Sep 28, 2011

அய்யனார்...


     அய்யனார் யார்? அவர் பற்றிய வரலாற்று, புராண, இலக்கியக் குறிப்புகள் எப்போதுமுதல் காணப்படுகின்றன என்று முதலில் பார்ப்போம். நமக்குக் கிடைத்த தொன்மையான பண்டை இலக்கிய, இலக்கண நூல் எது என்றால் பரிபாடலையும் தொல்காப்பியத்தையும் சொல்லலாம். பரிபாடலில் முருகன், விஷ்ணு பற்றிய பாடல் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. தொல்காப்பியத்தில் ஐந்திணைக் கடவுள்களாக முருகன், மாயோன், இந்திரன், வருணன், கொற்றவை வழிபாடு பற்றிக் கூறப்படுகின்றது. இவற்றில் அய்யனார் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை.

     அப்படியானால் அய்யனார் யார்? அவரது வழிபாடு எப்போது முதல் தமிழகத்தில் தோன்றியிருக்கும்?

     சாஸ்தா அல்லது சாத்தான் என்ற கடவுளும் அய்யனாரும்  தோற்றத்தில் ஒன்று போலவே உள்ளனர். அய்யனார் தான் சாத்தன் எனக் கொண்டால் சங்க இலக்கியத்தில் ’சாத்தன்’ என்ற பெயரில் சில குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. சாத்தன் எனும் பெயருடைய புலவர்கள் பலர் இருந்துள்ளனர். மதுரை கூல வாணிகன் சீத்தலைச் சாத்தன் என்ற பெயரும் அதில் ஒன்று. அவர் சாஸ்தாவை அல்லது அய்யனாரை குலதெய்வமாக வழிபட்டவர். அதனால் தான் அப்பெயரை வைத்திருக்கின்றார் என்பது ஒரு சில ஆய்வாளர்கள் கருத்து. ஏனென்றால் குலதெய்வத்தின் பெயரைச் சூட்டுவது தொல் தமிழர் மரபு என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
     இதுகுறித்து தேவ நேயப் பாவாணர் கூறும் கருத்து சிந்திக்கற் பாலது. ”நாட்டின் பல இடங்களுக்கும் தத்தம் காவற்படையுடன் சென்று பொருளீட்டிய வணிகக் கூட்டங்களுக்கு சாத்து என்று பெயர். சார்த்து – சாத்து : சார்தல் – சேர்தல் என்பது பொருளாம்” என்கிறார் அவர். மேலும் அவர், “ வணிகக் சாத்துக்களின் காவல் தெய்வத்திற்கு சாத்தன் என்று பெயர். அவரே ஐயனார். அதனாலேயே அக்காலத்தில் வணிகர்கள் சாத்துக்கள், சாத்துவன், சாதுவன் என்றெல்லாம் அழைக்கப்பட்டனர். அக்காலத்தில் உள்ளூர் வணிகர்கள் பெரும்பாலும் குதிரைகளில் சென்றே வாணிகம் செய்தனர். அதனாலேயே ஐயனாருக்கு குதிரை வாகனமாகியது. சாத்தன் என்னும் தெய்வப் பெயர் வடமொழியில் சாஸ்தா எனத் திரியும். சாத்தன் எனும் வணிகக் கூட்டப் பெயர் ஸார்த்த என்று திரியும்.” என்று குறிப்பிடுகிறார்.
     ஆக, சங்ககாலத்தில் ஐந்திணைக் கடவுள்கள் பற்றிய குறிப்புகள் மட்டுமே உள்ளன. அதில் சாஸ்தா (அய்யனார்) வழிபாடு பற்றிய குறிப்புகல் கிடைத்தில. ஆனால் அய்யனாரை சங்க மக்கள் வழிபடவில்லை என்று கூறிடுதல் இயலாது. ஐந்திணை நூல்களில் சிவபெருமான் பற்றிய குறிப்புகள் ஏதும் காணப்படவில்லை. அதற்காக சங்க காலத்தில் சிவ வழிபாடே இல்லை என்று சொன்னால் அது எப்படித் தவறாக முடியுமோ அது போலத்தான் அய்யனார் வழிபாடே இல்லை என மறுப்பதும்.

     எனவே திடீர் என அய்யனார் வழிபாடு தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் என்பது சரியன்று. தொல் தமிழர் வரலாற்றோடு அய்யனார் வழிபாடு பின்னிப் பிணைந்திருக்க வேண்டும் என்பதே உண்மை. அதே சமயம் அய்யனார், சாஸ்தா வழிபாடுகள் பௌத்த மற்றும் சமண சமயத் தாக்கத்தால் விளைந்தவை என்ற கருத்தும் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் சமண, பௌத்தக் வழிபடு கடவுளாக இருந்து, பின்னர் சைவ சமய வழிபாட்டோடு இணைந்து விட்ட வழிபாடுதான் அய்யனார் வழிபாடு என்ற கூற்றும் மறுக்கக் கூடியதன்று.

 
     சங்கம் மருவிய கால இலக்கியமான சிலம்பில் சாஸ்தாவைப் பற்றி பல தகவல்கள் காணக் கிடைக்கின்றன. கனாத்திறமுரைத்தகாதையில் பாசண்டச் சாத்தன் பற்றிய குறிப்பும் வரலாறும் வருகிறது. சாத்தன் கோயிலை சிலம்பு புறம்பணையான் கோட்டம் என்கின்றது. அங்கு வழிபாடு நிகழ்தலையும், அத் தெய்வம் தம்மை அண்டியவரைக் காத்து நிற்பதையும் சிலம்பு கூறுகிறது.

     மாலதி என்னும் அந்தணப் பெண்ணினால் ஒரு குழந்தை இறந்து பட, அவள் பாசாண்ட சாத்தனை வேண்ட, அவள் துயர் துடைக்க அச்சாத்தன் குழந்தையாக அவதரித்து, பின் அந்தணச் சிறுவனாக வளர்ந்து, பின் கண்ணகியின் தோழியான தேவந்தி என்பாளை மணந்து அவளுக்கு மட்டும் தன் ‘மூவா இளநலம் காட்டி’ என் கோவிலுக்கு நாள்தோறும் வா என்றுகூறித் தீர்த்த யாத்திரை செல்வது போல நீங்கியது பற்றிய செய்திகள் சிலம்பில் காணக் கிடைக்கின்றன.
     மேலும் சிலம்பில், “தேவர் கோமான் ஏவலிற் போந்த காவற் பூதத்துக் கடைகெழு பீடிகை” எனக் குறிக்கப்பட்டிருப்பது சாஸ்தாவா அல்லது அவரது பரிவார தேவதையான கருப்பண்ணசாமியா? என்பது ஆராய வேண்டியிருக்கிறது. அந்த பூதம், இந்திரனின் ஏவலால் பூமிக்கு வந்ததாகவும், நிணத்துடன் பொங்கல் முதலிய படையல்களை ஏற்றுக் கொள்வதாகவும் சிலம்பு கூறுகின்றது. மேலும் மறக்குலத்தினர் அந்த பூதத்திற்கு அவரை, துவரை போன்ற பயிர்வகைகளையும் படைத்து, மலர் தூவி, புகை எழுப்பி வாழ்த்தினர் எனக் குறிப்பிடுகின்றது. (அய்யனார் மற்றும் சாஸ்தாவிற்கு பெரும்பாலும் சைவப் படையலே. கருப்பண்ணசாமிக்கே இரத்த பலி உண்டு. அதுபோல சாம்பிராணிப் புகையும், பலியும் கருப்பண்ணசாமிக்கே சிறப்பாக உரித்தானது. அவரைப் போன்ற வேறு சில சிறுதெய்வங்களுக்கும் இதே வகை வழிபாடு உண்டு)
மேலும் வீரர்கள், வில், வேல், வாள், ஈட்டி போன்றவற்றை அந்த பூதம் முன் வைத்து வெற்றி வேண்டி வழிபட்டதாகவும் சிலப்பதிகாரம் கூறுகின்றது. இப்பொழுதும் கருப்பண்ணசாமி வில், வேல், வாள், ஈட்டி பலவேறு ஆயுதங்களைத் தாங்கியவராகத் தான் காட்சி அளிக்கின்றார். அதே போன்று சாம்பிராணி தூபம் போட்டே வழிபாடுகள் நடக்கின்றது.
     மேற்கொண்ட தகவல்களை எல்லாம் வைத்துப் பார்க்கும் பொழுது அந்தப் பூதம் தான் பிற்காலத்தில் கருப்பண்ணசாமியாக மாறி இருக்க வேண்டும் என்றும் அந்த பூதத்தை ஏவலாகக் கொண்ட, யானை வாகனம் உடைய இந்திரன் தான் பிற்காலத்தில் அய்யனாராக வழிபாடு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் கருத இடமுள்ளது. அதாவது இந்திர வழிபாடே அய்யனார் வழிபாடாக மாற்றம் பெற்றிருக்க வேண்டும் என்று கருத இடமுள்ளது.
     மற்றுமொரு முக்கியமான விஷயம் கிராமங்களில் இப்போதும் அய்யனாருக்காக நடத்தப்படும் புரவி எடுப்பு விழாவில் கண்டிப்பாக மழை பெய்யாமல் இருக்காது. விழா நாளனறு மேகம் இருண்டு காற்றும் தூறலும் வீசுதல் என்பது பெரும்பாலும் நடக்கும் சம்பவம். மழைக்கடவுள் இந்திரன் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
     அப்படியானால் இந்திர வழிபாடே பிற்காலத்தில் அய்யனார் வழிபாடாக மாறியுள்ளதா? அப்படியானால் அய்யப்பன் யார்? அய்யப்ப வழிபாடு பற்றி பண்டை இலக்கியங்கள் ஏதும் கூறவில்லையே ஏன்? அவ்வழிபாடு எப்போது தோற்றம் பெற்றிருக்கும்? அதற்கும் அய்யனார் வழிபாட்டிற்கும் ஏதாவது தொடர்பிருக்குமா?
     பொதுவாக யானையை வாகனமாக உடைய தெய்வங்கள் மூன்று மட்டுமே. i) அய்யனார். ii) இந்திரன். iii) முருகன். அய்யனாருக்கு வாகனமாக வெள்ளை யானை இருக்கின்றது. இந்திரனின் வாகனமும் ஐராவதமான வெள்ளை யானை தான். முருகனுக்கு வாகனமான உள்ள யானைக்கு பிணிமுகம் என்பது பெயர். அது பற்றிய குறிப்பு பரிபாடலில் உள்ளது. (திருத்தணி முருகனுக்கு வாகனம் யானை. அது போல போரூர், பிரான் மலை போன்ற ஆலயங்களிலும் முருகனுக்கு யானை வாகனமே உள்ளது.)
     பெரும்பாலான கோவில்களில் அய்யனாரும், கருப்பரும் இணைந்தோ, தனித்தனியாகவோ காணப்படுகின்றனர். இருவருக்கு என்ன தொடர்பு இருக்க முடியும் என்பது ஆராயத் தக்கது.

     புராணத்தில் வரும் சாஸ்தா, அய்யனார் பற்றிய செய்திகளைப் பார்ப்போம்.

     கந்த புராணத்தில் தான் முதன் முதலில் சாஸ்தா பற்றிய செய்திகள் வருகின்றன. கந்தபுராணத்தில் மகாசாஸ்தா படலத்தில் இந்திராணிக்குக் காவலாக மகா காளர் என்னும் தன் தளபதியை சாஸ்தா நியமித்ததாக கந்தபுராணம் கூறுகிறது.

பையரா அமளியானும் பரம்பொருள் முதலும் நல்கும்

ஐயனே ஓலம், விண்ணோர் ஆதியே ஓலம், செண்டார்

கையனே ஓலம், எங்கள் கடவுளே ஓலம், மெய்யர்

மெய்யனே ஓலம், தொல்சீர் வீரனே ஓலம், ஓலம்!

என இந்திராணி, அஜமுகி தன்னை தாக்க வந்தபோது அரற்றியதாக கச்சியப்ப சிவாசாரியார் தெரிவிக்கின்றார்.

செண்டார் கையனே – இவர் செண்டலங்காரர் என்றும் குறிப்பிடப்படுவார். இவரும் ஐயனார் தான். உ.வே.சா இவர் பற்றி எழுதியுள்ளார். ஐயனார் கையில் வைத்திருக்கும் நுனி வளைந்த அந்த ஆயுதம் தான் செண்டு.

மெய்யர் மெய்யனே – பொய்யை விரும்பாதவர் ஐயனார். தவறு செய்பவரை தண்டிப்பவர். பொய்யா ஐயனார், மெய் வளர் ஐயனார் என பல பெயர்களில் ஐயனார் விளங்குகின்றார்.


தொல்சீர் வீரனே – வீரம் மிக்கவர் ஐயனார். ஊரின் காவல் தெய்வம் இவர். அதற்காகவே தனது பரிவார தேவதைகள் 32 உடன் அவர் வீற்றிருக்கிறார்.

அடுத்து சிதம்பரம் தல புராணத்தில்

சேரமான் அருளிச்செய்த திருவுலாத் தெய்வ வெற்பில்

நேருறக் கேட்டு முந்நீர் நெடும்புவி உய்யுமாறு

சீருறு சோலை சூழ்ந்த திருப்பிடவூரை நண்ணி

ஆரவே சொல்லி வைத்த ஐயனே போற்றி போற்றி

என்ற குறிப்பு வருகிறது.

     சுந்தரரும் சேரமான் பெருமானும் வெள்ளையானை மீதேறி வானுலகம் செல்கின்றனர். இறைவனிடத்திலிருந்து வந்த தேவ வாகனமாகிய வெள்ளையானையில் சுந்தரர் செல்ல, ஒரு வெள்ளைக் குதிரை மீது ஏறிச் சென்ற சேரமான் இறைவனிடத்தே சேர்கிறார். (இதை அறிந்த ஔவை தானும் விரைவாக கைலாயம் செல்ல வேண்டி, விநாயகருக்கான பூஜையை வேக வேகமாக முடிக்க விழைய, விநாயகர் அவரைத் தடுத்து வழக்கம் போல் பூஜை செய்யும் படியும் தாம் அவர்களுக்கு முன்னால் ஔவையைக் கொண்டு சேர்ப்பதாகவும் கூற, அவ்வாறே ஔவை விநாயகர் அகவல் பாடி முடித்ததும், விநாயகர் தம் துதிக்கையால் அவரைத் தூக்கிக் கைலாயம் சேர்ப்பிக்கிறார் என்பது ஒரு செவி வழி வரலாறு.
     கயிலையில் சேரமான் இறைவனை கண்டு மகிழ்ந்து பாட அவர் பாடிய பாடல்களை சாஸ்தாவிடம் கொடுத்து  பூவுலகில் வெளியிடுமாறு சொல்லி, சேரமான் வந்த வெள்ளை நிறக் குதிரையில் பூமிக்கு இறைவன் அனுப்பி வைத்ததாக சேக்கிழார் பெரிய புராணத்தில், வெள்ளானைச் சருக்கத்தில் குறிப்பிடுகின்றார். இறைவனின் ஆணையை ஏற்று சேரமான் சென்ற வெள்ளைக் குதிரையில் வந்திறங்கிய சாத்தன், சேரமானின் பாடல் தொகுப்பை எழுதி வெளியிட்டார் அந்த நூல்தான் திருக்கயிலாய ஞான உலா. இது பன்னிரு திருமுறைகளில் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளது.
     திருப்பிடவூர் என்று குறிப்பிடப்படும் அந்த ஊர் இன்றைய திருப்பட்டூர். இதற்கு திருப்படையூர் என்றும் பெயருண்டு. இன்றும் திருப்பட்டூரில் ஒரு மிகப் பெரிய ஆலயம் பராமரிப்பின்றி உள்ளது (நான் பிரம்ம புரீஸ்வரர் ஆலயத்தைச் சொல்லவில்லை. அது செல்லும் வழியில் முன்னாலேயே உள்ளது. வாயிலில் மிகப் பெரிய கல் யானை வாகனமாகக் காணப்படுகிறது. அதை பெரியய்யா கோயில் என்றும் பெரிய சாமி கோயில், எழுத்தச்சன், அரங்கேற்றியான் கோயில், அரங்கேற்றிய ஐயன் கோயில் என்றும் கூறுகின்றனர். (இந்தக் கட்டுரை உருவாகவே அந்த ஆலயம் தான் காரணம்.)
     இந்த ஐயனார் ஆலயம் மிகப் பெரிய கற் கோயிலாக உள்ளது. பொதுவாக ஐயனார் ஆலயங்கள் கிராமத்தின் எல்லைப் புறத்தில் காடு, கண்மாய், ஏரிக் கரை ஓரத்தில், பெரும்பாலும் திறந்தவெளியிலேயே அமைந்திருக்கும். ஆனால் இந்த ஐயனார் மிகப் பெரிய கற் கோயிலில் எழுந்தருளியுள்ளார். பெரிய புராணம் கூறிய வரலாற்றுக்குச் சான்றாக – இத்தலத்தில் உள்ள சாஸ்தா – ஐயனார் கரத்தில் ஏட்டுச் சுவடியை ஏந்தியவாறு காட்சியளிக்கின்றார். பூரண, புஷ்களா சமேதராக ஒரு காலை மடித்து மறுகையில் சுவடியும் ஐயனார் மிக அழகாகக் காட்சியளிக்கின்றார்.


பூரணை, புட்கலை பற்றி கச்சியப்பர்,

காருறழ் வெய்ய களிற்றிடையாகிப்

பாரிட எண்ணிலர் பாங்குற நண்ணப்

பூரணை புட்கலை பூம்புற மேவ

வாரணம் ஊர்பவன் முன்னுற வந்தான்

என்கிறார்.

இந்த ஊரைச் சேர்ந்தவரே சாத்தனார் என்ற புலவர் என்ற கருத்து உண்டு.

சிறுகண் யானைப் பெறலருந் தித்தன்

செல்லா நல்லிசை உறந்தைக் குணாது,

நெடுங்கை வேண்மான் அருங்கடிப் பிடவூர்

அறப்பெயர்ச் சாத்தன் கிளையேம், பெரும!

முன்நாள் நண்பகல் சுரன்உழந்து வருந்திக்,

கதிர்நனி சென்ற கனையிருள் மாலைத்,

தன்கடைத் தோன்றி, என் உறவு இசைத்தலின்,

என்ற புறப்பாடல் வரிகள், (பாடல் தலைப்பு – அவிழ் நெல்லின் அரியல். பாடியவர்: மதுரை நக்கீரர். பாடப்பட்டோன்: சோழநாட்டு பிடவூர்கிழார் மகன் பெருஞ்சாத்தன். திணை: பாடாண். துறை: கடைநிலை – புறம். 394) இவ்வுண்மையைத் தெளிவாக்குகின்றன.

     இன்றும் ஒவ்வொரு வருடமும் ஆடி சுவாதி தினத்தன்று திருக்கயிலாய ஞானஉலா விழா சிறப்பாகக் கொண்டாடபடுகிறது. அன்று சுந்தரருக்கும், சேரமானுக்கும் பூஜை நடக்கும். சேரமான் கையில் ஞானஉலா சுவடி வைத்து, கயிலாயத்தில் அரங்கேற்றம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.
மேற்கண்ட கருத்துகள் மூலம் அய்யனார் தமிழகத்து தொன்மைக் கடவுள் என்பதும். ஐயனார் சாஸ்தா வழிபாடு என்பது பண்டைத் தமிழர் வழிபாடு என்பதும் உறுதியாகிறது. ஆனாலும் சில சந்தேகங்கள் எழவும் செய்கின்றன.

     கந்த புராணம் கூறும் சாஸ்தாவைப் பற்றிய தகவல்கள் இதனுடன் பொருந்தவில்லை.

     சிலப்பதிகாரம் கூறும் சாத்தன் வரலாறு இதற்கு மாறானதாக இருக்கிறது.

     ஐயப்பன் பற்றிய வரலாறு இதோடு தொடர்புடையதாய் இல்லை.
ஏனென்றால் சிவபெருமானுக்கும் மோகினி வடிவில் இருந்த மகாவிஷ்ணுக்கும் பிறந்தவர் ஐயப்பன். பந்தள மகராஜனது மகவாகத் தோன்றி இவர் செய்த அற்புதங்கள் தமிழகத்து பண்டைய ஐயனார் வழிபாட்டோடு ஒத்து வரவில்லை. இருவருக்கும் பெயர் வடிவில் ஒற்றுமை இருந்தாலும் அவதார வடிவில் ஒப்புமை இல்லை. மேலும் ஐயப்பன் ஒரு பிரம்மச்சாரி என்பதும், யோக நிலையில் குத்துக் காலிட்டு அமர்ந்து தவம் செய்து கொண்டிருப்பவர் என்பதும் ஈண்டு குறிப்பிடத்தக்கது. ஐயனார் பெரும்பாலும் பூரணா, புஷ்கலா சமேத தம்பதியராகக் கணப்படுகிறார். சில இடங்களில் தனது பரிவார தெய்வங்களுடன் தனித்தும் இருக்கிறார். எங்கு இருந்தாலும் இடதுகாலை மடித்து வலதுகாலை தொங்கவிட்டு அவர் அமர்ந்திருக்கிறார். ஆனால், ஐயப்பன் இரண்டு கால்களையும் மடித்து முழங்கால்கள் மேலே தூக்கியவாறு இருக்கும்படி அமர்ந்திருப்பார்.

ஆக, மேற்கண்ட ஆய்வுகளின் படி அய்யனார் என்ற தெய்வம் வேறு அய்யப்பன் என்ற தெய்வம் வேறு என்ற முடிவிற்கே வர முடிகிறது.

இதுவரை  பொறுமையாகப் படித்த அனைவருக்கும் நன்றி  


   

      

 

2 comments:

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
முழுவதும் படித்தேன்.
புதிய, அறிய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
மிக்க நன்றி.

Roaming Raman said...

நல்ல நல்ல தகவல்கள.. ரத்னவேல் நடராஜன் அவர்கள் மிக நல்ல இணைப்புகளை எப்போதும் பரிந்துரைக்கிறார்.. மேலும் சமீபத்தில், சுவாமி ஒம்காரந்தா அவர்கள் எழுதிய மிகப் பெரீ.....ய்...ய்...ய்...ய புத்தகமான "கருப்பண்ணசாமி" புத்தகம் பார்த்தேன் (கவனிக்க பார்த்தேன்-அ-மேய்ந்தேன்).. மிகப் பெரிய உழைப்பு.. உலகம் முழுதும் உள்ள கருப்பசாமி கோவில்கள்-படங்களுடன், மற்றும் ஆழ்ந்த தகவல்கள்.. உங்கள் கட்டுரை போல!!
ரோமிங் ராமன்
பி.கு: கருத்துரைக்கான word verification நீக்கி விடலாமே!