Jan 5, 2010

தவளையும் பூமியும்


கொதிக்கும் தண்ணீரில் ஒரு தவளையை போட்டோம் என்றால், உடனடியாக அது வெளியே தாவிக் குதித்து தப்பிவிடும். அதே தவளையை மெதுவாக சூடாகிக் கொண்டிருக்கும் வெதுவெதுப்பான தண்ணீரில் போட்டோம் என்றால்,அது பேசாமல் உட்கார்ந்திருக்கும், உட்கார்ந்திருக்கும், உட்கார்ந்து கொண்டே இருக்கும் - கடைசியில் அது இறக்கும் வரை.

புவி வெப்பமடைதலும் இதேபோன்று மெதுமெதுவாக நிகழும் ஒன்றே. அதன் பின்விளைவுகள் படிப்படியாக வேகமடையும். அதை நாம் உணரத் தலைப்படும்போது, எல்லாம் கையை மீறிச் சென்றுவிட்டிருக்கும்.

கடந்த பத்தாண்டுகளாக பூமி வெப்பமடைந்து வருகிறது என்பதை நாம் அனைவரும் உணர்ந்திருக்கிறோம். எதிர்பார்த்ததற்கு மாறாக புவி வெப்பமடைதலின் விளைவுகள் வேகமாக நிகழ்ந்து வருகின்றன. கணிக்கப்படும் அதன் பாதிப்புகள் ரத்தத்தை உறைய வைக்கின்றன. துருவப் பகுதிகளில் நொறுங்கி விழும் பனிப்பாறைகள், ஐரோப்பாவில் எதிர்பாராத வெப்பஅலைகள், ராஜஸ்தானில் பெருவெள்ளம், உலகெங்கும் பனிச்சிகரங்கள் சுருங்கி வருகின்றன - எல்லாம் புவி வெப்பமடைதலின் பின்விளைவுகளே.

கடந்த 50 ஆண்டுகளில் பனிச்சிகரங்கள் பெருமளவு சுருங்கிவிட்டன. இதே வேகத்தில் பனிச்சிகரங்கள் உருகி வந்தால், வடஇந்தியாவில் இமயமலை ஜீவநதிகளைச் சார்ந்து வாழும் பெருமளவு மக்கள் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படுவர்.

புவி வெப்பமடைதலின் எதிர்விளைவுகளை அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளில் உள்ள மக்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருந்து வருவது ஒரு 'தர்மசங்கடமான உண்மை'. உலகின் பல்வேறு நாடுகளின் அரசுகள் புவி வெப்பமடைதல் ஏற்படுத்தவுள்ள உடனடி ஆபத்துகளை உணராமல் இருந்து வருகின்றன. இதற்கு பல்வேறு அரசியல், பொருளாதார காரணங்கள் உள்ளன.

இந்த நேரத்தில் எழும் முக்கியமான கேள்வி: பூமியை அழிக்கும் சக்தி படைத்த புவி வெப்பமடையும் விளைவைத் தடுக்க பன்னாட்டு அரசுகள் ஏன் பெரிய நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்கின்றன என்பதே.

இதை அறியாமை என்று சொல்ல முடியாது, அலட்சியம் என்றே சொல்ல வேண்டும். தங்களது நடவடிக்கையும், வாழ்க்கை முறையும்தான் புவி வெப்பமடைதற்கு காரணம் என்பதை மக்கள் (குறிப்பாக பணக்கார நாடுகளைச் சேர்ந்தவர்கள்) உணராமல் இருக்கிறார்கள். அளவை மீறி பெருகிவிட்ட கார்களில் பயன்படுத்தும் எரிபொருள், நிலக்கரியால் தயாரிக்கப்படும் மின்சாரம், விமானப் பயணம், காடுகளை அழிப்பது போன்றவைதான் கடற்கரைகளை மூழ்கடிக்கின்றன, சுட்டெரிக்கும் வெயிலை உருவாக்குகின்றன என்பதை அவர்கள் உணரவில்லை

நமது ஒரே வீடான இந்தப் பூவுலகு புவி வெப்பமடைதலில் சிக்கித் திணறி வருகிறது. 6 கோடி ஆண்டுகளுக்கு முன் எரிகற்கள் விழுந்து பூமியின் 96 சதவிகித உயிரினங்கள் மொத்தமாக அழிந்தன. அதற்குப் பிறகு உலகை அச்சுறுத்தும் விளைவாக புவி வெப்பமடைதல் உருவாகி வருகிறது. நாம் என்ன செய்யப் போகிறோம்?


No comments: