May 16, 2009

மேலாண்மை

இராமாயணக் கதையில், இராமன் சீதையைப் பிரிந்து காட்டில் பல கஷ்டங்களை அனுபவித்து, சீதை போன இடமே தெரியாமல் தவித்திருந்த காலகட்டம். அப்போது எதிர்பாராத விதமாய் கிஷ்கிந்தையில் அனுமனைச் சந்திப்பதுதான் இராமரின் பிரச்சினைகளுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அனுமன் இராமனுக்குச் சுக்ரீவனை அறிமுகம் செய்து வைத்து, வானர சேனையின் துணையைப் பெற்றுத் தந்து, கடல் தாண்டிப் போய் சீதையைச் சந்தித்தது முதல் கடைசி வரை இராமனின் குறை தீர்ப்பதில் அனுமனின் பங்கு அதிகம். இராமன் பட்டாபிஷேகம் நடக்கும் போது, இதற்குத் தான்தான் காரணம் என்ற கர்வம் கொஞ்சமும் இல்லாமல், இராமனின் காலடியில், கரம் கூப்பி மண்டியிட்டு அமர்ந்திருக்கும் அனுமனின் அந்தப் பணிவு மிகப் பெரிய தலைமைப் பண்பு.

ஒரு சின்ன தேர்தலில் கூட, தலைவர் வெற்றிக்காகப் பாடுபட்ட, பாடுபட்டதாகக் காட்டிக் கொண்ட பல குட்டித் தலைவர்கள், வெற்றி விழா மேடையில் ஃபோட்டோவுக்காக போஸ் கொடுப்பதற்கு முண்டியடித்துக் கொண்டு தங்கள் தலைகளை நுழைத்துக் கொள்வதில் சாமர்த்தியம் காட்டுகிறார்கள் என்பதை இன்று பார்க்கிறோம்.

ஒருமுறை வெளிநாடு போய்விட்டு வந்தாலே நம்மில் பலருக்கு நடை, உடை, பாவனை மாறி விடுகிறது. அவர்கள் அணிந்து கொள்ளும் உடையும், அணியும் விதமும், வார்த்தைகளும், ஏதோ வெளிநாட்டிலேயே பிறந்து வளர்ந்ததைப் போன்று ஒரு தோற்றத்தை உருவாக்கப் படாதபாடு படுகிறார்கள் என்பதை உணர்த்தும் பலர் நம் நாட்டைப் பற்றியே பல மட்டமான கருத்துக்களைச் சொல்வதையும் கேட்கிறோம்.

ஆனால் வெளிநாடு சென்று, படித்து, பட்டம் பெற்று, வெளிநாட்டில் பல ஆண்டுகள் சிறந்த வழக்கறிஞராகப் பணியாற்றி, இந்தியா திரும்பிய காந்தி என்ன செய்தார்? மதுரை அருகே ஒரு ஏழைக் குடியானவன் சட்டை இல்லாமல் இருப்பதைப் பார்த்து, தானும் ஒரு அரை நிர்வாணப் பக்கிரியாக மாறிவிட்டார்! அவரது நடை, உடை, பாவனை எல்லாம் மேலும் மேலும் ஒரு சாதாரண இந்தியனை ஒத்து இருக்கும் படி மாற்றிக் கொண்டார். நாட்டுப் பற்று நாளுக்கு நாள் அதிகமானதே தவிர கொஞ்சமும் குறையவில்லை. ஆங்கிலம் நன்றாகத் தெரிந்திருந்தும், தாய்மொழியை விடவில்லை. மேலும் பல இந்திய மொழிகளைக் கற்றுக் கொள்ள முயற்சி செய்தார். ‘விரும்பி ஏற்றுக் கொண்ட வறுமை’ அவர் வாழ்க்கை முறை ஆனது.

ரிஷிகேஷ் வழியாக சுவாமி விவேகானந்தர் சென்று கொண்டிருந்த நேரம். கங்கைக் கரையில் ஒரு பெரிய மகான் அமர்ந்து, தியானம் செய்து கொண்டு இருப்பதைக் கண்டார். அவர் முகத்தைப் பார்த்தாலே அவர் மிகப் பெரிய ஞானி என்பது விவேகானந்தருக்குப் புலனாயிற்று. அவரிடம் சென்று பேச ஆரம்பித்தார். தன்னுடைய அனுபவங்கள், சென்ற இடங்கள், பார்த்துப் பழகிய மகான்கள் என்று விவேகானந்தர் வரிசையாகச் சொல்லிக் கொண்டே போனார். விவேகானந்தர் தான் பவஹாரி பாபாவைச் சந்தித்ததாகச் சொன்ன போது ஞானியின் முகம் பிரகாசம் அடைந்தது. “அப்படியா! பாபாவைத் தெரியுமா?” என்று கேட்டார். பின்னர், “அந்த பாபா ஆஸ்ரமத்தில் ஒரு திருட்டு நடந்ததே தெரியுமா?” என்றார். “தெரியுமே” என்ற சுவாமி விவேகானந்தர் அந்தக் கதையைச் சொன்னார்.

ஒருமுறை பாபாவின் ஆஸ்ரமத்தில் ஒரு திருடன் நுழைந்து விட்டான். சில பொருட்களை எடுத்து ஒரு மூட்டையில் போட்டுக் கொண்டு இருக்கும் வேளையில் பாபா எழுந்துவிட்டார். உடனே திருடன் பயந்து போய், அந்த மூட்டையைக் கீழே போட்டு விட்டு, ஓட்டம் எடுத்தான். ஆனால் பாபாவோ அந்த மூட்டையை எடுத்துக் கொண்டு அந்தத் திருடன் பின்னால் ஓடி, துரத்திப் பிடித்து, அந்த மூட்டையை அவனிடமே கொடுத்துவிட்டார். “அப்பா, இது உன் சொத்து, எடுத்துக் கொள்” என்று கூறினார்.

இந்தக் கதையை சுவாமி விவேகானந்தர் சொல்லி முடித்தவுடன், அந்த ஞானி கண்ணீருடன் கூறினார். “அந்தத் திருடன் நான்தான். பாபாவின் அந்தச் செயல், அந்த மனித நேயம், அந்தப் பணிவு என்னை மாற்றி விட்டது. என் திருட்டுத் தொழிலை விட்டுவிட்டு, நானும் பாபாவைப் போல ஆத்ம ஞானத் தேடலில் இறங்கிவிட்டேன்” என்றார்.

நாம் மற்றவர்களை நடத்தும் விதத்தில், யாரையும் மாற்றி நம் வழிக்குக் கொண்டுவந்துவிட முடியும். அதிகாரத்தை விடப் பணிவு வலியது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு டீம் இணைந்து வேலை செய்யும் போது, தலைவனுக்கு டீமில் இருப்பவர் ஒவ்வொருவர் மீதும் நம்பிக்கை இருக்க வேண்டும். செய்யும் செயலுக்கு வேண்டிய திறமை இருக்கிறதா என்று சோதித்து, இல்லாத திறமையை வளர்த்துக் கொள்ள என்ன வழி என்பதை டீம் லீடர் யோசிக்க வேண்டும். “மேலாண்மை என்பது இதைச் செய், அதைச் செய் என்று சொல்லிக் கொண்டு இருப்பது அல்ல. எதைச் செய்ய வேண்டுமோ அதற்குண்டான திறமைகளை வளர்த்து விடுவது ஆகும்

திறமைகளை வளர்த்துக் கொள்ள வழி காட்டி, பிறகு அந்தத் திறமைகளை வெளிப்படுத்த சந்தர்ப்பம் கொடுப்பவனே தலைவன் ஆகிறான். அனைத்து வேலைகளையும் ஒரு குழு செய்து முடிக்க முடியும் என்ற நிலை வரும் போது, தலைவன் அடிக்கடி தலையிட தேவை இல்லாமல் போகிறது. எனவே அந்தக் குழுவே முடிவுகளை எடுத்து வேலை செய்ய ஆரம்பிக்கிறது. இந்த நிலைக்கு வந்துவிட்ட குழுவைத்தான் “Empowered Team” என்று கூறுகிறோம். இது ஏற்பட வேண்டும் எனில் முதலில் தலைவன், தன் குழுவில் உள்ள அனைவரையும் மதித்து, தான் பணிவாக நடந்து கொண்டு வழிகாட்டினால், வழி விட்டால்தான் இயலும். மாறாக ஒவ்வொரு விஷயத்திலும் தலைவன் தலையிட்டுக் கொண்டு இருந்தால், குழுவில் இருப்பவர்கள் முழுவதும் தலைவனைச் சார்ந்தவர்களாகவே உருவாகுவார்கள். தானாகவே எந்த முடிவும் எடுக்கும் திறமை அற்றவர்களாக, எல்லா செயல்களும் தாமதம் அடையக் காரணம் ஆகிறார்கள்.

தலைவன் பணிவுள்ளவனாக இருந்தால் மட்டுமே, புதிய தலைவர்கள் உருவாக வழிவிடுகிறான். ‘யாவரையும் மதித்து வாழும்’ தலைவனே ஒரு ஆரோக்கியமான சமுதாயம் உருவாகக் காரணமாக இருக்கிறான்.

No comments: