Mar 14, 2009

தலபுராணங்கள் காரணம்.

இந்தியப் பண்பாடு காலம் கடந்து நிற்பதற்கு புராண, இதிகாசங்கள் முக்கிய காரணம். இந்திய மெஞ்ஞானிகள் கண்டுணர்ந்த அளப்பரிய பேருண்மைகளை, தத்துவங்களை எளிய வடிவில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஊடகம் புராணம்.

கதை கேட்கும் பழக்கம் என்பது சுவையான மனிதப்பண்பு. எல்லா கலாச்சாரங்களிலும் கதைகளுண்டு. கதைகள் மூலமாகவே செய்திப் பரிமாற்றம் நடக்கிறது. இந்தப் பழக்கத்தை ஒரு யுத்தியாக பயன்படுத்தினர் இந்தியப் பெரியவர்கள்.

தத்துவங்களாக கொடுத்தால் அது பழக்கப்படாத உள்ளங்களுக்கு போய் சேராது என்று கருதி, தத்துவங்களை கதாபாத்திரங்கள் மீது ஏற்றி புராணக் கதைகளாச் சொல்லிப் போயினர். எனவே புராணங்களை ஒற்றைப் பரிமாணத்தில் வாசித்தல் கூடாது. கதைக்குப் பின்னாலுள்ள தத்துவங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பாரம்பரியத்தில் கோயில் தலபுராணங்கள் விசேஷமானவை. தத்தம் ஊரில் குடிகொண்டிருக்கும் இறைவன் எல்லா கோயில்களில் குடிகொண்டிருக்கும் இறைவனுக்கு சமமானவன் என்ற உணர்வைக் கொடுத்து உள்ளூர்வாசிகளுக்கு ஒரு தன்னம்பிக்கையை கொடுப்பது தலபுராணங்கள்.

எல்லோராலும் காசி, ராமேஸ்வரமென்று போகமுடியாது, எனவே உள்ளூர் கோயில் எந்தவகையிலும் இப்பெருங்கோயில்களுக்கு சளைத்ததல்ல என்ற நம்பிக்கையைத் தருவன தல புராணங்கள். மேலும், ஐந்திணைகளாக உலகைப் பகுத்துக் காணும் தமிழ் மரபில், ஒவ்வொரு நில அமைவிற்கும் ஏற்றவாறு இறைப்பண்பு சற்று வேறுபடுவதாகக் கண்டனர். எனவே, வெவ்வேறு பிரதேசங்களில் இறைவனின் திருவிளையாடல் வித்தியாசப் படுகிறது. அதைச் சொல்வதே தலபுராணங்கள். எனவே இவை ஒருவகையில் மறை ஞானக்காட்சிகளின் தொகுப்பு என்றும் கூறலாம். இவைகளுக்கு ஒரு கனவுத் தன்மையும் இதனாலுண்டடு.

இத்தலபுராணங்கள், அக்கால வழக்கப்படி கவிதை வடிவில் எழுதப்பட்டுள்ளன. தமிழ் புலமை உள்ளவர்களால் எளிதாக வாசித்துப் புரிந்து கொள்ளமுடியும்!இத்தலபுராணங்கள் தாங்கும் புத்தகங்கள், சுவடிகள் அழிந்து வருகின்றன. சரியான பாதுகாப்பில்லாத சூழலில் இவைகளை இலக்க வடிவில் (digital media) சேமித்து வைப்பதே சாலச் சிறந்தது.

நன்றி;தலபுராணங்கள்.

No comments: