May 26, 2009

உருவ வழிபாடு - ஒரு ஸென் கதை

ஹுவாங்னியா என்ற ஸென் ஆசிரியர் யேன்குவாங்கினை சந்திப்பதற்காக சென்றார். யேன்குவாங்கி ஆசிரியராக இருந்த புத்த கோயிலிற்குள் நுழைந்தவர் அமைதியாக புத்தச் சிலையின் முன் தலை வணங்கி நின்றார். அந்த சமயத்தில் டா'ங் ராஜ வம்ச பரம்பரையைச் சார்ந்த ஷூவான்சூங் என்ற வாலிபன் புதிதாக சமய சேவையைப் பற்றி அறிவதற்காக அங்கு வந்திருந்தான்.

ஹுவாங்னியா செய்த செயல் அனைத்தையும் கவனித்த ஷூவான்சூங், "உண்மை வழியினை அடைய முயல்பவர்களுக்கு, புத்தாவினை தலை வணங்கத் தேவையில்லை, துறவறம் ஏற்க வேண்டியதில்லை (அ) யார் கூறிய போதனைகளையும் கடைபிடிக்கத் தேவையில்லை, அப்படியிருக்க ஆசிரியரே, எதற்காக தலை வணங்கி புத்தருடையச் சிலைக்கு மரியாதை செய்தீர்கள்" என்று கேட்டான்.

"நான் புத்தரினை வழிபடுவதில்லை. துறவியும் இல்லை. எந்த போதைனையையும் உடும்பென பிடித்துக் கொண்டும் இல்லை" என்று கொஞ்சம் கூட தாமதியாமல் பதில் அளித்த ஆசிரியர், "நான் என்னிலிருந்து விடுதலை பெறவே அவ்வாறு செய்கிறேன்" என்றார்.

கொஞ்சம் நேரம் ஆசிரியர் கூறியதை மனதில் நிறுத்தி யோசித்தவன், "உருவ வழிபாட்டினால் என்ன பயன் ஆசிரியரே?" என்று மீண்டும் தன் கேள்வியை எழுப்பினான்.

அவனுடையக் கன்னத்தில் "பளார்" என்று அறைந்தார் ஹுவாங்னியா.

வாலிபனானாலும் அரசனான ஷூவான்சூங் சீற்றத்துடன், "ஏன், நாகரிகமில்லாமல் மிருகத்தைப் போல் நடந்து கொள்கிறிர்கள்?" என்று கோபத்துடன் கேட்டான்.

"ஏன்" என்று வேகமாக திருப்பிக் கேட்டவர், அவனுடைய குற்றச்சாட்டுக்கு விரைவாய் பதிலளிக்கும் பொருட்டு, "உன்னால் யார் நாகரிகமானவர், நாகரிகமற்றவர் என்று என்னிடம் விவாதம் செய்யுமளவிற்கு தைரியம் இருக்கிறதா.. உனக்கு வாய் கொஞ்சாம் அதிகமாகவே நீள்கிறது" என்றார். அதனைக் கேட்ட ஷூவான்சூங் தன்னுடைய அடக்கமற்ற தன்மையை எண்ணி வருந்தினான்.