படிக்காத குழந்தைகளை அடித்து வளர்த்தால்தானே ஒழுங்குக்கு வருவார்கள்?
சர்க்கஸ் தான் நினைவிற்கு வருகிறது. மிருகங்களை அடித்து, துன்புறுத்தி, பார்வையாளர்களை மகிழ்விக்கும் “ரிங் மாஸ்டரை”ப் போல குழந்தைகளை அடித்து, திருத்தி வழிப்படுத்துவது யாரை மகிழ்விக்க, “குழந்தையை நல்லா வளர்திருக்கிறாங்க” என்று பிறரிடம் பாராட்டு பெறுவதற்காகவா?
சேட்டை செய்யும் குழந்தைகளை எவ்வாறு கையாள்வது?
குழந்தைகள் எல்லாவற்றையும் பரிசோதித்து பார்க்க விரும்புவார்கள். அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் தான் “எதுசரி” “எதுதவறு” என்று சொல்லிக் கொடுக்கவேண்டும். “சேட்டை” என்றால் என்ன? நாம் சந்தோசமாக இருக்கும் போது குழந்தை நமது மூக்கில் விரலை வைத்து ஆட்டினால் கூட சிரித்து மகிழ்கிறோம். நாம் வேறு மனநிலையில் இருக்கும் போது குழந்தைசும்மானாச்சுக்கும் மண்ணைத் தொட்டால் கூட “சனியனே, “சனியனே” “பேயா பொறக்க வேண்டியது புள்ளையா பொறந்திருக்கு” என்று திட்டுவோம். ஆக “சேட்டை” என்பது குழந்தையை மையப்படுத்தி அல்ல. நம்மை மையப்படுத்தி இருக்கிறது. முதலில் அதை உணர்வோம்.அடுத்து, குழந்தை தன்னையோ, மற்றவரையோ, மற்றவைகளையோ பாதிக்காமல் விளையாட அனுமதிக்க வேண்டும். சேட்டை செய்த பிறகு அடிக்காமல் முன்பே “விதிகளை“ சொல்லிவிட வேண்டும். விதிகளை குழந்தை மீறும்போது நிச்சயமாய்க் கண்டிக்கவேண்டும். நீங்க குழந்தையா இருந்தபோது சேட்டை செய்தீர்களா? இல்லையா?
அடிக்காமல் வளர்ப்பது எப்படி?
அடிப்பதைத் தாண்டி வேறு எதையுமே யோசிக்க மாட்டீர்களா? அடித்து சரிபடுத்த அவர்கள் என்ன மத்தளமா? கண்டிப்பாக என்பது “இந்தச் செயல் எனக்குப் பிடிக்கவில்லை என்பதை உணர்த்துவது” சில குழந்தைகள் “நான் உன் கூட பேசமாட்டேன்” என்று சொன்னாலே தங்களது தவறுகளை திருத்திக்கொள்ளும். இப்படி ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விதமான உளவியல் (சைக்காலஜி) உண்டு. பெற்றோர்களுக்கும் அவரவர் குழந்தைகளைப்பற்றி நன்கு தெரியும். பொறுமையின்மையின் காரணமாக, வேலைப்பளுவின் காரணமாக, நேரமின்மையின் காரணமாக, இப்படி ஒவ்வொரு பிரச்சனையின் ஊடே குழந்தைகள் பரிதவிக்கின்றன. அடிப்பதும், மனரீதியாக வன்முறைப்படுத்தும் விதமும் கண்டிப்பாக குழந்தை உரிமை மீறல் என்கிறது ஐக்கிய நாடுகள் சபை.
குழந்தை உரிமை மீறல் என்கிறீர்களே? குழந்தைக்கு என்ன உரிமை? குழந்தை உரிமை என்றெல்லாம் இருக்கா?
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. இன்றைய குழந்தை நாளைய மனிதனல்லவா? இப்படித்தான் நிறைய நபர்களுக்கு சந்தேகம் உள்ளது. உதாரணமாக ஒரு 8 மாத குழந்தையை அதன் தாய் இடுப்பில் வைத்து சோறுஊட்டும் போது அந்தக் குழந்தை தனக்குத் தெரிந்த மழலையில் வேண்டாம் என்று சொன்னாலும் அந்தத்தாய் எப்படியாது இன்னும் இரு கவளத்தை அந்தக் குழந்தைக்குத் திணித்துவிடுவார். அப் போதுதான் அந்தத்தாய்க்கு மனநிறைவு. மகிழ்ச்சி. தன் குழந்தைக்கு வயிறுநிறைய சோறு ஊட்டி விட்டதாகத் திருப்தி. ஆனால் அந்தக் குழந் தைக்கு வயிறு ஒத்துக்கொள்ளாமல் தான் சாப்பிட்டதை சிறிறு நேரத்திலேயே வாந்தி எடுத்துவிடும் சூழலில் ‘பார் பிடிவாதத்தை. அப்படியே அது அப்பனை கணவனையும் சேர்த்துத் திட்டி தன் குழந்தைக்கும் இரண்டு அடி வைப்பார் தாய்.
இந்த நிகழ்ச்சி எதைக் காட்டுகிறது. ஒரு தாய் தன் அளவுக்குமீறிய அன்பினால் செய்யக்கூடிய வன்முறையைக் காட்டுகிறது. வாந்தி எடுத்தால் தன் குழந்தை எங்கே இளைத்துவிடப் போகிறதோ என்ற அதீத பயத்தினால், அக்கறையினால் அந்தக்குழந்தைக்கு இலவசமாக இரண்டு அடியும் கொடுக்கிறார். ஏற்கனவே வாந்தி பண்ணியதால் மூக்கிலும் வாயிலும் ஏற்படும் எரிச்சலோடு, அடிபட்டதால் அந்தக் குழந்தை மேலும் மேலும் வன்முறைக்குள்ளாகிறது. இந்த செயல் அன்பினால் ஏற்பட்ட வன்முறை.
மற்றோர் வன்முறை அதிகாரத்தால் நிகழக்கூடியது. ஒரு குடும்பத்தில் குடித்துவிட்டு வந்த தந்தை தூங்கிக்கொண்டிருந்த தன் மகனை கடைக்கு அனுப்பித் தனக்கு சாப்பாடு வாங்கிவரச் சொல்கிறார். அந்த குழந்தை, தன் தகப்பன் கேட்ட உணவு கடையில் தீர்ந்துவிட்டால், கடையில் இருப்பதை வாங்கி வருகிறான், இதற்காக மகனை கண்மண் தெரியாமல் விளாசித் தள்ளுகிறார் தந்தை. இது அதிகாரத்தினால் நடக்கும் வன்முறை. தகப்பன் குடித்தது முதல் தவறு. தன் குழந்தைகளுக்கு தான் குடித்ததாக காட்டியது இரண்டாவது தவறு. தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையின் தூக்கத்தை அர்த்தமில்லாமல் கெடுத்தது மூன்றாவது தவறு. அவனை அடித்தது மிக மோசமான தவறு. ஆகிய இத்தனை தவறுகளும் விளைவதற்கு காரணம் அதிகாரம். என்னால் என்னமும் செய்யமுடியும் என்கிற போக்கு, நான்தான் இந்த வீட்டில் முடிவெடுக்கும் நபர் என்ன எண்ணத்தில் எழும் சிந்தனை. இம்மாதிரி குழந்தைகளுக்கு அனுதினமும், நிறைய நேரங்களில், எல்லா நபர்களாலும் குழந்தைகளுக்கான வன்முறை நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
இதெல்லாம் வன்முறையா? நாங்கள் என்ன நினைத்தோம் என்றால் குழந்தையை ஒழுங்காகவும் நல்ல பிள்ளையாகவும் வளர்ப்பதற்கு அடித்து வளர்க்கிறோம் என்று? இப்படி ஒவ்வொரு காரியத்திற்கும் பார்த்துப் பார்த்து செய்ய முடியுமா?
கலில் கிப்ரான் என்ற கவிஞர் சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது.
“குழந்தைகள் உங்களின் உடமைப் பொருள் அல்ல. அவர்கள் உங்களிடமிருந்து வந்திருக்கலாம். ஆனால் உங்கள் தயாரிப்புகள் அல்ல. அவர்கள் இயற்கையின் வெளிப்பாடு. உங்கள் எதிர்பார்ப்பு களை, விருப்பங்களை, எண்ணங்களை அவர்கள் மீது திணிக்காதீர்கள். அவர்கள் எதிர்கால உலகிற்கு நம் இறந்தகால சடங்குகளைத் திணிப்பது தவறு. நீங்கள் வேண்டுமானால் குழந்தைகளைப் போல இருங்கள். ஆனால் உங்களைப் போல அவர்கள் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். ஏனென்றால் ஆறுகள் பின்னோக்கிப் பாய்வதில்லை.” என்ற வரிகளுக்கேற்ப குழந்தைகளை நாம் உருவாக்கினபோதும் அவர்கள் நமது அடிமைகள் அல்ல. நம் குழந்தையே ஆனாலும் நாம் அவர்களை வன்முறைக்குள்ளாக்கக்கூடாது. ‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ என்ற பழமொழியெல்லாம் உதவவே உதவாது. அணைக்கும் என்பதற்காக அடிக்க வேண்டுமா? பேசி புரிய வைத்து அவனை நல்லவனாக வளர்க்கலாம். நண்பனாகப் பழகுவதன் மூலம் ஒழுக்கங்களைக் கற்றுக் கொள்ளச்செய்யலாம். செய்தால் வளர்ந்தபிறகு நம்மை அணைப்பான். இல்லாவிட்டால் அவனும் ‘அடிக்கிற கை அணைக்கும்’ என்று அடிப்பான்.
நாம் என்ன சொல்லிக்கொடுக்கிறோமோ அதைத்தானே குழந்தைகள் செய்வார்கள். ஒவ்வொரு காரியத்தையும் பார்த்துப் பார்த்து தான் செய்யவேண்டும். நிலத்தில் விதையைத் தூவி விட்டால் மட்டும் போதாது. தினசரி நம் கண்காணிப்பு தேவைப்படுகிறதல்லா? குழந்தைகள் விதையை விட முக்கியமானவர்கள். நல்ல பலன் தரும் விதைகளாக, விருட்சங்களாக வளர குழந்தையைப் பார்த்துப் பார்த்துத்தான் வளர்க்கவேண்டும். பக்குவமாய் சொல்லிக்கொடுத்து, பேசி வளர்க்கவேண்டும்.- நன்றி : சிடா அறக்கட்டளையின் ‘குழந்தை கல்வியாளர்களோடு.....’
No comments:
Post a Comment