May 30, 2009

நரிக்குறவர் விற்கும் விசிலில் பல சுருதிகள் கேட்பது எதனால்?

சிறுவயதில் என் கிராமத்து திருவிழாவில் பல விதமான விளையாட்டு பொருட்களில் நான் மட்டும் அல்ல மற்ற என் நண்பர்களும்கூட பெரும்பாலும் தேர்ந்தெடுப்பது விசில் தான்.
அதிலும் குறவர்கள் விற்கும் விசில் மிகச்சிறப்பாக இருக்கும்.இப்போதெல்லாம் அந்தவகை விசிலை குறவர்களே விற்ப்பதில்லை.
விசில் அடிப்பதில் பல நுட்பங்கள் இருக்கின்றன. ஒன்று விரலை மடக்கி வாயில் வைத்து வீல் என்று சத்தம் எழுப்புவது. மற்றொன்று பேரூந்து ஓட்டுனர் வைத்திருக்கும் கருவியை கொண்டு சத்தம் எழுப்புவது.

அல்லது குழந்தைகள் விளையாடும் விசிலை பயன்படுத்தலாம்
காவல் துறையினர் கூட வித்தியாசமான ஒரு வகை விசில் வைத்திருப்பார்கள்

அதே போல் நெகிழியில் (Plastic) தட்டையாக ஒரு கருவியை எங்கள் ஊர் பக்கம் திருவிழாக்களில் விற்பார்கள். பயங்கர சத்தம் வரும்.



ஆனால் இந்த கருவிகளில் எல்லாம் சத்தம் ஒரே சுருதியில் தான் இருக்கும். காரணம் இந்த கருவிகளில் எல்லாம் ஒரே அதிர்வெண்ணில் தான் காற்றின் அளைவு இருக்கும்

இதை தவிர நரிக்குறவர்கள் விற்கும் விசில் ஒன்று பிரபலம். அதை வைத்து ஊதினால் அனைவரும் திரும்பி பார்ப்பார்கள். காரணம் சத்தம் பல சுருதிகளில் கேட்கும். 2 இஞ்சு நீளம், 1 செ.மீ அகலம், 3 அல்லது 4 செமி உயரம் உள்ள இரு மரக்கட்டைகளுக்கு நடுவில் ஒரு மிதிவண்டி குழாய் (cycle tube) துண்டு கட்டப்பட்டிருக்கும்.


அதை வாயில் வைத்து ஊதினால் வெளிப்படும் சத்தத்தின் அதிர்வெண் அதிகமாகி, பிறகு மெதுவாக குறைந்து வித்தியாசமான சத்தம் கேட்கும். முதலில் சுருதி குறைவாக ஆரம்பித்து, அதன் பிறகு அதிக சுருதிக்கு சென்று பிறகு மீண்டும் பழைய படி கீழிறங்கும்.

எந்த ஒரு பொருளின் அதிர்வெணும் கீழ்க்கண்ட காரணிகளினால் தீர்மாணிக்கப்படுகிறது

  1. நீளம் - நீளம் அதிகமானல் குறைந்த அதிர்வெண். நீளம் குறைந்தால் அதிக அதிர்வெண். Frequency is inversely proportional to the length of the vibrating object. வீனையில் / கிடாரில்/ வயலினில் / பியானோவில் எல்லாம் இந்த சித்தாந்தம் தான்
  2. அகலம் - தடிமனான கம்பியை மீட்டினால் குறைந்த அதிர்வெண்ணும், மெல்லிய கம்பியை மீட்டினால் அதிக அதிர்வெண்ணும் கேட்பதை அறிந்திருப்பீர்கள். Frequency is inversely proportional to the Width of the vibrating object. கிடாரின் தடிமான கம்பியில் அதிர்வெண் குறைவாகவும், மெல்லிய கம்பியில் அதிர்வெண் அதிகமாகவும் கேட்கும் அதே பௌதீக சித்தாந்தம் தான் இது.
  3. விரைப்பு : கம்பி அல்லது அளையும் பொருளானது அதிக விரைப்பில் இருந்தால் அதிக அதிர்வெண் கேட்கும். Frequency is directly proportional to the Tension of the Vibrating Object.

இப்பொழுது இந்த விசிலை ஊதும் போது

  • நீளம் அதிகரிக்கிறது
  • அகலம் குறைகிறது. (ரப்பரின் நீளம் அதிகரித்தால் அகலம் குறையும் - ரப்பர் பேண்டை நீட்டி பாருங்கள்)
  • விரைப்பு அதிகரிக்கிறது


ஊதும் போது ரப்பர் துண்டு நீளமாகி (அகலம் குறைந்து) அதனால் அதன் அதிர்வெண் அதிகரிக்கிறது.

அதன் பிறகு இழுத்த மூச்சு காற்றின் வேகம் குறையும் போது அதிர்வெண் குறைகிறது. கிட்டத்தட்ட கிளாரினெட்டில் சரிகமபமகரிச என்று வாசிப்பது போலிருக்கும்


இந்த பௌதிகம் எப்படி நரிக்குறவர்களுக்கு தெரிந்தது என்று நான் பல முறை வியந்திருக்கிறேன். (அவர்களின் ஒவ்வொரு பொருளுக்கு பின்னாலும் ஒரு பௌதீக விதி இருக்கும்)