Mar 7, 2010

குழந்தைகளை அடிக்கலாமா? பகுதி 2

குழந்தைகளை அடிக்க கூடாது..

ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். ஒரு சிறுமியை அவள் தாய், ‘நீ எதுக்குத்தான் லாயக்கு. நீ பொறந்ததே வேஸ்ட்என்று திட்டிக்கொண்டே இருந்தால் அந்தக் குழந்தைக்கு அந்த வார்த்தைகள் மனதுக்குள்ளேயே தங்கிவிடும். சிறுமிக்கும் தான் எதற்கும் லாயக்கில்லாதவள் என்ற நினைவால், தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு உண்மையிலேயே எந்தக் காரியத்தையும் செய்ய லாயக்கில்லாதவளாகி விடக்கூடும். அப்புறம் அந்தப்பெண்ணின் தாழ்வு மனப்பான்மையை சரிசெய்வதே பெரும்பாடாகிவிடும். இம்மாதிரியான மனநிலையை, பாதிப்புக்குள்ளாகும் சொற்களை, குழந்தைகளிடம் பேசுவது மிகப்பெரிய குற்றம். நாம் இந்தத் தவறைச் செய்கிறோம் என்று தெரியாமலேயே நிறைய பெற்றோர்கள், குழந்தைகளோடு பழகுபவர்கள் செய்துகொண்டிருக்கின்றனர்.


கண்டிப்பது என்பது வேறு. அந்தக் குழந்தையை மனரீதியாக தண்டிப்பது வேறு. கண்டிப்பது என்பது ஒரு செயலைச்செய்யும் போது நல்லது கெட்டது என்ன என்பதை புரியவைப்பது. அப்படியே அந்தக்குழந்தை தவறு செய்தாலும் அதனால் ஏற்படும் பாதிப்பின் அனுபவத்தைப் புரிய வைப்பது. உதாரணமாகத் தீயைத் தொட்டால் சுடும் என்பதை விளக்கிய பின்னும் அந்தக் குழந்தை அதைத் தொட்டுப்பார்க்க ஆசைப்பட்டு சுட்டுக்கொண்டால் கூட அதன் விளைவுகளை, அதன் பாதிப்புகளை, காயம் ஆறியபிறகே உணர்த்தவேண்டும்.
 
யாரேனும் ஒருவர் பிரச்சனையில் மாட்டிக்கொண்டிருக்கும் போதுதான் எனக்கு அப்பவே தெரியும். இப்படியெல்லாம் ஆகுமென்போம். நம் அறிவாற்றலை வெளிப்படுத்தாமல் பக்குவமாக, மனிதமனம் ஏற்றுக்கொள்ளும் விதத்தில், புரிய வைக்கவேண்டும். விளக்க வேண்டும். ஒரு பிரச்சனைக்கான தீர்வு என்பது பிரச்சனையை எப்படி எதிர்கொள்வது என்பதுதான்

நாம் என்ன செய்கிறோம் என்றால் இருட்டுக்குள் போனால் பிரச்சனையாகிவிடும். ஆகவே இருட்டுக்குள்ளே போகவே கூடாது என்பதைத்தான் நாம் கற்றுக்கொடுக்கிறோம். மாறாக இருட்டுக்குள்ளே போய் பிரச்சனை வந்தால் எவ்விதம் பாதுகாத்துக்கொள்வது, எப்படி தப்பிப்பது என்பதை சொல்வதில்லை. இதற்குப்பெயர் தான் மதிப்பீட்டுக்கல்வி’ (வேல்யூ எஜீகேசன்) என்று சொல்வார்கள்.

குழந்தைகளைப் பேசவிட்டுப் புரியவைக்கவேண்டும். கருத்து சுதந்திரமே நாம் நம் குழந்தைகளுக்குக் கொடுத்ததில்லை. குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்குக் கொடுத்ததே இல்லை. குழந்தைகள் பேசும் அளவிற்கு வந்ததும் பெரியவர்களாகிய நாம் அமைதி காத்து, பேச்சைக் குறைத்து குழந்தைகளைப் பேச அனுமதிக்கவேண்டும். பேசும்போதே அதன் தவறுகளைச் சுட்டிக்காட்டி அவற்றை சரி செய்ய வேண்டும். அதுதான் சரியான அணுகுமுறை.

பெரியவர்கள் வீடுகளில் சண்டை போடுவது கூட குழந்தைகளின் மனநிலையை மிக ஆழமாக பாதிக்கிறது.
யார் யாரோடு சண்டை போட்டாலும் கடைசியில் பாதிக்கப்படுவது குழந்தை தான். 

எனக்கு எங்கம்மாவும் அப்பாவும் அன்பு செய்ய மாட்டாங்களான்னு இருக்கும். பக்கத்துல உட்கார்ந்து பேசமாட்டாங் களான்னு இருக்கும். அவங்க மடியில் படுத்து கத்தணும் போல இருக்கும்.-இது என் நன்பனின் மகள் ஜோதி.


குழந்தைகளின் மனதை புரிந்து கொள்ளாதவரை நமக்கு நாமே பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொள்கிறோம் என்பது நிச்சயம். ஒவ்வொரு குழந்தைக் கல்வியாளர்களிடமும் கேட்டுப் பாருங்கள். தன்னிடம் படிக்கும் மாணவர்கள் மிக உயர்ந்த மதிப்பெண்களைப் பெற்று நல்ல நிலைக்கு வரவேண்டும் என்பதாகத்தான் அவர்களின் எண்ணம் இருக்கும். 
ஆனால் வெளிப்படுத்தும் விதம்தான் மாறுபடுகிறது. மாணவர்களைத் ‘திருத்துவது’ என்பது அடித்து திருத்துவது, தண்டித்து திருத்துவது, பிற மாணவர்கள் மத்தியில் மனம் புண்படுகிறவரை திட்டித் திருத்துவது அல்ல.
அதன் விளைவு எதுவாக இருக்கும்? ஒரு மாணவன் எந்த நிலைக்கு வரவேண்டும் என்ற ஈடுபாட்டில் ஆசிரியர்கள் யோசித்தார்களோ அந்த நிலை மாறி அம்மாணவன் தன் ஆசிரியரை ஒரு எதிரியாகப் பாவிப்பான். வகுப்பில் சரியாகக் கவனிக்காத மாணவனை ஒரு ஆசிரியர் எல்லா மாணவர்கள் மத்தியிலும் சத்தம் போட்டு திட்டி வெளியே போஎன்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அம்மாணவன் மிகச் சாதாரணமாக வகுப்பை விட்டு வெளியேறினால் ஆசிரியரின் நோக்கம் வீணாகிவிடும். மாறாக, அம்மாணவனைத் தனியாக அழைத்து நேரத்தின் முக்கியத்துவத்தையும், அவன் வீட்டில் எந்த அளவு கஷ்டப்பட்டு அவனைப் படிக்க வைக்கிறார்கள் என்பதையும், வகுப்பு நேரத்தில் கவனிப்பு எந்த அளவிற்கு பிரயோசனமானது என்பதையும் உணர்த்தினால் நிச்சயமாக சிறிதளவு பயன் இருக்கும். அம்மாணவனின் உள்ளத்தில் ஆசிரியரைப் பற்றிய மதிப்பும் மரியாதையும் எண்ணமும் உயரும். ஏனென்றால் நாம் சொல்லக்கூடிய கருத்துக்களைப் பிறர் ஏற்கவேண்டும் என்றால் கேட்பவர் மத்தியில் கருத்து சொல்பவர்களைப் பற்றிய மதிப்பீடு சிறந்த முறையில் இருக்கவேண்டும்.

கொஞ்சநாளாக நானும் குழந்தைகளை அடிப்பதை நிறுத்தினேன். எவ்வளவு கோபம் வந்தாலும் பரவாயில்லை என்று என்னைக் கட்டுப்படுத்தினேன். ஆனால் என் மகன் சொன்னபடியே கேட்பதில்லை. இவனை என்ன செய்யலாம்?
அதை உங்கள் குழந்தையிடமே கேட்டுப்பாருங்கள். பலன் கிடைக்கும். நான் உன்னை அடிக்கக் கூடாது என்று நினைக்கிறேன். நீ இப்படி செய்தால் கண்டிப்பாக அடிப்பேன். உனக்கு அடி கொடுக்கட்டுமா? என்று கேட்டுப்பாருங்கள்... குழந்தைகள் எப்போதும் நிறைய விசயங்களை உள் வாங்குகிறார்கள். உங்களிடம் ஏற்பட்ட மாற்றத்தை இந்நேரம் உணர்ந்திருப்பார்கள். உட்கார்ந்து பேசினால் போதும். நாம் நம் குழந்தைப்பருவத்தைக் கொஞ்சம் திரும்பி பார்ப்பது அவசியம். நாம் நம் சிறுவயதில் என்னவெல்லாம் செய்திருப்போம். எப்போது பார்த்தாலும் தெருவில் ஆடிக்கொண்டிருக்கவில்லையா? வெயிலும், மழையும், பனியும் நம்மை பாதிக்குமா? எப்போது பார்த்தாலும் ஒரே துள்ளல்தான். இந்த நிலையை நாம் நம் குழந்தைகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோமா?  

எப்போது பார்த்தாலும் படிப்பத்தான். விளையாடுவது கூட அடைக்கப்பட்ட கூண்டுக்குள் தான். போதாதற்கு டி.வி. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நம்முடைய குழந்தைப் பருவம் எவ்வளவு நன்றாக இருந்தது? இப்போதுள்ள குழந்தைகளைப் பாருங்கள். எவ்வளவு இன்பத்தை இழக்கிறார்கள்? இவர்கள் பெரியவர்களானதும் இதைவிட இன்னும் இறுகலாகி இயந்திரங்களைப் போல ஒரு வாழ்க்கையை மேற்கொள்வார்கள். விளையாட்டு என்ற பதமே நம் அகராதியிலிருந்து இல்லாமல் போய்விடும்.

குழந்தைகள் உலகம் மிக விந்தையானது. வேடிக்கையானது. விநோதமானது. எவராலும் எளிதாக நுழையமுடியாது. அதனால் அவர்களால் எதையும் புரிந்து கொள்ளமுடியும். அவர்கள் அவ்வளவு ஆற்றல் உள்ளவர்கள்.
 
- நன்றி : சிடா அறக்கட்டளையின் குழந்தை கல்வியாளர்களோடு.....

No comments: