Oct 28, 2009

ஆண்களைப் பற்றின ரகசியம்.?..


ஒரு பெண், மின்னல் என்று வைத்துக்கொள்வோமே. மின்னல் சின்ன வயதிலிருந்து இருபாலினருக்கான பள்ளியில் படித்து வந்ததால் ஆண்களிடம் சகஜமாக பேசும் சுபாவம் உடையவள். அவள் வேலையிலும் தினசரி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று பல பேரை சந்தித்து சமாளிக்க வேண்டி இருந்ததால், மிகமிக கேஷுவலாக எல்லோரிடமும் பேசும் பழக்கம் அவளுக்கு ஏற்பட்டிருந்தது. இவள் இப்படி இருக்க, வேலை நிமித்தமாய் இவளை ஒரு ஆசாமி பார்க்க வந்தான். மின்னலும் வழக்கம் போல, அவனைப் பார்த்து, பேசி, தன் பணிகளை மேற்கொள்ள, தொழில்ரீதியாக இருவருக்கும், பேச்சு வார்த்தை ஏற்பட்டிருந்தது. திடீரென்று ஒரு நாள், ``நாம் ரெண்டு பேரும் தனியா எங்கயாவது போய், ஜாலியா இருக்கலாமா?'' என்ற ரீதியில் ஏதோ கேட்க, மின்னலுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி. அடப்பாவி, இவன் இப்படி நினைக்கும் அளவிற்கு நான் அவனிடம் எதுவுமே பேசவில்லையே. ரொம்ப ரொம்ப புரஃபெஷனலாக மட்டும் தானே இருந்தேன். அப்புறம் எப்படி, இவனுக்கு இப்படி ஒரு நினைப்பு வந்தது? என்ன திமிர்! என்ன வக்கிரபுத்தி!'' என்ற மின்னல், ஒட்டு மொத்தமாய் ஆண் வர்க்கத்தையே சந்தேகப்பட ஆரம்பித்தாள்.

இன்னொரு பெண், இவள் பெயரை கொடி என்று வைத்துக்கொள்வோமே. இவள் ஹாஸ்டல் விடுமுறைக்காக சொந்த ஊர் போகும் போது, ரயிலில் உடன் வந்த ஒரு ஆசாமி தனக்கு பெட்டி எல்லாம் தூக்கி வைத்து உதவி செய்தானே என்று, அவனிடம் நட்பாக பேசிக்கொண்டிருந்தாள். அப்போது அந்த ஆள் தனக்கு திருமணமாகி இருப்பதையும், வயதிற்கு வந்த இரண்டு மகள்கள் இருப்பதையும் சொல்ல, அட, நம்ம அப்பா மாதிரி என்று கொடியும், ``சேலம் வந்தா எங்க வீட்டுக்கு வாங்க அங்கிள்'' என்று தன் வீட்டு தொலைபேசி எண்ணைத் தர, அடுத்த நாளே, அங்கிள் ஃபோன் செய்தார், ``அடுத்த வாரம் சேலம் வர்றதா இருக்கேன். நாம் ரெண்டு பேரும் எங்கயாவது டின்னருக்கு போகலாமா?''

கொடிக்கு ரொம்பவே வியப்பாக இருந்தது... சும்மா இரண்டு வார்த்தை முகம் கொடுத்து, நன்றாக பேசி விட்டதாலேயே, டின்னருக்கு போகலாமா என்றால் என்ன அர்த்தம்? சீ சீ, இந்த ஆண்களே சரியான சபல கேசுகள், அவன் பொண்ணு கிட்ட எவனாவது இப்படி கேட்டா அப்பத் தெரியும்! என்று கொடி குமைய ஆரம்பித்தாள்.

மின்னல் ஆகட்டும் கொடியாகட்டும், நீங்கள் ஆகட்டும் நான் ஆகட்டும் எல்லா பெண்களுக்குமே இப்படி பல அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். பெண் என்ற ஒரே காரணத்திற்காக ஆண்கள் சலுகை எடுத்துக்கொண்டு அவர்களிடம் பேச முயல்கிறார்கள். தப்பித்தவறி அந்தப் பெண் சகஜமாக பேசிவிட்டால், அதுவும் சிரித்துப் பேசிவிட்டாள் என்றால் உடனே, ஓஹோ, பார்ட்டி சிக்னல் கொடுத்துடுச்சு போல என்று உடனே அப்ளிகேஷன் போட ஆயத்தமாகிறார்கள்.

என்னதான் `சீ, தூ' என்றெல்லாம் பெண்கள் ஆண்களின் இந்த குணத்தை ஆட்சேபித்தாலும், உண்மை என்ன தெரியுமா? உலக ஜீவராசிகள் அனைத்திலும் ஆண் இனம் இப்படிதான் இயங்குகிறது. பெண்பால் என்ற ஒன்று எதிரில் இருந்தாலே போதும், ஆண் அலர்ட் ஆகி, தன்னை பெரியவனாய் காட்டிக்கொள்ளும்.

பெண் இதை எல்லாம் கவனித்துக்கொண்டு, விலகாமல், சும்மா அப்படியே நின்றாலும்கூட அதையே தன்னை ஊக்கப்படுத்துவதாய் நினைத்துக்கொண்டு, நெருங்கி வரும். அப்போதும் அந்த பெண் விலகாமல் ஆதரவு சமிக்ஞைகளை வெளிப்படுத்தினால், உடனே ஒரு ஆணாய் தன் கடமையை ஆற்ற ஆயத்தமாகி விடும்.உலக ஜீவராசிகளின் நியதியே இதுதான்.

பெண் எப்போதும், அசையாமல் ஆணை ஆழம் பார்த்துக்கொண்டே இருக்கும், ஆணாகவே முன்வந்து அட்டெண்டென்ஸ் போட்டால், அவனை ஏற்றுக்கொள்வதா, வேண்டாமா? என்பதை முடிவு செய்யும். முடிவு எப்போதுமே பெண்ணைப் பொருத்ததுதான்.

ஆனால் முயற்சி செய்வது ஆணின் கடமை.

உதாரணத்திற்கு ஏதாவது ஒரு பூவை எடுத்துக்கொள்ளுங்களேன். பூவின் நட்டநடுவில் ஆடாமல் அசையாமல் பெண் உருப்பான கைனீஷியம் அமைந்திருக்கும். அது இப்படி சும்மா இருந்தாலும், எங்கிருந்தோ பல மகரந்தத் தூள்கள் பறந்தோ, மிதந்தோ, பிற ஜீவராசிகளின் மேல் தொற்றிக்கொண்டோ வந்து இந்த கைனீஷியத்தின் வாசலை அடையும். கடைசியில் எந்த மகரந்தத்திற்கு வெற்றி என்பதை அந்த கைனிஷியம்தான் முடிவு செய்யும். சூல் கொள்ள கைனிஷியத்திற்கு ஒன்றோ, இரண்டோ மகரந்தம்தான் தேவைப்படும். அப்படி இருந்தும், எல்லா பூக்களுமே தங்கள் மகரந்தத்தை பரப்பத்தானே செய்கின்றன. எந்தப் பூவும், ``எப்படியும் சிலதுதானே தேர்வாகும்.

எதற்கு வேலைமெனைக்கெட்டு இத்தனை மகரந்தத்தை உற்பத்தி பண்ணிக்கிட்டு, ஒரு வேலை நமக்கு சான்ஸ் கிடைக்கலைனா?'' என்று பெசிமிஸ்டிக்காய் இருப்பதில்லையே!

``சான்ஸ் கிடைக்குதோ இல்லையோ, முன் ஏற்பாடாக போட்டிக்கு தயாராகிடணும், வெற்றி தோல்வி முக்கியம் இல்லை, விளையாட்டுல கலந்தே ஆகணும்'' என்ற ரீதியில்தான் எல்லா ஜீவராசி ஆண்களுமே களமிறங்குகின்றன.

இதே விதியை அனுசரித்துதான் மனித ஆணும், முன் ஏற்பாடாக எப்போதுமே, ``ரெடி ஸ்டெடி, ஸ்டார்ட், ஜூட்'' என்று தயாராகவே இருக்கிறான். எப்போது எங்கே தன்னை ஆதரிக்க ஒரு பெண் கிடைப்பாள் என்கிற இந்த வேட்கைதான் அவனுடைய இயல்பு. ஆண்கள் மட்டும் இப்படி இயங்கவில்லை என்றால் உலகில் எந்த உயிரினமும் இன்று உயிர்வாழ முடியாது.

இது மற்ற ஜீவராசிகளை பொருத்தவரை எந்த சிக்கலையும் ஏற்படுத்தியிருப்பதாக இதுவரை தகவல் இல்லை. ஆனால் மனித வர்க்கத்தை பொருத்தவரை, ஆணின் இந்த ``எந்தப் பெண் கிடைப்பாள்?'' வேட்கை, அநாகரீகமாய் கருதப்படுகிறது.
காரணம் மிருகம் மாதிரி, பெண்ணைப் பிடித்து புணர்ந்துவிட்டு, பிறகு அவளை மறந்துவிட்டு அடுத்த பெண்ணைத் தேடிப் போகும் போக்கு மனிதர்களுக்கு ஒத்து வராததே காரணம்.

மிருகக் குட்டிகளுக்கு அப்பா என்ற ஒரு கேரக்டரே தேவை இல்லை. அம்மா மட்டுமே போதும்.

ஆனால் மனிதக் குழந்தைகளுக்குத்தான் அப்பா அம்மா இரண்டு பேருமே வேண்டுமே. இரண்டு பேரும் இணைந்து செயல்பட்டால்தான் குழந்தையின் வாழ்வு நல்லபடியாய் அமையும் என்பதினால்தான் இன்றைய புத்திசாலி ஆண்கள் ஒரே ஒருத்தியோடு, காலம் முழுக்க உறவு கொள்கிறார்கள். இந்த ஒருவனுக்கு ஒருத்தி என்கிற ஏற்பாடுதான் குழந்தை வளர்ப்பிற்கு மிக சாதகமானது என்பதாலேயே முதிர்ச்சி அடைந்த கலாச்சாரங்கள் இதையே ஆதரிக்கின்றன. இந்த அளவு, புரிதலும், அறிவும் இருக்கும் ஆண்கள் இதனாலேயே, தன் துணை அல்லாத பிற பெண்களிடம் கண்ணியமாய், கட்டுப்பாடாய் பழகுகிறார்கள்.

இத்தனை புத்திசாலித்தனம் இல்லாத ஆண்கள்தான் இன்னும் தொடர்ந்து மிருகபாணியில் மானாவரி சாகுபடி செய்கிறார்கள். எப்போது எந்தப் பெண்ணைப் பார்த்தாலும், ஈஷிக்கொள்ள முயல்கிறார்கள். இவர்கள் இப்படி மானாவாரியாக பெண்களுக்கு ரூட் விடுவது அத்தனை புத்திசாலித்தனமான போக்கில்லை என்றாலும் என்ன செய்வது, இன்னும் பல ஆண்கள் மிருகங்களாகவேதான் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

நன்றி:Dr.ஷாலினி.