Mar 23, 2009

பணவீக்கம் தொடர்ந்து குறைந்து 0% கீழே சென்றால் நல்லதா?

பணவீக்கம் என்றால் என்ன என்பது நமக்கு எல்லாம் தெரிந்த விஷயம். பொருட்களின் விலை கூடுவதை பணவீக்கம் என்கிறோம். அதாவது ஏற்கனவே Rs.100/- கொடுத்து வாங்கிய பொருளின் விலை இப்போது Rs.110/- ஆக இருந்தால் பணவீக்கம் 10% என்கிறோம். இதற்கு நேர் மாறாக ஏற்கனவே Rs.100/- கொடுத்து வாங்கிய பொருளின் விலை குறைந்து Rs.90/- ஆக இருந்தால் இதையே DEFLATION என்கிறோம் (பணவீக்கத்திற்கு நேர் எதிர்மறையானது). பணவீக்க்கம் என்பது நம்முடைய பணத்தின் மதிப்பை குறைக்கிறது என்றால் அதற்கு நேர்மறையான DEFLATION பணத்தின் மதிப்பை கூட்டுகிறது. அட இது நல்ல இருக்குதே என்று சொல்ல தோணலாம். அனால் இதனுடைய தாக்கம் என்ன என்று கொஞ்சம் ஆழ்ந்து கவனிதொமென்றால் இப்படி சொல்ல தோணாது.

அண்மைக்காலங்களில் 13% வரை இருந்த பணவீக்கம் இப்போது 2.43% ஆக குறைந்திருக்கிறது. இந்த பணவீக்கம் இப்படியே குறைந்து 1% ஆகி அதன் பின் 0% ஆகி அதன் பின் -1% என்று வரும் போது நாம் அதை DEFLATION என்கிறோம். (பணவீக்கத்திற்கு எதிர்மறையான வார்த்தை என்ன என்று தேடிப்பார்த்தேன்...ம்ஹூம் கிடைக்கவில்லை அதனால் DEFLATION என்று எழுத வேண்டிய கட்டாயம்...!!! பணவீக்கதிருக்கு எதிர்மறையாக பணசுருக்கம் என்று வேண்டுமானால் சொல்லலாம்)

பணவீக்க காலங்களில் பொருட்களின் விலை கூடும், மக்களின் வாங்கும் சக்தி குறையும். கூடுகின்ற பொருட்களின் விலையை கட்டுப்படுத்த மக்களிடம் இருக்கும் பண நடமாட்டத்தை குறைக்கும் விதமாக வங்கிகள் அதக வட்டி தந்து மக்களிடம் இருக்கும் பணத்தை வங்கியில் முடக்க முயற்சி எடுக்கும். கையில் பண நடமாட்டம் குறையும் பொது பொருட்களை வாங்குவது குறையும். வாங்குவது குறைவதால் பொருட்களின் விலை குறைய வாய்ப்பு உண்டு. இதைதான் மத்திய வங்கி (RBI) செய்யும். மக்களிடம் பண புழக்கத்தை குறைத்து, அதன் மூலம் பொருட்களின் விலையை குறைய வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பணபுழக்கத்தை குறைக்க வங்கிகள் அதிக வட்டி தரும். பணவீக்க காலங்களில் இதெல்லாம் நடக்கும் என்றால், பணசுருக்கம் அல்லது DEFLATION காலங்களில் இதற்கு நேர்மறையாக வங்கிகள் திட்டங்களை வகுக்கும். இந்த விஷயத்தை கவனிக்கும் முன் DEFLATION ஆனால் என்னென்ன பாதிப்புகள் இருக்கும் என்பதை முதலில் பார்த்து விடுவோம்.

DEFLATION என்றால் பொருட்களின் விலை குறையும் என்று பார்த்தோம். பொருட்களின் விலை தொடர்ந்து குறைந்து கொண்டிருப்பதால், பொதுமக்கள் பொருட்கள் வாங்குவதை தள்ளிப்போட முயற்சிப்பார்கள். பொருட்களின் விலை குறைகிறது என்றால் உற்பத்தியாளர்களுக்கு லாபம் குறையும். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் உற்பத்திக்கு செய்த செலவை கூட விற்று வரும் வருமானம் மூலம் எடுக்க முடியாமல் போகலாம். ஆக பொருட்களின் விலை குறையும் போது உற்பத்தியாளர்கள் உற்பத்தியை குறைப்பார்கள். உற்பத்தியை குறைக்கும் போது தொழிலாளர்களை குறைப்பார்கள். வேலை இல்லா திண்டாட்டம் ஏற்படும். வேலை இல்லாமல் போவதால் மக்களின் வாங்கும் சக்தி குறையும். வேலை இல்லை என்பதால் கையில் பணம் இல்லை, பணம் இல்லை என்பதால் பொருட்கள் வாங்க முடியாது. பொருட்களை வாங்க ஆள் இல்லை என்னும் சூழ்நிலை வரும்போது, உற்பத்தியாளர்கள் இன்னும் விலையை குறைக்க வேண்டிய அவசியம். அப்படியாவது கிடைத்த விலைக்கு விற்கலாமே என்று எண்ணி, உற்பத்தியாளர்கள் விலையை குறைக்க வேண்டிய நிர்பந்தம் வரும். அப்படி மீண்டும் விலை குறைத்து, நஷ்டத்திற்கு வருவதால் மேற்கொண்டு உற்பத்தியை கூட்ட தயங்கி, இன்னும் உற்பத்தியை குறைக்க வேண்டிய சூழ்நிலை, அதனால் இன்னும் வேலை இழப்பு. இப்படி ஒரு சைக்கிள் மாதிரி விலை குறைப்பு, உற்பத்தி குறைப்பு, வேலை இழப்பு, உற்பத்தி செய்த பொருட்களை விற்க முடியாத தன்மை என்று இது ஒரு புதைகுழி மாதிரி பொருளாதாரத்தை மோசமாக பாதிக்கும். இபப்டி ஒரு சூழ்நிலை இருப்பதால் புதிதாக முதலீடு செய்ய யாருக்கும் ஆர்வம் இருக்காது. அதனால் முதலீடு பாதிக்கும், புதிய முதலீடு இல்லாமல் இருப்பதால், வேலைவாய்ப்பு உருவாகாது. வேலை வாய்ப்பு இல்லை, வருமானம் இல்லை, வாங்கும் சக்தி இல்லை என்று பொருளாதாரத்தை மிக மோசமாக பாதிக்கும்.

இப்படி DEFLATION என்ற ஒரு நிலை வந்தால், மக்களின் வாங்கும் சக்தியை கூட்ட, மக்களின் கையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க, வங்கி தரும் வட்டி விகிதங்களை குறைக்கும். அதாவது, நம் சேமிப்பை வங்கியில் வைப்பதை விட, கையில் வைத்துக்கொள்ளலாம், வங்கி வட்டி என்பது ஒரு லாபமான விஷயமில்லை என்னும் சூழ்நிலைக்கு வங்கி வட்டி குறையும். அதேமாதிரி வங்கியில் குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும். இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் தான் ஜப்பானில் வங்கியில் நம் பணத்தை deposit செய்தால் அந்த வங்கி நமக்கு வட்டி தராது - 1996 முதல் 2006 வரை ஜப்பானில் இந்த நிலை இருந்ததற்கு காரணம் DEFLATION என்று தெரியவரும்போது அதிர்ச்சியாக இருக்கிறதா? இதுதான் உண்மை நிலவரம். ஆக DEFLATION ஆனால் இந்த அளவுக்கு கூட நிலைமை போகலாம். இந்தியாவில் சென்ற ஆகஸ்ட்-ல் 12.91% ஆக இருந்த பணவீக்கம் இப்போது 2.43% ஆக குறைந்திருக்கிறது. இதுவே இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 0% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்த ஆண்டு மார்ச் முதல் அக்டோபர் வரை DEFLATION இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே உற்பத்தி (IIP) குறைந்திருப்பதை கவனிக்க வேண்டும். சீன DEFLATION ஐ நோக்கி சென்றுகொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. ஏற்கனவே சீனாவில் பணவீக்கம் -1.9% ஆக இந்த ஆண்டு பிப்ரவரி இல் இருந்தது. ஒருமுறை பணவீக்கம் குறைந்து 0% கீழே சென்று விட்டதும் அதை DEFLATION என்று சொல்லிவிட முடியாது. தொடர்ந்து 0% கு கீழே இருந்தால் தான் அது DEFLATION என்று கருதப்படும்.

உலகின் மற்ற நாடுகளில் DEFLATION இருந்திருக்கிறதா என்று பார்தோமென்றால் ஆம் இருந்திருக்கிறது என்று சொல்லலாம். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், இங்கிலாந்தில் 1921-ல் 10%, 1922-ல் 14% 1930க்களில் 3 முதல் 5% DEFLATION இருந்திருக்கிறது. அமெரிக்காவில் குறிப்பிடத்தக்க DEFLATION மூன்று காலக்கட்டங்களில் இருந்ததாக சொல்லலாம். 1836-ல் கிட்டதத்த 30% DEFLATION, 1875 முதல் 1896 வரையான காலக்கட்டங்களில் 1.7%, 1930 - 1933 இல் 10% இருந்திருக்கிறது.

ஆக இன்று இருக்கும் சூழ்நிலையில் இந்தியாவிலும் DEFLATION வருவதற்க்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாகவே தெரிகிறது.

நன்றி:-திரு.கல்யாணசுந்தரம்.

No comments: