டிலும் தந்திரம்தான் கூடுதல் தெளிவாகத் தெரிகிறது என்பதை நான் மிகவும் தெளிவாக உணருகிறேன்.
      தந்திரத்தினாலும் அவரிடம் உள்ளார்ந்துள்ள புத்திக்கூர்மையினாலும் எப்போதும் அவர் தன்னை முன்னணியில் இருக்கும்படிச் செய்து கொண்டுவிடு வார். தனது ஆற்றலிலும், குணாம்சத்திலும் நம்பிக்கை உடைய ஒருவர், வாழ்க்கையின் எதார்த்தங்களைத் துணிவுடனும் ஆண்மையுடனும் எதிர்கொள்வார். அவர் தனது இடுப்பில் ஒரு குத்தீட்டியைச் செருகிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. நயவஞ்ச கமும் துரோகமும் பலவீனமானவர்களின் ஆயுதங் களாகும். காந்தி எப்போதும் இந்த ஆயுதங்களையே பயன்படுத்தி வந்துள்ளார்.
      தன்னைக் கோகலேயின் ஓர் அடக்கமான சீடர் என்று பல ஆண்டுகளாக அவர் அறிவித்து வந்துள் ளார். அதற்குப்பின்னர் பல ஆண்டுகள் அவர் திலகரைப் பாராட்டி வந்துள்ளார். பின்னர் அவர் திலகரை வெறுத் தார். எல்லோரும் இதை அறிவார்கள். நிதி திரட்டுவதற்கு அவர் திலகரின் பெயரைப் பயன்படுத்தியிராவிட்டால் சுயராச்சிய நிதிக்கு ரூ.1 கோடியை அவரால் திரட்டி யிருக்க முடியாது என்பதை எல்லோரும் அறிவார்கள். தனிப்பட்ட முறையிலான தனது உறவை மறந்தும், பிற விசயங்களை ஒருபுறம் ஒதுக்கி வைத்தும், ஒரு புத்திக்கூர்மையுள்ள அரசியல்வாதி என்ற முறையில், அவர் அந்த நிதிக்குத் திலகரின் பெயரைச் சேர்த்துக் கொண்டார்.
      காந்தி கிறித்துவ மதத்தின் உறுதியான எதிராளி யாவார். மேலைய உலகத்தை மகிழ்விப்பதற்காக, நெருக்கடியான சமயங்களில் அவர் அடிக்கடி விவிலி யத்திலிருந்து மேற்கோள் காட்டுவார். அவருடைய மனதைப் புரிந்து கொள்வதற்காக, மேலும் இரண்டு எடுத்துக்காட்டுகளை நான் மேற்கோள் காட்ட விரும்பு கின்றேன்.
      வட்டமேசை மாநாட்டின் போது, அவர் மக்களிடம், ‘தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதிகள் முன்வைக் கும் கோரிக்கைகளுக்கு எதிராக நான் ஆட்சேபனை எழுப்பமாட்டேன்’ என்று கூறினார். ஆனால் தாழ்த் தப்பட்ட வகுப்புகளின் பிரதிநிதிகள் தங்களுடைய கோரிக்கைகளைச் சமர்ப்பித்தவுடனேயே காந்தி, தான் அளித்த உறுதிமொழிகளையெல்லாம் ஓசைபடாமல் விட்டுவிட்டார். இதைத் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு அவர் செய்த துரோகம் என்று நான் கருது கிறேன்.
      காந்தி முசுலீம்களிடம் சென்று, தாழ்த்தப்பட்ட வகுப்புகளின் பிரதிநிதிகள் முன்வைக்கும் கோரிக்கை களை அவர்கள் எதிர்த்தால், முசுலீம்களின் 14 கோரிக் கைகளைத் தான் ஆதரிப்பதாகக் கூறினார். ஒரு கயவன்கூட இதைச் செய்திருக்கமாட்டான். இது காந்தியின் துரோகத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு மட்டுமே யாகும்.
இது பெருமளவு என்னை வேதனைப்படுத்தியது. ஒரு பழைய மூதுரையை இச்சமயத்தில் கூறுவது பொருத்தமாக இருக்கும். ‘கடவுளின் பெயரை உச் சரித்துக் கொண்டே கத்தியைக் கையில் மறைவாக வைத்துக் கொள்வது’ என்பதே அதுவாகும். இத்தகைய ஒருவரை மகாத்மதா என்று அழைக்க முடியுமானால், காந்தியை ஒரு மகாத்மா என்று தாராளமாக அழை யுங்கள். என்னைப் பொறுத்தமட்டில் அவர் ஒரு சாதாரண மோகன்தாஸ் கரம்சந்த் காந்திதானே தவிர, வேறொன்றுமில்லை.

      ‘சித்ரா’ இதழின் ஆசிரியர் கேட்டதைக் காட்டிலும் அதிகமாக நான் கூறிவிட்டேன். ‘சித்ரா’ இதழின் வாசகர்கள் செரித்துக் கொள்ளக் கூடியதைக் காட்டிலும் அதிகமாக நான் நிறைய கூறிவிட்டேன் என்று நினைக் கிறேன்.

(இந்தக் கட்டுரை மராத்தி இதழான ‘சித்ரா’வில் 1938இல் தீபாவளி சிறப்பு மலரில் வெளியிடப்பட்டது. ஆதாரம் : டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு (தமிழ்) : தொகுதி 36, பக்கங்கள் 88-95)


Dec 13, 2014

தமிழர் வாழ தமிழ் போதுமா..?



     தமிழுக்கு மிகுந்த சோதனைகள் வாய்த்துள்ளதாகத் திரும்பத் திரும்பக் குரல் எழுப்பப்பட்டு வருகிற ஒரு காலகட்டத்தில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம். தமிழுக்கு  அப்படி என்னதான் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன என்று பார்ப்போம். ஒரு வகையில் பார்த்தால் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் தமிழ் பல ஏற்றங்களைக்  கண்டிருக்கிறது. உலகெங்கிலும் சுமார் எட்டு கோடித் தமிழர்கள் இன்று வாழ்கிறார்கள். இவர்கள் அனைவருமே தமிழ் பேசத் தெரிந்தவர்கள். பல தலைமுறைகளாக வெளிநாடுகளில் தங்கி அந்நாட்டு மொழியையும் வேறு மொழிகளையும் கற்றுக் கொண்டுவிட்டு, தமிழைப் பயன்படுத்தவே முடியாத சூழலில் தமிழ் பேசாத தமிழர்களும் இருக்கிறார்கள். அவர்களின் மொத்த எண்ணிக்கை சில ஆயிரங்களைத் தாண்டாது என்று கொள்ளலாம். இப்படியொரு அதிக அளவில் தமிழ் பேசத் தெரிந்தவர்கள் தமிழினம் தொடங்கிய காலம் முதல் இப்போதுதான் இருக்கிறார்கள். உலக மக்கள் தொகை பெருக்கத்தின் நேரடி விளைவாகவும் இதனைப் பார்த்தால் இதற்கு தனிச்சிறப்பு இருப்பதாகவும் கொள்ளமுடியாது. ஆனால் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கையும் இப்பொழுது உள்ள அளவிற்கு இதுநாள்வரை  இருந்ததில்லை என்பதை ஒரு பலமாகவும் பார்க்கலாம். தமிழில் பத்திரிகைகள், புத்தகங்கள் எண்ணற்ற அளவில் ஆண்டுதோறும் பிரசுரமாகின்றன. தமிழ்புத்தகங்களின் மொத்த ஆண்டு விற்பனைத் தொகை ரூ.80 கோடியைத் தாண்டிவிட்டது. எட்டு கோடி தமிழர்களின் புத்தகச் செலவு இதுதான் என்று பார்க்கும் பொழுது இந்த தொகை அவ்வளவு பொருட்படுத்தத்தக்கதாக இல்லை என்று கூறலாம். ஆனால் இவர்களில் ஆறரை கோடித் தமிழகத் தமிழர்கள்தான் புத்தகங்களை அதிகம் வாங்கியவர்கள். அது சுலபமான யூகம்தான். தமிழகத் தமிழர்களிலும் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் இருபது சதவிகிதத்தினருக்கு மேற்பட்டவர்கள். எழுதப் படிக்கத் தெரிந்தவர்களில் பலரும் புத்தகம் வாங்கும் பழக்கத்தை இன்னமும் கைக் கொள்ளாதவர்கள் என்றெல்லாம் பார்க்கும் பொழுது புத்தக விற்பனையின் ஏறுமுகம் நம்பிக்கை அளிப்பதாகவே உள்ளது. நூலகங்கள் தவிர ஒரு சிறுபான்மையினரே புத்தகங்கள் வாங்குகின்றனர் என்றாலும் தமிழ்ப் புத்தகம்         வாங்குபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் பெருகி வருவதைக் கண் கூடாகப் பார்க்கலாம். தமிழ் நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் வானொலி, தொலைக்காட்சி நிலையங்கள் அதிகரித்து வருகின்றன. தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் கிடைத்துள்ளது. கணினியிலும் தமிழ் காலந்தாழ்த்தாது நுழைந்து விட்டது.
ஆனால் தமிழைக் கல்வி நிலையங்களில் கற்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இளைஞர்கள் விருப்புடன் தமிழைக் கற்பதில்லை. மேடைகளில், தொலைக்காட்சிகளில் தமிழ் நிகழ்ச்சி நடத்துபவர்கள் தமிழ் சொற்களைச் சரியாக உச்சரிப்பதில்லை. ஆங்கிலத்தை விரும்பி உபயோகிக்கும் தமிழர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. இரண்டு தமிழர்கள் சந்தித்தால் அவர்கள் ஆங்கிலத்தில் உரையாடவே விரும்புகிறார்கள். தமிழ் மத்தியில் ஆட்சி மொழியாகவில்லை. தமிழ்நாட்டு பள்ளிக்கூடங்களில் தமிழ் போதிக்கப்படுவதில்லை. அவ்வாறே போதிக்கப்படும் இடங்களிலும் மேல்நிலை வகுப்புகளில் தமிழ் இடம்பெறுவதில்லை. அங்கெல்லாம் ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்துகிறது. குழந்தைகள் அப்பா அம்மா என்றெல்லாம் அழைக்காமல் டாடி, மம்மி என்று அழைக்கின்றனர். சுருங்கக் கூறினால் தமிழின் மிகப் பெரும் அச்சுறுத்தலாக ஆங்கிலம் கருதப்படுகிறது.
தனித்தமிழை வேண்டியவர்கள் வடமொழி மீதுதான் வெறுப்பு கொண்டிருந்தனர். ஆங்கிலத்தின் மீது அல்ல. இப்பொழுது குறைந்த அளவில் மட்டுமே வடமொழி தமிழுக்கு ஊறு விளைவிக்கும் மொழியாகக் கருதப்படுகிறது. வடமொழிச் சொற்களைத் தமிழில் கலக்கக்கூடாது என்பது பலரின் வேண்டுகோள். இந்த வேண்டுகோள் பெருமளவில் நிறைவேற்றப்பட்டதாகவே கொள்ளலாம். மணிப்பிரவாள நடை வழக்கொழிந்து போய்விட்டது. வட மொழிச் சொற்களுக்கு மாற்றான தமிழ்ச் சொற்களைப் பலரும் விருப்புடன் எடுத்தாளத் துவங்கிவிட்டனர். வட மொழியினால் தமிழுக்கு அபாயம் எதுவும்  இல்லை. ஏனெனில் தமிழும் வடமொழியும் தனித்தனியேயான உள்ளார்ந்த குணங்கள் கொண்டவை. வடமொழியில் இதிகாசங்களும் வேதங்களும் வளர்ந்தன. தமிழில் இலக்கியங்களும் நீதி நூல்களும் படைக்கப்பட்டன. பக்தி இலக்கியங்கள் தோன்றும்வரை இந்த நடைமுறை இருந்திருக்கிறது. வட மொழி வழக்கொழிந்து போனதற்கும் தமிழ் இன்றளவும் மக்கள் மொழியாக இருப்பதற்கும் இவையும் கூட காரணங்கள்  எனலாம்.
ஆனால் தமிழர்கள் தங்களுக்கு வைத்துள்ள பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக இருக்க வேண்டும் என்பதில் கருத்து வேற்றுமைகள் உள்ளன. இந்து சமயத்தைச் சேர்ந்த தமிழர்கள் இந்துக் கடவுள்களின் மற்றும் மகான்களின் பெயர்களைத் தங்களுக்கும் தங்கள் பிள்ளைகளுக்கும் வைப்பதால் அவை தமிழ்ச் சொற்களாக இருப்பதில்லை. பெரும்பாலும் அவை வடமொழி சார்ந்தவை. ஆனால் அப்பெயர்களை வைப்பவர்கள் சமய இறையுணர்வு காரணமாகச் செயல்படுகிறார்களேயன்றி அவர்கள் தமிழ் உணர்வற்றவர்கள் என்று கொள்வது தவறான கற்பிதம். தமிழர்களான இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சமணர்கள் போன்றோரும் தங்கள் இறைவழிபாட்டு பண்பினையொட்டி சமயப் பெயர்களைச் சூட்டுகிறார்கள். அப் பெயர்களும் அந்நிய மொழியிலிருந்து பெறப்பட்டவை. அவற்றுக்கும் மூலம் தமிழ் கிடையாது. கார்ல் மார்க்ஸ், சாக்ரடீஸ், இங்கர்சால் போன்ற அறிஞர்களின் பெயர்களை விரும்பி வைத்துக் கொள்பவர்களும் உள்ளனர். அப்பெயர்களும் தமிழ்ப் பெயர்கள் அல்ல. எனவே இந்துக்கள் மட்டும் தங்கள் இறை நம்பிக்கை அடிப்படையில் அமைந்த பெயர்களை அவை வடமொழி மூலம் கொண்டிருக்கின்றன என்கிற காரணத்தால் வைத்துக் கொள்ளக்கூடாது என்று கூறுவது எவ்வகையிலும் நியாயமானதல்ல.
அது போன்றே ஷ,,ஸ ஆகிய எழுத்துகள் வந்தால் அவற்றுக்குப் பதிலாக ச என்ற எழுத்தையும் ஹ வந்தால் அதற்குப் பதிலாக அ என்ற எழுத்தையும் போட்டு எழுதுகிற பழக்கம் தமிழ்ப் பற்றை நிரூபிப்பதாகக் கொள்வது. வடமொழியில் மட்டும் இன்றி இந்த எழுத்துகள் பாரசீகம், அரபு, ஆப்ரிக்க மற்றும் ஐரோப்பிய மொழிகளிலும் காணப்படுகின்றன. எனவே பிறமொழிச் சொற்கள் கொண்டுள்ள ஒலியினை வரி வடிவத்தில் தமிழில் தர வேண்டும் என்றால் இந்த எழுத்துகளைக் கட்டாயமாக நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும். இதை மொழி பெயர்ப்பு இலக்கியம் அசட்டை செய்ய இயலாது. ஷேக்ஸ்பியரை செகப்பிரியர் என்று எழுதுவதால் என்ன பயன்? இவரல்ல அவர் என்கிற முடிவிற்கு வருவதைத் தவிர? ஒருவரது பெயரையே ஒப்புக்கொள்ளாதவர்கள் அவருடைய படைப்புக்கு எத்தகைய நியாயத்தை வழங்கி விட முடியும்? நம் மொழிக்குப் பிறர் இத்தகைய சிதைவுகளைச் செய்தால் நாம் மனம் ஒப்புவோமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஆங்கிலேயர்கள் நம் ஊர் பெயர்களைச் சிதைத்ததை நாம் மீட்டெடுக்க முயற்சிக்கிறோம். தனித்துவம் மிக்க ழ என்கிற தமிழ் எழுத்து ஆங்கிலத்தில் LA என்று எழுதப்படுவதைவிட zha என்று அதன் உச்சரிப்பு கெடாமல் வரவேண்டும் என்று நாம் விரும்புகிறோம். இதே ஆற்றலை நாம் மற்ற மொழிகளுக்கும் தர வேண்டுமல்லவா? வடமொழி உள்ளிட்டு எந்த மொழி மீதும் வெறுப்பினை வளர்த்துக் கொள்ளக் கூடாது. மொழிகள் பரஸ்பரம் கொள்கிற பாதிப்புகள் நாகரிகத்தின் அடையாளம். "பிற மொழிகள் மீது பகைமை கொள்ளாதே பாப்பா" என்கிற வரியையும் பாப்பா பாட்டில் சேர்த்துப் படிக்க வேண்டும்.
ஆங்கிலத்தைப் பொறுத்தவரை அதன் மீதான எதிர்கொளல் சிந்தித்துச் செயல்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. ஆங்கிலத்தை விரும்பிக் கற்பவர்களாயும் அதைப் பயன்படுத்துபவர்களாயும் உள்ள தமிழர்களை ஆங்கில மோகிகள் என்று வர்ணிப்பது பிழை. மோகம் என்பது பயனற்ற அர்த்தமற்ற விளைவுக்கு இட்டுச் செல்கிற மனோபாவத்தைக் குறிக்கும். தேர்ச்சி பெறுவதென்பது காலத்தின் இன்றியமையாமை ஆகும். ஆங்கிலத்தில் இரண்டு தமிழர்கள் ஒருவருக்கொருவர் ஆங்கிலத்தில் உரையாடுவது தவறு என்று பேசப்பட்டு வருகிற காலம் இது. ஆங்கிலத்தில் உரையாடினால் தமிழ் மெல்லச் சாகும் என்று சொல்லுமளவுக்குத் தமிழ் பலவீனமான மொழி அல்ல. தமிழர்களும் தமிழைத் தவிக்க விடுவதற்காக ஆங்கிலம் பேசுவதில்லை. தேவை கருதியும் தன்னம்பிக்கையின் அடையாளமுமாயும்தான் அவர்கள் ஆங்கிலம் பேசுகிறார்கள். அவர்கள் முழுதும் ஆங்கிலத்திலேயே பேசிக் கொண்டிருப்பதில்லை என்பதையும், அது இயலாத ஒன்று என்பதையும் கூட கவனிக்க வேண்டும். இன்று தமிழர்களின் சமூக, பொருளாதார நிலை உயர்ந்திருக்கிறதென்றால் அதற்கு மிக முக்கிய காரணம் ஆங்கிலக் கல்வி. தமிழர்களின் வாழ்வில் வளம் சேர்ப்பது ஆங்கிலம்தான். தமிழர்களாகிய நாம் நம்மிடையே உள்ள பிற வளங்கள் என்ன என்பதைப் பட்டியலிட்டுப் பார்க்க வேண்டும். நம்மிடம் இயற்கை வளங்கள் குறைவு. வற்றாத நதிகள் என்று எதுவும் இல்லை. குடிநீருக்கே பிற மாநிலங்களை யாசிக்க வேண்டிய நிலை. ஏற்றுமதி செய்யத்தக்க கனிமப் பொருட்களோ நுகர் பொருட்களோ கணிசமான அளவில் இங்கு கிடையாது.
நாடு என்ப நாடாவளத்தன நாடல்ல / நாட வளம் தரும்நாடு என்றார் வள்ளுவர். நமக்கே இயற்கையாக வாய்க்கப்பெற்ற வளம்தான் நம்முடையது என்னும் பட்சத்தில் நம்மிடம் இருப்பதெல்லாம் மனித வளம்தான். நாம் மற்றவரிடமிருந்து எதையாவது பெறவேண்டுமென்றால் நாம் எதையாவது அவர்களுக்குக் கொடுக்க வேண்டுமல்லவா? நம்மால் கொடுக்க முடிவது மனித வளத்தைத்தான். காலம் காலமாகத் தமிழர்களாகிய நாம் நம் உழைப்பைத்தான் மற்றவர்களுக்குக் கொடுத்து வந்திருக்கிறோம். பிஜி, ஆப்ரிக்கா, இலங்கை, மலேசியா போன்ற நாடுகளுக்குக் கூலி வேலை செய்பவர்களைத் தருபவர்களாக தமிழகம் இருந்திருக்கிறது. ஆனால் இன்று அந்த அவல நிலை மாறி பிற நாடுகளுக்கு நாம் அறிவு சார்ந்த துறைகளில் வேலை செய்வதற்காக தமிழர்களை அனுப்பிக் கொண்டிருக்கிறோம். இதற்கெல்லாம் காரணம் ஆங்கில அறிவுதான். ஆங்கிலத்தில் நம்மவர்கள் பேசவும் எழுதவும் பெற்ற தேர்ச்சியின் விளைவே இது.
இந்தத் தேர்ச்சியை நாம் எவ்வாறு பெற்றோம்?
பல வருடங்களாக ஆங்கிலம் கற்றுப் பேசி எழுதிப் பெற்ற தேர்ச்சி இது. எனவே ஆங்கிலத்தில் பேச தேர்ச்சி பெற வேண்டுமென்றால் தமிழர்கள் பிற தமிழர்களிடம்தான் பேச வேண்டும். தமிழ் தெரியாதவர்களிடம் மட்டுமே ஆங்கிலம் பேச வேண்டுமென்றால் இந்தத் தேர்ச்சி வந்திருக்காது. சிறு வயது முதல் ஆங்கிலம் படித்தாலும் ஆங்கிலமே பேசியிராதவர்கள்  இருபது வயதுக்கு மேல் வேலை நிமித்தமாக திடீரென சரளமாக ஆங்கிலத்தில் உரையாட முடியுமா? மொழிப் பயிற்சி சிறு வயதிலிருந்தே வருவது நல்லது.
நான் மம்மி என்று கூப்பிடுகிறேன். அதனால் நீ கவுன் அணிந்து முள் கரண்டியால் எனக்கு ரொட்டியை ஊட்டு என்றெல்லாமா அக்குழந்தை தன் தாயிடம் கேட்கிறது? தமிழ் உணர்வுடன் பண்பாட்டுடன்தான் அக்குழந்தை பேசுகிறது. மம்மி என்பது அக்குழந்தையின் ஆங்கில மழலை. நீ எனக்கு அம்மா என்ற சொல்லைக் கற்றுக் கொடுத்தாய், நான் மம்மி என்ற சொல்லைக் கற்று வந்திருக்கிறேன் பார் என்று அது பெருமிதத்துடன் சொல்வதைத் தமிழுக்கு எதிரான செயலாகப் படம் பிடித்துக் காட்டுவதும் ஆங்கிலத்தை விட்டுத் தமிழில் பேசுகிற குழந்தைகளுக்கு அபராதம் போடுகிற ஆங்கில வழிக் கல்வி தரும் பள்ளி ஆசிரியர்களின் கொடூரமும் மொழி பற்றிய புரிதலின்மை என்கிற ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாகும். மம்மி, டாடி என்பதெல்லாம் சரி, நீ அம்மா அப்பா என்றுதான் கூப்பிட வேண்டும் என்று அன்பாகக் கூறினால் அக்குழந்தை ஒரே நொடியில் தன்னை மாற்றிக் கொள்ளும்.
ஆங்கிலம் தமிழ்ச் சமூகம் வளர்ந்துள்ளது. ஆங்கிலம் போன்ற ஒரு மொழியின் வளத்தையும் உபயோகத்தையும் அம்மொழி தரும் வாய்ப்புகளையும் தமிழ் தரவேண்டுமென விரும்பும் நாம் ஆங்கிலத்தை ஒதுக்கி வைப்பது கூடாது. இந்தியாவின் எதிர்காலத்தை தொலைநோக்குடன் பார்த்த காந்தி, நேரு, அம்பேத்கர், பெரியார் போன்றோர் நம்மை அடிமைப்படுத்தியவன் ஆங்கிலேயன் என்ற ஒரு காரணத்திற்காக ஆங்கிலத்தைப் பகைத்துக் கொள்ளுமாறு போதிக்கவில்லை. தலித் மக்களுக்கு ஆங்கிலக் கல்வி அவர்களது பின்தங்கிய நிலைகளிலிருந்து விடுதலையை அளிக்கும் என்று நம்பினார் அம்பேத்கர்.
இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவரான பாரதிக்கு மட்டும் ஏனோ அச்சிறப்பு மிக்க கண்ணோட்டம் வாய்க்கவில்லை. ஆங்கிலக் கல்வியையும் ஏன், தன்னிடம் ஆங்கிலம் பேச வந்த தமிழர்களையும் சினந்தார் பாரதி. ஆங்கிலத் தேர்ச்சி மற்றும் பெற்றிராவிடில் பாரதி நவயுகத்தின் மகாகவியாக ஆகியிருக்க முடியாது என்பது நிச்சயம். ஷெல்லி, வால்ட் விட்மன் ஆகியோரின் நேரிடையான பாதிப்புகளுக்கு மட்டுமின்றி அவரது கவிதைகளில் இடம்பெற்ற முன்னோடியான சிந்தனைகளுக்கும் அவரது ஆங்கில அறிவே காரணம். கவிஞராக மட்டுமல்ல, ஒரு பத்திரிகையாளராக பாரதி ஆங்கில அறிவினால் அடைந்த பயன்களும் ஏராளம். ஆனால் பாரதி உட்பட அனைத்துத் தமிழர்களும் புத்திசாலிகள். அவர்கள் ஒருபோதும் மெய்யாக ஆங்கிலத்தைப் பகைத்துக் கொள்வதில்லை. தலைவன் முதல் தொண்டன்வரை ஆங்கிலத்திற்கு எதிராகப் பொது வெளிகளில் பேசுகிற அனைவரும் ஆங்கிலம் மீது விருப்பு கொண்டவர்கள். தங்கள் பிள்ளைகள் நன்கு ஆங்கிலம் கற்க வேண்டும் என்பதில் உறுதியானவர்கள். ஒரு பக்கம் வாழ்க்கை வெற்றிக்குத் தேவையான ஆங்கில அறிவை அடையும் முயற்சி. இன்னொரு பக்கம் தமிழ் பின்தங்கிவிடக்கூடாது என்று எண்ணிச் செயல்படுகிற தவிப்பு. இவைதான் தமிழனின் இன்றைய நிலை.
தமிழ் அசாதாரணமானதும் அற்புதமானதுமான ஒரு மொழி என்பதில் சந்தேகம் இல்லை. இத்தனை ஆயிரம் வருடங்களாக அது எத்தனையோ இடர்களைக் கடந்து இன்றும் இளமையுடன் தோன்றுகிறது. உலக ஓட்டத்துடன் தமிழ்  தன்னைச் சளைக்காமல் இணைத்துக் கொள்கிறது. எந்த மொழியில் புதிய சொல்லாக்கங்கள் ஏற்பட்டாலும் அதற்குத் தமிழில் தக்க ஒரு சொல்லை உருவாக்கிவிட முடிகிறது. ஆனால் இதனால் நாம் எதையோ இழக்கிறோமோ என்றும் தோன்றுகிறது. ஆங்கில வழியில் வரும் சொற்கள் தான் தமிழில் மிகுதியாக இவ்வாறு மறு ஆக்கம் செய்யப்படுகின்றன. ஆங்கிலப் பதங்களுக்கு தமிழ்ச் சொற்களை உருவாக்குவது என்றில்லாமல் சுயமாக ஒரு கருத்துக்குத் தமிழில் சொல்லாக்கம் செய்வது என்பது அரிதாக உள்ளது. அவ்வாறு சமீபத்தில் வெற்றிகரமாகப் பெறப்பட்ட ஒரு சொல் திருநங்கை. நேரிடையாக பல ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழில் சொற்கள் உருவாக்கப்படுகின்றன. குதிரை பேரம், பங்குச் சந்தை வார்த்தைகளான கரடி, காளை, தொங்கு பாராளுமன்றம், ஓடு தடம், மென்பொருள், அலை வரிசை, கறுப்பு ஆடு, நீர்வீழ்ச்சி, தொலைக்காட்சி இப்படி ஏராளமான சொற்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். அத்தனை நேரிடையாக இல்லாமல் பொருளை உள்வாங்கி உருவாக்கப்படும் சொற்களும் உள்ளன. நகை, முரண், புகைப்படம், பேருந்து, காசோலை, கணினி, வானொலி போன்ற பல சொற்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
அவ்வாறு இருவகையிலும் உருவாக்கப்பட்ட சொற்கள் கலைச் சொற்கள் போன்றவை. தமிழ் எழுத்து நடையில் இத்தகைய சொற்கள் நாளும் பெருகி வருவதைப் பார்க்க  முடிகிறது. இன்னும் சில  ஆண்டுகளில் இத்தகைய சொற்களின் வரத்து அதிகமாகி எழுத்து தமிழ் உருவாக்கப்பட்ட சொற்களின் கோவையாக விளங்கக்கூடும். பேச்சுத் தமிழுக்கும் எழுத்து தமிழுக்கும் மேலும் இடைவெளி இதனால் அதிகமாகும் என்பதோடு மட்டுமின்றி, இது நாள் வரை தமிழ் மொழி என்பது வாழ்விலிருந்து பெறப்பட்டது என்கிற வழக்கிலிருந்தும் மாறுபட்டதாகி தமிழுக்கு செயற்கைத் தன்மை வந்து சேரும். இது தமிழ் மட்டுமின்றி பிற இந்திய மொழிகளுக்கும்கூட பொருந்தும்.
இதற்கெல்லாம் காரணம் தமிழர்களாகிய நாம் உலகை ஆள்வதில் பங்கேற்பதில்லை என்பதுதான். பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றில் முன்னோடி அங்கம் ஏற்பதில்லை என்பதில் மட்டுமல்ல, அறிவு சார்ந்த இயக்கங்களையும் நாம் உருவாக்குவதில்லை. தமிழில் இலக்கியம் தவிர புதிதாக எதுவும் படைக்கப்படுவதில்லை. கண்டுபிடிப்புகள், கருத்தாக்கங்கள் அனைத்தும் நமக்கு மேற்கிலிருந்து வருகின்றன. நாம் அவற்றை நம் மொழியில் செவ்வனே பொருத்திக் கொள்கிறோம். அதற்கேற்ப மாற்றுச் சொற்களை உருவாக்கிக் கொள்கிறோம். சுயமாக கண்டுபிடிப்புகளும் கருத்தாக்கங்களும் தமிழர்களால் செய்யப்பட்டு அவை தமிழில் பதிக்கப்படும் வரை இந்த வறுமை நீடிக்கும். அதுவரை கோடிக்கணக்கானவர்களின் அன்றாட மொழியாகத் தொடர்ந்தாலும் தமிழ், மொழி சார்ந்த பெருமையில்தான் திளைக்க வேண்டியிருக்கும். நோபல் பரிசு பெற்ற தமிழ் விஞ்ஞானிகளான சி.வி.ராமன், எஸ்.சந்திரசேகர், வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ஆகியோர் தங்கள் ஆய்வுகளைத் தமிழிலும் எழுதி வெளியிட்டிருந்தார்களேயானால் இந்த நிலைமை மாறியிருக்கும். இனிவரும் காலங்களில் பல்துறை சார்ந்த தமிழ் அறிஞர்கள் தங்கள் ஆய்வுகளை ஆங்கிலத்தில் வெளியிடுகிற அதே சமயத்தில் சற்றும் காலம் தாழ்த்தாது தமிழிலும் வெளியிட்டால் அது ஒரு முன் மாதிரியான முயற்சியாகத் தமிழை உலகத்திற்கு எடுத்துச் செல்கிற செயலாக இருக்கும். இவ்வாறு செய்பவர்களுக்கு ஊக்கத்தொகை, விருது என்றெல்லாம் எதுவும் தரப்பட வேண்டியதில்லை. இயல்பான தமிழ் உணர்வு எல்லா தமிழர்களிடமும் செயல்பட வேண்டும்.
தமிழை மற்ற மொழிகளுடன் குறிப்பாக, ஆங்கிலத்துடன் போட்டியிடும் மொழியாகப் பாவிப்பதனால் தான் பல பிரச்சினைகள் எழுகின்றன. வேலை வாய்ப்புக்கும் வெளி உலகத் தொடர்புக்கும் தமிழ்  உபயோகமாக இருக்குமா என்ற கோணத்தில் தமிழைப் பார்க்கக்கூடாது. அவ்வாறு தமிழ் இல்லாத பட்சத்திலும் தமிழ் நம் மொழி, அதை நன்கு கற்பது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர வேண்டும். தமிழ்நாட்டிற்குள் மட்டும் செயல்படுகிற நீதிமன்றங்கள், அரசு நிர்வாகங்கள் ஆகியன தமிழில் இருக்க வேண்டும்.
வருங்கால சந்ததியினருக்கு தமிழின்பால் தன்னார்வத்தை தூண்டுமாறு இன்றைய தலைமுறையினர் செய்யவேண்டும். தமிழ் படிக்க வரும் மாணவர்களை வேதனைப்படுத்தக்கூடாது. கடினமான தமிழைப் படிப்பதைவிட பிரெஞ்சு, வடமொழி ஆகியவற்றைப் படித்தால் சுலபமாக மார்க் வாங்கிவிடலாம் என்ற யதார்த்தத்தை மாற்றும் வகையில் தமிழ் படிப்பும் சுலபமாக இருக்க வேண்டும். தமிழை வைத்து தமிழ் மாணவர்களையே மிரட்டினால் பின்னர் அதைப் படிக்க வேறுயார் வருவார்கள்? பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இன்று இருப்பது போல் வெறும் இலக்கிய, இலக்கணப் படிப்பாக மட்டும் தமிழ் இருக்கக் கூடாது.
தமிழ் அதிகாரப்பூர்வ செம்மொழியாகி விட்டபடியால் உலகெங்கிலுமுள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். இதை அரசாங்கம்தான் செய்ய வேண்டும் என்றில்லாது வசதி படைத்த தனியார்களும் செய்ய விரைந்து முன்வரலாம். தமிழைப் பரப்புவது என்பது தமிழைத் தமிழர்களின் எல்லைக்கு அப்பால் கொண்டு செல்வதாகும். தமிழைத் தமிழர் மட்டுமே படிப்பது, எழுதுவது என்றில்லாது தமிழைத் தமிழ் அல்லாதோரும் அறிந்து கொள்ளுமாறு செய்யவேண்டும். அதுவே தமிழருக்கும் தமிழுக்கும் பெருமை!.


நன்றி: உயிர்மை