Jan 22, 2011

வரவு எட்டணா....

நாங்கள் வாடிக்கையாளர்களோடு பேசும்போது ஒவ்வொரு முறையும் சந்திக்கிற சவால் அவர் களது தேவையை அவர்களுக்குப் புரிய வைப்பதுதான். ஒவ்வொரு முறை பத்தி எழுதும் போதும் அதற்கான ஓப்பனிங் லைன் தேர்ந்தெடுப்பதில் உள்ள சிக்கலைக் காட்டிலும் பெரிய சவால் இது. ஆனால் ஒரு Ice breaking நடந்து விட்டால் மிச்சமெல்லாம் இலகுவாக நடந்து விடும்.
சம்பாதிப்பது, அதைச் செலவழிக்கக் கூடியது வெறும் ரூ 1.44 இலட்சம் மட்டுமே. ஆனால் இறுதியில் (1,99,74,884 - 1,38,53,126 சேர்த்து வைப்பது, சேர்த்து வைத்ததைச் செலவு செய்வது என்ற வரிசை எல்லாம் சென்ற நூற்றாண்டின் சங்கதிகளாகி விட்டன. இன்றைய தலைமுறையினரில் பெரும்பாலானோருக்கான வரிசை பாருங்கள். a) செலவு செய்வது b) செலவு செய்வதை நிறுத்துவது c) அதற்குப் பதிலாக சேமிப்பது d) சேமிப்பதற்குப் பதிலாக முதலீடு செய்வது. இதில் வேடிக்கை என்னவென்றால் பெரும்பாலானோர் a ஐத் தாண்டி வருவதே கிடையாது.
Personal Finance பரிணாமத்தின் நான்கு படிநிலைகளாக இவற்றை நான் கருதுகிறேன். கூடவே, இந்த இடத்தில் ஒரு anecdote இன் துணையை நாடலாம் எனவும் கருதுகிறேன்.
அவன் 24 வயது இளைஞன் பிரபலமான சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் மாதம் 25 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை. ஒரு குறிப்பிட்ட பாருக்கு மட்டும் வாராவாரம் 2000 முதல் 2500 ரூபாய் வரை செலவாகிறது. இது கடந்த இரண்டு வருடங்களாக நடக்கிறது.
ஏதேச்சையாக ஒரு நாள் அவனோடு உரையாடும் சந்தர்ப்பம் கிட்டியது. மாதம் எட்டாயிரம் ரூபாய் கேளிக்கைக்கு மட்டும் செலவழிக்கிறோமே என்ற விசனமே அவனுக்கு இருக்கவில்லை என்பதை அப்போது என்னால் உணர முடிந்தது. எட்டாயிரம் என்பது நான்கு இலக்கத்தில் உள்ள சிறு தொகை என்பதாக அவன் எண்ணிக்கொண்டிருந்தான்.
அவனைக் குடிக்க வேண்டாம் என்று வலியுறுத்த மனது வரவில்லை. ஆனால் எங்கே குடிக்க வேண்டும் அல்லது குடிக்கக் கூடாது என்பதைத் தீர்மானிப்பதில் உதவ விரும்பினேன். பாருக்குச் செல்வதை விட டாஸ்மாக் துணையுடன் வீட்டிலேயே தண்ணி அடித்தால் மாதம் 2000 ரூபாய் மட்டுமே ஆகும் என்று தெரிந்தது.
ஆக, மாதம் ஆறாயிரம் ரூபாய் மிச்சம் செய்ய முடியுமென்ற சூழலை ஒரு சின்ன லைஃப் ஸ்டைல் மாற்றம் மூலம் உருவாக்க முடிந்தது. மேலோட்டமாகப் பார்த்தால் இது சிறிய தொகையே.
ஆனால் இந்தத் தொகையை 18% வீதம் வளர்கிற வகையில் முதலீடு செய்தால் இருபது ஆண்டுகளில் ரூ. 1,38,53,126 (ரூ 1.39 கோடி) கிடைக்க வாய்ப்பு உண்டு. உண்மையில் அவன் முதலீடு செய்து வைக்கும் தொகை 6000 X 12 X 20 = ரூ 14,40,000 (ரூ. 14.4 இலட்சம்) மட்டுமே. (முதலீடு கால்குலேட்டர் உபயம் http://www.indiamoneycenter.com/invest.html)
இதுதான் நீண்ட கால முதலீட்டின் ஆற்றல். ஒயின் மட்டுமல்ல, முதலீடு கூட நீண்ட காலம் வைத்திருந்தால் சிறக்கும். சரி.. இதே நம்ம பையன் இரண்டு வருடத்துக்கு முன்பாகவே வீட்டில் சரக்கடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி, அப்போதிருந்தே இந்த வகையில் முதலீடு செய்தால் அவனுக்கு ரூ 1,99,74,884 (ரூ 1.98 கோடி) கிடைக்கும் வாய்ப்புள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் 6000 வீதம் அவன் கூடுதலாக முதலீடு செய்திருக்க நினைத்திருந்தால் ரூ 61.22 இலட்சம் கூடுதலாகக் கிடைக்கும்.
அதுதான் Power of compounding is the eighth wonder of the world என்று ஐன்ஸ்டீன் சொன்னதற்குக் காரணம்.
மேலே சொன்ன anecdote இன் முக்கியமான சாராம்சம்: "எவ்வளவு விரைவாக, எவ்வளவு சின்ன வயதில் முதலீடு செய்யமுடியுமோ அவ்வளவு விரைவாகத் துவங்கி விடுவது நல்லது."
http://www.indiamoneycenter.com/invest.html இல் உள்ள கால்குலேட்டர் உணர்த்தும் இன்னொரு முக்கியமான விஷயம், எம்மாதிரியான முதலீடு அல்லது சேமிப்பில் பணத்தைப் போடுகிறோம் என்பதில் உள்ளது.
உதாரணத்துக்கு நம்ம பையனையே எடுத்துக் கொள்வோம். மாதாமாதம் 6000 ரூபாயை 8% வட்டி கொடுக்கக் கூடிய வங்கி வைப்பீட்டில் போட்டால் இருபது ஆண்டுகள் முடிவில் ரூ. 35,34,122 கிடைக்கும். இதே பணத்தை 10% வளர்ச்சி தரும் வகையில் சேமித்தால் ரூ.45,56,213 கிடைக்கும். ஒரு ஆண்டுக்கு 2 சதவீதம் என்பது சாதாரணமாகத் தோன்றினாலும், இறுதியில் 29 சதவீதம் அதிகமாகக் கிடைக்கிறது.
இப்போது 8% வட்டி தரும் சேமிப்பையும், 15% வளர்ச்சி தரும் முதலீட்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இறுதியில் ரூ.35,34,122 Vs ரூ.89,83,437. எத்தனை வித்தியாசம்!!
இதுதான் Power of Compounding உணர்த்தும் இரண்டாவது பாடம் சேமிப்பிற்கும், முதலீட்டுக்குமான வேறுபாட்டை உணர்த்தும் பாடம்.
என்னைப் பொறுத்தமட்டில் பணவீக்கத்தை விட அதிகமான வேகத்தில் வளர்வது முதலீடு. பணவீக்கத்திற்கு இணையாக அல்லது அதைவிடக் குறைவாக வளர்வது சேமிப்பு. செலவு செய்வதைக் குறைத்துக்கொண்டு சேமிப்பது என்பது நல்ல பழக்கம்தான். ஆனால் சேமிக்கிறோம் பேர்வழி என்ற பெயரில் எதிர்காலப் பணத்தின் மதிப்பைக் குறைத்துக் கொள்வது சரியானதல்ல.
அதனால்தான் பர்சனல் ஃபைனான்ஸ் பரிணாம வளர்ச்சியில் செலவு, செலவைக் குறைப்பது, சேமிப்பு, முதலீடு என்று நான் வரிசைப்படுத்துகிறேன்.
செலவே செய்யாமல் நேரடியாக முதலீட்டுக்கு வந்தால், அதுவும் திருமணம் ஆவதற்கு முன்பாக இருபதுகளின் முதல் பாதியில் வந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி.
"இப்ப என்ன அவசரம். இப்ப என்ஜாய் பண்ணாம எப்ப பண்றது? எல்லாம் கல்யாணம் ஆன பின்னாடி பாத்துக்கலாம்" என்று நினைத்தால்.. ஆல் த பெஸ்ட்.. வேறென்ன சொல்ல!
அதுகூடப் பரவாயில்லை. மேலே சொன்ன கதையை அதே வயதொத்த இன்னொரு இளைஞனோடு பகிர்ந்தபோது, "அண்ணா, வீட்ல வாங்கி தண்ணி அடிச்சாலே மாசம் ஆறாயிரம் ஆகுது. என்ன செய்ய?" -என்று திருப்பிக் கேட்டான்.
இதற்கு என்னிடம் இரண்டு பதில்கள் இருந்தன.
ஒன்று: "குட் கொஸ்டீன்."
இரண்டு: "சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க."

நன்றி:-

வரவு எட்டணா என்ற தலைப்பில் உயிரோசையில் வெளியான கட்டுரை.
-செல்லமுத்து குப்புசாமி.

..............................

No comments: