Jul 16, 2009

எங்கள் தாய் !


இல்லத்தில் அம்மாதான் ராணி !
ஆயினும்
எல்லோருக்கும் அவள் அடிமை !
வீட்டு வேலிக்குள்
அத்தனை பேரும் ராஜா !
அம்மாதான் சேவகி !
எல்லோருக்கும் பணிவிடை முடிந்து
பாத்திரம் கழுவப்
பத்தாகி விடும் !

நித்தமும்
பின்தூங்குபவள் அம்மா !
சேவல் கூவ
முன்னெழுவாள் அம்மா !
அம்மாவைத் தேடாத
ஆத்மா இல்லை !
அம்மா இல்லா விட்டால்
வீட்டுக் கடிகாரத்தின்
அச்சு
முறிந்து விடும் !

எந்தப் பிள்ளைக்கும் அவள்
சொந்தத் தாய் !
பால் கொடுப்பாள்
பாப்பாவுக்கு !
முதுகு தேய்ப்பாள்
அப்பாவுக்கு !
இனிதாய் உணவு சமைப்பாள் !
எல்லாருக்கும் பரிமாறி
எனக்கு மட்டும் ஊட்டுவாள் !
வேலையில் மூழ்கி
வேர்வையில் குளிப்பாள் !

எப்போதாவது அடி வாங்குவாள்
அப்பாவிடம் !
தப்பாது மிதி வாங்குவாள்
தமயனிடம் !
கையை முறிப்பான்
கடைசித் தம்பி !
கலங்கும்
கண்ணீரைத் துடைப்பது
கனலும் காற்றும் !

பளுவைக் குறைப்பது அவளது
நோயும் நொடியும் !
ஆயுளை நீடிக்க வைப்பது
தாயுள்ளம் !
உயிருள்ள போது ஒருவராலும்
வணங்கப் படாது,


செத்த பிறகு
தெய்வ மாகிறாள் !


நன்றி:-சி. ஜெயபாரதன்...கனடா..