Mar 15, 2009

ரூபாயின் எதிர்காலம்...?.?.?

சில மாதங்களுக்கு முன்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 40 க்கும் கீழே இருந்த நிலை மாறி, பின்னர் சில காலம் ஐம்பதிற்கு சற்று கீழேயே தடுமாறிக் கொண்டிருந்து, இப்போது, சரித்திரத்தில் இது வரை இல்லாத அளவாக 51 ரூபாய் அளவையும் தாண்டி உள்ளது. இந்த சரிவிற்கான காரணங்களையும், இதனால் இந்தியாவிற்கு ஏற்பட கூடிய பாதிப்புக்களையும், இந்த சரிவும் இன்னும் தொடருமா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம்.

முதலில் ரூபாய் வீழ்ச்சிக்கான காரணங்கள்:

உலகமெங்கும் பங்கு சந்தைகள் வீழ்ந்ததன் தொடர்ச்சியாக, இந்திய பங்குச்சந்தையில் வெளிநாட்டு நிறுவனங்கள் தாம் வைத்திருந்த இந்திய நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்தது. மேலும் இந்தியாவில் அந்நிய நாட்டு நிறுவனங்களின் நேரடி முதலீடுகள் குறைந்து போனது.

மேற்சொன்ன காரணங்களின் விளைவாக இந்திய அந்நியச் செலவாணி கையிருப்பு பெருமளவில் குறைந்து போனது.

இந்திய நிறுவனங்களால், வெளிநாடுகளில் (கடன் சந்தைகளில் நிலவி வரும் அச்சம் காரணமாக) கடன் வாங்க முடியாமல் போனது. அந்த வகையில் இந்தியாவிற்கு பணவரத்து குறைந்து போனது. அரசு மற்றும் தலைமை வங்கி, இந்த விஷயத்தில் இந்திய நிறுவனங்களுக்கு பல சலுகைகள் அளித்தாலும், நிலைமை பெருமளவுக்கு மேம்பட வில்லை.

மேலை நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார தேக்கத்தின் விளைவாக, இந்தியப் பொருட்களின் ஏற்றுமதிகள் பெருமளவு குறைந்து போனது. அதே சமயம், பெட்ரோலிய பொருட்கள் நீங்கலான இதர இறக்குமதிகள் இந்தியாவில் அதிக அளவு குறையாமல் போனது. இந்த நிலை காரணமாக, ஏற்றுமதி-இறக்குமதிக்கு இடையே உள்ள இடைவெளி பெருமளவு அதிகரித்தது.

இந்திய அரசின் மிகப் பெரிய நிதிப் பற்றாகுறை காரணமாக உலக தர வரிசையில் இந்தியாவிற்கான தர மதிப்பீட்டை தர நிர்ணய நிறுவனம் (S&P) சமீபத்தில் குறைத்து. இதனால், வெளிநாட்டு செலவாணியின் புதிய வரத்து குறையும் என்பதுடன் இந்தியாவில் இருக்கும் வெளிநாட்டு செலவாணி வெளியே செல்வதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது.

உலகெங்கும் உள்ள பொருளாதார நிரந்தமற்ற நிலை காரணமாக, அந்நிய செலவாணியை வைத்திருப்போர் அதன் பாதுகாப்புக்காக அமெரிக்காவிற்கு (யானை படுத்தாலும் குதிரை உயரம்) திருப்பி எடுத்துச் செல்வது. இந்தியா போன்ற வளரும் நாடுகளின் வருங்காலம் பற்றி சந்தேகங்கள் நிலவுவதால், பணம் இத்தனை பிரச்சினைகளுக்கும் மூல காரணமான அமெரிக்காவிற்கு சென்று மீண்டும் தஞ்சமடைகிறது. இதனால், மற்ற உலக கரன்சிகளுக்கு எதிராக அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகமாகி வருகிறது.

பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவின் கரன்சியை பெருமளவு வர்த்தகம் செய்து வரும் சிங்கப்பூர் என்.டி.எப் (Non Delivarable Forwards) சந்தையில் ரூபாய் பெருமளவு வீழ்ச்சி அடைந்தது.

மேற்சொன்ன காரணங்களின் அடிப்படையில், ரூபாய் பலமிழந்து வருவதால், ஏற்றுமதியாளர்களுக்கு நன்மை (ஒரே டாலர் அளவில் அதிக ரூபாய்) என்றாலும், ஏற்றுமதி அளவு பெருமளவு குறைய வாய்ப்பு இருப்பதால் (முதல்ல டாலர் கிடைக்கனுமில்ல?), அவர்களுக்கு பெரிய நன்மை இல்லை என்றே தோன்றுகிறது. இந்தியாவிற்கு பணம் அனுப்பும் வெளிநாட்டில் பணி புரியும் நண்பர்களுக்கும் ஓரளவுக்கு லாபமே.

அதே சமயத்தில், இறக்குமதியாகும் பொருட்களின் விலை இன்னும் அதிகமாகி ஏற்கனவே விண்ணை முட்டிக் கொண்டிருக்கும் விலைவாசிகள் மேலும் உயர வாய்ப்பு உள்ளது.

ஒரு நாட்டின் கரன்சியின் வலுவின் அடிப்படையிலேயே வெளிநாட்டு நிறுவனங்கள் அந்நாட்டில் முதலீடு செய்ய முன்வரும். அந்த வகையில், இந்தியாவில் இன்னும் கொஞ்ச நாளுக்கு அந்நிய நிறுவனங்கள் எட்டி பார்க்காது என்று தோன்றுகிறது. இதனால், இந்தியாவின் அந்நிய செலவாணி கையிருப்பு குறைந்து உள்நாட்டில் பண நெருக்கடி ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

ஏற்கனவே வெளிநாடுகளில் அதிக அளவு கடன் வாங்கியுள்ள இந்திய நிறுவனங்கள் கடன் மற்றும் வட்டியை திருப்பிச் செலுத்த மிகவும் சிரமப் படும்.

ஆக மொத்தத்தில் இந்திய கரன்சியின் வலுவிலப்பு, நாட்டின் நலனுக்கு விரோதமானது என்றே இப்போதைக்கு தோன்றுகிறது.

ரூபாயின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதற்கான விடை இங்கே.

மிக மோசமான மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை, கூடிய சீக்கிரம் வரப்போகிற பொதுத் தேர்தல், இப்போது நிலவி வரும் உலக அளவிலான "பொருளாதார தேக்க நிலை (Recession)" "வீழ்ச்சி நிலையாக (Depression)" உருவெடுக்கக் கூடிய ஆபத்து போன்ற விஷயங்களால், இன்னும் கொஞ்ச நாளைக்கு ரூபாய் தனது வீழ்ச்சியைத் தொடரும் என்றே தோன்றுகிறது.

நன்றி; மேக்‌ஷிமம் இந்தியா.

No comments: