May 16, 2009

வெறிபிடித்த மத நம்பிக்கை

உலகில் எந்த ஒரு மதத்தையும் இறைவன் தோற்றுவித்ததாக வரலாறு கிடையாது, மாறாக மதகுருமார்களால் மதமும் அந்த மதத்திற்கான கடவுள்களும் தோற்றுவிக்கப்பட்டன, இயேசு, மகாவீரர், புத்தர் போன்ற மத குருமார்களையே கடவுளாக்கிய மதங்களும் உண்டு.
மதப் பரப்புரைகளின் நோக்கம் பற்றி உண்மையைக் கூர்ந்து பார்த்தால் அவை இன ஆளுமையை முன்னெடுக்கும் ஒரு வழிமுறையாக உள்ளதைக் காணலாம். புனித தலங்களில் நடக்கும் மதச் சடங்குகள் பெரும்பாலும் மதங்கள் தோன்றிய அந்த இனத்தவருக்கே முன்னுரிமை குறித்து செய்யப்பட்டும், பிற இனத்தினருக்கு வழிபாட்டு உரிமை என்ற அளவில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்.
ஐரோப்பியர் அல்லாதோர் போப் ஆண்டவராக வரமுடியாது, காஃபாவினும் நுழைந்து தொழும் உரிமை அரபு வம்சாவளிகளுக்கே உரியது மற்றவர்கள் அதைச் சுற்றி வெளியே தொழுகை நடத்தலாம். இந்தியாவிலும் பெரிய இந்துக் கோவில்களில் நடத்தப்படும் சடங்குகள், பூசைகள் பார்பனர்களாலேயே நடத்தப்பெறுவதும், பிறருக்கு மறுக்கப்படுவதும் அதற்கு பாதுகாவலாக ஆகமம், நியமம், பரம்பரை என்கிற கட்டுபாடுகளை வைத்திருப்பதைப் பார்க்கிறோம்.

எந்த இனம் எப்போது தோன்றியது என்று இன்று அறுதி இட்டுக் கூறமுடியாத நிலையில், புழக்கத்தில் இருக்கும், வரலாற்றுடன் தொடர்புடைய, காலத்திற்குள் அடங்கும் மதங்களை நம்பலாம்.

மதங்கள் எப்போதும் அது தோன்றிய நாடுகளின், இனங்களின் பழக்க வழக்கங்களை, வாழ்வியல் முறைகளை உள்ளடக்கியது. எதோ ஒரு புதிய மதம் வடதுருவத்தில் தோன்றினால் அதைப் பின்பற்றுபவர்கள் குளிர்காரணமாக குளிரைதாங்கும் ஆடைகள் அணிந்திருப்பார்கள், அந்த மதம் ஒருவேளை மற்ற நாடுகளிலும் பரவினால் மத அடையாளமாக அந்த குளிருடையும் சேர்ந்தே மத விதிமுறையாக பரவும். ஆனால் வெப்ப நாடுகளில் அவை பொருத்தமானதா என்று பார்த்தால் அறிவு விதிப்படி பொருத்தமற்றது. அது வடதுருவ மக்களின் அன்றாட உடை என்ற அளவில் இருக்கிறது என்ற அளவில் மட்டுமே பொருந்தும். இது போல் தான் மதங்களில் இருக்கும் மதம் சார்ந்த அடையாளங்கள் அனைத்தும். ஆனால் இவற்றையெல்லாம் இன்றைய காலத்தில் அறிவியலுடன் முடிச்சுப் போட்டு புனிதம் கற்பிக்கப்படுவதுடன், மறைமுகமாகச் சொல்லப்படும் மனித குல மேன்மைக்கான வழிமுறை என்று இட்டுக் கட்டப்படுவதெல்லாம் அறிவீனம்.

"நல்ல வேளை பன்றிக்காய்ச்சலால் எங்கெளுக்கெல்லாம் ஆபத்து இல்லை...ஏனெனில் நாங்கள் பன்றி இறைச்சி உண்பது இல்லை...இதை 1400 வருடங்களுக்கு முன்பே தீர்க்க தரிசனமாக உணர்ந்ததால் குரானில் பன்றி இறைச்சி தடைசெய்யப்பட்டு இருகிறது" என்றார் என் நண்பர்.

"பறவைக்காய்ச்சல், மாடுகளுக்கு வரும் கோமாரி நோய் பற்றி குரானில் முன்னெச்சரிக்கை எதுவும் கொடுத்து தடை செய்யவில்லை. இல்லை என்றால் கோழி பிரியாணியும், மாட்டு இறைச்சியும் உண்ணும் பாக்கியம் கூட உங்களுக்கு கிடைத்திருக்காது' என்று அந்த நண்பருக்கு சொன்னேன்.

"விதண்டாவாதம்" என்றார்.

"அப்ப அதை வெறும் மத நம்பிக்கை, மதக்கட்டுபபாடு என்று சொல்லிவிட்டுப் போங்கள், அதையும் பன்றிக்காய்சலையும் ஏன் தொடர்பு படுத்துகிறீர்கள்...ஐரோப்பியர்களும், சீனர்களுக்கும் முக்கிய உணவே பன்றி தான்...அது இழிவானது என்று சொல்லித் தடுக்கப்பட்டிருப்பதாக நீங்கள் சொல்கிறீர்கள் ?" என்றேன்

"உங்க பேச்சில் இந்த்துத்துவா வாசனை அடிக்கிறது" என்றார்

அதுக்கு மேல் அவரிடம் விவாதிக்க நானும் விரும்பவில்லை.

இன்னொரு உறவினர் ,

"ஐரோப்பிய கிறித்துவர்கள் இந்தியாவுக்கு வரவில்லை என்றால் இந்தியர்கள் இன்றும் கோவனத்துடன் தான் இருப்பார்கள்" என்றார்

"ஐயா சாமி, கிறித்து பிறப்பதற்கு முன்பே, உலகின் முதல் பல்கலை கழகம் நாளந்தாவில் நம் இந்தியாவில் தான் தொடங்கப்பட்டது, யுவான் சுவாங் மற்றும் பல சீன மாணவர் வந்து தங்கிப் படித்துச் சென்றார்கள்" என்றேன்

மதம் அதன் கொள்கைகள் நல்லவையாகவே இருந்துவிட்டுப் போகட்டம், ஆனால் அதைப் பற்றி பெருமை பேசும் போது மறைமுகமாக பிற மதங்களை மட்டம் தட்டுக்கிறோம் என்ற உணர்வும் பிறர் புண்படுவார்கள் என்று பலரும் நினைப்பதே இல்லை. எந்த ஒரு மதத்திலும் தனிச் சிறப்பு இருக்கும், ஆனால் எந்த ஒரு மதத்திற்கு தனிப் பெருமை என்பது இல்லவே இல்லை.

1 comment:

Anonymous said...

very true..........:)